என் வாழ்க்கை
தொடங்கியதே
இந்த இடத்தில்தான்,
அதுதான்
பேருந்து நிறுத்தம்.
“மண் ஆள வேண்டுமென்றால்,
பள்ளிக்கூடம் போ”
என்பாள் என் தாய்,
ஆசையில்லை என்பேன்,
என் வாய்க்குள்
தோசையினை திணித்துவிட்டு,
என்னை பேருந்தினுள் திணித்துவிட்டு,
“இன்று கதறும் அதரங்கள் மீது
நாளை உலகின் உதிரங்கள்
பொழியும்” என்று
பெருமையுடன்..
அங்கத்தில் நகையில்லாமல்
தங்கத் தமிழ்த்தாய்,
தன் உதடுகளில்,
புன்னகை ஏந்தி,
வீட்டுக்கு நடப்பாள்.
பேருந்தில்..
பார்க்கும் முகத்தில் எல்லாம்
பாட்டி கதையில் வரும் பேயின்
பிரதிபலிப்பு.
எனக்கு நரக வேதனை,
பிறகு அன்பு சாதனை.
பள்ளியில்…
பண்ணிரண்டு ஆண்டு
சிறைத் தண்டனை
அது எனக்கு
ஈடில்லா சாதனை.
விடுதலைப் பெற்றேன்…
கையில்…
மதிப்பிற்குரிய
மதிப்பெண் தாளுடன்.
பட்டம் பெற்றேன்
பட்டம் விட்டேன்,
நாயாக பேயாக அலைந்தேன்,
கடைசியில்…
ஆலையிலே
ஒரு வேலை.
பணம் வந்தது,
கால்கள் பறந்தன.
ஊர் சுற்றினேன்.
கால்கட்டு போடவேண்டுமென்று
ஒரு பெண்ணை
எனக்கு கட்டி வைத்தார்கள்.
என் கன்னம் நனைந்தது.
இன்றும் அவளுக்காகத்தான்
இங்கே நிற்கின்றேன்.
இன்று அவள் மறைந்த நாள்!
நாங்கள் சேர்ந்த பின்பு
மனைவி, மனை, மக்கள் என்று
ஐம்பதாண்டு காலம்
ஓடிவிட்டது.
கடந்த இருபதாண்டு காலமாக
நான்…
ஆயுள் கைதிதான்.
அவள் மறைந்ததால்…
அவள் உறங்கும் இடத்திற்கு,
என் மனம் உறங்கும் இடத்திற்கு
போகத்தான்…
நிற்கிறேன்.
மனம் துக்கத்தில் மூழ்கியிருப்பதால்…
பாழாய்ப்போன
தூக்கம் கூட
வருவதில்லை…
நினைவுகளெல்லாம்
கண்ணீராய் வெளிவந்தது.
திடீரென்று ஒரு சத்தம்.
நிமிர்ந்து பார்த்தேன்,
பாவம்…
பிரசவ வேதனை…
பூமி அதிர…
கதறிக்கொண்டே…
பேருந்து வந்தது.
நான் வவ்வால் போல்..
கவ்விக்கொண்டேன்.
அந்த புனிதமான
இடத்திற்குச் சென்றேன்.
தொழுதேன்…
அழுதேன்…
எழுந்தேன்…
‘உலகத்திற்கு அவள்
யாரோ ஒருத்தி,
அவள் ஒருத்திதான்
என் உலகம்’
யாரோ சொன்னதை
நினைத்துக்கொண்டே
வீடு திரும்பினேன்.
படுத்தேன்.
ஆகா!
அதிசயம்!
என்றும் இல்லாத
வராத
அந்த அமைதியான
தூக்கம் வந்தது.
அப்பொழுது…
என் வாயிலிருந்து…
சில வார்த்தைகள்..
தப்பித்துக்கொண்டு
வந்தன,
‘மண் ஆளப் பிறந்தவரெல்லாம்
முடிவில்… அந்த,
மண்ணுக்கே அடிமைதான்’
இப்பொழுது…
வடிந்திருந்த கண்ணீரெல்லாம்
வற்றிவிட்டது.
வராத புன்னகை
எட்டிப்பார்த்தது…
என் உதடுகளிலிருந்து..
ஆகா! ஆகா!
இப்பூவுலகிலிருந்து…
எனக்கு,
விடுதலை! விடுதலை! விடுதலை!
(13 ஏப்ரல் 2000 – அன்று நான் என் கவிதைப் புத்தகத்தில் எழுதியது.)