அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த திண்ணைகளும் ரேழியும் உண்டு.
அந்த வீட்டுப் பெரியவரின் பேத்திக் குழந்தையாக ராணி பிறக்கும் வரை திண்ணைகளும் ரேழியும் சுதந்திரமாகத்தான் இருந்தன. பேத்திக் குழந்தை தவழ ஆரம்பித்து, ஒரு நாள் தவழ்ந்துகொண்டே வந்து வாசலில் இறங்கி விட்ட பிறகு, அதைப் பார்த்துக்கொண்டே வந்து வண்டியில் இறங்கிய பெரியவர், குழந்தையை வாரியெடுத்துக்கொண்டு வேலைக்காரர்களை ஒரு முறை வைது தீர்த்த பிறகு – குழந்தையின் பாதுகாப்புக்கு இந்த வேலைக்காரர்களை நம்புவது ஆபத்து என்ற தீர்மானத்துடன் வீட்டின் முன்புறம் கம்பி அழிகள் வைத்து அடைத்து, திண்ணைகளும் ரேழியும் சிறை வைக்கப்பட்டன. குழந்தை ராணி சுதந்திரமாய்த் தவழ்ந்து திரிந்தாள்.
இப்பொழுது ராணி நடந்து திரிகிறாள். வயசு நாலு ஆகிறது. ராணிக்கு ஒரு தங்கச்சியும் பிறந்து விட்டாள்.
திண்ணை நிறைய செப்பும் பொம்மையும் இறைந்து கிடக்க நாளெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பாள் ராணி. தாத்தா, ராணிக்குப் புதிசு புதிசாகப் பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருப்பார். ராணி ஒவ்வொன்றையும் புதுமோகம் தீரும் வரை, உண்ணும்போதும் உறங்கும்போதும் கூடக் கையிலேயே வைத்திருந்து விளையாடி உடைத்து, விளையாட்டுச் சாமான்களுக்காக வைத்திருக்கும் பிரம்புப் பெட்டியில் பத்திரமாக வைத்துவிடுவாள். அவளாக உடைக்காமல் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், தலையைப் பிய்த்துக்கொண்டு புரண்டு புரண்டு, காலையும் கையையும் உதைத்துக் கொண்டு அழுவாள். தாத்தா உடனே புதிசு வாங்கிக் கொண்டுவந்து தருவார்.
அவளுக்கென்ன – ராணி!
அந்தப் பிரம்புப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து திண்ணை மீது வைத்து விட்டு, முக்கி முனகித் தானும் திண்ணையில் ஏறிப் பெட்டியைத் திறந்து எல்லாவற்றையும் கொட்டிய ராணி, “ஹை… எவ்வளவோ சொப்பு!” என்று ஆச்சரியத்தில் கூவிய குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
வெளியே – கம்பிகளுக்கிடையே பரட்டை தலையை அடைத்துக் கொண்டு மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பியவாறு, பிறந்த மேனியாக நின்றிருந்த ராணியின் வயதேயுள்ள ஒரு கறுப்புக் குழந்தை ராணியைப் பார்த்துச் சிரித்தாள்.
அரைஞாண்கூட இல்லாத கரியமேனியில், புழுதியில் விழுந்து புரண்டதால் அழுக்கின் திட்டுக்கள் படர்ந்திருந்தன. மூக்கிலிருந்து ஒழுகியது, வாய் எச்சிலுடன் கலந்து, மோவாயில் இறங்கி மார்பிலும், வயிற்றின் மேலும் வடிந்துகொண்டிருந்தது.
அந்தக் குழந்தையைப் பார்க்க ராணிக்கு ஆச்சரியமாய் இருந்தது. அந்தக் குழந்தையும் முகமே இரண்டு கண்களாய் விரிய ராணியைப் பார்த்தது.
“ஐயய்யே… நீ தான் தத்தையே போடல்லியே…” என்று கையை நீட்டி இளித்துக் காட்டிவிட்டு, அந்த அம்மணக் கோலத்தைப் பார்க்க வெட்கப்படுவதுபோல் முகத்தை மூடிக்கொண்டாள் ராணி.
ராணியின் வெட்கம் இரவல்தான்; ராணி சட்டையில்லாமல் திரிந்தால், தாத்தா அப்படிச் சொல்லிக் கொண்டு முகத்தை மூடிக்கொள்வார். ராணி அம்மாவிடம் ஓடிச் சட்டையும் ஜட்டியும் போட்டுக்கொண்டு வந்து, முகத்தில் மூடியிருக்கும் தாத்தாவின் கையை விலக்கி, தான் போட்டிருக்கும் சட்டையையும், சட்டையைத் தூக்கிவிட்டு ஜட்டியையும் காட்டுவாள். முகத்தைத்தான் மூடிக்கொள்ள தாத்தா கற்றுக் கொடுத்திருந்தார்; கண்ணை மூடிக்கொள்வதற்கு?… தாத்தாவும் விரல் இடுக்கு வழியாகப் பார்ப்பாரே! அதேபோல் பார்த்த ராணி, முகத்திலிருந்த கையை எடுத்துவிட்டு கேட்டாள்.
“ஆமா, ஒனக்குத் தத்தை இல்லே?…”
“ஓ! இருக்கே…”
“எங்கே ஈக்கு?…”
“தோஓ!… அங்கே!” என்று கையைக் காட்டியது கறுப்புக் குழந்தை.
“எங்கே, உங்க வீத்திலேயா?…”
“ஆமா…”
“உங்க வீது எங்கே?…”
“தோ… இங்கேதான்” என்று கையைக் காட்டியது கறுப்புக் குழந்தை.
ராணி திண்ணையிலிருந்து ரொம்பப் பிரயாசைப்பட்டுக் கீழே இறங்கி வந்து கம்பி அடைப்பின் அருகே, கையில் நேற்று தாத்தா வாங்கித் தந்த புதிய வர்ணப் பொம்மையுடன் நின்று, அவள் காட்டிய திசையில் பார்க்க முயன்றாள். தலையை வெளியே தள்ளிப் பார்க்க முடியாததால் அந்தக் குழந்தையின் வீடு தெரியவில்லை. கறுப்புக் குழந்தை ராணியின் கையிலிருந்த பொம்மையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
கறுப்புக் குழந்தை காட்டிய இடம் அதிக தூரத்தில் இல்லை. கிருஷ்ண மந்திரத்துக்குப் பக்கத்தில் நீண்டு செல்லும் சுவர் ஓரமாக, பிளாட்பாரத்தில் ஒரு பெரிய முருங்கை மரம் நிழல் பரப்பி நிற்கிறது. அதன் நிழலில் சுவரின்மீது ‘முனீஸ்வரர் அபயம்’ என்று பாமரர்களால் எழுதி வைத்துக் கொண்டாடப்படும் ஒரு பாமரக் கடவுள், முழுச் செங்கல் உருவத்தில் எழுந்தருளியிருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் இரண்டு ‘ட’ னா ஆணிகள் அடித்து, ஒரு கோணியின் இரண்டு முனைகள் ஆணியில் மாட்டி, இன்னொரு முனையை முருங்கை மரத்தில் பிணைத்து, நாலாவது முனையை ஆதரவில்லாமல் காற்றில் திண்டாடவிட்டு அந்த முனையை ஒரு பக்கத்து மறைப்பாகக் கொண்டு அதில் ஒரு குடும்பம் வாழ்கிறது.
கறுப்புக் குழந்தை காட்டிய அந்த இடம் ராணிக்குத் தெரியவில்லை.
“ஒனக்குத் தத்தை யாது வாங்கித் தந்தா? தாத்தாவா?”
“எனக்குத் தாத்தாத்தான் இல்லியே!”
“தாத்தா இல்லே? – பாத்தி?”
“ஊஹூம்.”
“அம்மா?”
“ஓ… அம்மா இருக்கே! எங்கம்மா வேலைக்குப் போயிருக்கு. அப்புறமா… நாளைக்கு வரும்போது எனக்கு முறுக்கு வாங்கித் தரும். சொல்லூ”
“உங்க வீத்லே பொம்மை யீக்கா?”
கறுப்புக் குழந்தை பதில் சொல்லாமல்… ராணியின் கையிலிருந்த பொம்மையையே பார்த்துக் கொண்டிருந்தது. ராணி பதிலை எதிர்பார்த்தா கேள்வி கேட்டாள்? அவளுக்கு ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்! பதில் வந்தாலும் வராவிட்டாலும் கேட்க வேண்டும். அதில் ஒரு லயிப்பு.
“ம்… ம்… அப்பதம்… கப்பல்… கப்பல்… ஈக்கா?”
கறுப்புக் குழந்தை தலையை ஆட்டியது. அந்தத் தலையாட்டலுக்கு ‘இல்லை’ என்றும் கொள்ளலாம்; ‘இருக்கு’ என்றும் கொள்ளலாம். அதை எங்கே இவள் கவனித்தாள்? எங்கோ பார்த்துக்கொண்டு கண்களைச் செருகிச் செருகி ‘ம்… ம்… ம்…’ என்ற சுருதியிசையோடு, ‘அப்பதம்… லயில் ஈக்கா? கார் ஈக்கா, வண்டி ஈக்கா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் ராணி. அவள் கேட்பதற்கெல்லாம் தலையாட்டினாள் கறுப்புக் குழந்தை.
வீடு இருந்தாலல்லவா வீட்டில் என்னென்ன இருக்கும் என்று தெரியும்? வீதியிலிருப்பதெல்லாம் வீட்டிலிருப்பதாகத்தான் கறுப்புக் குழந்தைக்கு நினைப்பு. வீதியே வீடாகி விட்டபின்…
அந்தக் ‘கேள்வி கேட்கும்’ விளையாட்டு சலித்துப் போய்விட்டது ராணிக்கு. “நா… வெளையாதப் போதேன்” என்று கூவிக்கொண்டே திண்ணைமேல் ஏறிய ராணி, “உங்க வீத்லே பொம்மை ஈக்கா?” என்று கடைசியாக மறுபடியும் ஒரு முறை கேட்டு வைத்தாள். கறுப்புக் குழந்தை வழக்கம்போல் தலையாட்டினாள்.
திண்ணைமீது உட்கார்ந்துகொண்டே ராணி தன்னிடமிருந்த வர்ணப் பொம்மைக்குச் சட்டை போட்டாள்.
“ஹை… சின்ன சட்டை…!” என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பினாள் கறுப்புக் குழந்தை.
“போ…! நீதான் அதது… பாப்பா கூத தத்தை போத்துக் கித்தா… பாப்பாதான் தமத்து, நா ரொம்ப தமத்து… மானம் வரைக்கும் தமத்…தூ” என்று கைகளை அகல விரித்துக்கொண்டு சொன்னாள் ராணி.
இவள் என்ன பேசுகிறாள் என்றுகூட கறுப்புக் குழந்தைக்குப் புரியவில்லை. கறுப்புக் குழந்தைக்குப் புரிந்ததெல்லாம் ‘தனக்கும் ஒரு பொம்மை வேண்டும், அதற்குச் சின்ன சட்டை போட்டு அழகு பார்த்துச் சிங்காரிக்க வேண்டும், தானும் ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்’ என்பவைதான்.
உள்ளேயிருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டது. கறுப்புக் குழந்தை கால்களை எக்கிக்கொண்டு கம்பிகளின் வழியாக எட்டிப் பார்த்தது.
“அங்கச்சிப் பாப்பா அயுதா… அங்கச்சிப் பாப்பாக்குத் தலைக்கு ஊத்துதா… உங்க வீத்திலே பாப்பா ஈக்கா?” என்று கைகளைத் தட்டிச் சிரித்தவாறு கேட்டாள் ராணி.
எதைச் சொல்ல வந்தாலும் அதைத் தொடர்ந்து ஒரு கேள்வியாகத்தான் முடிக்கத் தெரியும் ராணிக்கு.
“எனக்குத்தான் தம்பி இருக்கானே!”
“தம்பிப் பாப்பாவா…! உங்க பாப்பாவை இங்கே அயெச்சிண்டு வருவியா?”
வீட்டின் உள் முற்றத்தில் குழந்தைக்குத் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் காட்சியில் லயித்திருந்த கறுப்புக் குழந்தை வழக்கம்போல் இதற்கும் தலையாட்டினாள்.
அப்பொழுது “ஏ!… செவாமி…” என்ற குரல் கேட்டு, வலது கையால் கம்பியைப் பிடித்துக்கொண்டு, வலது காலைக் கம்பியில் உந்திக்கொண்டு இடது காலையும் இடது கையையும் வீசிக்கொண்டே திரும்பிய கறுப்புக் குழந்தை, “இங்கேதாம்மா இருக்கேன்” என்று பதில் குரல் கொடுத்தது.
“ஏங் கொரங்கே! பாப்பாவெப் பாத்துக்காம அங்கே எங்கே போயித் தொலைஞ்சே! வாடி அங்கேயே நின்னுகிட்டு, எனக்கு வேலைக்குப் போவனும், வந்து கொட்டிக்க!” என்று தாயின் குரல் அழைத்தது.
“பொம்மை நல்லாருக்கு! அம்மா கூப்புடுது, நா போயி ‘பயேது’ துன்னுட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுத் தாயை நோக்கி ஓடினாள் சிவகாமி.
சிவகாமியின் தாய் ரங்கம்மாள் அந்த தெருவின் மறுகோடியில் புதிதாய்க் கட்டுகின்ற ஒரு வீட்டில் சித்தாள் கூலியாக வேலை பார்க்கிறாள். வேறு எங்காவது தொலைவில் வேலை இருந்தால் மத்தியானம் சாப்பிட வரமாட்டாள். பக்கத்திலிருப்பதால் குழந்தைக்கும் போட்டுத் தானும் சாப்பிட வந்தாள். அவளுடைய கைக்குழந்தைக்கு, பிறந்தது முதலே சீக்கு. கைப்பிள்ளை வயிற்றில் ஆறு மாதமாய் இருக்கும்போது புருஷன் க்ஷயரோகத்தால் செத்துப் போனான். அந்தத் துயரத்தை மாற்ற வந்ததுபோல் அவளுக்குப் பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகவும், புருஷனைப் போலவேயும் இருந்ததில் அவளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி.
பிறந்து எட்டு மாதமாகியும் சற்றும் வளர்ச்சியின்றி நரம்பும் தோலுமாய்க் கிடக்கிறது குழந்தை. நாள்தோறும் காலையில் பக்கத்திலிருக்கும் முனிசிபல் தர்ம ஆஸ்பத்திரி மருந்தை வாங்கிக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறாள்; அதுவும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
ரங்கம்மாளுக்குக் கைக்குழந்தையின் மீதுதான் உயிர். சிவகாமி ‘பொட்டச்சி’ தானே என்ற அலட்சியம். கைக் குழந்தைதான் ஆம்பிளைச் சிங்கமாம்; அவன் வளர்ந்துதான் சம்பாதித்துப் போட்டுப் பெற்றவளுக்குக் கஞ்சி ஊற்றப் போகிறானாம். நோய் பிடித்து, நரம்பும் தோலுமாய் உருமாறி, நாளெல்லாம் சிணுங்கி அழுது, சோர்ந்து உறங்கிச் செத்துக் கொண்டோ, வாழ்ந்துகொண்டொ – எப்படி இருந்தால் தான் என்ன? ஒரு தாயின் கனவுகளை வளர்க்க ஒரு குழந்தை போதாதா?
இரண்டு நாளாகக் கைக்குழந்தைக்குக் காய்ச்சல் வேறு. வழக்கம்போல் முனிசிபல் ஆஸ்பத்திரி மருந்தை வாங்கி வந்து குழந்தைக்கு ஊற்றிவிட்டு, பக்கத்திலிருந்த குப்பைக் குழியில் தன்னையொத்த குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்த சிவகாமியை அழைத்து, வயிற்றுக்கு ‘நீத் தண்ணி’யை வடித்துக் கொடுத்து, “பாப்பாவைப் பாத்துக்கோ, எங்கியும் பூடாதே!” என்று காவலுக்கு வைத்துவிட்டுப் போன ரங்கம்மாள், வரும்போது சிவகாமியை அங்குக் காணாமல் கோபத்துடன் கூவியபோது – பக்கத்திலிருந்து, “இங்கேதாம்மா இருக்கேன்” என்ற குரல் கேட்டதும் சாப்பிட அழைத்ததாகத் தன் கோபக் குரலை மாற்றிக் கொண்டாள் ரங்கம்மாள்.
வரும்போதே “அம்மா… அம்மா…” என்று கொஞ்சிக் கொண்டே வந்தாள் சிவகாமி.
“இன்னாடி?”
“உம்… எனக்குச் சட்டை குடும்மா, சட்டை! வெக்கமா இருக்கு” என்று முழங்காலைக் கட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள் சிவகாமி.
“எங்கே இருக்கு சட்டை?”
“ஐயே, பொய்யி சொல்றே! பெட்டிக்குள்ளே இருக்குது” சிரித்துக் கொண்டே தலையாட்டினாள் சிவகாமி.
“ஒரே ஒரு கிழிசல் இருக்கு. அதையும் போட்டுப் பொரட்டி அழுக்காக்கிப் போட்டுடுவே!”
“இல்லேம்மா! அழுக்காக்காம அப்பிடியே புதுச்சா வெச்சிக்கிறேம்மா! அம்மா, ஐய, அம்மா! சட்டை இல்லாம எனக்கு வெக்கமா இருக்கு. அங்கே அந்த வூட்டுப் பாப்பா பூச்சட்டைப் போட்டிருக்கு! எம்மா அழகு தெரியுமா, அந்தப் பாப்பா!”
“சரி சரி, தின்னு!”
அலுமினியத் தட்டிலிருக்கும் பழைய சோற்றையும் ஊறுகாயையும் தன் சின்னஞ்சிறு விரல்களால் அள்ளி அள்ளிச் சாப்பிட்டாள் குழந்தை. ரங்கம்மாள் பானையில் பருக்கைகளுடன் கலந்திருந்த தண்ணீரில் உப்பைப் போட்டுக் கலக்கிப் பானையோடு தூக்கிக் குடித்தாள்.
“அம்மா, அம்மா!”
“இன்னாடி?”
“எனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரியா”
“தர்ரேன்…”
“எப்ப வாங்கித் தரே?”
“நாளைக்கி…”
“அந்தப் பாப்பா நெறையச் சொப்பு வெச்சிருக்கும்மா…” என்று பொம்மையைப் பற்றியும் செப்புகளைப் பற்றியும் சட்டையைப் பற்றியும் பேசிக் கொண்டே சாப்பிட்டாள் சிவகாமி.
சாப்பிட்டு முடித்த பிறகு சுவரோரமாக வைத்திருந்த ஜாதிக்காய்ப் பெட்டியைத் திறந்து அதில் கிடந்த கந்தல்களைக் கிளறி ஒரு பழைய கிழிந்த கவுனை எடுத்துச் சிவகாமிக்கு அணிவித்தாள் ரங்கம்மாள். கவுனில் – இடுப்பிலும் தோளிலும் கிழிந்தும், கையிலிருந்த கிழிசல்கள் தைத்தும் இருந்தன. அதைப் போட்டவுடன் சிவகாமிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘ஹை ஹை’ என்று குதித்தாள். கவுனிலிருந்த கிழிசலில் விரலை விட்டுப் பார்த்துக் கொண்டே, “அம்மா, அந்தப் பாப்பா புதுச் சட்டை போட்டிருக்கும்மா…” என்றாள்.
“அவுங்கள்ளாம் பணக்காரங்க…” என்று சொல்லிக் கொண்டே கவுனின் பொத்தானைப் போட்டுவிட்டாள் ரங்கம்மாள்.
“நாம்ப…?”
“நாம்பல்லாம் ஏழைங்க… சரி, நீ பாப்பாவைப் பாத்துக்க; நா வேலைக்கிப் போயிட்டு வர்ரேன்… இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டுப் புறப்படும்போது, ரங்கம்மாள் கைக்குழந்தையைத் தூக்கிப் பால் கொடுத்தாள். அது கண்ணைக்கூடத் திறக்காமல், ஜுரவேகத்தில் பால் குடிக்க மறந்து மயங்கிக் கிடந்தது.
ரங்கம்மாளுக்கு நெஞ்சு பதைபதைத்தது. ‘வேலைக்குப் போகாமல் இருந்துவிடலாமா?’ என்று ஒரு வினாடி யோசித்தாள். போகாவிட்டால் ராத்திரி சோற்றுக்கு என்ன செய்வது? அரை நாள் வேலை செய்தாகிவிட்டது. இன்னும் அரை நாள் செய்தால்தானே முக்கால் ரூபாய் கூலி கிடைக்கும்’… என்று நினைத்தவள்… “அப்பா! முனீஸ்வரனே! எங்கொழந்தையைக் காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு புறப்பட்டாள்.
ரங்கம்மாள் புறப்படும்போது, சிவகாமி ஞாபகப்படுத்துவதுபோல் கேட்டாள்: “அம்மா, பொம்மை…”
ரங்கம்மாள் சிவகாமியின் பரட்டைத் தலையைக் கோதியவாறே சொன்னாள்: “நீ அந்தப் பணக்காரக் கொழந்தையைப் பாத்துட்டு ஒண்ணொண்றும் கேட்டா நா எங்கேடி போவேன்?”
“உம்… அது கிட்டே பொம்மை இருக்கு. அது விளையாடிக்கிட்டே இருக்கு…” என்று முரண்டினாள் சிவகாமி.
“நம்ப கிட்டே பாப்பா இருக்கு… நீ பாப்பா கிட்டே வெளையாடிக்கிட்டே இரு…” என்று சிவகாமியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓட்டமும் நடையுமாய் வேலைக்குப் போனாள் ரங்கம்மாள்.
ரங்கம்மாளின் தலை மறையும் வரை, குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவகாமி மெள்ள எழுந்து, தான் போட்டிருக்கும் சட்டையைத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்தவாறு ‘கிருஷ்ண மந்திர’த்தை நோக்கித் துள்ளித் துள்ளி ஓடினாள்.
“தோ பாத்தியா… நானும் சட்டை போட்டுக்கிட்டேன்… எங்கம்மா போட்டுச்சி…” என்று கத்திக்கொண்டே கம்பிக் கதவருகே வந்து நின்ற சிவகாமியைப் பார்த்த ராணி “உஸ்… தத்தம் போதாதே… பாப்பா தூங்குது… முயிச்சின்தா அயும்” என்று தன் பொம்மையை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள்.
“உன் தத்தை ஏன் கியிஞ்சி ஈக்கு?” என்றாள் ராணி.
“நாங்கல்லாம் ஏழைங்க” என்றாள் சிவகாமி. ராணிக்குப் புரியவில்லை.
“உன் பொம்மை எங்கே?” என்றாள் ராணி.
“எனக்குப் பொம்மையில்லே. தம்பிப் பாப்பாதான்… அவனோட தான் நான் விளையாடனுமாம்…” என்றாள் சிவகாமி.
கிருஷ்ண மந்திரத்திற்குள், மத்தியான நேரமானதால் பெரியவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
திண்ணையிலிருந்து இறங்கி மெள்ள வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள் ராணி. எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். முற்றத்து ஓரத்தில் அண்டா நிறையத் தண்ணீர் இருக்கிறது.
அன்று காலை அந்த முற்றத்தில்தான் அங்கச்சிப் பாப்பாவுக்குத் தலைக்கு ஊற்றியது ராணியின் நினைவுக்கு வந்தது. தன் குழந்தைக்கும் தலைக்கு ஊற்ற எண்ணிய ராணி மெள்ள உள்ளே சென்று அண்டாவுக்குப் பக்கத்திலிருந்த குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து திண்ணைமேல் வைத்தாள். இந்தக் காரியங்களின் இடையிடையே, சிவகாமியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். சிவகாமியும் ரகசியமாகச் சிரித்தாள். சத்தம் ஏதுமில்லாமல், குழந்தைக்குக் ‘குளிப்பு’ வைபவம் நிகழ்ந்தது.
வர்ணப் பொம்மையின் தலையில் தண்ணீரை ஊற்றித் தேய்த்ததும் பொம்மையின் கண்ணும் மூக்கும் அழிந்து போயின. மீண்டும் தண்ணீரை ஊற்றிக் கழுவியதும் வெறும் மண்ணில் பொம்மை உருவம்தான் இருந்தது. ராணி அழ ஆரம்பித்தாள்… கண்ணை கசக்கிக்கொண்டு விம்மல் விம்மலாய் ஆரம்பித்த அழுகை ‘தாத்தா’ வென்ற பெருங் குரலாய் வெடித்தது. ராணி அழுவதைக் கண்டதும் பயந்துபோன சிவகாமி முருங்கை மரத்து நிழலை நோக்கி எடுத்தாள் ஓட்டம்.
முருங்கை மர நிழலில் சுவரோரமாய்ப் படுத்திருந்த தம்பிப் பாப்பாவைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள் சிவகாமி. லேசாக அவன் முகத்தைத் தடவினாள்… குழந்தை சிணுங்கி அழுதான். அது அவளுக்கு வேடிக்கையாய் இருந்தது. அடிக்கொருதரம் அவனைச் சீண்டிக்கொண்டே இருந்தாள். அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்தவாறு அவனுடைய சின்னஞ்சிறு கால்களையும் கையையும் தொட்டுப் பார்த்தாள். அப்புறம் கழுத்து வரை போர்த்தியிருந்த கந்தலை எடுத்துப் பார்த்துவிட்டு, வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள் சிவகாமி.
“ஐயய்யே, தம்பிக்குத்தான் சட்டை இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே குழந்தையைப் பார்த்து, “ஒனக்கும் சட்டை வேணுமாடா?” என்று கேட்டாள். பிறகு எழுந்து பக்கத்திலிருந்த ஜாதிக்காய்ப் பலகைப் பெட்டியைத் திறந்து, அதிலிருக்கும் கந்தலைக் கிளறி ஒரு கிழிந்த ரவிக்கையை எடுத்துக்கொண்டு பெட்டியை மூடிவிட்டு, குழந்தையின் அருகே வந்து உட்கார்ந்தாள். போர்வையை எடுத்து விட்டுச் சட்டை அணிவிக்க முற்படும்போது, அவளுக்கு இன்னொரு விளையாட்டுத் தோன்றியது. மோதிர விரலையும் நடு விரலையும் சேர்த்து வாயிலிட்டுச் சப்பிக்கொண்டே எழுந்து ‘ஹை… ஹை’ என்று தோளை உயர்த்திக் கொண்டு குதித்தாள்.
சுவரோரமாக வைத்திருந்த ‘மூன்று கல்’ அடுப்பு மீது பானை இருந்தது. அதனுள் – பானை நிறையப் பச்சைத் தண்ணீர். பக்கத்திலிருந்த தகரக் குவளையில் ஒரு குவளைத் தண்ணீர் மொண்டு கொணர்ந்து தம்பிப் பாப்பாவின் அருகில் வைத்தாள்.
அந்த வீட்டுப் பாப்பா செய்தது போலவே குழந்தையின் அருகே இரண்டு காலையும் நீட்டிப் போட்டுக்கொண்டு, தன் சட்டை நனையாமல் இருக்க முன் பக்கத்தை எடுத்து மேலே செருகிக்கொண்டாள். குழந்தையை, படுத்திருந்த இடத்திலிருந்து முக்கி முனகித் தூக்கிக் கால்களின் மீது கிடத்திக்கொண்டு, தண்ணீர் படாமல் பாயையும் ஒதுக்கி வைத்துவிட்டு – குழந்தையின் தலையில் ஒரு கைத் தண்ணீரை வைத்து ‘எண்ணெய்’ தேய்த்தாள்; பிறகு முகத்தில், மார்பில், உடம்பில் எல்லாம் எண்ணெய் தேய்ப்பதுபோல் தண்ணீரைத் தேய்த்தாள். குழந்தை ஈன சுரத்தில் சிணுங்கிச் சிணுங்கி அழுதான். பிறகு டப்பாவிலிருந்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தை வயிற்றை எக்கி எக்கிக் கேவியது. ‘சீ…! இந்தப் பானை கைக்கு எட்டலியே’ என்று முனகியவாறு காலில் கிடத்திய குழந்தையோடு இன்னும் கொஞ்சம் தள்ளி, உட்கார்ந்த இடத்திலிருந்தே கைக்குப் பானை எட்டுகின்ற தூரத்திற்கு நகர்ந்து கொண்டாள்.
தெருவில் ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். ஆனால், கட்டுவதற்கு ஆணியுமில்லாமல், முருங்கை மரத்திற்கும் எட்டாமல் தொங்கிக் கொண்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அந்தக் கோணியின் நான்காவது முனை, குழந்தையையும் சிவகாமியையும் மறைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் குப்பைத் தொட்டி, கோணியை விலக்காமல் இவளை யாரும் பார்க்க முடியாது. பார்த்தாலும் முதுகுப்புறம்தான் தெரியும்.
இரண்டாவது குவளைத் தண்ணீரைக் குழந்தையின் தலையில் ஊற்றினாள். குழந்தை வயிறு ஒட்டி மேலேற ஒருமுறை கேவிற்று. “ரோ… ரோ… அழாதேடா கண்ணு…” என்ற கொஞ்சலுடன் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்தாள்.
ஒவ்வொரு குவளைத் தண்ணீருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறத் திணற வயிறு ஒட்டி மேலேறிக் கேவிற்று. அந்தக் குழந்தையின் திணறல், இந்தக் குழந்தைக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒன்று… இரண்டு… மூன்றாவது குவளைத் தண்ணீரைச் சாந்தமாக, அமைதியாக எவ்வித சலனமும் உடலிற் காட்டாமல் ஏற்றுக் கொண்டது குழந்தை.
“தம்பி குளிச்சிட்டானே!” என்று நாக்கைத் தட்டிக்கொண்டு குழந்தையின் தலையையும் உடம்பையும் துடைத்தாள் சிவகாமி. பிறகு அந்த ரவிக்கையைச் சட்டையாக அணிவித்து முக்கி முனகித் தூக்கி வந்து பாயில் கிடத்தினாள். “இப்போதுதான் நல்ல பாப்பா” என்று குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள் சிவகாமி.
“சீ, தலைமயிர் மூஞ்சியிலே விழுதே” என்று மரச்சீப்பை எடுத்துத் தலை வாரினாள். பொட்டு? அதோ செங்கல் உருவில் பக்கத்தில் எழுந்தருளியிருந்த முனீஸ்வரனின் மேலிருந்த குங்குமத்தையெல்லாம் சுரண்டி எடுத்துக் கொண்டுவந்து தம்பிக்குப் பொட்டு வைத்தாள். கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்தாள். கைகளை மார்பின் மீது குவித்து வைத்து, துவண்டு கிடந்த தலையை நிமிர்த்தி வைத்தாள்.
‘தம்பி ஏன் அழலே…?’ என்ற நினைவும் வந்தது. ‘தம்பிதான் பட்டுப் பாப்பா… அழவே மாட்டான்.’
“தம்பி தம்பி” என்று எழுப்பினாள். குழந்தையின் உடம்பு சில்லிட்டிருந்தது.
“அப்பா! ரொம்ப ‘சில்’லுனு இருக்கு. தம்பி, ஏண்டா சிரிக்கமாட்டேங்கிறே? கையை ஆட்டு… ஆட்டமாட்டியா? கண்ணைத் திற” என்று இமைகளை விலக்கிவிட்டாள்; கண்கள் வெறித்தன…
“என்னடா தம்பி, பொம்மை மாதிரி பார்க்கிறியே… நீ பொம்மை ஆயிட்டியா?” என்று கைகளைத் தட்டிக் குதித்தாள் சிவகாமி.
சாயங்காலம் ரங்கம்மாள் வேலையிலிருந்து திரும்பி வரும்போது ‘கிருஷ்ண மந்திர’த்தின் அருகே வர்ணம்போன ஒரு மண் பொம்மை – தூக்கி எறிந்த வேகத்தில் கால் பகுதி மட்டும் கொஞ்சம் உடைந்து கிடந்தது – காலில் தட்டுப்பட்டது. ரங்கம்மாள் குனிந்து அதை கையில் எடுத்தாள்.
‘மத்தியானமெல்லாம் குழந்தை பொம்மை… வேணும்னு அழுதாளே’ என்று நினைவு வந்ததும் கையிலெடுத்ததை மடியில் கட்டிக் கொண்டாள்.
சற்றுத் தூரத்தில் சிவகாமி ஓட்டமாய் ஓடி வந்தாள்…
“எங்கேடி ஓடியாறே? வீட்டுக்குத்தானே வர்ரேன்? இந்தா ஒனக்கு பொம்மை…” என்று வர்ணம் போன பொம்மையைக் கொடுத்தாள்.
“இதுதான் அந்தப் பாப்பாவோட பொம்மை, ஒடஞ்சி போயிடுச்சி… அம்மா, நம்ப தம்பிப் பாப்பா இல்லே… தம்பிப் பாப்பா – அவன் பொம்மையாயிட்டாம்மா… வந்து பாரேன். அந்தப் பாப்பாவோட பொம்மைதான் கெட்டுப் போச்சு… தம்பி நல்லா இருக்கான், வந்து பாரேன்…” என்று தாயை இழுத்தாள் சிவகாமி.
“என்னடி சொல்றே, பாவி!” என்று பதறி ஓடிவந்த ரங்கம்மாள் – குளிப்பாட்டி, சட்டை போட்டு, தலைவாரி, நெற்றியில் பொட்டு வைத்து நீட்டிக் கிடத்தியிருக்கும் தன் ஆசை மகனைப்பார்த்து, “ஐயோ மவனே…” என்று வீழ்ந்து புரண்டு கதறி அழுதாள்.
சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை. மோதிர விரலையும் நடு விரலையும் வாயிலிட்டுச் சப்பிக் கொண்டு, முகமே கண்களாய் விரியப் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தாள். அவள் கையில் ராணி குளிப்பாட்டியதால் வர்ணம் போய், தூக்கி எறிந்த வேகத்தில் கால் உடைந்துபோன அந்த நொண்டிப் பொம்மை இருந்தது.
அம்மா எதற்கு அழுகிறாள் என்று சிவகாமிக்குப் புரியவே இல்லை. ஆனாலும் அவள் உதடுகளில் அழுகை துடிக்கிறது – அவள் அழப் போகிறாள்.