சிறுகதை: பாயம்மா – பிரபஞ்சன்

          அரவம் கேட்டுக் கண்விழித்தாள் பாயம்மா. சிம்ணி விளக்கு வெளிச்சத்தில் யாசுமின், அடுப்படியில் டீ போட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. முந்தின இரவு உறக்கம் வர வெகு நேரம் பிடித்தது அவளுக்கு. சற்றுக் கண்ணயர்ந்து விட்டாள். அவளை முந்திக்கொண்டாள் யாசுமின்.

          படுக்கையை விட்டு எழுமுன், ஒரு நாளும் ஒவ்வொரு நாளும் அவள் சொல்லும் அந்தக் காலைப் பிரார்த்தனையைச் சொல்ல முற்பட்டாள். ‘யாரசூயே, இன்றைய தினத்தை நல்ல நாளாக்கு. என் குட்டி யாசுமீனாளுக்கு நல்ல வழிகாட்டு, சடுதியில்’ இவ்வளவுதான். அதுக்கு மேலும் கடவுளிடம் கேட்க அவளுக்கு ஒன்றும் இல்லை. எழுந்து, பாயைச் சுற்றிக் கட்டிலுக்கு அடியில் தள்ளினாள். அடுப்பறைக்கு வந்தாள்.

          “மோளே.. இன்னும் விடியக் காணமே. அதுக்குள்ளாக எழுந்தது என்னத்துக்கு. கொஞ்சம் போல உறங்கு. நான் எழுப்பித் தாரேன்” என்றாள். வாஞ்சையோடு.

          “இருக்கட்டும். எழுந்தாச்சு.. இன்னமும் உறக்கம் வராது. டீயைக் குடிப்போம்.”

          இரண்டு அலுமினிய டம்ளர்களில் டீயை வார்த்து ஒன்றை அம்மாவிடம் கொடுத்து, ஒன்றைத் தானும் எடுத்துக் கொண்டு, வெளித் திண்ணைக்கு வந்தாள் யாசுமின், உடன் வந்த பாயம்மா மகளுக்கு முன், திண்ணையில் அமர்ந்துகொண்டாள்.

          யாசுமின் அரிசி நிறைந்த பானை மாதிரி பூரித்து இருந்தாள். வரும் யானை மாதத்தில் அவள் வயசு இருபது நிறைந்துவிடும். அதற்குள் அவளுக்குக் கல்யாணம் கூடி வர வேணுமே.. அய்யாவே.. மனசுக்குள், குட்டிப் பூனை மாதிரி முட்டிக் கொண்டு தனக்குள் ஆழ்ந்திருந்தாள், பாயம்மா. மேற்குத் தெரு பள்ளி வாசலில் இருந்து பாங்கோசை எழுந்தது. தன்னை அறியாமல் அவள் முக்காட்டை எடுத்து தலையை மூடிக்கொண்டாள்.

          உள்ளே கயிற்றுக் கட்டிலில், போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான் ரஷீது. புரண்டு படுத்தான். மகனைக் கண்டதும் அவள் மனம் இளகியது. காலை, எட்டு மணிக்குப் புறப்படுகிறவன், ராத்திரி கடை கட்டிக்கொண்டு வீடு திரும்ப பத்து, பதினொன்று ஆகிவிடுகிறது. மாடாய் உழைக்கிறான். எல்லாம் சரியாக இருந்தால் யாசுமீனுக்கு அடுத்தபடியாக அவனுக்கும் ‘நிக்காவை’ முடித்து விட வேண்டியதுதான்.

          “என்ன ரோசனை?” என்றாள், யாசுமின் அம்மாவைப் பார்த்து.

          “எனக்கு நீங்கள் ரெண்டு பேரையும் விட்டால், வேறு என்ன யோசனை? உனக்கு, வர்ற யானை மாசத்துக்குள் நிக்காவை முடிக்கவேணும்..”

          “சித்தே சும்மா இரு.. காலங்காத்தாலே.. நிக்காகு.. மவுத்துன்னிட்டு.”

          “அடீ.. துக்கிரியாட்டம் பேச வாண்டாம். பொண்ணு கல்யாணம் அன்னியில நான் வேறு என்னத்தைப் பேசனுமாம்?”

          யாசுமின் எழுந்தாள்.

          “ஆடு கத்திக்கிட்டு இருக்கு. ரெண்டு தழை ஒடிச்சுப் போடு. நான் ரஷீதுக்கு ரொட்டி சுடனுமாக்கும்.”

          அச்சானியமாக, இந்தப் பெண் காலையில் இப்படிப் பேசியமைக்காக பாயம்மாவின் மனம், வருத்தமுற்றது. ஆடு கட்டியிருந்த மரத்தடிக்கு வந்தாள். அவளைக் கண்டு, தாயாடும், குட்டியாடும் பேய் கணக்காகக் கத்தின.

          “சைத்தான் மக்களா! ஏன் இப்படிக் கத்தி என் உயிரை வாங்கிறியள்?” என்றபடி, தழைகளை உடைத்துப் போட்டாள்.

          “கொஞ்சம் விடியட்டும். அவிழ்த்து விடறேன். அதுக்குள்ளாயும், பள்ளம், குளத்துல விழுந்து காலை, கீலை உடைச்சுட்டா என்ன பண்ணுவேன் நான்?” என்று தாயாட்டைப் பார்த்துக் கேட்டாள் பாயம்மா. அது, “மே.. மே..” என்றது. அதைப் புரிந்துகொண்டவளாக, “ஓகோ.. உனக்கு வழி தெரியும்னா சொல்றே. அவ்வளவு தூரத்துக்கு பெரியவளாயிட்டியாக்கும். உனக்குப் பிரசவம் பார்த்தவளே, நானாக்கும் தெரிஞ்சுக்கோ. தூத்துக் கிழவி கணக்கா என்னண்டேயே சதாய்க்கிறியே!” என்று நீட்டி முழக்கினாள், பாயம்மா.

          அடுப்பில் ரொட்டி சுட, தோசைக் கல்லை வைத்த யாசுமினுக்குச் சிரிப்பு வந்தது. அம்மாவுக்குத்தான் எத்தனை பாஷைகள் அத்துப்படியாகி இருந்தன? ஆடுகளோடு, மாடுகள், காக்காய்கள், மைனாக்கள், மரங்கொத்திகள், ராத்திரிகளில் அலரும் ஆந்தைகள் என்று எல்லாவற்றோடும் அம்மா, உரையாடுவது ஆச்சரியம்தான்.

          ரஷீது உண்டு முடித்தான். கொடியில் இருந்த கைலியை எடுத்துக் கட்டிக்கொண்டான். ஆணியில் இருந்த சட்டையை எடுத்து, மூட்டைப் பூச்சியைத் தவிர்க்க உதறிக்கொண்டான். உதறிய உதறலில் சட்டையிலிருந்த பீடி கீழே விழுந்தது. அம்மா பார்ப்பதற்கு முன் சட்டெனக் குனிந்து, அதை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டான். பாயம்மா அதைப் பார்க்கத்தான் செய்தாள். சட்டெனத் தலையைத் திருப்பிக் கொண்டாள். வளர்ந்த பையன் அப்படியும், இப்படியுமாகத்தான் இருக்கும். இந்தக்காலத்துப் பையன்கள்.

          ரஷீது புறப்பட்டான். திண்ணைக்கு வந்தான்.

          “மோனே!”

          “என்னம்மா?”

          “உன் தங்கைக்கு வயசு ஏறிக்கிட்டு இருக்குப்பா.. வர்ற யானை மாசத்துக்குள்ளே, நிக்காவை முடிச்சுட்டா, நல்லது, மோனே. கூரை ஒழுகுது. அதை மாத்தோணும். கைச் செலவுக்குப் பணம் வேணும். மாப்பிள்ளை வீட்டுல, நெருக்குறாக. நேற்றுகூட, அந்த அகமது அண்ணன், கேட்டுட்டாக. பதிலைச் சொல்லாமே இருந்தா நல்லதா? நீ ரோசிக்கணும்.”

          “முதலாளிகிட்டே சந்தர்ப்பம் அறிஞ்சு பேசணும்மா. பார்க்கலாம். நிக்காவை முடிச்சுடலாம், சீக்கிரமே.”

          “அதோட, உனக்கும் வயசு ஏறுது. உனக்கும் பண்ணி வச்சுட்டா எனக்கு நிம்மதியாப் பூடும்.”

          “எனக்கென்ன அவசரம்?” என்றபடி, பூவரச மரத்தின் கீழ், நிறுத்தி இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ரஷீத். அவன் கடைக்குச் சென்று சேர்வதற்கும், முதலாளி வருவதற்கும் சரியாக இருந்தது. முதலாளியைக் கண்டதும், மடித்துக் கட்டி இருந்த கைலியை இறக்கி விட்டுக்கொண்டான் ரஷீது. மற்ற ஆட்களும் பவ்யமாக விலகி நின்று முதலாளிக்கு வழிவிட்டனர். கதவை மூன்று முறை தட்டிவிட்டு, திறந்தார் முதலாளி. ரஷீது கடைவாசலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தான். தன் செக்ஷனான மோதிரங்கள் பகுதியில் போய் நின்றுகொண்டான்.

          வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினார்கள். நகரத்தில் பிரபலமான நகைக்கடை அது. எந்நேரமும் கும்பல் வழியும். ரஷீதுக்கு ரொம்ப ஆச்சர்யம். மனுஷர்கள், உப்பு புளி அரிசி வாங்குவது மாதிரி நகைகள் வாங்குகிறார்களே! அதுவும் காத்திருந்து, கடை திறந்தவுடனேயே அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்து.. பணம் அந்த அளவுக்கு மக்களிடம் கொட்டிக் கிடக்கிறது…

          அவனுக்கு முன்னால் வந்து நின்ற மனிதர்களின் விரல்கள் ஒல்லி, பருமன், நீளம், குட்டை எல்லாவற்றிலும் மோதிரங்கள் அணிவிக்கப்படுகின்றன. மோதிரம் அழகின் வெளிப்பாடு மட்டும்தானா? பணப் பகட்டும் அளவுகோலும் அதுதான்.

          சிவப்பிரகாசம் அவனை அழைத்தார். முதலாளியின் தனி அறைக்கு அவன் சென்றான்.

          “உன் செக்ஷன்லே ஆட்கள் அதிகமா, ரஷீத்?”

          “இல்லீங்க அய்யா. பரசுராமன் ‘அட்டெண்ட்’ பண்ணிக்கிட்டு இருக்கார்.”

          “சரி, இந்தப் பணத்தை எண்ணி, பத்தாயிரம், பத்தாயிரமா கட்டு. இன்னிக்கு ஒரு பார்ட்டிக்குப் பணம் தர்றேன்னு சொல்லியிருக்கேன். நாணயத்தைக் காப்பாற்றணும்.” என்றபடி, அவன் முன் ஒரு சின்ன பண நோட்டு மலையைக் குவித்தார் சிவப்பிரகாசம்.

          “சாவகாசமா எண்ணு. ரெண்டு லட்சத்தை மட்டும் சூட்கேசில் வை. மற்றதை இந்தக் களவயத்துக்குள்ளே தள்ளிடு.” என்றபடி அந்தப் பகுதியைக் காட்டினார் அவர். அது அவர் நாற்காலிக்குப் பின்னால் இருந்த, ஒரு அறை. சட்டென்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அறை அது. அதற்குள் வெடித்த பட்டாசுத் துணுக்குகள், குவியல் குவியலாகக் கிடந்தன நோட்டுக்கள்.

          “அப்புறம், இன்னொரு நாளைக்கு, இந்த நோட்டுக்களையும் கட்டி வைக்கணும். சரி நான் ஸ்கூல் வரைக்கும் போய் வர்றேன். பிரின்ஸ்பல் மேடம் வரச்சொல்லி இருக்காங்க. டொனேஷன் எதிர்பார்க்கிறாங்க போல. வரட்டுமா. பையனைக் கூப்பிட்டு டீ சொல்லிச் சாப்பிட்டுக்கோ” என்றபடி, அந்தத் தனியறையில் ரஷீதை வைத்துவிட்டு அகன்றார் சிவப்பிரகாசம்.

          அறைக் கதவு தன்னால் சாத்திக்கொண்டது. சிவப்பிரகாசம் அவன் மேல் வைத்த நம்பிக்கை, அவனைக் கிளர்ச்சி அடையச் செய்தது. இவரிடம் அவன் வேலைக்கு அமர்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு சூப்பர்வைசர் அளவுக்கு அவனை உயர்த்தியவர் அவர். ஒவ்வொரு உணவு இடைவேளையின்போதும், எல்லா ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவார்கள். ரஷீதுக்குச் சோதனை வேண்டாம் என்றவர், சிவப்பிரகாசம். வங்கிக்குச் சென்று பணம் போடுவது முதல், பணம் எடுப்பது வரையிலான சகல பொறுப்புகளையும் அவனிடம் தந்தவர், சிவப்பிரகாசம். எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவன் நினைவில் வந்து போகத்தான் செய்தன.

          அரைமணியில் வேலை முடிந்தது. இரண்டு லட்சங்களைத் தனியாக சூட்கேசில் வைத்தான். மற்றதைக் களவயத்துக்குள் தள்ளினான். ஐநூறு ஆயிரம் நோட்டுக்களாக ஐம்பதாயிரம் ரூபாயை மட்டும் எடுத்து தன் பனியனுக்குள் போட்டுக் கைலியை இறுக்கமாக முடிந்துகொண்டு வெளியே வந்தான். சட்டை, உப்பிக்கொண்டிருந்தது. மோதிரம் செக்ஷனுக்குத் திரும்பினான், ரஷீத். பரசுராமன், “இன்னா விஷயம்பா!” என்றான்.

          “நோட்டு எண்ணச் சொன்னார் முதலாளி.”

          “ஒன்னு ரெண்டை உருவு, தெரியவா போகுது, சொட்டைத் தலைக்கு?”

          “சீச்சீ..” என்றான் ரஷீத்.

          முதலாளி திரும்பினார். தன் தனி அறைக்குள் சென்றார். மனம், கிடந்து அடித்துக்கொண்டது ரஷீதுக்கு. தப்பு செய்கிறவன் இருதயம், வித்தியாசமாகத் துடிக்கும் போலும். தனக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்தான். மானேஜர் மட்டும், கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு, தனியறைக்குள் சென்றார். சற்று நேரம் கழித்து, இருவருமே வெளியே வந்தார்கள். முதலாளி, புறப்பட்டுச் சென்றார், பெட்டியுடன். வழி அனுப்பிவிட்டு வந்த மானேஜரிடம், “அண்ணே, முதலாளி ஏதாச்சும் சொன்னாங்களா?” என்றான்.

          “ஒன்றும் சொல்லலையே.. மதுரை போறதாகச் சொன்னாக” என்றார் அவர்…

          நிம்மதியாக இருந்தது, அவனுக்கு. “வயிறு சரியில்லை அண்ணே, அரை நாள் லீவு வேணும்.”

          “பரசுராமன் கிட்டே, கணக்கை ஒப்படைச்சுட்டுப் போ…” என்றார் மானேஜர். கணக்கை எழுதிக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் ரஷீது.

          மறுநாள் ஆபீசுக்கு வருகையில் வேலையாட்கள் முகத்தில் சவக்களை இருந்தது. கண்ணாடியைத் துடைத்துக்கொண்டிருந்த அப்துல்லாவிடம், “என்ன விஷயம்?” என்றான்.

          “பரசுராமன், நாலு மோதிரத்தை, ஜட்டிக்குள்ளே வச்சிக் கடத்திட்டாரு. மாட்டிக்கிட்டாரு. மானேஜர், கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கிறபோதே, ஓடிட்டாரு, போலீசு, தேடிப் போயிருக்கு. இன்னிக்கு எல்லாரையும் போலீஸ் விசாரிக்க வர்றானுங்களாம்.”

          ரஷீது, சந்தோஷப்பட்டான். முதலாளி கவனம், சுத்தமாக அவன் பக்கம் திரும்ப நியாயம் இல்லை. புறப்படும்போது, அவன் ஒழுங்காகக் கணக்கைப் பரசுராமனிடம் ஒப்புக் கொடுத்திருந்தான். கவலையே இல்லை. வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஏதோ சின்னத் தப்புக்கு கழுத்தில் அறைந்தவன் பரசுராமன். ஒழியட்டும்.

          உலகம் கெட்டுப் போய்விட்டது என்று நினைத்துக்கொண்டாள், பாயம்மா. இல்லையென்றால் இந்த வெயில் காலத்தில் மழை பெய்யுமா? பெய்தது. காலையிலே இருந்து மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மதியம், மழை கொட்டத்தொடங்கியது. அதுவும், ரஷீது படுக்கிற கட்டிலுக்கு மேல். பாவம் களைத்து வரும் குழந்தை. படுக்கை நனைந்துவிட்டால் என்ன ஆவது? ஏதேனும் செய்ய வேண்டுமே என்று நினைத்தாள். கட்டிலுக்கு எதிரில் வாப்பா செய்து போட்ட அலமாரி. குட்டை அலமாரி. அதுமட்டும் நனையாமல் இருந்தது. அலமாரியை நகர்த்தி வைத்து விட்டால், படுக்கையைக் காப்பாற்றலாம் என்று தோன்றியது பாயம்மாவுக்கு. நகர்த்தினாள். முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டு முயன்றாள். முடியவில்லை. அலமாரியில் அடர்த்தியாக இருந்த பொருள்களைக் கீழிறக்கி வைத்துவிட்டு, அதை நகர்த்த முடியும் என்று அவளது அறிவு சொன்னது. ஒவ்வொன்றாய் எடுத்துக் கீழே வைத்தாள். மேல் தட்டில் ரஷீதின் சட்டைத் துணிமணிகள். இரண்டாவதில் யாசுமினின் ஆடைகள். கீழ்த்தட்டில் சில கிழிசல்கள் மற்றும் அவளது துணிகள். அலமாரியை இப்போது நகர்த்த முடிந்தது. அலமாரிக்கும் கீழே கல் ஒன்று சற்று மேலெழும்பி இருந்தது. அது அப்படி இருக்கக் காரணம் இல்லை. கல்லைப் பெயர்த்தாள். கல்லின் அடியில், பச்சை உறையில் சுற்றப்பட்ட ஒரு கட்டு. கட்டைப் பிரித்தாள். நோட்டுக்கள்.

          சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார். மதியம், ஒரு பார்ட்டி. மாமூல்காரன், கால் புட்டியும், தேவர் ஓட்டலிலிருந்து அருமையான கோழி பிரியாணியும் வாங்கித் தந்திருந்தான். ருசித்தும் குடித்தும் தன் இருக்கைக்கு வந்திருந்தார். மாமூல் பார்ட்டி வாங்கிக் கொண்ட ‘கிங்ஸ்’ சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை வெளியே விட்டார். அந்த நேரம் அவர் முன் ஒரு கிழவி வந்து நின்றாள்.

          அவர் முன், பச்சைக் காகிதத்தில் சுற்றப்பட்ட நோட்டுக் கத்தையை வைத்தாள், பாயம்மா. ராஜகோபாலோ அதிர்ச்சி அடைந்தார்.

          “இது எங்க வீட்டுல கிடைச்ச பணம் அய்யா. புதைச்சு வைக்கப்பட்ட பணம். என் மகன் ரஷீதுதான், இந்தப் பணத்தை ஒளிச்சு வைச்சிருக்கணும். இவ்ளோ பணம், அவனுக்குத் தப்பு வழியில்தான் வந்திருக்கணும். அவன் முதலாளியைக் கேளுங்க..”

          ராஜகோபாலன், விபரங்களைக் கேட்டறிந்தார். முதலாளிக்குப் போன் செய்தார். சில நிமிஷங்களில் முதலாளி வந்து சேர்ந்தார். நோட்டைப் பார்த்தார். தம் பணமாக இருக்கலாம் என்று சந்தேகமாகச் சொன்னார். ரஷீது வரவழைக்கப்பட்டான். போலீஸ் நிலையத்தில் முதலாளியைப் பார்த்ததும் அவன் கை கால் நடுங்கின.

          “இவன் ரொம்ப நல்ல பையன், ராஜகோபாலன். இந்தக் காரியத்தை அவன் செய்ய மாட்டான்.”

          ரஷீது அழுதான். கணக்கில் வராத பணம் என்பதால் திருடினேன் என்று ஒப்புக்கொண்டான். கூரை மாற்ற, தங்கை கல்யாணம் முடிக்க.. என்று காரணங்களை அடுக்கினான்.

          ராஜகோபாலன், தன் பங்குக்கு நாலு அறை அறைந்தார்.

          “நான் வழக்குக் கொடுக்கலை.. விட்டுவிடுங்கள்” என்றார் சிவபிரகாசம். குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தாள் பாயம்மா. முகம் மட்டும் வெளியே தெரிந்தது. தாரை தாரையாக அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

          பாயம்மா படுத்துக்கிடந்தாள். அவளுக்கு ஒரு வாரமாகவே சோறு செல்லவில்லை. ‘மன விசாரம்’ என்றார் வைத்தியர். யாசுமின், அம்மைக்கு டீ போட்டுக்கொண்டிருந்தாள். எழுந்து அமர்ந்து, போர்த்திக்கொண்டாள்.

          “ஏட்டி.. முதலாளிக்கு தடுக்கு போடு.”

          தடுக்கில் அமர்ந்தார் முதலாளி.

          “பாயம்மாவுக்கு மனசு சங்கடமாத்தான் இருக்கும். ரஷீது திருந்திட்டான். மனசார மன்னிப்பும் கேட்டுக்கிட்டான். வேலையும் ஒழுங்கா செய்கிறான். அப்புறம் என்ன பாயம்மா நடந்ததை மறந்திட வேண்டியதுதானே?”

          பாயம்மா சிரமப்பட்டுப் பேசினாள்.

          “முதலாளிக்கு ரொம்பப் பெரிய மனசு.”

          “அதொன்றும் இல்லை. மனுஷன் தவறுறது சகஜம். மறந்துடுங்க.” முதலாளி அந்த அம்மாவுக்கு முன், ஒரு கட்டு வைத்தார்.

          “என்னங்க முதலாளி?”

          “கொஞ்சம் பணம் கூரையை மாத்துங்க. பாப்பா கல்யாணத்தை முடியுங்கோ..”

          பாயம்மா அவரை ஆச்சர்யமுடன் பார்த்தாள்.

          “எதுக்கு? வேணாம் முதலாளி. ரஷீதை ஆதரிக்கறதே பெரிசு.”

          “இருக்கட்டும். உங்க நல்ல குணத்துக்காக.”

          “அது என்ன அதிசயம். அல்லாவுக்கு முன்னால, நாம் அப்படித்தானே இருக்கணும்?”

          “இருப்பாங்க எத்தனை பேர்? ரொம்பக் கொஞ்சம் பேர்தானே? போகட்டும். பாப்பா கல்யாணத்தை இதை வச்சு முடியுங்க.”

          “வேணாம் முதலாளி. நல்ல காரியம், நல்ல வழியாத்தான் வரணும். என் மவன், உழைச்சு சம்பாரிச்சு அவன் தங்கை கடமையைச் செய்வான். மன்னிக்கோணும்.”          

          கடைசிவரை, பாயம்மா, அந்தப் பணத்தை வாங்கவில்லை.

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *