இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப் போவதும் இல்லை.
அதிகாரம், ஆட்சி, கட்சி அரசியல் அனைத்துமே வெங்காயம்தான் பெரியாருக்கு. மதம், தேசியம், மொழி, கற்பு என்று புனிதமாகக் கொண்டாடப்படும் அனைத்தையும் போட்டு உடைத்தவர். யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்து கொண்டதில்லை பெரியார். கண்முன்னால் ஒரு அராஜகமா? தோழர்களே, திரண்டு வாருங்கள் போராடுவோம்! போராட்டம். அது மட்டும்தான் தெரியும்.
பெரியார் முன்வைத்த நாத்திகவாதம் ஆக்ரோஷமானது, ஆவேசமானது, அறிவியல்பூர்வமானது. நிலச் சீர்திருத்தத்தில் இருந்து தொடங்குவோம் என்று கம்யூனிஸ்டுகள் சொன்னபோது, அமைதியாக ஒதுங்கிக்கொண்டார். மதம். அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் இதுவே என்றார்.
இந்திய சுதந்தரத்துக்குக் கறுப்புக் கொடி. காந்தி, அண்ணா, ராஜாஜி போன்றவர்களுடன் கருத்து மோதல். மணியம்மை திருமணம். திமுக மீது காட்டமான விமரிசனங்கள். அதிகாரத்துக்கு அடங்கிப்போக மறுக்கும் குணம். சர்ச்சைகளுக்குச் சற்றும் பஞ்சமில்லா வாழ்க்கை அவருடையது.
தீரமிக்க போராட்டப் பாரம்பரியம் பெரியாரோடு தொடங்கி பெரியாரோடு முற்றுப்பெறுகிறது. பெரியாரை நம் கண்முன் நிறுத்தும் இந்நூல், வரலாற்றில் அவர் வகித்த பாத்திரத்தையும் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.