Author Archives: MBK

About MBK

Myself a Web Developer & Programmer want to explore more hidden places in our country and the marvels and hidden history behind those places.

சிறுகதை: பொறுமையால் கண்ட உண்மை – அண்ணாமலை

காலை 9 மணி. பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிக்கூட மாணவர்கள் முண்டி அடித்துக் கொண்டு வண்டியில் ஏறினர். சிலர் ஏறும் வழியிலும் சிலர் இறங்கும் வழியிலும் நின்று கொண்டனர். இன்னும் சிலர், வண்டியில் தொத்திக் கொண்டனர்.

கண்டக்டர் விசில் கொடுத்தார். வண்டி நகர ஆரம்பித்தது. ஆதிமூலம் வேகமாக ஓடிவந்தான். அவனைக் கண்டதும் வண்டியில் தொத்திக்கொண்டிருக்கும் மனோகர், “ஓடிவா ஆதி, சீக்கிரம் வாடா” என்று  அழைத்தான்.

ஆதிமூலம் வண்டியில் ஏறுவதற்கு ஓடலானான். அவனை யாரோ பிடித்து நிறுத்துவதைக் கண்டான். ‘யார் இவர். எதற்காக என்னைப் பிடித்து நிறுத்துகிறார்? என்னுடைய நண்பர்கள் அந்த வண்டியில் போகிறார்கள். நான் அந்த வண்டியை…?’ என்று நினைத்தான். தன்னைப் பிடித்தவர் கையைத் தட்டினான்.

“தம்பி! எதற்கு அவசரமாக ஓடுகிறாய்? அந்த வண்டியைப் பார். அதில் பெரும் கூட்டம் செல்கிறது. அதற்குள்  உட்காருவதற்கு இடமில்லை. அந்த வண்டியில் முறையாகப் பயணம் செய்ய இடமில்லை என்று தெரிந்தும் சிலர் தொத்திக் கொண்டு போவதைப் பார். அந்த வண்டியில் போக ஆசைப்படலாமா?” என்று கூறினார் அருள்சாமி.

“என் நண்பர்கள் எல்லாரும் அந்த வண்டியில் செல்கிறார்கள். நானும் போகவேண்டும். என்னைத் தடுக்காதீர்கள். என்னை விடுங்கள்” என்று கூறிவிட்டு ஓட முயன்றான் ஆதிமூலம்.

“தம்பி! அந்த வண்டியில் போக வேண்டாம். நான் சொல்வதைக் கேள். நில்” என்று ஆதிமூலத்தைத் தடுத்து நிறுத்தினார் அருள்சாமி.

ஆதிமூலம் ஓடி வண்டியில் ஏறும் எண்ணத்தைக் கைவிட்டான். தன்னைத் தடுத்த பெரியவரைப் பார்த்தான். நம்மை ஏன் தடுத்தார் என்று யோசித்தான்.

“தம்பி! நீ படிக்கும் பள்ளிக்கூடம் செல்வதற்கு இந்த வண்டி மட்டும் இல்லை. இன்னும் ஏராளமான வண்டிகள் வரும். அவைகளில் போகலாம். அதுவரைக்கும் பொறுமையாய் நில்” என்று கூறினார்.

வண்டி நிறைய நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஏறிச் சென்றார்களே அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்? என்று கேட்பது போல் அவரைப் பார்த்தான், ஆதிமூலம்.

“அந்த வண்டியில் செல்லும் உன் நண்பர்களைப் பார்த்து அவர்களைப் போல் நீயும் பயணம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறாய். அது தவறு. தெரியாமல் செய்யப்படும் தவறுக்கு மன்னிப்புண்டு. ஆனால் தெரிந்து தவறு செய்தால்?” என்று பேச்சை நிறுத்தினார் அருள்சாமி.

ஆதிமூலம் தன் கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த வண்டி வந்தது; கூட்டமும் குறைந்திருந்தது. இருவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர். வண்டி புறப்பட்டது.

வீதியில் பெரும் கூட்டம் கூடி இருந்தது. ஏராளமானவர்கள் எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

“பாவம்! சிறு வயசு. யார் பெற்ற பிள்ளையோ! பலத்த அடிபட்டது. அவன் உயிர் பிழைப்பதற்கு அரிது” என்று தன் இரக்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு பஸ் பயணி.

“எதற்கு சார் இப்படி ஏற வேண்டும்? அடுத்த வண்டியில் வரக் கூடாதா? இந்த வண்டியில் கூட்டம் அதிகமாக இருப்பது தெரிந்து ஏறலாமா? டிரைவர் என்ன செய்வார்? எதிரே வந்த வண்டி, உராய்ந்ததால் பையனின் கையும் காலும் உடைந்தது” என்றார் மற்றொருவர்.

“சார்! இந்தப் பையன்கள் வேண்டுமென்றுதான் இப்படி வருகிறார்கள். படிக்கின்ற இவர்களுக்குப் பொது அறிவு இருக்க வேண்டாமா? இதனால் எத்தனை பேருக்குத் தொல்லை” என்று தன் அலுவலக நேரத்தை நினைத்து வேதனைப்பட்டார்  மற்றோர் அலுவலர்.

விபத்துக்குள்ளான வண்டியிலிருந்து ஏறிய சிலர் பேசிய பேச்சுக்கள் ஆதிமூலத்தின் காதில் விழுந்தது. அருள்சாமி ஆதிமூலத்தைப் பார்த்தார்.

‘இவருடைய பேச்சைக் கேட்காமல்  நாமும் அவசரப்பட்டு வண்டியில் ஏறியிருந்தால் நம்முடைய உயிர் அந்த வண்டியின் சக்கரத்திலோ அல்லது எதிரே வரும்  வண்டிகளின் இடிபாடுகளிலோதான் முடிந்திருக்கும். எப்படியோ நல்ல வேளையாக நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்’ என்று நினைத்தான் ஆதிமூலம்.

“தம்பி! படிக்கின்ற இளைஞர்கள்தான் நாளை நாட்டை ஆளப் போகிறவர்கள். அவர்களிடம் பொறுமை இருக்க வேண்டாமா?

மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாய் நடந்து காட்ட வேண்டாமா?” என்று கேட்டார் அருள்சாமி.

ஆதிமூலம் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஆதிமூலம்! மனோகருக்கு அடிபட்டு விட்டது. அவன் உயிருக்கு ஆபத்து” என்று சொன்னான்  விசுவநாதன்.

ஆதிமூலம் பெரியவர் அருள்சாமியைப் பார்த்தான். ‘அவசரப்பட்டான்; ஆபத்தை அணைத்துக் கொண்டான். நீ பொறுமையாக இருந்ததால் உயிரோடு செல்கிறாய்’ என்று சொல்வதுபோல் பார்த்தார்.

“தம்பி! இப்பொழுதாவது புரிகிறதா? பொறுமையால் கண்ட உண்மை என்னவென்று?” என்று கேட்டார்.

கண்டக்டர் விசில் ஊதினார். வண்டி ஓடியது.

(புலவர் திரு. அண்ணாமலை அவர்கள் எழுதிய “சிறுவர் கதைப் பூங்கா” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: கல்வியே சிறந்த செல்வம் – அன்பு ராமசாமி

பூதக்குடி என்னும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் சுந்தரமும், கந்தனும் படித்து வந்தனர். அப் பள்ளியில் நிறைய மாணவர்கள் படித்தாலும் சுந்தரமும் கந்தனும் மட்டும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

சுந்தரம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். கல்விச்  செலவுக்காகக் கூட அவன் தந்தை கடன் வாங்கித்தான் அவனைப்  பள்ளியில் பயில வைத்தார். ஆனாலும் சுந்தரம் கல்வியில் மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் இருந்து வகுப்பின் முதல் மாணவனாகவும் திகழ்ந்தான்.

கந்தன் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஆடம்பரமாக அவன் வாழ்ந்து வந்தான். கந்தனுக்குப் பொருட்செல்வம் அதிகம் இருந்தாலும் படிப்பில் அக்கறையில்லாமல் இருந்தான். வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்ய மாட்டான். காலையில் நேரத்தோடு பள்ளிக்கு வர மாட்டான். ஆனால் மாலையில் முதல் மாணவனாக வீட்டுக்குத் திரும்பி விடுவான்.

நாள்கள் பல சென்றன. கல்வியில் சிறிதும் ஆர்வமில்லாத கந்தன் பள்ளியை விட்டு விலகி விட்டான். அவன் பெற்றோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பள்ளிப் படிப்பைத் தொடர மறுத்து விட்டான்.

சுந்தரம் மிகவும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் தன் பாடங்களைப் படித்து வந்தான். வகுப்பில் படிப்பில் மட்டுமல்லாது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றிலும் அதிக  ஆர்வம் காட்டிப் பல பரிசுகளும் பெற்றான்.

ஆண்டுகள் பல கடந்தன. சுந்தரம் தன் பள்ளிப் படிப்பை முடித்து வெற்றி கண்டான். மாநிலத்திலேயே குறிப்பிடத்தக்க அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்த சுந்தரத்திற்கு அரசாங்கமே உதவித்தொகை தந்து மேற்படிப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.

கந்தன் தன் பெற்றோர் வைத்திருந்த செல்வத்தைச் சிறுக சிறுகச் செலவு செய்தான். சிறிது காலத்தில் அவன் பெற்றோரும் இறந்து விட்டார்கள். ஆகவே அவனது ஊதாரி நண்பர்கள் பலர்  கந்தனுடன் கூடிப் பணத்தைச் செலவு செய்தனர்.

நாளடைவில் கந்தன் பெரிய குடிகாரனாக மாறிப் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டான். அவனைக் கண்டித்துத் திருத்தப் பெற்றோரும் இல்லை. எனவே கந்தனின் செல்வம் நாளடைவில் குறையத் தொடங்கியது.

மேல் படிப்புக்காக வெளியூர் சென்றிருந்த சுந்தரமோ மிகவும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்றான்.

சுந்தரத்தின் அறிவுக் கூர்மையைப் பாராட்டி அரசாங்கமே அவனுக்கு வேலை வாய்ப்பினைச் செய்து கொடுத்தது. சுறுசுறுப்பும், புத்திக் கூர்மையும் உள்ள இளைஞன் சுந்தரம் மேலும் மேலும் பதவி உயர்வு பெற்று வந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பூதக்குடி கிராமப் பள்ளி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கு கொண்டார். பெருந்திரளாக மக்கள் கூட்டம் கூடி இருந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் வருகையை ஒட்டி ஊர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி மூலம் அவரின் வருகையைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தனர்.

சிறிது நேரத்தில் ஒரே பரபரப்பு. மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து கொண்டிருந்த காரின் இடையில் யாரோ ஒருவன் மது உண்ட மயக்கத்தால் விழுந்து லேசான விபத்து ஏற்பட்டுவிட்டது. அதைக் காண மக்கள் கூட்டம் கூடிவிட்டது.

அங்கே கந்தன் மது மயக்கத்தில் இருந்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஆர்வமுடன் பயின்ற சுந்தரம் மாவட்ட ஆட்சித் தலைவராய் நின்று கொண்டிருந்தான்.

உயர் பதவி வகித்த போதிலும் தன் பழைய நட்பை மறவாது, கந்தனுக்குத் தக்க உதவி செய்ய சுந்தரம் முன் வந்ததைக் கண்ட ஊர் மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.

நீதி: பொருட்செல்வம் எவ்வளவு இருப்பினும்,  அது அழிந்துவிடும். கல்விச் செல்வம் அழியாது. ஆர்வமுடன் நாமும் பயின்றால் உயர் பதவிகளை அடையலாம்.

(திரு. அன்பு ராமசாமி அவர்கள் எழுதிய, “அன்பு கதை மலர்”, என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: பசுவின் கண்ணீர் – மயில்வாகனன்

தென்னிந்தியாவில் இருந்த சோழ நாட்டில், திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு நெடுங்காலம் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்து, பிறகு மகன் ஒருவன் பிறந்தான். அம் மகனின் பெயர் வீதிவிடங்கன்.

வீதிவிடங்கன், மிகுந்த அடக்கமும் நல்ல குணங்களும் உடையவன். அவன், ஒரு நாள், தேர்மீது ஏறிக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றான். அப்பொழுது அவனுடன் பலர், தெரு வழியே சென்றனர். மேளவாத்தியம் ஒலித்தது. பலவகை வெடிகள், விண் அதிர வெடித்தன. இடி ஓசை போன்ற வெடி ஓசை கேட்டுப் பசுக்கன்றுகள் நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடின. அவற்றில் ஒன்று, வழிதெரியாமல் கூட்டத்தில் புகுந்து கடைசியில் தேரின் சக்கரத்தில் அகப்பட்டு இறந்துவிட்டது. பாவம்! எவரும் அதனைக் கவனிக்கவில்லை.

கன்று இறந்ததை வீதிவிடங்கன் அறிந்து, தேரிலிருந்து இறங்கிவந்து கன்றைப் பார்த்து வருந்தினான். அப்பொழுது கன்றைத் தேடிவந்த தாய்ப்பசு, கன்று இறந்து கிடக்கக்கண்டு, அதனை மோந்து பார்த்துக் கதறியது. கதரியவண்ணம் அரண்மனையை நோக்கி விரைந்து ஓடியது.

பசுவிற்கு நீதி வழங்கும் மனுநீதிச் சோழன்

அரண்மனை வாயிலின் முன் சென்ற தாய்ப்பசு, வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அசைத்தது. மணி ஓசை கேட்டு, மன்னன் மனுநீதி, அரண்மனையுள் இருந்து வெளியே வந்தான்; அமைச்சர் மூலம் நிகழ்ந்ததை அறிந்தான்; பசுவின் கண்ணீரைக் கண்டு தன் உள்ளம் வருந்தினான். “என் மகன் பசுவின் கன்றைக் கொன்றதால், தாய்ப்பசு தவிக்கின்றது. இதற்கு நியாயம் வழங்க வேண்டும்; கன்று இறந்த இடத்தில், கன்றைப் போலவே என் மகனையும் கொல்வதே முறை” என்று, நீதியை எடுத்துக் கூறினான்.

இவ்வாறு கூறிய மனுநீதி, தான் சொன்னபடியே தன் மகன் வீதிவிடங்கனைத் தேர்ச்சக்கரத்தின் கீழ் வைத்துக் கொன்றான்.

மன்னன் மனுநீதியின் நீதிமுறையை மக்கள் அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.

(திரு. மயில்வாகனன் அவர்கள் எழுதிய, “உலக அதிசயக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: தில்லியில் தென்னகத்தின் புகழ் – தே. ப. பெருமாள்

தென்னகத்தில் தனது நகைச்சுவையாலும் சமய சந்தர்ப்பப் புத்திக் கூர்மையாலும் பேரும் புகழும் பெற்ற தெனாலிராமனைப் பற்றிய புகழ் வடநாட்டிலும் பரவத் தொடங்கிற்று. தில்லியில் அப்போது சக்கரவர்த்தியாக இருந்த பாபரும் இவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். 

இவனது நகைச்சுவையையும் விகட  வேடிக்கைகளையும் தாமும் கண்டு களிக்க ஆர்வம் கொண்டு, ஒரு மாத காலத்திற்குத் தெனாலிராமனை அனுப்பி வைக்க, சக்கரவர்த்தி பாபர், கிருஷ்ணதேவராயருக்குக் கடிதம் எழுதினார்.

தம் அரசவையிலுள்ள ஒரு விகடக் கலைஞரின் திறமையை சக்கரவர்த்தி பாபரும் விரும்புகிறார் என்பதில் கிருஷ்ணதேவராயருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவர் தெனாலிராமனை அழைத்து “ராமா, சக்கரவர்த்தி பாபர் உன்னை அழைத்திருக்கிறார். இது உனக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே பெருமை தரும் செய்திதான். அங்கு நீ உன் திறமையைக் காட்டி, எல்லாரையும் மகிழ வைத்துச் சக்கரவர்த்தியிடமிருந்து பொற்குவியல் பரிசாகப் பெற்று வர வேண்டும். அப்போதுதான் நமக்கெல்லாம் பெருமை. அப்படி நீ வரவில்லையென்றால் இந்த அவையிலிருந்து நீ விலக்கப்படுவதோடு அவையின் இகழ்ச்சிக்கும் ஆளாவாய்” என்று எச்சரிக்கை செய்து தில்லிக்கு அவனை அனுப்பி வைத்தார்.

தெனாலிராமன் தில்லிக்கு வருகிறான் என்றறிந்த சக்கரவர்த்தி பாபர், தம் அவைப்புலவர்களிடம் இங்கு வருகிற விஜயநகரத் தெனாலிராமன், எந்த மாதிரியான விகடங்கள் செய்தாலும், அல்லது தனது அபூர்வத் திறமையைக் காட்டினாலும் இங்குள்ள யாரும் அவற்றைப் பார்த்து ரசிக்கவோ, கண்டுகளிக்கவோ கூடாது” என்று கட்டளையிட்டிருந்தார். மேலும் அவர், தென்னகத்தான் ஒருவன் இங்கிருந்து புகழ்பெற்றுச் செல்லுதல் கூடாது என்று கண்டிப்புடன் ஆணையிட்டிருந்தார்.

தில்லிக்கு வந்த தெனாலிராமன் பாபர் அரசவைக்கு வந்து தனது அபூர்வ விகடங்களையெல்லாம் செய்து காட்டினான். புத்திக்கூர்மையாலும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் தந்திரங்களாலும் அவனது விகடங்கள் ஈடு இணையற்றிருந்தன. ஆனால் சக்கரவர்த்தி பாபரது அவையில் இவனை யாரும் பாராட்டிப் போற்றவில்லை.

தெனாலிராமன் ‘இது ஏதோ ஒரு சூழ்ச்சியால்தான் இப்படி நடை பெற்றிருக்கிறது’ என்பதை ஊகித்துக் கொண்டான். எனினும் அவன் தளர்ந்து விடவில்லை. இங்கு வெற்றி பெற்றுச் செல்வதே தனது இலட்சியம் எனக் கொண்டிருந்தான்.

கிழவேடம் பூண்ட தெனாலிராமன்

ஒரு நாள் மாலையில் பாபர் தம் மெய்க்காப்பாளரோடு பாதை வழியாக உலாவிக் கொண்டு வந்தார். வழியில் அவர் கண்ட காட்சி, அவருக்கு வியப்பை அளித்ததோடு நகைப்பையும் கொடுத்தது. தெனாலிராமன் கிழவேடம் புனைந்த பக்கிரியாக நின்று பாதையின் ஒரு கரையில் மாங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தான். பாபர், முதிர்ச்சி கொண்டவராய்த் தோன்றிய அந்தப் பக்கிரியிடம், “பெரியவரே இந்தத் தள்ளாத வயதில் இம் மாங்கன்றை ஏன் நடுகிறீர்? உங்களுக்கு இதனால் வரும்பயன் என்ன? இம் மரம் கொஞ்சம் வளர்ந்து பெரிதாவதற்குள் உமது வாழ்வு முடிந்துவிடுமே” என்றார்.

பக்கிரிவேடம் புனைந்த தெனாலிராமன், ‘கெக்கக்கே’ என்று சிரித்தான்.

பாபர் அவனிடம் “ஏன் இப்படிச் சிரிக்கிறீர்” என்று  சற்றுக் கருத்தோடு கேட்டார்.

“இன்று நாம் சுவைமிக்கத் தீங்கனிகளைச் சாப்பிடுகிறோமே, இக் கனிகளை உதிர்க்கின்ற மரங்களை நாமா வளர்த்தோம்? நமது முன்னோர்கள் நட்டு வளர்த்தார்கள். பயனை நாம் அனுபவிக்கிறோம். இதைப்போல்  நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் அளிக்கின்ற கனிகளை நமக்குப் பின் வருபவர்கள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்ய வேண்டியது மனித தர்மமல்லவா” என்றான்.

இம் மொழிகளைக் கேட்ட பாபருக்கு பக்கிரி சொன்ன உண்மை அனுபவமும் மனித குலத்தின் தியாக உணர்வும் மனத்தில் பதிந்தது. முதியவரின் வாக்கின் உண்மைக்கு மகிழ்ந்து, பாபர் தெனாலிராமனைப் புகழ்ந்து அவனுக்குப் பொற்குவியல் ஒன்றைப் பரிசாக அளிக்க ஆணை வழங்கினார். இதைக் கண்டு உள்ளம் களித்த அந்த உன்னதக் கலைஞன் பாபரைப் பார்த்து, “சக்கரவர்த்தியவர்களே, கன்றை நடுகின்றவர்கள் அது வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கனிந்த பிறகே பயனைக் கொள்வார்கள். நான் கன்றை நடும்போதே தங்களிடமிருந்து பரிசைப் பெற்றுவிட்டேன். பிறர் நலம் பெற நாம் செய்ய முனையும் செயலே நமக்கு நலத்தைத் தரும் என்பதற்குத் தங்களது செயலே சான்று” எனக் கூறினான்.

இந்த உண்மையும் தம் வாழ்வில் நிகழ்ந்திருந்த பல அனுபவங்களும் சக்கரவர்த்தி பாபரின் நினைவில் பளிச்சிட்டன.

“ஆகா, எவ்வளவு உண்மையான தத்துவங்கள்!” எனத் தம் மனத்துக்குள் வியந்து, மீண்டும் ஒரு பொற்குவியலை வேடதாரியான தெனாலிராமனுக்கு அளித்தார்.

இந்த மட்டோடு வேடதாரிப் பக்கிரி நின்று விடவில்லை. “கனிவும் கருணையும் மிக்கவரே! மரங்களைச் சொந்தமாகக் கொண்டவர்கள் கூட ஆண்டிற்கு ஒருமுறைதான் அதன் பலனைப் பெறுவார்கள், நானோ இறைவன் இன்னருளாலும் தாங்கள் இதயக் கனிவாலும் இருமுறை பயனைப் பெற்று விட்டேன்” என்று சொல்லிப் பாபரின் உள்ளத்தைக் குளிர வைத்தான் பக்கிரி.

பாபர் மீண்டும் ஒரு பொற்குவியலை அவனுக்குப் பரிசாக வழங்கினார்.

இதன் பின்னர் பாபர், அங்குத் தங்குவதற்கோ தெனாலிராமனுடன் பேசுவதற்கோ விரும்பவில்லை. அந்தப் புத்திக் கூர்மையுள்ளவன் அரிய கருத்துக்களைக் கொண்ட இனிய மொழிகளைக் கூறித் தம்மிடமுள்ள பொற் குவியல்களையெல்லாம் பெற்று விடுவான் என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லை!

அந்த இடத்தை விட்டுத் தம் மெய்க்காப்பாளருடன் சக்கரவர்த்தி புறப்படலானார். அப்போது அந்தப் பக்கிரியான தெனாலிராமன் பாபர் சக்கரவர்த்தி முன் வந்து, “எனக்காகச் சற்றுப் பொறுங்கள்” என்று வேண்டிக் கொண்டு தன் வேடத்தைக் கலைத்து, தான் யார் என்பதைக் காட்டி அவர் முன் நின்றான். யார் அது? தென்னகம் ஈன்ற முத்து தெனாலிராமன் என்பதைப் பாபர் உணர்ந்து கொண்டார்.

தன் அவையிலுள்ளவர்களுக்குத் தெனாலியின் கலைச் சுவையை ரசித்துப் பாராட்டக்கூடாது என்று கடுமையான கட்டளை வழங்கிய அவரே, இப்போது கலைக்கு ஆட்பட்டுப் போனார். இனி மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

பாபர் தெனாலிராமனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து “கலைக்கு இடம், ஆள், இனம், மொழி என்று எதுவும் இல்லை. நீ பிறவியிலேயே நகைச்சுவைக் கலைஞன். குயிலுக்கு யாரும் கூவக் கற்றுக் கொடுப்பதில்லை. மயிலுக்கு யாரும் ஆடப் பயிற்சி அளிப்பதில்லை. மீன் குஞ்சுக்கு நீந்த யாரும் பழக்குவதில்லை. இவற்றைப் போலவே நீயும்  கலையைக் கொண்டு பிறந்தவன்” என்று சொல்லித் தம் மெய்க்காப்பாளரிடம் இருந்த பொற்குவியல்களையெல்லாம் தெனாலிராமனுக்கு மீண்டும் கொடுத்து, ‘உன் திறமையையும் கலையையும் நான் மிகமிகப் புகழ்ந்து பாராட்டிப் பரிசளித்ததை உன் மன்னரிடம் போய்ச் சொல்’ என்று கூறி விடை கொடுத்தனுப்பினார்.

வடநாட்டில் தென்னாட்டின் புகழை நிறுவிய தெனாலிராமனை விஜயநகர வேந்தர் அன்பால் தழுவிக் கொண்டார். அவனுக்கு ஆயிரம் வராகனை அன்பளிப்பாய் அளித்ததோடு அரசவையிலும் பெருஞ்சிறப்புச் செய்தார்.

(கவிஞர் திரு தே. ப. பெருமாள் அவர்கள் எழுதிய ‘சிரிப்பூட்டும் தெனாலிராமன் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: அடுத்த வீட்டு சிவப்பு ரோஜா – புஷ்பா தங்கதுரை

போனில் எச்சரிக்கையோடு பேசினேன்.

– என் பேர் மணி! ஒரு கொலை இங்க நடந்திருக்கு! உடனே நீங்க வரணும்! என்றேன்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அல்லது ரைட்டர் கர கரப்பில் பேசினார்.

– அப்படியா? தம்பி! என்றதும் எனக்கு ‘சப்’ அடித்தது.

என் பதினோரு வயதுக் குரலை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் சொன்ன விஷயத்தில் பரபரப்பு இல்லை. ‘தம்பி’ என்று என்னை அழைத்து விட்டார்கள். முகவரி எதுவும் கேட்கவில்லை.

பப்ளிக் பூத்தின் போனை மாட்டினேன்.

நன்றாகப் புரிந்துவிட்டது. ஒரு பதினோரு வயது பையனின் குரலை யாரும் மதிக்க மாட்டார்கள்.

மேல்நாடு என்றால் இதற்குள் ‘குய்யன் குய்யன்’ என்று கூச்சல் போட்டுக்கொண்டு போலீஸ் கார்கள் ரேஸ் ஓடும். திமு திமு என்று புஷ்டியான போலீஸ்காரர்கள் இறங்கி விடுவார்கள். டி.வி.யில் பார்த்திருக்கிறேன். நம்மூரில் எல்லோரும் சோம்பேறிகள்!

பாவம் பிரார்த்தனாவை நினைத்தேன். கன்னடப் பெண்மணி! தமிழைக் குழந்தையாகப் பேசுவாள். நல்ல சிவப்புக் கலர்! உதடு ரோஸாக இருக்கும்.

அடுத்த வீட்டில் இருந்தாள். புருஷன் பெயர் ரத்னசாமி. பெரிய மீசை, பெரிய தொப்பை பார்க்க பயங்கர முகம்!

பிரார்த்தனாவை விட நிறைய வயது. எப்படித்தான் திருமணம் செய்து கொண்டார்களோ?

ரத்னசாமி கடுங்கோபக்காரர். எங்களிடம் இரண்டு முறை சண்டைக்கு வந்து விட்டார்! எங்கள் குப்பை அவர் தோட்டத்தில் விழுகிறது என்று.

நல்ல வேளை!

அவருக்கு அந்தப் பக்க வீட்டில் ஜானி என்ற ஒருவர் வந்தாலும் வந்தார் சண்டை எல்லாம் அவர் பக்கம் திரும்பிவிட்டது.

ஜானி ஒரு மலையாளி! ஒரு போமரனியன் நாய் வைத்திருந்தார். வாலும் தெரியாது, முகமும் தெரியாது. அத்தனையும் ரோமம். இரவில் பார்த்தால் குட்டி ஆவி போல் தெரியும். ரெக்ஸ் என்று அதன் பெயர்.

ரெக்ஸ் ரொம்ப சமத்து. எஜமானன் ஜானி வீட்டில் நல்லாச் சாப்பிட்டு விட்டு ரத்னசாமி வீட்டுத் தோட்டத்தில் நல்லா ‘டாய்லெட்’ போய்விட்டு வீட்டுக்குப் பேசாமல் போய்விடும்.

ரத்னசாமியின் தோட்டம்தான் அதற்கு குஷி!

ரத்னசாமி கத்து கத்து என்று கத்துவார். ஜானியோடு சண்டைக்கு போவார். ஜானி மலையாளத்தில் குரைக்க, ரத்னசாமி கன்னடத்தில் குரைக்க ரொம்ப தமாஷாக இருக்கும்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே?

என் பிரசினை புதன்கிழமை இரவு 8.30க்கு ஆரம்பித்தது.

தெரு ஓரம் இருக்கும் கணபதி ஸ்டோர்ஸில் மேரி பிஸ்கட் ரோல் வாங்கி வீடு திரும்பினேன்.

சுவாரஸ்யமாகத் தின்ன ஆரம்பிக்க, – மணி! என்று குழையும் குரலில் ஒரு அழைப்பு என் தோள் ஓரம் கேட்டது.

பார்த்த போது, பிரார்த்தனா! ‘கொலோன்’ வாசம் அவள் உடம்பு எங்கும். அவளைப் பார்த்ததும் எனக்கு உடம்பில் ஒரு திடீர் அடக்கம் தோன்றிவிடும்.

நீங்கள் அதை வெறும் பிரியம் என்று சொன்னாலும் சரி, அல்லது கன்றுக்குட்டிக் காதல் என்றாலும் சரி,

அவளைப் பார்ப்பதில் எனக்கு ஒரு உவகையான மகிழ்ச்சி இருந்தது.

நான் என்ன?

எங்கள் தெருவில் அவள் நடந்து போனால் நிறைய தலைகள் திரும்பிப் பார்க்கும்.

– ஏ, மணி, இங்கே எங்கே வந்தே? என்று அவள் கேட்க, இரண்டு பிஸ்கட்டை அவளிடம் கொடுத்தேன்.

– பரவாயில்லை! என்று என்னிடமே தந்தாள்.

களைப்பாக இருந்தாள். தலையெல்லாம் கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை. அப்படியும் அவள் லட்சணம் மாறவில்லை. பேசிக்கொண்டே வீடு வரை நடந்தோம்.

– வரேன்! என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.

இனிமேல் பிஸ்கட்டைச் சாப்பிடலாம் என்று நினைத்த போது,

ஜானியின் போமரனியன்   ரெக்ஸ் வந்து என் காலைத் தடவியது. நானும் அதுவும் சிநேகம்! பிஸ்கட் போட்டேன்! கிரவுச் கிரவுச் என்று சாப்பிட்டது.

பிஸ்கட்டை ‘முடித்து விட்டு’ நான் வீடு போகலாம். எனவே ரெக்ஸும் நானும் பங்கு போட்டுச் சாப்பிட, 

‘ஓ’ என்று கீச்சுக் குரல். ஒரு கணத்தில் அது பிரார்த்தனாவின் குரல் என்று தெரிந்துவிட்டது. வீட்டுக்குள்ளிருந்து சத்தம்.

– எங்கே போயிருந்தே மூதேவி? இது ரத்னசாமியின் குரல்.

– எங்கே போனா என்ன?

தொம் தொம் என்று சத்தம்! பிரார்த்தனா அடி வாங்குகிறாள். 

– இனிமே போவியா?

– என்ன அடிக்கிறியா? நான் போகத்தான் செய்வேன். அடப்பாவி என்னை நெருங்காதே… ஐயோ என்னை விட்டுரு! கொல்லாதே… ஐயோ….

பிறகு திடீர் நிசப்தம்.

என் கையும் காலும் பரபரத்தது. அவர்கள் வீட்டுக்குள் நுழையலாமா என்று நினைத்தேன்.

எனக்குத் தைரியமில்லை.

இருக்கும் பிஸ்கட்களை ரெக்ஸுக்குப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

தினமும் அடுத்த வீட்டில் சண்டை தான்! ரொம்ப நேரம் நீடிக்கும்.

ஆனால் அன்று சீக்கிரம் முடிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

– வாங்க ராஜா எங்கே போயிட்டு வராப்லே? என்று அம்மா வரவேற்றாள். பதில் சொல்லாமல் அறைக்குள் போனேன்.

– ஊமை! என்று அப்பா திட்டுவது கேட்டது.

பிரார்த்தனா என்ன ஆனாள்?

என் பரபரப்பு மேலே ஏறியது. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன். 

அடுத்த வீட்டின் திடீர் நிசப்தத்தை உணர முடிந்தது.

தூக்கம் வர மறுத்தது. கடிகாரத்தில் ஓடும் மணிகளை காது எண்ணியது, ஒரு மணிக்குப் பின் எனக்கு வரும் குறட்டையை நானே உணர்ந்தேன். அதிகம் தூங்குவதற்குள் அந்த சரக் சரக் சத்தம் என்னை எழுப்பியது.

கண்ணை விழித்தேன். சன்னலின் மேல் கதவில் கண்ணாடியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.

அடுத்த வீட்டு வெளிச்சத்தில் பிரதிபலிப்பு.

சன்னல் மீது ஏறினேன். மேல் வழியே பார்க்க, அந்த வீட்டுப் பூந்தோட்டத்தில் என் பார்வை அமர்ந்தது.

சுள் என்று அடி வயிற்றில் உணர்வு. தோட்டத்தில் ரோஸ் பாத்தியில் பெரிய மண் வெட்டியால் குழி தோண்டிக் கொண்டிருந்தார் ரத்னசாமி.

ஐந்தடி நீளக் குழி! அதில் பாதி வரை அவர் மறைந்திருந்தார். இடுப்பும், அவரது தலை வழுக்கையும் தெரிந்தன.

எனக்கு ‘சிவப்பு ரோஜா’ சினிமா நினைவு வந்தது!

இன்னும் சிறிது தோண்டி விட்டு மண் வெட்டியை எடுத்து வெளியே வீசினார் ரத்னசாமி.

‘தம்’ பிடித்து வெளியே எகிறினார்.

சுற்றிவரப்  பார்வை செலுத்தினார். என் சன்னலைப் பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளே போனார்.

திகிலோடு நிமிடங்கள் ஓடின.

பின்னர் அவர் இழைத்துக் கொண்டு ஒரு கோணி மூட்டையைத் தூக்கி வந்தார். இருமுறை தடுமாறினார்.

மூட்டையை சரியாக இறக்க முடியவில்லை. தடும் என்று குழியில் போட்டார்! பர பரவென்று மண்ணைச் சரிக்க ஆரம்பித்தார்.

காமிக்ஸில் க்ரைம் கதைகளை படித்திருக்கிறேன். எனக்குப் புரிந்து விட்டது. பிரார்த்தனாவை அவர் கொன்றிருக்கிறார்.  கோணிக்குள் அவள் பிரேதம் இருக்க வேண்டும்.

மூடுகிற வரை என் பார்வை அகலவில்லை! எல்லாம் முடிந்து அவர் மண்ணைச் சரி சமமாக்கினார். அதன் மீது ரோஜா தொட்டிகளை முன்போல வைத்தார்.

சன்னலிலிருந்து குதித்தேன். ‘அம்மா அம்மா’ என்று அடுத்த அறைக்குள் ஓடினேன்.

அம்மா தூக்கக் கலக்கத்தோடு எழுந்திருந்தாள். விஷயங்களைச் சொன்னேன்.

– இந்தாங்க என்று அப்பாவை எழுப்பினாள்.

அப்பா விஷயத்தைக் கேட்டார். சன்னல் ஓரம் எம்பிப் பார்த்தார். நிலா வெளிச்சத்தில் அடுத்த வீட்டுத் தோட்டம் தெரிந்தது. குழி தோண்டிய இடம் புது மண்ணோடு மூடியிருந்தது.

– டேய்! அந்த ஜானியின் நாயைக் கொன்று குழியிலே போட்டிருப்பான்! என்றார், அப்பா.

– நாய் இல்லை அப்பா! பெரிய கோணிப்பை. ஒரு ஆள் உள்ளே இருந்த மாதிரி பருமன்.

– போடா! என்னவோ கனவு கண்டிருக்கே! போய்ப் படு…

காலையில் எழுந்ததும் தோட்டத்தின் பக்கம் பார்த்தேன்.

அந்த நீண்ட சதுரப் பாத்தி அப்படியே தெரிந்தது.

எனக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.

தினமும் பிரார்த்தனாவின் குரல் அடிக்கடி கேட்கும்.

இன்று கேட்கவே இல்லை.

அப்பாவும், அம்மாவும் ஆபீஸ்களுக்குப் போன பிறகு வெளியே புறப்பட்டேன்.

பிரார்த்தனா இருக்கிறாளா, இறந்துவிட்டாளா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

கணபதி ஸ்டோர்ஸ் பக்கத்தில் பப்ளிக் பூத் இருந்தது.

அதில் போய்க் கதவைச் சாத்தினேன். ரத்னசாமிக்கு போன் செய்தேன்.

அவரே எடுத்ததும் எனக்கு வெலவெலப்பு!

– யாரு? என்றார் அவர், மிரட்டலில்.

குரலை அவசரமாக மாற்றினேன்.

– கணபதி ஸ்டோர்ஸிலேர்ந்து பேசறோம் அண்ணாச்சி! அம்மா இருக்காங்களா?

– எதுக்கு அம்மா?

– லிஸ்ட்டுக் கொடுக்கறேன்னாங்க!

– அம்மா செங்கல்பட்டு போயிருக்காங்க. வர ஒரு வாரம் ஆகும். பட்டென்று போனை வைத்தார்.

ஆ! மை டியர் பிரைவேட் ஐ! என்று என்னையே நான் தட்டிக் கொண்டேன்.

வீட்டுக்குப் பரபரப்பாக வந்தேன்.

இந்தச் சமயத்தில் தான் தைரியமாக போலீசுக்குப் போன் செய்தேன்.

– என் பேர் மணி! ஒரு கொலை இங்கே நடந்திருக்கு…

போலீஸ் என் பேச்சை மதிக்கவே இல்லை. யாரும் வரவில்லை.

செங்கல்பட்டு! நிச்சயம் பிரார்த்தனா அங்கே போயிருக்க முடியாது! இரவில் வீட்டுக்குள் போனவள் மறுபடி வெளியே வரவே இல்லை. செங்கல்பட்டில் போய் விசாரிப்போமா? யாரைப் போய் விசாரிக்க?

எரிச்சலாக வந்தது.

சரி, தானாக விஷயம் வரட்டும். பிரார்த்தனா காணாமல் போனது தெரிய வரட்டும். போலீஸ் அப்புறம் திண்டாடட்டும்.

விரக்தியாக இருந்தேன். சாயங்காலம் அம்மா திரும்பியபோது என் பாட்டி (அம்மாவின் அம்மா) சீரியஸ் ஆகி இருக்கிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தாள். அவளும், அப்பாவும் ஐந்து மணிக்கு காரில் நெய்வேலி புறப்பட்டார்கள்.

– ஷெர்லக் ஹோம்ஸ்! வீட்டிலேயே இரு என்று அப்பா என் முதுகைத் தட்டிவிட்டுப் போனார்.

என்னையும், வேலைக்காரியையும் விட்டுவிட்டுச் சென்றார்கள்.

எனக்கு இப்போ மூளை சுறுசுறுப்பாக ஓடியது!

காலையிலிருந்து எனக்கு இன்னொரு அரிப்பு!

நாய் ரெக்ஸ் என் முன்னால் தென்படவே இல்லை.

இரண்டு முறை தெருவில் நடந்து பார்த்தேன். ஜானியின் வீடு அதிசயமாகப் பூட்டியிருந்தது.

மூன்றாம் முறையாக இப்போது போனேன். ஏமாற்றம். ஜானி வீடு பூட்டியிருந்தது. நேரே போய் கணபதி ஸ்டோர்ஸில் பிஸ்கட் வாங்கித் திரும்பினேன்.

ஒரு வேளை ரெக்ஸைத் தான் ரத்னசாமி கொன்று விட்டாரா?

ஜானி வீட்டு கேட் வந்ததும் ‘ரெக்ஸ்’ என்று மெள்ளமாக அழைத்தேன்.

அடுத்த கணம் கொஞ்சலாக குரல் எழும்பி, கேட்டின் தகரக் கதவின் பின்புறத்தில் ரெக்ஸ் பிராண்டுவது தெரிந்தது.

கேட்டின் இரட்டைக் கதவின் இடுக்கு வழியே அதன் முகம் தெரிந்தது.

யோசித்தேன். சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்த கதவுகள்.

அதை பின் பக்கம் தள்ளினேன். அதன் இடுக்கு பெரிதாக,

ரெக்ஸ் அதனிடையே பிதுங்கிக்கொண்டு வெளியே வந்து வாலை ஆட்டியது.

பிஸ்கட்டுகளைப் போட்டு அதை இழுத்துக் கொண்டு என் வீட்டுக்கு சென்றேன். உண்மையில் வீட்டில் தனியே இருக்க எனக்கு பயமாக இருந்தது. என் அறைக்குள் அதைக் கொண்டு சென்று கதவை மூடினேன்.

இருட்டும் வேளையில் சன்னல் பக்கம் போனேன். மேலே எம்பி ஏறி அடுத்த புறம் பார்த்தேன்.

ரத்னசாமி தோட்டத்திற்கு வந்திருந்தார். பாத்தி பக்கத்தில் நின்று, கால் கட்டை விரலால் தரையை அழுத்தி பார்த்தார்.

சற்று நின்றவர் திடீரென்று சுற்றிவரப் பார்க்க அவர் பார்வை என் சன்னல் மீது விழுந்து என்னைப் பார்த்து விட்டது.

நான் விறைக்க, அவர் முறைத்தார்.

அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

சட்டென்று கீழே குதித்தேன்.

உடம்பில் ஒரு பதட்டம் ஏவுகணையாக ஓடியது.

மறுகணம் வாசலுக்கு ஓடி கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டேன்.

சன்னல்களைச் சாத்தினேன். காமிக்ஸ் படத்தில் ஒரு சின்னப் பையன் எக்கச் சக்கமாக அகப்படுவது போல அகப்பட்டுக் கொண்டேன்.

உண்மையில் பற்கள் கிடுகிடுத்தன.

அரைமணி நிசப்தமாக இருந்தேன். இருட்டி விட்டது! விளக்குகளைப் போட்டேன்!

வெளியே வரவில்லை வாசல் கதவு தட்டப்பட்டது. என் ஏழு நாடிகளும் நடுங்கின. ஒவ்வொரு அடியாக வைத்து கதவுக்கு வந்தேன். பேசாமல் நின்றேன்.

அடுத்த சத்தம் என் வீட்டையே குலுக்கியது! அவ்வளவு பலமாக கதவு இரைந்தது.

எனக்குக் கோபம் பீச்ச, – யார் அது? என்று ஆத்திரமாக கேட்டேன்.

– திறக்கணும்! ஞான் தன்னே! ஜானி!

எச்சரிக்கையுடன் கதவை திறந்தேன். அதே நேரம் என் மூளை ஓவர் டைம் செய்தது.

ஜானி கவலையில் நின்றார்.

– மணி! ரெக்ஸைக் கண்டிட்டுண்டோ? என்றார்.

– ஓ! என்றேன்.

– உண்டுன்னு பறையாமோ, இல்லைனு பறையாமோ

அந்தக் கணங்களுக்குள் என் யோசனை முடிந்துவிட்டது.

– ஜானி அங்கிள்! ரெக்ஸை அடுத்த வீட்டு ரத்னசாமி கொன்னாச்சு.

– கொண்ணானா?

– ஆமாம் தோட்டத்து ரோஸ் பாத்தியிலே ரெக்ஸைப் புதைச்சாச்சு! 

இரவு எட்டு மணிக்கு இரண்டு போலீஸ்காரர், நான், ஜானி, ரத்னசாமி ஐவரும் ரோஸ் பாத்தியின் ஓரத்தில் நின்றோம்.

– இங்கே தான் புதைச்சாரா? என்றார் போலீஸ்காரர்.

– ஆமாம் என்று தலை அசைத்தேன் நான்.

ரெக்ஸை எங்கள் வீட்டு அறையுள் மூடி, சிக்கென எல்லாக் கதவுகளையும் சாத்தியிருந்தேன். அப்படியும் ரெக்ஸ் குரைத்து விடுமோ என்று பயம்.

ரத்னசாமியும், ஜானியும் சிறிது நேரம் கோபமாக வாக்குவாதம்.

– ரெண்டு பேரும் நிறுத்துங்கள். இப்போ தோண்டிப் பார்த்துடலாம்! என்றார் போலீஸ்காரர்.

கூலி வைத்துத் தோண்டினார்கள். இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் அம்பலமாகி விட்டது.

ரத்னசாமி தன் மனைவி பிரார்த்தனாவைக் கொன்று அந்த இடத்தில் புதைத்து இருந்தார்.

காலையில் பேப்பர் மூலம் செய்தி நகரில் பரவிவிட்டது.

என் அம்மாவும், அப்பாவும் அன்று பகல் இரண்டு மணிக்குத் திரும்பியபோது,

ஐயா ஜம்மென்று டெலிவிஷன் காமிராக்கள், பத்திரிகை நிருபர்கள் புடை சூழ ஒரு பெரும் கூட்டத்தின் முன்னால் ராஜா போல உட்கார்ந்திருந்தேன்.

கேள்விகளுக்கு அனாயாசமாய் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

கூட்டம் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்க.

என் தந்தை முந்தி அடித்து வந்து, – ஷெர்லக் ஹோம்ஸ் என்று சொல்லி முதுகைத் தட்டினார்.

Share this post:

சிறுகதை: நீதிக்கு உறவு இல்லை – அருண. நடராசன்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமாகவும் புகழ் பெற்ற வியாபார நகரமாகவும் விளங்கிய புகார் நகரில் தனதத்தன் என்னும் பெயருடைய வணிகர் வாழ்ந்து வந்தார். புகார் நகர வீதியில் பெரிய கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார். பலவிதமான பண்டங்களை அவர் பலவிதமான வழிகளில் விற்றுப் பெரும் பொருள் ஈட்டினார்.

வணிகர் தனதத்தனுக்கு  ஒரே மகன். மகனுக்குப் பூபதி என்று பெயரிட்டுத் தனதத்தன் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார். பூபதி இளமையிலேயே கல்வியில் ஆர்வங்கொண்டு நன்றாகப் படித்து எல்லாரும் போற்ற  எழிலோடு வளர்ந்து தந்தை மனம் மகிழ நடந்து  வந்தான்.

பூபதி வளர்ந்த பிறகு வியாபாரத்தில் நாட்டம் கொள்ளாமல் அரசுபணியில் சேர்ந்து உழைக்க விரும்பினார். புகார் நகர நியாய மன்றத் தலைவருக்கு உதவியாளராகப் பூபதி நியமிக்கப்பட்டார்.

புகார் நகரில் அமைதி காப்பதும், ஒழுங்கை நிலை நாட்டுவதும், வணிகம் சீராக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிப்பது நியாயமன்றத் தலைவருக்குரிய சில பொறுப்புகளாகும். நியாய மன்றத் தலைவர், நகரில் நடைபெறுகின்ற வணிகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பைப் பூபதியிடம் ஒப்படைத்தார்.

வியாபாரிகள், தாங்கள் விற்கின்ற பண்டங்களில் கலப்படம் செய்கிறார்களா, இல்லையா என்பதையும் பண்டங்கள் நியாயமான விலையிலும்  தரங்குறையாமலும் விற்கப்படுகின்றனவா என்பதையும் அளத்தல், நிறுத்தல்  முதலானவை தவறில்லாமல் நடைபெறுகின்றனவா என்பதையும் கண்டறியும் பொறுப்பான பணியில் பூபதி சிறப்பாகச் செயல்பட்டு எல்லாருடைய பாராட்டுதலையும் பெற்று வந்தார். பூபதியின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தது.

ஒரு நாள் பூபதி ஒரு குதிரை மீது ஏறிக்கொண்டு காவலர்கள் உடன் வர, தன் தந்தை தனதத்தன் வியாபாரம் செய்து வந்த கடை வீதிக்கு வந்தார். பூபதி வருவதைக் கண்ட ஒரு சில வியாபாரிகள் தாங்கள் உபயோகித்து வந்த தவறான எடைக் கற்களையும் தராசுகளையும் உள்ளே மறைத்து  விட்டுச் சரியான தராசுகளையும் எடைக்கற்களையும் கொண்டு வியாபாரம் செய்தனர். பூபதி ஒவ்வொரு கடையாகச் சென்று பொருட்களையும் எடைக் கற்களையும் சரிபார்த்துக் கொண்டே வந்தார்.

தனதத்தன் கடைக்கும் சிலர் ஓடி வந்து, “ஐயா, உங்கள் மகன் கடைகடையாகச் சோதனை செய்துகொண்டு வருகிறார். உங்கள் கடைக்கும் வருவார் போல் இருக்கிறது. நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள்” என்று தனதத்தனை எச்சரித்தனர்.

ஆனால் தனதத்தன், “நான் ஏன் பயப்பட வேண்டும்? பூபதி என் மகனல்லவா? எந்த மகனாவது எப்பொழுதாவது தன் தந்தையின் கடையைச் சோதனை செய்ய வந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா?” என்று அலட்சியமாகப் பதில் கூறினார். கடை ஆட்களும் உபயோகத்தில் இருந்த தவறான எடைக் கற்களையும் தராசையும் அப்புறப்படுத்தாமல் அவற்றையே பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு கடையாகச் சோதனையிட்டுக் கொண்டு வந்த பூபதி தன் தந்தையின் கடை எதிரே வந்து குதிரையிலிருந்து கீழே இறங்கினார். “உங்கள் கடையைச் சோதனையிட அனுமதிக்க வேண்டும்” என்று பூபதி கூறினார்.

தனதத்தன் பதில் ஏதும் கூறாமல் புன்னகை புரிந்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார்.

பூபதி உடனே  தன்னுடன் வந்த காவலர்களைப் பார்த்து “ஏன் நிற்கிறீர்கள்? கடைக்கு உள்ளே சென்று சோதனை இடுங்கள். எடைக் கற்களையும் தராசையும் வெளியே கொண்டு வாருங்கள்” என்று ஆணையிட்டார்.

தனதத்தனுடைய கடைத் தராசும் எடைக்கற்களும் வெளியே கொண்டு வரப்பட்டன. அவற்றை நல்ல நிலையில் உள்ள தராசோடும் எடைக்கற்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தனர். தனதத்தன் உபயோகித்து  வந்த தராசும் எடைக்கற்களும் தவறாக இருப்பது தெரியவந்தது.

கூடியிருந்தவர்கள் வியப்பு மேலிட வேடிக்கை பார்த்தனர். பூபதி என்ன செய்வாரோ, என்ன தீர்ப்பு வழங்குவாரோ என்று கூட்டம் ஆவல் மேலிடக் காத்திருந்தது.

பூபதி தன் தந்தையைப் பார்த்து, “ஐயா, உங்கள் கடைத் தராசும் எடைக்கற்களும் தவறானவை. இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கூறி நிறுத்தினார்.

எதிரே நிற்பது தன் மகன் என்பதை மறந்து ஓர் அதிகாரி என்பதை உணர்ந்து தனதத்தன் செய்வதறியாது கலங்கி நின்றார்.

தன் தந்தையை கைது செய்யும் பூபதி

“ஐயா, நீங்கள் செய்யும் வியாபாரம் நம் நகருக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது. பல நாட்டவர் வந்து செல்லும் நம் நகரில் இப்படி வியாபாரம் நடந்தால் நம் நாட்டைப் பற்றி உயர்வான எண்ணம் எப்படி வெளிநாடுகளில் ஏற்படும்? எனவெ நம் நகரின் பெருமையைக் காக்க உங்களுக்குத் தண்டனை விதிக்கிறேன். நீங்கள் அரசாங்கத்திற்கு  ஐம்பது  வராகன்கள் தண்டம் செலுத்த வேண்டும்! அது தவிர ஐந்து நாள் சிறைத் தண்டனையும் மேற்கொள்ள வேண்டும்” என்று பூபதி தெளிவான குரலில் உறுதியாகத் தண்டனையை அறிவித்தார்.

பூபதியின் அறிவிப்பைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் மிக்க வியப்பு எய்தினர்; ஒரு சிலர் கைதட்டிப் பாராட்டுத் தெரிவித்தனர்.

தனதத்தன் உடனடியாக ஐம்பது வராகன்களைத் தண்டமாகச் செலுத்தினார்; காவலர்கள் அவரைச் சிறைக்கூடம் அழைத்துச் செல்ல முன் வந்தனர்.

பூபதி, தன் தந்தையின் அருகில் சென்று, “தந்தையே, என்னை மன்னித்து விடுங்கள். நீதிக்கு உறவு கிடையாது. தாயென்றும் தந்தையென்றும் உடன்பிறப்பென்றும் சட்டம் பாகுபாடு செய்வது கிடையாது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே.

நாட்டிற்காகவும்,  தெய்வத்திற்காகவும், நீதிக்காகவும், சட்டத்திற்காகவும் ஆற்ற வேண்டிய கடமையைத்தான் நான் நிறைவேற்றினேன். இப்பொழுது தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காக உங்கள் முன்பு நிற்கிறேன்” என்று கண்ணீர் பெருகக் கூறி நின்றார்.

தனதத்தன் தன் மகனை இறுக அணைத்துக்கொண்டு கண்ணீர் வழிய நின்றார்.

பூபதி தந்தையைப் பார்த்து, “தந்தையே! ஏன் அழுகிறீர்கள்? எப்படி இருந்தாலும் உங்களுடைய தவறான செய்கைக்கு நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தண்டனைக் கொடுத்துத்தான் இருப்பார்கள். என்னைப் பழிப்பதற்குப் பதிலாக என்னைப் பார்த்துப் பரிதாபப்படுங்கள். வருங்காலத்தில் எந்த மகனுக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாது” என்று கூறித் தந்தையை தேற்றினார்.

தனதத்தன் தன் மகனைப் பார்த்து, “மகனே பூபதி, உன்னைப் போன்ற நியாயம் தவறாத ஒரு பிள்ளையைப் பெற நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? உன் செயலைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். என் தண்டனை எனக்கு மட்டும் அல்ல, இந்த உலகத்திற்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்” என்று கூறி விடை பெற்றுச் சிறைக்கூடம் நோக்கிச் சென்றார்.

கூடியிருந்தோர் அனைவரும் பூபதியை வாயாரப் புகழ்ந்தனர். பூபதியின் நியாயம் தவறாச் செயல் சோழ மன்னர் செவிக்கும் எட்டியது. மன்னர், பூபதியைப் பாராட்டி நியாய மன்றத் தலைவராகப் பூபதிக்குப் பதவி உயர்வு அளித்துச் சிறப்பித்தார்.

பொன் குடத்திற்குப் பூச்சூட்டியது போலப் புதிய பதவியில் முன்னைவிட விழிப்போடும் பொறுப்போடும் செயல்பட்டு, பூபதி பிறந்த நாட்டிற்கும் பெற்றெடுத்த அன்னை தந்தைக்கும் மேன்மேலும் புகழ் சேர்த்துச் சீரோடும் சிறப்போடும் எழிலோடும் ஏற்றத்தோடும் வாழ்ந்து வந்தார்.

(திரு. அருண. நடராசன் அவர்கள் எழுதிய ‘நல்ல தீர்ப்புக் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: ஸோம்புனாம்புலிஸம் – டைரக்டர் தக்காளி சீனிவாசன்

1

தொழிலதிபர் தன்ராஜ் இறந்து கிடந்தார்! ஆழமானக்  கத்திக் குத்துக்கள், உடலெங்கும் சிவப்புச் சாயத்தைப் பூசியிருந்தது.

இன்ஸ்பெக்டர் மாத்யூஸ் யோசித்தார். “காயம் பலமா இருக்கு. கத்தி எங்கே இருக்கு?” 

இங்கேயே விசாரணையை ஆரம்பித்தார்.

கோவையில் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திய தன்ராஜுக்கு வாரிசுகள் யாரும் இல்லை. சொத்து பூராவும் அவரது தங்கை மகன் விகேஷ் குமாருக்குத்தான் என்பது பலரது யூகம்.

கொலை நடந்திருப்பது விகேஷ் வீட்டில்!

தனது எல்லாத் தொழில்களிலிருந்தும் சட்டென முறித்து, தனது கணக்கை செட்டில் செய்யச் சொல்லி, பார்ட்னர் செல்வகுமாரிடம் சொல்லிவிட்டு வந்தவருக்கு இப்படியொரு விபரீதம்.

முதலில் விகேஷ் விசாரிக்கப்பட்டான்.

2

“நேற்று ராத்திரி என்ன நடந்தது விகேஷ்?”

“நான் என் ரூமில் நல்லா தூங்கிட்டேன் சார். இது எப்படி நடந்ததுன்னு புரியலை.” முகம் ஏகமாய் வெளிறிக் கிடந்தது.

“உங்க மாமாவின் அறையிலிருந்து ஏதாவது சப்தம் கேட்டதா?”

“எனக்கு உடம்பு சரியில்லை. மாத்திரையைச் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்.”

“யாரையாவது சந்தேகப்படறீங்களா?”

“நேற்று காலையில் என் அங்கிளுக்கும் பார்ட்னர் செல்வகுமாருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த அறைக்குப் பக்கத்து அறையில்தான் டாக்டர் என்னை சோதிச்சு பார்த்துக்கிட்டிருந்தார்.”

“நீங்க அதைப் பற்றி உங்க அங்கிளிடம்..”

“கேட்கவில்லை சார்” கைகள் லேசாய் நடுங்குவதை மாத்யூஸ் கவனித்தார். “சரி. நீங்க போகலாம்.”

விட்டால் போதும் என்று ஓடும்போது மறுபடியும் கூப்பிட்டார்.

“நீங்க என்ன செய்றீங்க?”

“சும்மாத்தான் இருக்கேன். செய்து வந்த பிசினெஸ் நலிஞ்சு போச்சு.”

“செல்வகுமாரை அனுப்புங்க.”

3

செல்வகுமாரை நிறுத்திவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் மோ.கி. நுழைந்து ராயலாய் சல்யூட் அடித்தார்.

“கோவையிலிருந்து போன் மூலமாகவே விசாரிச்சுட்டேன் சார். தன்ராஜ் வியாபாரத்திலிருந்து விலகுவதை செல்வகுமார் விரும்பலைன்னு தோணுது.”

“ஆள் எப்படி?”

“கொஞ்சம் மர்மமான மனுஷன் தான்.”

“மத்த ஏற்பாடெல்லாம்?”

“பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேன் ரெடி. கைரேகை நிபுணர் மேனனும் வந்தாச்சு. டாக் ஸ்க்வாடும் வேலையில் இறங்கிட்டாங்க.”

“முதலில் அந்த கத்தியைக் கண்டு பிடிக்கணும். செல்வகுமாரை அனுப்பிவையுங்க.”

4

“வணக்கம் சார்.”

“வணக்கம். காலையிலிருந்து என்ன நடந்தது?”

“தன்ராஜ் வியாபாரத்தை விடறதை நான் விரும்பலை சார். நேத்து பூரா சண்டைதான் நடந்தது. கம்பெனி பணத்தை நான் அப்படி இப்படி யூஸ் பண்ணிட்டேன். திடீர்ன்னு செட்டில் பண்ணுன்னா என்ன பண்ண முடியும்?

முதலில் தனது சொத்து பூராவையும் விகேஷுக்கு எழுதறதா இருந்தாரு. ஆனா,  அவனுடைய பொறுப்பின்மையைப் பார்த்துட்டு திட்டி, ‘சல்லிக்காசு’ கிடையாதுன்னுட்டாரு.”

“ஆனா சொத்து பூராவும் அவன் பேருக்குத்தான் எழுதி ரிஜிஸ்டர் செய்திருக்காரு.”

“அது தெரியாமல், கொன்னுட்டானோ என்னமோ?”

திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் ஓடி வந்தார்.

“சார் கத்தி கிடைச்சாச்சு. விகேஷின் பெட்டுக்கடியில் இருந்தது.”

5

விகேஷ் கைது செய்யப்பட்டான்.

“எப்படிடா கத்தி உன் படுக்கைக்கு கீழே போச்சு?”

“சத்தியமா தெரியாது சார்.”

“உன் கை ரேகைதானேடா அதுலே பதிவாகியிருக்கு?”

“புரியலை சார்.”

“ஒப்புக்கிட்டா, தண்டனை குறையும்.”

“நிஜமா, நான் செய்யலை சார்.”

நள்ளிரவுக்குத்தான் வீடு திரும்பினார் மாத்யூஸ். எவ்வளவு மிரட்டியும் விகேஷ் ஒப்புக்கொள்ளவேயில்லை. அயர்ந்து தூங்கும்போது டெலிபோன் அலறியது.

“சார். நான் கான்ஸ்டபிள் கோவிந்தன்.”

“என்ன?”

“உடனே ஸ்டேஷனுக்கு வந்து லாக்கப்பில் இருக்கும் விகேஷை வந்து பாருங்க சார்.”

அலறியடித்துக்கொண்டு ஓடினார்.

6

அடுத்த நாள்.

விகேஷின் வீட்டில் அவனது மனைவி யாஷா இருந்தாள். சோர்ந்து காணப்பட்டாள்.

“மிஸஸ் யாஷா! நான் விகேஷின் அறையைச் சோதிக்க வேணும். சர்ச் வாரண்ட் இல்லை.”

“அதனாலென்ன! பார்த்துக்கங்க.”

விகேஷின் அறை படுசுத்தமாக இருந்தது. கம்ப்யூட்டர் கண்ணில் பட்டது. “யாஷா! டீ கிடைக்குமா?”

“இதோ” அவள் போனதும், கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்ட ஃபைலிலிருந்து விகேஷின் ஃபைலை, திரையில் ஓடவிட்டார் மாத்யூஸ்.

விவரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டார்.

7

சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்தார்.

“சார்! செல்வகுமார், தனராஜைத் தீர்த்துக்கட்ட ஒரு ரவுடியை ஏற்பாடு செய்திருக்கிறான்.”

“ஆனா கொலை செய்தது விகேஷ்தானே?” 

“சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, அப்படித்தான் சார் தோணுது. எப்.ஐ.ஆர் போட்டு ரிமாண்ட் பண்ணிடலாமா?”

“கொஞ்சம் பொறுங்க. நான் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆள் அனுப்பியிருக்கேன்.” என்று சொல்லும்போதே டெலிபோன் அலறியது.

“மிஸ்டர் மத்தியூஸ்?”

“யெஸ்.”

“உங்க யூகம் சரி. பேச்சை டேப் செய்துட்டோம்.”

“மோ.கி. குற்றவாளிகளைப் பிடிச்சுட்டேன். விகேஷை விடுதலை செய்ங்க.”

8

“விகேஷுக்குத் தூக்கத்தில் நடக்கும் ‘ஸோம்புனாம்புலிஸம்’ வியாதி உண்டு. அந்தச் சமயத்தில் கையில் கிடைக்கும் பொருளைத் தன்னையறியாமல் எடுத்துத் தன் பெட்டுக்கடியில் வைத்துக்கொள்வான்.” 

“இதை எப்பப் பார்த்தீங்க?”

“விசாரணைக்குக் கொண்டு வந்த ராத்திரி, வீட்டுக்குப் போன் வந்தது. நான் நேரா இந்தக் காட்சியைப் பார்த்தேன்.”

“அப்ப, தன்ராஜ் உடம்பிலிருந்த கத்தியை, இவன் தன்னையறியாமல் எடுத்து வந்து, தன் படுக்கைக்குக் கீழ்..”

“கரெக்ட்!”

“அப்ப உண்மையான குற்றவாளிகள்?”

“யாஷாவும், டாக்டர் மோகனும்.”

9

“யாஷாவுக்கும் மோகனுக்கும் முறை தவறின உறவு இருந்ததுதான் இந்தக் கொலைக்குக் காரணம். இந்த ‘உறவை’ தன்ராஜ் கண்டு பிடிச்சுட்டாரு. அதனால இந்த ஸோம்புனாம்புலிஸ நோயைச் சாதகமாக்கி தன்ராஜை தீர்த்துக் கட்டியிருக்காங்க.”

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“யாஷா, தன் வீட்டுப் போனில் பேசாமல், எதிரில் இருந்த பூத்துக்குள் கதவை மூடிக்கொண்டு, டாக்டர் மோகனிடம் பேசி திட்டம் போடறதை ஆள் வச்சு கண்டுபிடிச்சி டேப்பும் செய்துட்டேன்.”

“விகேஷ் மேலே பழியைப் போட்டு, ஜெயிலுக்கு அனுப்பி, தன்ராஜின் சொத்தை அனுபவிக்க நினைச்சிருப்பாங்களோ!”

“இருக்கலாம்” என்றார் ரிலாக்சாக.

Share this post:

கவிதை: க. எண்ணெய் நூறு கிராம் – ஞானக்கூத்தன்

அலசும் பொருட்டு நீரில் எறியும்
கூறைப் புடவையைப் போல வானில்
கிளையை வீசிய நித்திரை மரங்கள்
இருபுறம் அடைத்த சாலையில் நடக்கிறாள்.

அம்பாசிடரும் வெள்ளை மாருதியும்
ஏற்றிக் கொள்ள அஞ்ச –
செலவைப் பார்க்க ஆட்டோ அதிகமென்று
நகரப் பேருந்தில் ஏறி வருகிறாள்.

ஒற்றை அரச மரத்தின் இளைய
வேனில் பொலியும் கிளைகளில் காக்கைகள்
சிறகு கோதிக் கூவாதிருக்கும்.

சிலபேர் குளிக்க, சிலபேர் பிழிய
புரோகிதர் இங்கும் அங்கும் அலைய
அழுகை ஓய்ந்த ஆண்களும் பெண்களும்
முட்டு முட்டாய்க் குமைந்திருக்க –

தர்ப்பையும் சடங்குக் கூளமும்
வண்ணம் மாறிய அரிசிச்சாதமும்
ஒருபுறம் மூலையில் குவிந்த அறையில்
தாழ்ந்த தலையுடன் இருந்தவள் கழுத்துத்
தாலியை அகற்றி கொடுக்கும் அதற்கு
ஒதுங்கி ஓரமாய்க் கடக்கும் பாம்பெனத்
துக்கித்தவர்களில் ஒருவராய்ப் போகிறாள்.

களைகிறாள், அறுக்கிறாள், கொடுக்கிறாள் பின்பு
பெறுகிறாள் கூலி. அதிலொரு பங்கை,
வழிநடைக் கோயில் உண்டியில் உதிர்க்கிறாள்
இருகை கூப்பி நிற்கிறாள் திரும்புவாள்
அருகில் காக்கும் தன் மகன் அவனிடம்
காசைக் கொடுத்துச் சொல்கிறாள்
எண்ணெய் நூறு கிராம், ஐம்பது பருப்பு…..

Share this post:

சிறுகதை: பெயரில் என்ன இருக்கிறது? – நெ. சி. தெய்வசிகாமணி

ஓர் ஊரில் மண்ணாங்கட்டி என்றோர் விவசாயி இருந்தான். அவன் தாய் தந்தையருக்கு நிறையக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று கூட நிலைக்கவில்லை. கடைசியில் ஒரு குழந்தை பிறந்தது. ‘செல்லப் பெயர்களாக வைப்பதால் தானே எல்லாக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இந்தக் குழந்தைக்கு மண்ணாங்கட்டி என்று பெயர் வைப்போம். இதுவாவது நிலைத்து இருக்கிறதா என்று பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் ‘மண்ணாங்கட்டி’ என்று பெயர் வைத்தனர்.

மண்ணாங்கட்டியும் நீண்ட ஆயுளைப் பெற்றுக் கொண்டு நல்லபடியாக வளர்ந்து வந்தான்.

மண்ணாங்கட்டி பெரியவனாகி விட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவனை ‘மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி’ என்று கூப்பிடுவது அவனுக்கு வேதனையாக இருந்தது.

‘உலகத்தில் எவ்வளவோ நல்ல பெயர்கள் இருக்க நமக்கு ‘மண்ணாங்கட்டி’ என்று நம் பெற்றோர் பெயர் இட்டனரே! இதனால் அல்லவா நாம் எல்லாருடைய கேலிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது என்று நினைத்த மண்ணாங்கட்டி எப்படியாவது தன் பெயரை மாற்றி வேறு நல்ல பெயராக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

அவ்வூருக்குப் புதிதாகச் சாமியார் ஒருவர் வந்திருந்தார். ஊர்க்கோடியில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார். ஊர் மக்கள் அனைவரும் சென்று சாமியாரைப் பார்த்துத் தங்கள் குறைகளை அவரிடம் கூறினர். சாமியாரும் அவர்கள் குறை தீர்வதற்காக இறைவனிடம் வழிபாடு செய்துகொண்டார்.

மண்ணாங்கட்டியும் ஒரு நாள் சாமியாரிடம் சென்றான்.

மண்ணாங்கட்டியைப் பார்த்த சாமியார், ‘மகனே, உன் குறை என்ன’ என்று அன்புடன் கேட்டார்.

“சுவாமி! என் பெற்றோர் எனக்கு மண்ணாங்கட்டி என்று பெயரிட்டு விட்டனர். அது அப்படியே நிலைத்துவிட்டது. எல்லாரும் என்னை, ‘மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி’ என்றே குறிப்பிடுகின்றனர். இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது. தாங்கள்தான் எனக்கு வேறு ஒரு நல்ல பெயராக வைக்க வேண்டும்” என்றான் மண்ணாங்கட்டி.

“மகனே, நான் உனக்கு ஒரு பெயர் வைப்பதைவிட நீயே ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு என்னிடம் வா. அந்தப் பெயரையே உனக்குச் சூட்டி ஆசீர்வாதம் செய்கிறேன்” என்று மண்ணாங்கட்டியிடம் கூறினார் சாமியார்.

மண்ணாங்கட்டி கடைத்தெருவுக்குச் சென்றான். அங்கு ஒரு கடைக்காரர் தம்மிடம் பிச்சை கேட்க வந்த ஒரு பிச்சைக்காரனிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.

“உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா? கடா மாடு மாதிரி இருந்து கொண்டு பிச்சையெடுக்க வந்துவிட்டாயே! போ, போ!” என்று பிச்சைகாரனை அடிக்காத குறையாக விரட்டினார் கடைக்காரர்.

பிச்சைக்காரனைக் கடைக்காரர் விரட்டுவதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், “பேர்தான் தருமராசன்! பிச்சைக்காரர்களுக்கு ஒரு பைசா கொடுக்க மனம் வராது!” என்று கடைக்காரனைத் திட்டியபடியே சென்றுகொண்டிருந்தார்.

எதிரே ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் மண்ணாங்கட்டியிடம், “சாமி இரண்டு கண்களும் தெரியாதவன். தருமம் செய்யுங்கள்” என்றபடியே தகரக் குவளையை அவன் முன் நீட்டினான்.

மண்ணாங்கட்டி, பிச்சைக்காரனின் தகரக்குவளையில் ஐந்து காசு நாணயத்தைப் போட்டு விட்டு, “உன் பெயர் என்ன?” என்று பிச்சைக்காரனைப் பார்த்து கேட்டான்.

“என் பெயர் கண்ணாயிரம்!” என்றான் பிச்சைக்காரன். ‘அட பாவமே, பேர் கண்ணாயிரம்! இரண்டு கண்ணும் இல்லையே!’ என்று நினைத்தவாறே மேற்கொண்டு நடந்து கொண்டிருந்தான், மண்ணாங்கட்டி.

எதிரே ஒரு பிணம் வந்து கொண்டிருந்தது. நான்கு பேர் அதனைத் தூக்கிக் கொண்டு சென்றுகொண்டிருந்தனர்.

மண்ணாங்கட்டி, இறந்துபோனவர் யார் என்று எதிரே வந்தவரிடம் கேட்டான்.

“இவரைத் தெரியாதா உனக்கு? இவர்தான் சிரஞ்சீவி” என்றார் எதிரே வந்தவர்.

“சிரஞ்சீவி என்று பெயர் வைத்துக்கொண்டவர்கள்கூட இறந்து விடுவார்களா?” என்று வியப்புடன் எதிரே வந்தவரைப் பார்த்துக் கேட்டான் மண்ணாங்கட்டி.

“பைத்தியக்காரா, பெயரில் என்ன இருக்கிறது? அழகேசன் என்று பெயர் இருக்கும்; பார்த்தால் அவலட்சணமாக இருப்பான். லட்சுமி என்று பெயர் இருக்கும்; அவள் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பாள். இதெல்லாம் சகஜம்” என்று கூறிவிட்டுச் சென்றார் எதிரே வந்தவர்.

பிறகு மண்ணாங்கட்டி நேரே சாமியாரிடம் சென்றான்.

“மகனே, நல்ல பெயராக ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து விட்டாயா?” என்று மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கேட்டார் சாமியார்.

“சுவாமி, நிறையப் பெயர்கள் கிடைத்தன. ஆனால் ஒரு பெயர்கூட எனக்குப் பிடிக்கவில்லை. பெயருக்கும் குணத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருக்கிறார்கள்” என்றான், மண்ணாங்கட்டி.

“மகனே, இதனை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் அவ்வாறு கூறினேன். செய்கிற செயல் நல்லதாக இருந்தால் பெயரை ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். குணம் கெட்டதாக இருந்தால் எவ்வளவு நல்ல பெயராக வைத்திருந்தாலும் மக்கள் அவர்களைத் திட்டத்தான் செய்வார்கள். ஆகையினால் பெயரைப் பொருட்படுத்தாதே! குணத்தில் சிறந்தவனாக விளங்கு. மக்கள் உன்னைப் புகழ்வார்கள்” என்றார் சாமியார்.

அன்றிலிருந்து மண்ணாங்கட்டி எல்லாருக்கும் நல்லவனாக விளங்கினான். இப்பொழுது அவனை எவரும் கேலி செய்வதில்லை; மாறாகப் புகழ்கிறார்கள்.

(திரு. நெ. சி. தெய்வசிகாமணி அவர்கள் எழுதிய “நீதிக்குச் சில கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

சிறுகதை: போரை வெறுத்தவன் – பூவை அமுதன்

தம் நாட்டுப் படை பலத்தால் மற்ற நாடுகளையும் வென்று அடக்கி ஆள்வது ஆற்றல் மிக்க அரசர்களுக்கு அழகு என்று கருதப்பட்டு வந்தது. தம் ஆட்சியைப் பரப்பவும் தம் புகழைப் பெருக்கவும், பிற நாடுகளின் மீது படையெடுத்துப் போர் செய்வார்கள். சில சமயங்களில், வேறு நாடுகளில் நிலையான ஆட்சியை ஏற்படுத்தவும், மக்கள் முன்னேற்றத்துக்கு வழி செய்யவுங்கூடப் போர் புரிவது உண்டு.

போரில் ஏற்படுகின்ற வெற்றி, மன்னர்களுக்குப் பேரையும் புகழையும் கொடுத்து மேலும் மேலும் அவர்களைப் போரில் ஈடுபட ஆர்வத்தை உண்டாக்கிவிடும். வெற்றிமேல் வெற்றி குவிக்கின்ற அரசர்கள் போரினால் ஏற்படும் இழப்புகளையும் இன்னல்களையும் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஆனால் போரிலே பெரு வெற்றியடைந்த ஒரு பேரரசன். இனி போரே செய்வதில்லை என்று மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டு, அதற்குப்பின் ஆயுதத்தையே தொடவில்லை என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? போரில் தோல்வி கண்டவன் துவண்டு போகலாம்; ஆனால் வெற்றி கண்டவன் போரை வெறுப்பானேன்? அப்படி வெற்றிக்குப் பிறகு, போரை வெறுத்தவன் யார்?

அவன்தான் அசோகச் சக்கரவர்த்தி! கலிங்க நாட்டின் மீது படையெடுத்து அசோகன் பெருவெற்றி அடைந்தான். என்றாலும் அவன் வெற்றிக் களிப்பில் திளைத்துப் போய் விடவில்லை. அதற்கு மாறாக அவன் உள்ளம் பெருந் துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.

‘ஆயிரக்கணக்கான வீரர்கள் இரண்டு பக்கங்களிலும் உடலில் காயங்களை ஏற்கின்றனர். உறுப்புகளை இழக்கின்றனர்; உயிரை விடுகின்றனர். போர்க்களத்திலே இரத்தம் ஆறாகப் பாய்கிறது. ஓ! எவ்வளவு கொடுமை! வாழவேண்டிய உயிர்கள் துடித்துச் சாகின்றன. நாட்டுப் பொருள்கள் எவ்வளவு நாசமாகி விடுகின்றன!’

எண்ணிப் பார்த்தான் மாமன்னன் அசோகன். போர்க்களத்திலே உயிரிழந்த போர் வீரர்களையும், உறுப்பிழந்த போர் வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும் அவைகளின் மரண ஓலங்களையும் வேதனையான முனகல்களையும் எண்ணி எண்ணிப் பெருந்துயரில் அழுந்தினான் அசோகன்.

‘நாட்டில் போரை உண்டாக்கித்தான் புகழ் அடைய வேண்டுமா? நாட்டில் அமைதியான ஆட்சி நடத்திப் புகழ் அடைய முடியாதா?

ஆயுத பலத்தைக் கொண்டுதான் மக்களை அடக்கி ஆள வேண்டுமா? அறிவு பலத்தைக் கொண்டு அவர்களை ஆளமுடியாதா?’

பலமாகச் சிந்தித்தான்!

போராயுதங்களைத் தூக்கியெறியும் அசோகன்

சிந்தனையின் முடிவாக, அவன் உள்ளத்திலே நல்ல தெளிவு பிறந்தது.

‘போரினால் பெறும் வெற்றியைவிட அன்பினால் அடையும் வெற்றியே சிறந்தது. அன்பு வழியில் ஆட்சி நடத்துகின்றவர்களையே அனைவரும் விரும்புவர்’ என்ற எண்ணம் அவன் உள்ளத்திலே உயர்ந்து நின்றது.

உடனே அசோகன் தன் உடைவாளையும் போர்க்கவசங்களையும் களைந்து எறிந்தான். “இனி ஆயுதத்தையே தொடுவது இல்லை!” என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

அன்று முதல் அவன் ஆட்சியிலே, அனைவரும் விரும்பும் வகையில் ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டது. முன்பு இருந்ததைவிட அதிக அளவுக்குப் பலம் பொருந்திய சேனையைத் திரட்டினான். போருக்காக அல்ல! பொதுப் பணிகள் புரிவதற்காக! நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காக அந்தப் பெருஞ்சேனையைப் பயன்படுத்தினான்.

மக்களை நல்வழிப்படுத்த, அவர்கள், உள்ளங்களில் நல்ல எண்ணங்களைப் பதிய வைக்க, அவர்களுக்கு நீதிகளைப் போதிக்க, அறநெறியாளர்களை அமர்த்தினான். அவர்கள் நாடெங்கிலும் சென்று நல்லறத்தைப் பரப்பினார்கள். நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு ஏற்ற நெறி முறைகளை விளக்கினார்கள். மக்கள், அவர்கள் தொண்டினால் நல்ல பயன் அடைந்தார்கள்.

மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நீதிகளை நிலையாக நிறுத்த வேண்டிக் கற்றூண்களிலும் கற்பாறைகளிலும் அவற்றை வாசகங்களாகச் செதுக்கி வைத்தான்.

“உயிர்களைத் துன்புறுத்தாதே!

பெரியவர்களிடம் பணிவாய் நடந்துகொள்க!

மாதா பிதா குரு தெய்வம் என்பதை மறக்க வேண்டாம்! எவரிடமும் இழிவாகப் பேசாமல், இறக்கத்துடன் நடந்து கொள்க!

மற்றவர் கருத்துகளையும் கொள்கைகளையும் மதித்து ஒழுகுக.”

இத்தகைய கொள்கைகளைக் கொண்ட புத்த மதத்தை அசோகன் ஆதரித்தான். இந்தக் கொள்கைகளைத் தன் நாட்டில் மட்டுமன்றிப் பிறநாடுகளிலும் பரவச் செய்தான்.

இன்று அசோகனை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அன்பினால் ஆட்சி செய்து அவன் அனைத்துலகமும் புகழும் பேறு பெற்றான்.

இவ்வாறு அசோகன் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெறுவதற்கு அவனுடைய ஆசிரியரும் காரணமாக இருந்தார் என்பதை நாம் அறியும்போது ஆசிரியப் பெருமக்களின் பெருமை நமக்குப் புரிகிறது.

புகழ்பெற்ற மன்னன் சந்திர குப்தனுக்குப் பேரனாகவும், பிந்துசாரனுக்குப் புதல்வனாகவும் பிறந்த அசோகனுக்கு ஆசிரியராக இருந்த நல்லவரின் பெயர் அம்ரசர் என்பதாகும்.

அம்ரசர் அசோகனுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து வல்லவனாக்கினார். அசோகன் அரசனாகி வல்லவனாக இருப்பதோடு அமையாமல் நல்லவனாகவும் விளங்கவேண்டும் என்பது நல்லாசிரியர் அம்ரசரின் நல்லெண்ணம்.

அதற்கேற்ப, அசோகனுக்கு ஆர்வமூட்டி, முன்னோர் பெருமைகளையும், பின் நாளில் அவன் ஈட்ட வேண்டிய புகழினையும் எடுத்து விளக்கி அவனை அறிவும் ஆற்றலும் மிகுந்தவனாக ஆக்கினார்.

“அசோகா! உன் பாட்டனார், பெருவீரர் சந்திரகுப்தரின் பெருமைகளுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நீ தகுதிகள் மிகுதியும் பெற்ற மன்னனாக விளங்க வேண்டும். உன் அறிவையும் ஆற்றலையும் இந்த அகிலமே வியந்து போற்ற வேண்டும். உன் புகழ்க் கொடி எட்டுத் திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்” என்று அம்ரசர் அசோகனுக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.

ஆசிரியரின் நல்லெண்ணங்களைத் தவறாது நிறைவேற்றுவதாக அவரிடம் அசோகன் இளமையிலேயே உறுதிமொழி அளித்திருந்தான்.

“இந்த உலகத்தையே நான் வெற்றி கொள்வேன்” என்று ஆசிரியர் அம்ரசருக்கு அசோகன் அளித்த வாக்குறுதி பொய்த்துப் போகவில்லை. அது நிறைவேறிவிட்டது. அசோகன் அன்பினால் இந்த உலகத்தையே வென்றுவிட்டான் அல்லவா?

ஆசிரியரின் அறிவுரைகளை ஏற்று நடக்கின்ற மாணவர்களை அகிலமே போற்றும் என்பதற்கு அசோகன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறான்.

ஆசிரியர் அறிவுரை ஏற்றால்
அகிலம் உன்னைப் போற்றும்!

(திரு. பூவை அமுதன் அவர்கள் எழுதிய, “சிறந்தோர் வாழ்க்கைக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post: