Author Archives: MBK

About MBK

Myself a Web Developer & Programmer want to explore more hidden places in our country and the marvels and hidden history behind those places.

SET OF 9 RARE ASTROLOGY BOOKS BY B. V. RAMAN

SET OF 9 RARE ASTROLOGY BOOKS BY B.V.RAMAN FOR SALE. DETAILS BELOW:

  1. Astrology for Beginners  (1971) – Paperback
  2. Astrology and Modern Thought (1972) – Hardcover
  3. Prasna Marga – Part 1 (1980) – Hardcover
  4. Bhavartha Rathnakara (1978) – Paperback
  5. Muhurtha or Electional Astrology (1979) – Paperback
  6. Astavarga System of Prediction (1987) – Paperback
  7. A Catechism of Astrology (Vol 1) (1983) – Paperback
  8. A Catechism of Astrology (Vol 2) (1984) – Paperback
  9. How to Judge a Horoscope (Vol 2) (1995) – Paperback

If Interested to buy, please comment below.

Share this post:

சிறுகதைக் கொத்து (துணைப் பாடநூல்) – 1995 (மேல் நிலை முதலாம் ஆண்டு)

பொருளடக்கம்

1. செவ்வாழை – பேரறிஞர் அண்ணா

2. குறட்டை ஒலி – டாக்டர் மு.வரதராசன்

3. செவ்வாய் தோஷம் – புதுமைப்பித்தன்

4. சர்ஜன் வாசுக்குட்டி – இராஜாஜி

5. தலைக்குனிவு – நாரண. துரைக்கண்ணன்

6. புயல் – அகிலன்

7. பொம்மை – ஜெயகாந்தன்

8. பிழைப்பு – ரகுநாதன்

9. ஒரு கவியின் உள் உலகங்கள் – நா.பார்த்தசாரதி

10. இணைப் பறவை – ஆர்.சூடாமணி

11. கதவு – கி.ராஜநாராயணன்

12. தவம் – அய்க்கண்

Share this post:

சிறுகதை: இணைப் பறவை – ஆர். சூடாமணி

வாசலில் அரவம் கேட்டது. முன் அறை ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்த தாத்தா வேகமாய்ப் பின் கட்டுக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஸ்ரீமதி அவரைத் தேடிக் கொண்டு அங்கே வந்தாள்.

“யாரோல்லாம் வந்திருக்கா தாத்தா.”

“தெரியும்.”

“அங்கே வரேளா?”

“ம்ஹும்.”

“உங்களைப் பார்க்கத்தானே அவா…”

“எனக்கு யாரையும் பார்க்கவாணாம்? நீயே அவா சொல்றதையெல்லாம் கேட்டுண்டு அனுப்பிச்சுடு.”

“உங்களைப் பார்க்காம போவாளா?”

“ஏதானும் காரணம் சொல்வேன். எனக்கு உடம்பு சரியாயில்லேன்னு சொல்லேன்.”

“நம்பவே மாட்டா.”

“அப்போ நான் செத்துப் போய்ட்டேன்னு சொல்லு போ.”

ஸ்ரீமதி மறு பேச்சில்லாமல் திரும்பினாள். நெஞ்சம் கனத்தது. இதுவரை தாத்தாவிடம் எத்தனைபேர் வந்து விட்டார்கள், தம் சொல்லடுக்குகளுடன்! பாடம் ஓப்பிக்கிற மாதிரிதான். “பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்க வேணாம்.” “போனவ புண்ணியவதி, பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போய்ட்டா? அதை நினைச்சுத்தான் நீங்க மனசைத் தேத்திக்கணும்.” “பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேலே உசிரு. அதை யெல்லாம் நினைச்சு ஆறுதலாயிருங்கோ.”

“பாவம், தள்ளாத வயசில் உங்களுக்கு எப்பேர்பட்ட இடி!….” ஸ்ரீமதிக்கே அதெல்லாம் அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத, வார்த்தைக் குப்பையாகத் தோன்றியதென்றால், தாத்தாவுக்கு எப்படி இருக்கும்…?

வந்தவர்களை அப்படியே பேசி வெளியே அனுப்பிவிட வேண்டுமென்ற உறுதியோடு அவள் சென்றாள். ஆனால் பயனில்லை; அவள் நாசூக்காக எவ்வளவு உணர்த்தியும் கேட்காமல் அவர்களில் ஒருவர் தாத்தாவைப் பார்த்தே தீருவதென்று பின் கட்டுக்கு வந்து விட்டார்.

“என்ன, மிஸ்டர் சாரி….”

மாட்டுக்கொட்டிலின் பக்கத்தில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் உடல் விறைத்துக் கொண்டது.

“யாரு! வரதனா? வாங்கோ, ஆகாசத்தைப் பார்த்தேளா? மழை வரும்போல இல்லே?” என்றார் தாத்தா திரும்பாமலே.

வந்தவர் திகைத்துப் போனார். சட்டென்று பேச முடியவில்லை…

“என்ன பேசவே காணோம்? மழை வந்தா இப்போ ஊரிலிருக்கிற தண்ணிக் கஷ்டத்துக்கு விமோசனம் பிறக்கும், இல்லையா?” என்றார் தாத்தா தொடர்ந்து. பிறகு திரும்பி நின்று, வந்தவரைப் பார்த்துப் புன்னகை செய்தார்.

“நீங்க அப்படி நினைக்கலே போலிருக்கு. அதுவும் சரிதான். நம்ம வறட்சிக்கு கொஞ்ச மழை போறாதுதான். நன்னா அடிச்சுப் பெய்யணும், உங்களுக்கு என்ன தோண்றது?”

துக்கம் விசாரிக்க வந்தவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டார். “விஷயத்தைக் கேள்விப்பட்டேன் மிஸ்டர் சாரி. அப்போ நான் ஊரிலில்லே. திருச்சிக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தேன். வந்ததுமே இப்படின்னு சொன்னா. மனசு ரொம்ப சங்கடப்பட்டுது. ஆறுதலாய் உங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலே…”

“உங்க ரெண்டாவது பையன் ஏதோ இன்ட்டர்வ்யூவுக்குப் போயிருந்தானே என்ன ஆச்சு?”

“நீங்க அதை நெனைக்கக்கூடாதுன்னு இருக்காப்லே இருக்கு. ரொம்ப விவேகந்தான். துக்கத்துக்கு இடம் கொடுத்தா அப்பறம் மனுஷன் மீள முடியாது. நீங்களாவேதான் எப்படியோ மனசைத் தேத்திக்கணும். இந்த வயசில் உங்களுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்திருக்கப்படாது. என்னதான் மாமி தன் வரைக்கும் ஒரு குறையும் இல்லாம மகாலஷ்மியாட்டம் போய்ட்டாள்னாகூட…”

“பாங்க் வேலையாகத்தானே அந்த இன்ட்டர்வ்யூ? அல்லது வேறேதானும் கம்பெனிக்கு அப்பளிகேஷன் போட்டிருந்தானா?”

வரதன் அவரை வெறிக்கப் பார்த்தார். ஒரு விநாடி மனத்தில் மின்னிய சந்தேகத்தை அடக்கிக் கொண்டார். சேசே அப்படியெல்லாம் இருக்காது.

“சில சிநேகிதாளோட வந்திருக்கேன். அவாளுக்கு எங்கேயோ கடைத்தெருவுக்குப் போகணுமாம்… இத்தனை பெரிய உலகத்தில் மாமிக்குத்தானா இடமில்லாம போயிடுத்து? ஆனா நம்ம கையில் என்ன இருக்கு? எல்லாம் அவன் செயல். உயிர் என்னிக்கிருந்தாலும் அநித்தியந்தான். மனசைச் சமாதானப்படுத்திக்கணும். பெருமாள் உங்களுக்கு அதுக்கான தெம்பைக் குடுக்கட்டும். தைரியமாய் இருங்கோ ஸார்… இந்த மாதிரிச் சந்தர்ப்பத்திலே போய்ட்டு வரேன்னு சொல்லிக்கக் கூடாதும்பா…”

“அப்போ கிளம்பிட்டேளா? சரி, போயிட்டு வாங்கோ. இன்னொரு நாள் சாவகாசமா வாங்களேன்! வெய்யத்தாழ வந்தால், ‘ப்ளெஸன்ட் வாக்’காகவும் இருக்கும்” என்றார் தாத்தா.

வந்தவர் போனபோது தன் நண்பர்களிடம், “என்னைக்குமே மண்டைக்கனந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில்கூட மூஞ்சி கொடுத்துப் பேச இஷ்டப்படல்லே பாருங்களேன்; அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூடக் குடித்தனம் பண்ணினாளோ, பாவம்!” என்று சொல்லிக் கொண்டு போனது ஸ்ரீமதியின் காதில் விழுந்தது. அவள் மீண்டும் கொல்லைப் பக்கம் வந்தாள்.

தாத்தா இப்போதும் வானத்தைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு பார்வையை இறக்கி மாட்டுத் தொழுவத்தைப் பார்த்தார். அதனருகில் இருந்த துணி துவைக்கும் கல்லைப் பார்த்தார். பிறகு வேலியாகப் படர்ந்திருந்த மல்லிகைக் கொடிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றையும் பார்வை தடவிக் கொடுப்பதுபோல் இருந்தது. பாட்டி தொழுவத்திலே மாட்டுக்குத் தவிடும் பிண்ணாக்கும் வைப்பது, கல்லில் தன் மடிப்புடவையைத் தோய்ப்பது, மல்லிகைக் கொடிகளை ஆசையுடன் வளர்ப்பது எல்லாம் ஸ்ரீமதிக்கு நினைவு வந்தன. பாட்டி இறந்தபோது சடலத்தைத் தாத்தா இமைக்காமல் நோக்கினார். ஆனால் அழவில்லை. அப்போதும் சரி, பிறகு இந்த இரண்டு வாரங்களிலும் சரி, அவர் அழுது யாரும் பார்க்கவில்லை. இப்படி வீட்டை இடம் இடமாக, பொருள் பொருளாக கண்களினால் வருடிக் கொடுக்கிறாரே, அவ்வளவுதான்!

வந்த சுவடு தெரியாமல் திரும்பிவிட அவள் முனைந்தபோது தாத்தாவின் பார்வை தற்செயலாய் அவள் மேல் விழுந்தது.

“என்ன, இன்னும் யாரானும் வந்திருக்காளோ, துக்கம் விசாரிக்க?”

ஸ்ரீமதி எச்சிலை விழுங்கிக் கொண்டாள். அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. அதை இழப்பு என்று சொல்லிவிட்டால் போதுமா? அதை ஏந்துவதற்கு வார்த்தையில் இடமுண்டா? ஆறுபது ஆண்டுகள்! பிரபவ, விபவ என்று தொடங்கி அக்ஷய வரையில் ஒரு வட்டமே முழுசாக அடங்கிவிட்ட தாம்பத்தியம். அறுபதுவருடத் தோழமை என்பது மட்டுந்தானா? பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. “நான் ரொம்பக் குடுத்து வச்சவடீ!” என்று பாட்டி எத்தனைதரம் கண்களில் நீர் மல்கச் சொல்லிக் கசிந்திருக்கிறாள்! செத்தமுகத்தில்கூட அந்தப் பரவசம் மாறாமல் இருந்தது. அதன் அர்த்தத்தின் விரிவுகளையெல்லாம் கேவலம் துக்க விசாரிப்பு என்ற சம்பிரதாயத்தின் எல்லைகளுள் அடக்கிவிட முடியுமா? வார்த்தைகளுக்கு எப்போது மௌனமாய் இருக்கவேண்டு மென்று தெரிவதில்லை.

“இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ. ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன். ஜாக்கிரதை!” என்றார் தாத்தா.

“சரி தாத்தா. யாரும் வராம பார்த்துக்கறேன்.”

“நல்ல பொண்ணு. இப்படி வா.”

பின்கட்டுத் தாழ்வாரப் படிகளிலே மேல் படியில் பாட்டி வழக்கமாக உட்கார்ந்து காற்று வாங்கும் படியில் தாத்தா உட்கார்ந்து கொண்டார். அவளை அருகில் இருத்திக்கொண்டு அவள் கையைத் தம் கையில் பற்றிக் கொண்டார். பார்வை மறுபடியும் மல்லிகைக் கொடியில் நிலைத்தது. அவர் எதுவும் பேசவில்லை. நிறைந்து ததும்பும் பாத்திரத்திலிருந்து துளிகள் சிந்திவிடாதபடி ஜாக்கிரதையாய்ப் பற்றுவதுபோல், ஸ்ரீமதி அந்த மௌனத்தை வெகு கவனமாய்ப் பாதுகாத்தாள். தாத்தாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் சிறு சலனங்கூட ஒரு குறுக்கீடென்று கருதி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். அவ்வப்போது அவர் உடம்பில் ஒரு நடுக்கம் பாய்வதை மட்டும் அவர் கையில் பிணைந்திருக்கும் தன் கையின் மூலம் அவளால் உணர முடிந்தது.

“அப்பா, சாப்பிட போகலாமா?”

இரவு ஆகிவிட்டதா என்ன? ஸ்ரீமதியின் தந்தை பின்னால் நின்று குரல் கொடுத்தபோது, அந்த ஒலி ஒரு பாராங்கல்லாக மௌனத்தின் மீது விழுந்தது. ஸ்ரீமதி பதறிக் கொண்டு தாத்தாவைப் பார்த்தாள். ஆனால் அவர், “ம், வரேன் போ” என்றார். சாதாரணமாக. ஸ்ரீமதியின் கையை விட்டுவிட்டு, “நீயும் போய் எலையிலே உக்காரு, வந்துடறேன்” என்றார். ஆனால் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்த பிறகும் அவர் வரவில்லை.

“இன்னுமா அங்கேயே இருட்டிலே வெறிச்சுண்டு உக்காண்டிருக்கார்?” என்றார் ஸ்ரீமதியின் தந்தை.

“சாப்பிட வரணும்னே மறந்துட்டாப்போல் இருக்கு” என்றான் ஸ்ரீமதியின் தம்பி. “பாட்டி இருந்தால் இப்போ அவருக்கு ஒரு டோஸ் குடுத்து அழைச்சுண்டு வருவா.”

ஸ்ரீமதியின் அண்ணன் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவி இன்னம் வீட்டுக்கு வரவில்லை.

“இது தினம் நடக்கற கூத்தாப் போயிடுத்து” என்றாள் ஸ்ரீமதியின் தாய்.

“பாவம் அப்பா! அவர் வாய்விட்டுக் கதறி அழுதுட்டார்னா தேவலைன்னு எனக்குத் தோன்றது. தூக்கத்தையெல்லாம் இப்படி உள்ளேயே வெச்சுண்டு மறுகக்கூடாது” என்றார் ஸ்ரீமதியின் தந்தை தம் மனைவியைப் பார்த்து.

“அது என்ன துக்கமோ! என்னதான் மனசை அடக்கிண்டாலும் நிஜமாய்த் துக்கம் இருந்துதானால் கட்டின பெண்டாட்டி செத்துக் கிடக்கறபோதுகூடவா கண்ணில் ஜலமே வராம இருக்கும்?”

“நீ என்ன, அப்பாவுக்கு அம்மா மேலே பிரியமே இல்லேன்னு சொல்றியா?”

“நான் என்னத்தைக் கண்டேன்! ஆனா இந்த ஆம்பிள்ளைகளை மட்டும் நம்பவே முடியாது.”

ஸ்ரீமதி எழுந்துவிட்டாள், “நான் போய்த் தாத்தாவைக் கூப்பிட்டு வர்ரேன்” என்று சொல்லி வேகமாய் அறையை விட்டுச் சென்றாள்.

தாத்தா வந்து உட்கார்ந்து சாப்பிட்டார். எதுவுமே பேசவில்லை. ஸ்ரீமதியின் தாய் எப்போதும்போல் அவருக்கு மரியாதையுடன் உணவு பரிமாறினாள். தாத்தா அவ்வப்போது தலை நிமிர்ந்த போதெல்லாம் அவர் பார்வை நாற்புறமும் ஏதோ தேடுவதுபோல் அலைந்தது. சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து போய்க் கைகழுவிக் கொண்டார்.

சிப்பல் தட்டில் சாதம் எடுத்து வந்த ஸ்ரீமதியின் தாய் வியப்புடன், “என்ன மாமா, அதுக்குள்ளே எழுந்துட்டேளே?” என்றாள்.

“ஏன்? சாப்டுட்டேன், எழுந்துண்டேன்” என்று தாத்தா பதிலளித்தார்.

“மோர் சாதம் சாப்பிடல்லையே இன்னும்?”

“ஓ” என்றார் தாத்தா. பிறகு. “பரவாயில்லே, வயிறு ரொம்பிடுத்து” என்றார்.

ஸ்ரீமதியின் தந்தை அவரை அநுதாபத்துடன் நோக்கினார். புரியறது அப்பா! எனக்கும் அதேமாதிரிதான் இருக்கு. துக்கம் நெஞ்சை அடைக்கறபோது என்ன செய்யறோம்னே சில சமயம் நினைவிருக்கிறதில்லே. ஒவ்வொரு நிமிஷமும் அம்மா ஞாபகம் வந்துண்டே இருக்கு. எங்கே பார்த்தாலும் அவ நிக்கறமாதிரியே தோண்றது. அம்மா உயிரோடு இல்லேன்னே இன்னமும் நம்ப முடியலே…”

“ஸ்ரீமதி நன்னா வளர்ந்துட்டா. சீக்கிரம் அவளுக்கும் வரன் பார்க்க ஆரம்பிக்கணும்” என்றார் தாத்தா.

அவர் அந்த அறையை விட்டுச் சென்றதும் ஸ்ரீமதியின் தம்பி தன் தந்தையிடம், “தாத்தாவுக்குக் கல்யாணமாகச்சே அவருக்கு என்ன வயசுப்பா?” என்று கேட்டான்.

“நீ அவசியம் தெரிஞ்சுண்டாகணுமோ? போடா, சாப்பிட்டாச்சுன்னா எழுந்து கையலம்பிண்டு போய்ப் படி…”

ஸ்ரீமதியும் அவள் சகோதரர்களும் அங்கிருந்து சென்றார்கள்.

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“அப்பா ஆனாலும் அழுத்தந்தான்” என்றார் ரங்கன்.

“எனக்கு அவரைப் பார்க்கறபோது பயமாயிருக்கு” என்றாள் கனகம்.

“ஏன்?”

“இப்படி உணர்ச்சியில்லாமல் ஒரு மனுஷன் நடந்துக்க முடியுமான்னுதான். பாவம், உங்கம்மா அவருக்காகக் கொஞ்சமாவா உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே!”

“உனக்கு என் அம்மாகிட்டே இது என்ன புதுக் கரிசனம்! அவள் உயிரோடு இருந்தப்போ அப்படி ஒண்ணும் நீ ரொம்ப அனுசரிச்சுப் போகலையே! அவள் தேமேன்னு மாட்டைக் குளிப்பாட்டினாலும் தன் புடவையைத் தோய்ச்சுண்டாலும் கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடக் கிட்டப் போகமாட்டியே!” என்று ரங்கன் சிரித்தபோது கனகம் கோபமாய் அவரை விழித்துப் பார்த்தாள்.

“நீங்களும் சமயம் பார்த்துத்தான் சொல்லிக் காட்டறாப்பலே இருக்கு! ஏன், அப்போ சொல்றதுக்கென்ன, என் அம்மாவுக்கும் போய் ஒத்தாசைப் பண்ணுடீன்னு?”

“இதெல்லாம், சொல்லித்தான் தெரியணுமா?”

“மனசுக்குள்ளே வைச்சுண்டால் மத்தவாளுக்கு மூக்கிலே வேர்க்குமா என்ன? நான் கொஞ்சம் கிட்டே போனாலும் என்னமோ பெரிசா ஆசாரம் கெட்டுப்போயிடுத்துன்னு உங்கம்மா ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிப்பாளே, அது எங்கே தெரிஞ்சிருக்கப்போறது உங்களுக்கு! நான் செய்யறதுதான் கண்ணிலேபடும்.”

“அவள் போனப்புறம் கூடவா அவள் மேலே குத்தம் சொல்லணும்? அதான் இருக்கிறவரைக்கும் தினம் வீட்டிலே குருஷேத்திரம் நடத்தியாச்சே?”

“அடேயப்பா, இத்தனை ஆங்காரம் இருக்கா உங்களுக்கு மனசுக்குள்ளே? இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்தேளே அப்போ! ம்ஹ்ம், ஆயிரம்தான் இருக்கட்டுமே, ஆம்பிள்ளை ஒவ்வொருத்தருமே கடைசியில் அம்மாக் கோதண்டராமன்தான். பெண்டாட்டி எத்தனை செஞ்சாலும் எடுபடாது. மனசிலே ஆழமான இடம் என்னிக்கும் அம்மாவுக்குன்னு தத்தம் பண்ணினதுதான்.”

“அப்படித்தான் வச்சுக்கோயேன், நம்ம நாணுவும் அதே மாதிரி பெண்டாட்டிகிட்ட எத்தனை ஆசையாயிருந்தாலும். மனசில் முக்கிய இடத்தை உனக்குத் தத்தம் பண்ணியிருப்பான்னு நீயும் சந்தோஷப்படேன்! அவனுக்குக் கல்யாணம் பண்ணிட்டதனால் இனிமே இந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப அவசியமில்லையா? இந்த உணர்ச்சி இல்லேன்னா எந்த அம்மாவானாலும் தன் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணுவாளான்னு சந்தேகம்தான்.”

“நான் ஒண்ணும் அப்படி இல்லே. பாவம்னு உங்கம்மாவுக்குப் பரிஞ்சுண்டு வந்ததுக்கு எனக்கு இது நன்னா வேணும்” என்று கனகம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

உள்ளதைச் சொன்னால் கோபம் வருகிறது என்று நினைத்துக் கொண்டு ரங்கன் கூறினார், “கோபிச்சுக்காதே கனகம், சும்மா சொன்னேன். அப்பா போக்கு எனக்கு மட்டும் பிடிக்கிறதா என்ன? சாவு என்கிறதே ஒரு அன்னியமான எண்ணம். அழுது அதுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் அந்தத் திகைப்பு குறையறாப்பலே இருக்கும். அதைக் கொடுக்காம ஒருத்தர் கல்லாட்டம் இருந்தால் நீ சொன்னாப்பலே ஒருவிதத்தில் பயமாத்தானிருக்கு.”

“அதுக்கில்லேன்னா! உங்கம்மாவுக்காக உங்கப்பா அழாமலிருக்கிறதைப் பார்க்கிறபோது, ஒரு பொண்டாட்டியாய்ப் பாடுபடறது எல்லாமே கடைசியில் இத்தனை வியர்த்தம் தானான்னு தோணிப்போறது. நம்மை நிராகரிச்சுட்டா பாத்தியான்னு மனசைத் தாக்கறது…” கனகத்தின் குரல் கம்மியது.

தன்னை அந்த இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள் இவள்! உலகத்தில் எல்லோருமே… மரணம் என்ற மகாமர்மம் கூட – ஒரு சிறு தன்னுணர்ச்சியில்தான் அஸ்திவாரம் கொண்டிருக்கிறதா? ம்ஹ்ம்! மனிதனைப் பொறுத்தவரையில் உலகம் என்றுமே சிறியதுதான். அதற்குத் சந்திரமண்டலம் போக வேண்டியதில்லை.

“என்னத்தையானும் நினைச்சு மனசைக் கஷ்டப்படுத்திக்காதே கனகம்” என்று ரங்கன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினார்.

“நம்ம மாட்டுப் பொண்ணு ஆத்துக்கு வரட்டும், அவளும் நானும் எத்தனை ஒத்துமையாயிருக்கப்போறோம் பாருங்கோ” என்றாள் கனகம்.


ஸ்ரீமதியின் அண்ணன் சாப்பாடு முடிந்ததுமே ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு தன் வேட்டகத்துக்குச் சென்றான். வத்ஸலாவின் முகம் அவனைப் பார்த்ததுமே மலர்ந்து விட்டது.

“என்ன திடீர்னு? இன்னிக்கு வரப்போறதாச் சொல்லவே இல்லையே? சாப்பாடு ஆச்சா?” என்று விசாரித்தாள்.

“ஆச்சு” என்றான் நாராயணன். இருவரும் வத்ஸலாவின் அறைக்குச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாதமாகியிருந்தது. அவளை அவனுடைய வீட்டுக்கு அழைத்துவர நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் பாட்டி இறந்துவிடவே அது தள்ளிப் போய்விட்டது.

“வீட்டிலே பாட்டி பேச்சாவே இருந்தது. பாட்டிக்காகத் துக்கம் கொண்டாடறவா பாட்டியையே புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால் தாத்தா நடந்துக்கற விதம் சரின்னுதான் சொல்லணும்”

“உங்க தாத்தா துளிகூட அழவேயில்லையாமே? இது வரை ஒருவார்த்தைகூட உங்க பாட்டியைப் பத்தி பேசவும் இல்லையாம்? ஆமா, உங்க குடும்பத்தில் எல்லா ஆம்பிள்ளைகளுக்குமே இந்த மாதிரிக் கல்லு மனசுதானா?”

“போக்கிரி!… புருஷன் பெண்டாட்டிக்குள் எத்தனையோ இருக்கும். தாத்தா போக்குக்குத் தக்க காரணம் ஏதாவது இருக்கலாம். மத்தவாளுக்குப் புரிய முடியுமா? நான் அதைச் சொல்லலே.”

“பின்னே?”

நாராயணன் கண்கள் மிருதுவாயின.

“எங்க பாட்டி ரொம்ப அருமையான மனுஷி.”

“உங்க எல்லாருக்கும் அவள் கிட்ட உயிராம், ஸ்ரீமதி சொல்லியிருக்கா.”

“பாட்டியைத் தெரிஞ்ச யாரும் அதைப்பத்தி ஆச்சரியப்பட முடியாது. அவளோட எலியும் பூனையுமாய்ச் சண்டை போட்ட எங்கம்மா கூட…”

“ஐயையோ, மாமியார் மாட்டுப் பெண் சண்டை உண்டா உங்க வீட்டிலே? எனக்கு இப்பவே பயமா இருக்கே!… வந்து, எங்கப்பா கூடச் சொன்னார், முதல்லேருந்தே தனிக் குடித்தனமாய்ப் போயிடுங் களேன்னு…”

நாராயணன் சிரித்துக் கொண்டே அவள் காதை விளையாட்டாகக் கிள்ளினான். “ஸில்லி! பயம் எதுக்கு? மாமியார் மாட்டுப் பெண் சண்டைங்கறது அவாளுக்குள் சும்மா ஒரு சம்பிரதாயம், அவ்வளவுதான். வெளியிலே வெட்டி மடிஞ்சுப்பா. ஆனா தினம், பாட்டிக்கு ராத்திரியில் பாலை எங்கம்மா தன் கையாலேதான் குங்குமப்பூச் சேர்த்துச் சுண்டக் காய்ச்சித் தயார் பண்ணுவா, அந்த வேலையை ஸ்ரீமதி கிட்டகூட நம்பி விடமாட்டா. அதே மாதிரி பாட்டியும் எதை மறந்தாலும் எங்கம்மாவின் பிறந்த நாளை மறக்காம அன்னிக்குக் கோவிலுக்குப்போய் அவள் பேரிலே அர்ச்சனை பண்ணிட்டு வருவா.”

“ஓ. அப்படியா அது!”

“எதுக்குச் சொல்றேன்னா, பாட்டியோடு பழகினவாளிலே அவள் அருமை தெரியாதவாளே கிடையாது. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா?”

“என்ன?”

“அவளைப் பார்த்தாலே யாருக்கும் தான் உயிரோடு இருக்கிறதைப் பத்தியே ஒரு சந்தோசம் ஏற்படும். அவள் உயிரே வடிவமாயிருந்தவள். வாழ்க்கையோடு பிணைஞ்சிருந்தவள். நாங்க குழந்தைகளாயிருந்தபோது அவள் எங்களுக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள், புராணக் காவியக் கதைகள், தேவதைக் கதைகள், எல்லாத்திலேயும் நல்லது ஜயிக்கிறது, கெட்டது தோற்கிறது என்கிறதை இன்னும் அடிப்படைக்குப்போய் வாழ்க்கை வளர்ச்சி என்கிற உயிர்த் தத்துவம் ஜயிக்கிறதுன்னும் அழிவும் சாவும் தோற்கிறதுன்னும் மனசில் பதியறாப்பலே சொல்வா. நன்மை ஏன் ஜயிக்கிறதுன்னா அது வாழ்வு. தீமை ஏன் தோற்கறதுன்னா அது அழிவு. அவள் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா; உயிர் ஒரு நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சொன்னேன், அவளுக்காகத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு.”

வத்ஸலா அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். கணவனின் முகத்துப் பூரிப்பு. கண்களின் நினைவுப் பரவசம். அவளை ஒருமாய வட்டத்தினுள் இழுத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.

“உங்க பாட்டியை எனக்குத் தெரியாதேன்னு இப்போ வருத்தமாயிருக்கு” என்றாள்.

“வருத்தமே வேணாம். வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சுக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி.”

சிறிது நேரம் இருவரும் மௌனமாயிருந்தார்கள். நாராயணன் மனைவியைக் கனிவோடு பார்த்தான். “நாம் துக்கம் கொண்டாட வேணாம் வத்ஸலா! வாழ்க்கையைக் கொண்டாடுவோம். உயிரை அழுத்தமாய் ஆமோதிப்போம். பாட்டிகிட்ட என் பிரியத்தை இதைவிட அழகாயும் பொருத்தமாயும் வேறெப்படியும் காட்ட முடியாதுன்னு தோணித்தான் நான் அவள் பேச்சுலே உன்னை நினைச்சுண்டு வந்தேன்.”


“ஏண்டி அழுதுண்டிருக்கே?” என்று கேட்டுக் கொண்டு ஸ்ரீமதியின் தம்பி அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

ஸ்ரீமதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். “எனக்கே தெரியலேடா?” என்றாள்.

“பாட்டியை நெனச்சுண்டியா? எனக்குக் கூட மனசு தாங்கலே ஸ்ரீமதி, பாட்டி இல்லாமே வீடே நன்னாயில்லே.”

“ஆமா, ஆனா நான் இப்போ பாட்டிக்காக அழலேடா வாசு. என்ன வேடிக்கை பாரேன்! எனக்குத் தாத்தாவை நினைச்சாத்தான் அழுகை வரது.”

“அவருக்கென்ன கேடு! அவர் துளிக்கூட அழல்லே, அவருக்காக இவள் அழறாளாம். போடி நீ ஒரு பைத்தியம். அது கிடக்கறது ஸ்ரீமதி, நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறயா? பாட்டி செத்துப் போனதைப் பத்தி.”

“எங்கே, படியேன் கேக்கலாம்.”

வாசு தன் கவிதையை எடுத்து வந்து உற்சாகமாய்ப் படித்துக்காட்ட ஆரம்பித்தான். பாட்டியின் மறைவை உருக்கமாக வர்ணித்திருந்தான். சிறிது சிறிதாகப் பொருளின் உருக்கம் மறைந்து படைப்பின் கிளர்ச்சி அவன் முகத்தில் ஒளி கூட்டியது. “இந்த இடத்திலே அப்படியே அழுகை வராப்பலே ‘மூவிங்’கா இல்லே?” என்று கேட்டபோது அவன் முகம் சந்தோஷமாக இருந்தது.

அவன் படித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீமதியின் கண்கள் முன்வாசல் தரையில் நிலைத்திருந்தன, அந்த இடம் கோலத்தின் சுவடு படாமல் மூளியாயிருந்தது. இன்னும் ஒரு வருஷத்துக்கு அங்கே கோலம் காணப்படாது.

வெளி வராந்தாவில்தான் ஒரு பக்கமாகத் தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பலபேரோடு இருக்கும்போது அவர் தனியாயிருப்பது போல் தெரிகிறார். ஆனால் இப்படித் தான் மட்டுமாக முகத்தில் அந்த லயிப்புடன் இருக்கும்போது அவர் தனியாயில்லாத மாதிரி தோன்றுகிறதே, என்ன ஆச்சரியம் என்று ஸ்ரீமதி வியந்தாள்.

அவன் தம்பி எழுந்து போன பிறகுகூட தாத்தா அதே நிலையில் இருந்தார், ஸ்ரீமதி மெள்ள அவரிடம் வந்தாள். “தூக்கம் வரவில்லையா தாத்தா? முந்திமாதிரி ராமாயணம் ஏதானும் படிச்சுச் சொல்லட்டுமா?”

“வேணாம்மா. தூக்கம் வராப்பலே இருக்கு; போய்ப் படுத்துக்கறேன்.”

ஹாலில் தாத்தாவும் ஸ்ரீமதியும் அவள் தம்பியும் படுத்துக் கொண்டு வெகு நேரமாகிவிட்டது. தம்பி எப்போதோ தூங்கிவிட்டான். ஆனால் தாத்தா இன்னும் தூங்கவில்லை என்று ஸ்ரீமதிக்குத் தெரியும். அது அவளுக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு இரவும் தெரிகிற விஷயம் என்பது தாத்தாவுக்குத் தெரியாது. அவர் புரண்டு புரண்டு படுப்பதும், உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில் கிழக் கண்களைத் திறந்து கொண்டு விட்டத்து இருளை வெறித்துக் கொண்டிருப்பதும் அவளுக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாது.

அவர் படுக்கையில் எழுந்து உட்காரும் மெல்லிய சத்தம் வந்தது. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள். ‘தீர்த்தம் வேணுமா?’ என்று கேட்கலாமா? ஆனால் அவருடைய அந்தரங்கத்தைத் தீண்டத் தைரியம் வரவில்லை.

தாத்தா எழுந்து நின்றார். நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீமதி ஓர் அச்சத்துடன் எழுந்து அவர் அறியாமல் இருளில் மறைந்து மறைந்து அவரைப் பின் தொடர்ந்தாள்.

தாத்தா வீட்டினுள் ஒவ்வொரு அறையாகச் சென்றார். நின்று நின்று இடங்களை வெறித்தார். பாட்டி பூஜை செய்த அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நின்றார். பிறகு கொல்லைக் கதவைத் திறந்து கொண்டு பின்கட்டுக்குப் போனார். தூக்கத்தில் நடப்பதுபோல் நடை யந்திரப் போக்காய் இயங்கியது. தொழுவம், துவைக்கும்கல், மல்லிகைக் கொடி ஒவ்வொன்றின் அருகிலாக இருட்டினூடே சென்றுநின்றார். அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிட்டார். பிறகு வீட்டுக்குள் திரும்பி வந்தார். தட்டுத் தடுமாறி நடந்து வந்து தம் படுக்கையை மீண்டும் அடைந்தார். நடையின் தள்ளாட்டம் இருட்டினால்தானா என்று புரியவில்லை. பயத்துடன் தொடர்ந்து சென்ற ஸ்ரீமதி நிம்மதியுடன் பூனைபோல் உள்ளே வந்து தன் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்குவதுபோல் பாவனை செய்தாள்; பார்வை மட்டும் அரை இமைத் திறப்போடு தாத்தாவின் மேலே படிந்திருந்தது.

தாத்தா சிறிது நேரம் அசையாமல் படுக்கையின் மீது உட்கார்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்டார். ஆனால் தூங்கவில்லையென்று தெரிந்தது. அவர் கண்கள் திறந்துதான் இருந்தன வென்பதைக் கருமணிகள் இருளில் பளபளப்பதிலிருந்து ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள். அவர் ஆழமாகப் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்டது.

மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை.

Share this post:

சிறுகதை: ஒரு கவியின் உள் உலகங்கள் – நா. பார்த்தசாரதி

பூங்குன்றத்துக்குத் தந்தி ஆபீஸ் கிடையாது. தந்தி, தபால் எல்லாம் பன்னிரண்டு மைலுக்கு அப்பால் இருந்த பெரிய நகரமான மேலநல்லூரிலிருந்துதான் பட்டுவாடா ஆகவேண்டும். இரயில்வே ஸ்டேஷனும் மேலநல்லூரில்தான். அங்கிருந்து பூங்குன்றத்துக்குப் போக ஒற்றையடிப்பாதை அடர்ந்த காட்டை வகிர்ந்துகொண்டு செல்கிறது. வண்டித் தடம் சுற்று வழியாகப் போகிறது. அதன் மூலமாகப் போனால் மேலும் நாலுமைல் அதிகமாகும். ஒற்றையடிப்பாதையோ, வண்டித் தடமோ, எதுவானாலும் இருட்டியபின் போக்குவரத்துக் கிடையாது. வனவிலங்குகளைப் பற்றிய பயமும் உண்டு. மலையடி வாரத்தில் அடர்ந்த காட்டினிடையே இரண்டு காட்டாறுகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பூங்குன்றம் ஒரு சிற்றூர். அது, நல்ல மழை நாட்களில் சில தினங்கள் உலகத் தொடர்பே அற்றதொரு தீவுபோலாகி விடுவதும் உண்டு.

பூங்குன்றத்தில் மொத்தம் நாற்பது ஐம்பது குடியிருப்புகள் இருந்தால் பெரிய காரியம். “என் வாழ்வில் இறுதி ஆண்டுகளை இந்த இயற்கையழகு மிக்க கிராமத்தில்தான் கழிக்கப் போகிறேன்” என்று மகாகவி இளம்பூரணனார், அங்குக் குடியேறிய பின்புதான் உலகத்துக்குத் தெரியாத அந்த ஊர் பிரபலமாயிற்று. அதாவது கொஞ்சம் பேர் தெரிந்தது.

மேலநல்லூர் தபாலாபீஸிலிருந்து பூங்குன்றத்துக்குப் பட்டுவாடா ஆகவேண்டிய தபால்களில் பெரும்பாலானவை கவிஞருக்குத்தான் இருக்கும். தபால் பட்டுவாடா செய்யும் பொறுப்பில் இருந்த இளைஞன் குமரகுரு, சுற்று வட்டாரத்துக் கிராமங்கள் எல்லாவற்றிற்கும் போக வேண்டியிருந்தாலும், பூங்குன்றத்துக்குப் போவதிலும், கவிஞரைச் சந்திப்பதிலும் அதிக ஆர்வம் உடையவனாக இருந்தான். காரணம், குமரகுருவே ஓர் இளம் கவிஞன். தனிக்கட்டையான அவன் மேலநல்லூரில் குடியிருக்க அறை என்று எதுவும் கிடைக்காததால், போஸ்ட் மாஸ்டருடைய தயவில் தபாலாபீஸிலேயே, பின்கட்டு அறை ஒன்றில் தங்கிக் கொண்டான். சமயங்களில் அவசரத்தந்தி, பி.சி.ஓ. என்ற வகையில் டிரங்கால் – இவற்றுக்கு மெசஞ்சராகவும் அலைய வேண்டி இருக்கும். வேறு எத்தனையோ தபால் ஊழியர்கள் மேலநல்லூருக்கு வந்த முதல் தினத்திலிருந்து வேறு வசதியான நகரங்களுக்கு மாற்றிக்கொண்டு போவதற்குப் பறப்பார்கள். குமரகுரு அப்படிப் பறக்காததோடு மேலிடத்திலிருந்து தன்னை மாற்றாதவரை அங்கேயே தொடர்ந்து இருக்க விரும்பினான். இரும்புத்துண்டு காந்தத்தால் ஈர்க்கப்படுவதுபோல் மகாகவி இளம்பூரணனாரால் அவன் ஈர்க்கப் பட்டிருந்ததுதான் காரணம். அவரது அண்மை அவனுக்குப் பிடித்திருந்தது.

குயில்களும், கிளிகளும் ஒலிக்கும் ஓசைகள் தவிர வேறு செயற்கை ஒளிகளே இல்லாத அந்தத் தீவுபோன்ற கிராமத்தில் மரம், செடி, கொடிகள் அடர்ந்த ஒரு பெரிய தோட்டத்தின் நடுவாக இருந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் மகாகவி வசித்து வந்தார். அதில் ஓர் எளிய நாட்டுப்புறத்து விவசாயியைப்போல அவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்தார்கள். வீட்டில் முக்கால்வாசி இடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்தன. பாரதியாரின் காணிநிலத்தில் வருவதுபோன்ற குடியிருப்பு அது.

குமரகுரு தபால்களை எடுத்துக்கொண்டு போகும் போதெல்லாம் பெரும்பாலும் அவரைத் தோட்டத்தில்தான் பார்ப்பான். ‘குரு! அந்த முல்லைக்கொடி அரும்பு கட்டியிருக்குத் தெரியுமோ?’ என்றோ, ‘அன்றைக்கு அந்த ரோஜாப்பதியன் போட்டேனே, அது நன்றாக வேரூன்றிவிட்டது’ என்றோதான் அவனை எதிர்கொள்வார், அவர்.

‘இத்தனை வயதிற்கு மேலும் இவரால் எப்படி இத்தகைய குழந்தைத்தனமான அல்ப சந்தோஷங்களால் மகிழ முடிகிறது?’ – என்று குமரகுருவிற்குப் பெரிதும் வியப்பாக இருக்கும். ஒருமுறை சிரித்துக் கொண்டே அதை அவரிடமே கேட்டுமிருக்கிறான்.

“இந்தக் குழந்தை மனத்தையும், இப்படிப் பூக்களையும் தளிர்களையும், தாவரங்களையும் இயற்கையையும் பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து ஆச்சரியப்படும் இயல்பையும் கடைசிவரை நான் இழந்து விடாமலிருக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை குரு! என்று நான் இந்தக் குணங்களை எல்லாம் இழந்து விடுகிறேனோ, அன்றிலிருந்து நான் கவிஞனாக இருப்பதற்கில்லை…” என்று அப்போது குமரகுருவிற்கு மறுமொழி கூறியிருந்தார் அவர். தம்முடைய மிகப் பணிவுள்ள சீடனைப்போலப் பழகினாலும், அவர் அவனுடைய பெயரின் பின்பகுதியைச் சொல்லிச் செல்லமாகக் ‘குரு’ என்றே அவனை அழைத்து வந்தார். குரு அவருடைய கவிதைகளின் ரசிகன். கவிதைகளைப்போலவே அவருடைய செயல்களையும் ரசித்துக் கவனித்து வந்தான் அவன்.

எங்கு எந்தப் புதுமையைக் கண்டாலும் – அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும், உடனே ஒரு குழந்தையைப்போல் குதூகலப்படும் அவரை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவருடைய தோட்டத்திற்குள் தபால்களோடு நுழையும் ஒவ்வொரு சமயமும் முதல்முறை அவரைச் சந்தித்ததுபோன்ற அதே ஆர்வத்தோடுதான் நுழைந்தான். புதுமையை வரவேற்கும், புதுமைக்கு வியப்படையும் அவரது மலர்ந்த உள்ளம் அவனைப் போன்ற ஒரு புதிய இளம்கவிஞனையும் வரவேற்று மகிழத் தயாராயிருந்தது. சகஜமாய் அளவளாவத் தயாராயிருந்தது.

“இந்த மருக்கொழுந்துச் செடிக்கு ஆண்டவன் எங்கிருந்துதான் இத்தனை வாசனையைப் படைத்தானோ” என்று வியப்பார் ஒரு சமயம்.

‘இத்தனை நிறத்தில் இத்தனை விதத்தில், இத்தனை மணங்களோடு பூமிக்குள் மறைந்திருக்கும் அழகுகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டுப் பூப்பூவாய்ப் பூக்கிறது பார்த்தாயா?’ என்பார் வேறொரு சமயம்.

வானின் ஒரு கோடியில் சாயம் பூசினாற்போல் தெரியும் மங்கலான வானவில், நீலவானின் இளம்பிறை, காலைக் கதிரவன், மலரும் ஏதாவதொரு புது மலர், முளைக்கும் ஏதாவதொரு புதிய செடி, எல்லாமே அதிசயம்தான் அவருக்கு. அப்படி அவர் வியந்து முகம்மலரச் சிரிக்கும்போது எழுபத்து மூன்று வயது மூப்பிலிருந்தா இந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும் என்று நம்ப முடியாமலிருக்கும் அவரது உற்சாகமும் புத்துணர்ச்சியும்.

அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பதாக வந்த தந்தியை அவன் சைக்கிளில் ஓடிப்போய் கொடுத்தபோது ரோஜாப் பதியன்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த அவர், “இரு இந்தக் கடைசிச் செடிக்கும் தண்ணீர் விட்டபின் வருகிறேன்” என்றார்.

ஒரு பூவுக்கும், செடிக்கும் வியக்கிறவர் ஒரு பெரிய தேசிய கௌரவம் தன்னைத் தேடி வந்ததற்காகச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் சுபாவமாயிருந்தது குமரகுருவுக்குப் பெரிதும் வியப்பை அளித்தது.

அவ்வளவு பெரிய நாடறிந்த மகாகவிக்குக் கர்வம் என்பதே என்னவென்று தெரியாது. தபால்கார இளைஞன்  குரு எப்போதாவது அவரிடம் நீட்டும் கவிதைகளைப் படித்துத் திருத்தங்கள் செய்து கொடுத்துப் பாராட்டுவார்.

‘எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் எத்தனை வயதானாலும் மனசை மட்டும் மூப்படைய விட்டுவிடாதே. நீ மிகச் சிறந்த கவிஞனாக வரலாம். பழியாலும் மூப்படையாதே! புகழாலும் மூப்படையாதே’ – என்பார்.

“பூப்பூவாய்ப்  பூத்திந்தப்

பூமி சிரிக்குதப்பா!

பாப்பாவாய்ப் பாடியதைப்

பரவும் வகையறியாமல்

மூப்பாலே சோர்ந்திருந்தார்

மூடமனிதர் வீழ்ந்திருந்தார்

சாப்பாட்டு ராமர்களே

சரணடைவீர் இயற்கையிலே”

என்று மகாகவி இயற்றியிருக்கும், ‘பூமியின் புன்னகை’ என்ற தலைப்பிலான கவிதைகளில் ஒன்றை நினைத்துக் கொள்வான் குமரகுரு, பூங்குன்றத்தின் அமைதியில் மூழ்கி விளம்பரமில்லாமல் தம் வாழ்வின் இறுதிப் பகுதியைக் கழித்து வந்தாலும் உலகம் அவரை அவ்வளவு சுலபத்தில் மறந்து விடவில்லை. அதிகமான பொருளாதார வசதி என்றும் சொல்ல முடியாது. பயங்கர வறுமை என்றும் கூற முடியாது. விற்கும் புத்தகங்களின் ராயல்டி வருமானத்தில் எளிய கிராம வாழ்வு நடத்தி வந்தார் மகாகவி.

அந்த ஆண்டு நல்ல அடைமழைக் காலம் தொடங்கியிருந்தது. மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்த ஒரு முன்னிரவில் மேலநல்லூர் அஞ்சல் அலுவலகத்தின் தந்திக் குமாஸ்தா, “அப்பா குமரகுரு! உங்க ஆளு… அதான் அந்தக் கவிஞருக்குப் பம்பாயிலிருந்து ஒரு தந்தி வந்திருக்குப்பா… ‘காவியபீடம்’கிற அகில இந்திய இலக்கிய ஸ்தாபனம், அவருடைய கவிதைப் பணிக்காக இந்த வருஷ விருதையும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்தையும் அவருக்கு வழங்க முடிவு பண்ணியிருக்கு. அதைப்பத்தின தந்தி இது! எப்படி இந்த அடைமழையிலே போய்க் குடுக்கப் போறே…? பூங்குன்றத்துக்குப் போற வழியெல்லாம் ஒரே காட்டாறு… பயங்கர வெள்ளமா இயிருக்குமே இப்போ…!” என்றார்.

“இது ரொம்ப மகிழ்ச்சிகரமான சமாசாரம்! எப்படியும் போய்த் தந்தியைக் குடுத்தாகணும் சார்…”

“சும்மா கர்மயோகி மாதிரித் தந்தியைக் கொடுத்திட்டு வந்திடாதே… முழுசா ஒரு நூறு ரூபாயாவது இனாம் வாங்கியாகணும். அத்தனை அதிர்ஷ்டமான சேதி இது…”

“குமரகுரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான். ஒரே ஆனந்தம். தந்தியை நனைந்து விடாமல் ஒரு பாலிதின் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, அந்த அடை மழையிலேயே அவரைப் பார்த்து எப்படியும் தந்தியைக் கொடுத்து விடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் கிளம்பினான். தந்தி குமாஸ்தா கூறியதுபோல் நூறு ரூபாய் இனாமுக்காக அல்ல. அந்த மகாகவியின் முகத்தில் ஒரு மலர்ச்சியைப் பார்ப்பதற்காக… அந்த மலர்ச்சியே பல நூறு ரூபாய் இனாமுக்குச் சமம் என்ற மனநிறைவோடு புறப்பட்டிருந்தான் அவன். இருட்டியபின் காட்டு வழியாகப் பூங்குன்றம் போகவே பயப்படுவார்கள். வனவிலங்குகளின் அட்டகாசம் ஒருபுறம், மழைக் கொடுமை மற்றொரு புறம். துணிந்து பூங்குன்றத்தையும் பிரதான நிலப்பகுதியையும் பிரிக்கும் காட்டாறுவரை சைக்கிளில் போய்ச் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நீந்திப்போய் தந்தியை அவரிடம் அக்கரையில் சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியிருந்தான் குமரகுரு. மின்சாரமும், டெலிபோனும் நுழையாத மலையடி வாரத்துக் கிராமமான பூங்குன்றத்தை விரும்பி அதில் வந்து தங்கியிருந்த அந்த மகாகவிக்கு அவன் போய்த் தந்தியைக் கொடுக்காவிட்டால் அந்த இனிய செய்தியே தெரிய முடியாது. வேறு உலகத் தொடர்பே அக்கிராமத்துக்குக் கிடையாது.

குமரகுரு காட்டாற்றின் கரையை அடைந்தபோதே இரவு எட்டேமுக்கால் மணி இருக்கும். தற்செயலாக மழை கொஞ்சம் தணிந்திருந்தது. எப்படியும் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முடியாது. ஆற்றின் இக்கரையையும், அக்கரையையும் இணைத்த கல்பாலம் தணிவானது. அந்தக் கல்பாலத்தின்கீழே அங்கங்கே இருந்த மதகுக் கண்கள் தவிரப் பாலத்தை மீறி அதற்கு மேலேயும் ஓரடித் தண்ணீர் ஓடியது. பாதி போய்க் கொண்டிருக்கும் போதே நீரோட்ட வேகம் அதிகரித்து விட்டால் சைக்கிள் ஆற்றோடு போய்விடும். நடந்து போனால் இருபுறமும் இருந்த கருங்கல் தூண்களைப் பற்றிப் பற்றி எப்படியாவது அக்கரையை அடைந்து விடலாம்.

இக்கரையிலிருந்த ஒரு பாழ் மண்டபத்து முகப்பில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் தந்தியுடன் ஆற்றைக் கடக்கத் தொடங்கினான், குமரகுரு. வேகமும், இழுப்பும் அதிகமாக இருந்த இடங்களில் கல்தூண்களைப் பிடித்துச் சமாளித்துச் சமாளித்து மெல்ல மெல்ல முன்னேறி அக்கரையை அடையப் பத்துமணி ஆகிவிட்டது. நல்ல கும்மிருட்டு.

பூங்குன்றம் அடங்கியிருந்தது. ஊர் நாய்கள் அத்தனையும் ஒன்றாக அவன் வரவை எதிர்த்துக் கோரஸ் பாடின. அவன் கவிஞரின் தோட்டத்தை அடைந்து மூங்கில் படலால் ஆன வாசல் கதவைத் திறந்தபோது அவர் விழித்திருந்தாலும் “யாரது!” என்று கவிஞரின் மனைவி குஞ்சம்மாள் தான் எதிர்கொண்டு வந்தார். “நான்தான் குமரகுரு தந்தி வந்திருக்கு…” என்று பதில் குரல் கொடுத்தான், அவன்.

“ஐயா தூங்கலையா! ஏன் இன்னும் முழிச்சிக்கிட்டிருக்காரு?”

“வேலையென்ன? அடைமழையும், ஈரமும் தாங்காமே தோட்டத்தில் இவர் வச்சிருந்த சண்பக மரக்கன்று அழுகிப் போச்சாம்! ரெண்டு நாளா அதே புலம்பல்தான்! அதுசரி, ஏதோ தந்தீன்னு சொன்னியே…?”

“ஆமாம்மா! ஐயாவுக்கு இந்த வருஷக் காவியபீடப்பரிசு அஞ்சு லட்சரூபாய் கிடைச்சிருக்கு…!”

“நிஜமாவா? எங்கே தந்தியைக் குடு…”

தந்தியைக் கிருக லட்சுமியான அந்த அம்மாளிடம் கொடுத்தான் குமரகுரு. அந்தம்மாள் ஓடிப்போய் அவரிடம் கூறினாள். அவரோ ஒரு சிறிதும் சலனமோ, பரபரப்போ அடையாமல் தலைக்குமேலே பொழியும் தங்கமழையைக் கவனிக்காமல் காலடியில் உடைந்துவிட்ட மண் பொம்மைக்காக அழும் குழந்தையைப்போல்,

“குமரகுரு! நான் அத்தனை சிரமப்பட்டும் பிரயோசனமில்லே! அந்த செண்பகக் கன்னு ஈரத்திலே அழுகிப் போச்சுப்பா…” என்று அழமாட்டாத குரலில் கலக்கத்தோடு ஆரம்பித்தார். அவர் மனைவி குறுக்கிட்டு அவரைக் கடிந்து கொண்டாள்.

“அஞ்சு லட்ச ரூபாய் அவார்டு வந்திருக்குன்னு இந்த அடைமழையிலே தந்தியோட ஓடிவந்திருக்கான். நீங்க என்னடான்னா…?”

“மழைக்காலம்னு தெரிஞ்சதும், அந்தச் செடியைத் தொட்டியிலே மாத்தி வீட்டு வராந்தாவிலே வைக்காமப்போன என் புத்தியைத்தான் செருப்பாலடிக்கணும்!”

அவர் அந்தச் செடி அழுகிப்போன இழப்பிலேயே இன்னும் மூழ்கியிருந்தார்.

உலகின் எந்த ஒரு மூலையிலாவது ஒரு சிறுதளிர் வாடுவதையோ, அழுகுவதையோகூடத் தாங்க முடியாத இந்த இங்கிதமான மெல்லிய கவி உள்ளத்தை எத்தனை பெரிய பரிசுகளும், லட்சங்களும் வந்தாலும் மூப்படையச் செய்ய முடியாதென்று தோன்றியது குமரகுருவுக்கு. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரிகளை நினைத்தான். அவர் முகத்தை அந்த மங்கலான அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தான். அந்த எழுபத்து மூன்று வயதுக் குழந்தையை அப்படியே கையெடுத்துக் கும்பிட்டான், குமரகுரு.

Share this post:

சிறுகதை: புயல் – அகிலன்

இளமைத் திமிரும் வயதின் முறுக்கும் கொண்ட ஆயிரம் ஆயிரம் பெண்களுக்குத் திடீரென்று ஒரே சமயத்தில் பேய் பிடித்துக் கொண்டு தலைசுற்றி ஆடத் தொடங்கினால் எப்படி இருக்கும்? பயங்கரமான ஒரு மந்திரவாதியின் இரக்கமற்ற சவுக்கடி தாங்காது அவர்கள் ரத்தம் கக்கி அலறினால் எப்படி இருக்கும்? – உண்மையிலேயே இயற்கைப் பெண்ணுக்குப் பேய்பிடித்து விட்டதா? கடவுள் என்னும் மந்திரவாதி அவளுடைய வெறி கண்டு சீற்றம்கொண்டு அவளை இப்படி அலறித்துடிக்க வைக்கிறானோ?

கடலோரமாக இருந்த அந்தக் கிராமம் புயலால் மதயானையின் கையிலகப்பட்ட மலர் மாலையாகிக் கொண்டிருந்தது. பெரிய பெரிய மரங்களெல்லாம் பம்பரம்போல் சுழன்று பூமியின் நெஞ்சுக்குள் ஓடியிருந்த ஆணிவேர்களைப் பிய்த்துக்கொண்டு விழுந்தன. கடல் அலைகள் திமிங்கலங்களாக வாயைப் பிளந்து கரையோரத்தில் நின்ற குடிசைகளை விழுங்கின. பேய்க் காற்றில் அகப்பட்டு வீட்டுக் கூரைகளான, தென்னங் கீற்றுகளும், தகரத்தகடுகளும், சீமை ஓடுகளும் பட்டபாடு…!

ஊருக்கு மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஒரு மாடி வீட்டுக்குள்ளிருந்து சன்னல்வழியாக மூன்று பேர் இந்தக் காட்சியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய மனிதர் ஒருவர், அவர் மனைவி, பையன். அந்தப் பெரிய மனிதர் சென்னையில் குதிரைப் பந்தயம் பார்ப்பதற்காக வாங்கிய தூரதிருஷ்டிக் கண்ணாடியால் கடலின் கொந்தளிப்பைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி தான் உடுத்தியிருந்த கொள்ளேகாலம் பட்டுப் புடவையால் உடம்பை இழுத்துப் போர்த்துக் கொண்டு பயத்தால் சுருண்டு கொள்ளும் முள்ளம்பன்றிபோல் நாற்காலியில் முடங்கிக் கிடந்தாள். பையன் திறந்த கண்ணை இமைக்காமல் சன்னலுக்கு வெளியே நிலைகுத்திய பார்வையில் இருந்தான்.

பையனின் மனம் அவனிடமில்லை. எதிரே குமுறிக் கொண்டிருந்த கிராமப் பகுதியையும், கடலையும், கார்மேகத்தையும், அடிவானத்தையும் அளந்துவிட்டு அதற்கப்பாலும் தாண்டிச் சென்றது. அடிக்கடி தன் கண்களில் தேங்கும் கண்ணீரை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டான். அவனுக்கு எதிரிலேயே நூற்றுக் கணக்கான குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் கடல் அலைகளால் பிய்த்துப் பிய்த்துச் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.

“பெரிய பட்டாளமே திரண்டு வராப்போல தெரியுது. எல்லாக் கூட்டமும் ஊருக்குள்ளேதான் ஓடிவருது” என்றார் பெரியவர்.

கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டிருந்த அவரைத் திரும்பிப் பார்த்தாள் மனைவி. அவள் ஒன்றும் பேசவில்லை.

“ஊருக்குள்ளே ஓடி வராமல் கடலுக்குள்ளேயா போய் விழுவாங்க?” என்றான் பையன்.

“ஒண்ணா ரெண்டா, ஆயிரம்பேர் வந்தா அத்தனை பேருக்கும் இடத்துக்கு எங்கே போறது?”

“மனமிருந்தால் இடமிருக்கும்.”

தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இந்தமாதிரிப் பேச்சு ஆரம்பமாவதைப் பிடிக்காதவள்போல் தாயார் குறுக்கிட்டாள். “ஊர்வம்பு நமக்கெதுக்கு? அடுப்பிலே சூடா உருளைக் கிழங்கு வருவல் போடச் சொல்லியிருக்கேன்; ஒரு நிமிஷத்தில் வந்திடும், பேசாமல் சாப்பிட்டுச் சும்மா இருந்தால் போதும்.”

‘ஊர்வம்பு’க்கு இவர்கள் போகாவிட்டாலும் ஊர்வம்பு இவர்களைத் தேடிக்கொண்டு வந்தது. கரையோரமாகக் குடியிருந்தவர்கள் அடித்துப் புடைத்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் ஊருக்குள் நுழையத் தலைப்பட்டார்கள். மாடி வீடுகள் அதிகமாயிருந்த இவர்களுடைய தெருவில் அந்தக் கூட்டம் புகுந்து நாலுபுறமும் சிதறிப்போய் ஒண்டிக் கொண்டது. இவர்களுடைய வீட்டு முகப்பிலும் சிலர் கூடினார்கள்.

பையன் அவசர அவசரமாகக் கீழே இறங்கிப்போனான். “எங்கேடா போகிறாய்-?” என்ற அவன் தாயாரின் கேள்வியை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கீழே இறங்கிச் சென்று வெளிவராந்தாவில் கூடியிருந்தவர்களை ஹாலுக்குள் நின்றபடியே சன்னல் வழியாகப் பார்த்தான். நேற்றுப் பிறந்த பச்சைக் குழந்தைகள் முதல், நாளைக்குச் சாகப்போகிற தொண்டு கிழங்கள்வரை அங்கே வந்திருந்தனர். ஒரு உடம்பாவது நனையாமல் இல்லை; ஒரு உடம்பாவது நடுங்காமல் இல்லை; குளிர் தாங்க முடியாமல் வெறும் கைகளை மடக்கித் தங்கள் நெஞ்சுகளை மறைத்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். பெண்களின் தேகத்தை துணி என்ற பெயருள்ள கந்தல்கள் மூடி மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தன. வெளிவராந்தாவில் இடம் நிறைந்ததால் வெளியே தரையில் பலர் தூண்களைப் பற்றிக் கொண்டு நின்றனர்.

பையன் கீழே இறங்கிய அதே வேகத்தில் திரும்பவும் மேலே வந்தான்.

“அப்பா!”

அப்பா அப்போதுதான் வெளியே அதிக அக்கறையுடன் பார்க்கலானார். பையன் அழைப்பதன் காரணத்தை அவர் ஊகித்துக் கொண்டதால் அவருக்கு அவன் பேச்சைக் கேட்பதில் இஷ்டம் இல்லை.

“அப்பா!”

அப்பா திரும்பி மூக்குக் கண்ணாடி வழியே நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பிள்ளையைப் பார்த்தார்.

“வராந்தாவில் நிற்க இடமில்லை. பாதிப்பேர் நடுத்தெருவில் மழையில் நனைகிறார்களப்பா! காற்று அவர்களை அடித்துக்கொண்டு போய்விடும் போலிருக்கிறது!”

“அதற்காக?”

“கொஞ்ச நேரத்துக்கு வெளிக்கதவைத் திறந்து உள்ளே விட்டால் அவர்களுக்குச் சௌகரியமாக இருக்கும். ஹாலில்தான் நிறைய இடம் இருக்கிறதே!”

தகப்பனார் கேலியாகச் சிரித்தார். தம்முடைய மனைவியைப் பார்த்து, “பிள்ளையாண்டானுடைய யோசனையைக் கேட்டியா? ஹால் மாத்திரம் வேண்டாம்; வீட்டையே அவுங்களுக்கு ஒழிச்சுக் கொடுத்திட்டு நம்ம நடுத்தெருவுக்குப் போகலாமே.”

“ஹால் சும்மாதானே அப்பா இருக்கிறது? நமக்கு இப்போது உபயோகமில்லாத இடத்தை நாலு நாழி அவர்களிடம் விட்டால் என்ன?”

“நீ சும்மா இருடா குழந்தை! உனக்கு ஒன்னுந் தெரியாது; நீ சிறுபிள்ளை” என்று தாயார் குறுக்கிட்டாள். பின்பு பையனின் முகம் வருத்தத்தால் சுருங்குவதைக் கண்டவுடன் அவளுக்கு அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.

“உனக்கு அவர்களோட குணந்தெரியாது. அத்தனையும் திருட்டுக் கழுதைகள்! ஹாலுக்குள்ளே அவர்களை விட்டு யாராலே காவல் காக்க முடியும்?”

பையனுக்குத் தாயாரின் சமாதானம் உண்மை என்று தோன்றவில்லை. “திருட்டுப் போறதுக்கு அந்த இடத்தில் சாமானே கிடையாதே! நான் வேணுமானால் அங்கேயே இருந்து அவர்கள் எதையும் தொடாமல் பார்த்துக் கொள்கிறேன்.”

தாயாருக்குத் தர்மசங்கடம். தகப்பனாருக்கு உள்ளுக்குள் கோபம், பையனோ விடுவதாக இல்லை.

“கண்டவனுவ எல்லாரையும் வீட்டுக்குள்ளே விடச் சொல்றியா? இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்கற பசங்க அத்தனை பேரும். நீ சும்மா இருக்கமாட்டே?” என்று தம் கோபத்தை வெளியிட்டார் அவர்.

“கோயிலுக்குள்ளே எல்லோரையும் விடுகிறபோது…” என இழுத்தான் பையன். கடவுளின் வீடான கோயிலைவிட மனிதனின் வீடான இந்த மாளிகை உயர்ந்ததா என்பது அவனுடைய எண்ணம்.

“கோயில் சர்க்கார் சொத்து; இது என்னோட பாட்டன் சம்பாதித்த சொத்து!”

பையன் கொஞ்ச நேரத்துக்கு வாயை மூடிக்கொண்டிருந்தான். தகப்பனார் வாயில் வந்தபடி சர்க்காரையும் சட்டத்தையும் திட்டத் தொடங்கினார். கோயிலுக்குள்ளே எல்லோரையும் விட்டதிலிருந்து கடவுள்களெல்லாம் புறப்பட்டுப்போய்க் கங்கையில் விழுந்து விட்டார்களாம். உழைப்பவர்களுக்குச் சாதகமாகச் சட்டம் வந்ததிலிருந்து ஏழை எளியவர்களுக்கெல்லாம் திமிர் பிடித்துவிட்டதாம். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று இல்லாமல் ஊர் முழுவதும் கெட்டுப் போய்விட்டதாம். ‘சர்க்கார் வந்து இப்போது இவர்களுக்கு இடம் கொடுக்கட்டுமே’ என்று சவால் விட்டார் பெரியவர்.

முகத்தைத் தொங்க விட்டுக்கொண்டு சும்மா இருப்பதைத் தவிர பையனுக்கு வேறு வழியில்லை. தகப்பனாரிடம் அகப்பட்டுக்கொண்டு அரசாங்கமே அந்தப் பாடுபடும்போது அவன் எம்மாத்திரம்? உலகத்து அரசியலைக் கரைத்துக் குடித்தவர்போலவும், பொருளாதாரத்தைப் பத்து வருஷம் ஊன்றிப் பயின்றவர் போலவும் சமூகப் பிரச்சினைகளையெல்லாம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தார்.

உருளைக்கிழங்கு வருவல் வந்தது. பையன் முதலில் அதைத் தொடவில்லை. மற்ற இருவரும் சாப்பிட்டார்கள். கடைசியில் தாயாரின் தொந்தரவுக்காகப் பையன் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

புயலின் வேகம் வரவர அதிகமாயிற்று. பெரியவர் தம்முடைய சொத்து சுதந்திரங்களைப் பற்றி நினைத்தார். நெல் வயல்கள் அவருக்கு நிறைய இருந்தன. அவைகளுக்கு அதிகமான நஷ்டம் இருக்காது. அடுத்தாற்போல் அவருடைய வாழைத் தோட்டம் ஞாபகத்திற்கு வந்தது.

“ஒரு வாழைகூட நிலைச்சு நிற்காது; ஆறு ஏக்கர் தோட்டமும் அப்படியே பாழாய்ப் போகும்?”

“நல்ல வேளை!”

தாயாரின் பேச்சு அந்த இடத்தில் அசம்பாவிதமாக இருந்ததால் பையன் தகப்பனாரைக் கவனித்தான்.

“காலணாகாசு பாக்கி இல்லாமல் குத்தகையை முன் பணமா வாங்கியாச்சு. கொஞ்சமும் அசந்து போயிருந்தால் இத்தனை நஷ்டத்தையும் நம் தலையிலே போட்டிருப்பான்.”

பையன் வெறுப்படைந்தான். மற்றவர்களுடைய துன்பத்தை மனிதர்கள் பகிர்ந்து கொள்ளுகிற விதமா இது?


அன்றைக்கு இரவு பத்து மணிக்குத்தான் புயல் ஓய்ந்தது. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் படுக்கை அறைக்கு வந்தார்கள். மின்சார விளக்குகள் எரியாததால் மண்எண்ணெய் விளக்குகளைக்கொண்டு காரியங்கள் நடந்தேறின. படுக்கையில் படுத்த பையனுக்குத் தூக்கம் வரவே இல்லை. கண்களை மூடிக்கொண்டு மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான்.

“ராஜா!” என்று அவன் தாயார் செல்லமாய்க் கூப்பிட்டாள்.

பையன் பதில் பேசவில்லை.

“தூங்கிவிட்டான்போல் இருக்கு. அவனைப் போய்த் தொந்தரவு பண்ணாதே. இப்படி வா” என்றார் பெரியவர்.

பிறகு இருவரும் இருளில் தங்கள் பையனைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். பையன் விழித்திருப்பது தெரியாததால், தாராளமாக அவர்களுடைய எண்ணங்கள் வெளிப்பட்டன.

“பையன் போற போக்கைப் பார்த்தியா? எல்லாம் உன்னாலே வந்தது. நாயைக் குளிப்பாட்டி நடுவிலே வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு குப்பை மேட்டுக்குத்தான் ஓடும்.”

சுரீர் என்று ஒரு கத்தி மார்புக்குள் நுழைந்து முதுகுப்புறமாய் வெளிவந்த மாதிரி இருந்தது பையனுக்கு.

“இந்த வயசில் இப்படித்தான் கிறுக்குத்தனமாய்ப் பேசுவான். நாலு வருஷம் போனா உங்களைவிடச் சமர்த்தா இருக்கப்போறான் பாருங்க! காலுக்கு ஒரு கட்டுப்போட்டு அவனுக்கின்னு ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாப் போகும்.”

“நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா இப்படியெல்லாம் பேசுமா?”

“நடக்காததை ஏன் இப்போ பேசுறீங்க? நம்ம ராஜா நல்ல புத்திசாலியா வருவான் பாருங்க. எல்லாம் வளர்க்கிற முறையிலே இருக்கு!”

“ராத்திரி சாப்பிடறப்போ அவன் என்ன சொன்னான் கேட்டியா? இலையிலே சாப்பாட்டை வைத்துக்கொண்டு இப்படிப் பேசினா எப்படி அந்தச் சோறு உடலில் ஒட்டும்?”

ராத்திரி இலைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு அவன் செய்த குற்றத்தை ராஜூ இப்போது எண்ணிப் பார்த்தான். இதே குற்றத்தை மத்தியானமே செய்யும்படி அவனுக்குத் தூண்டுதல் இருந்தது. ஆனால் தனக்குள்ளாகவே வெகுநேரம் போரிட்டுவிட்டு இரவில் சாப்பிடப் போகும்போது அதை ஆரம்பித்தான். சாப்பாட்டு விஷயத்தை சாப்பாட்டு வேளையில் ஆரம்பிக்காமல் வேறு எப்போது ஆரம்பிப்பது?

காலையில் பத்து மணிக்குமேல் வீட்டிற்குமுன் கூடியவர்கள் பொழுது போகும் வரையில் அங்கே நெருக்கிக்கொண்டு கிடந்தார்கள். அதற்குப் பிறகும், இரவு பத்து மணிக்குப் புயல் ஓய்ந்த பின்பும்கூட அவர்கள் எங்கும் போகவில்லை. எங்கே போவார்கள்? எங்கே போய் என்ன செய்ய முடியும்?

சாயங்காலமா வீட்டுக்கு வெளியே ஒரே அழுகை மயமாக இருந்தது; சகிக்க முடியாத அழுகை. சின்னஞ்சிறு குழந்தைகள் பாலுக்கழுதன; வயதுவந்த பிள்ளைகள் சோற்றுக்கழுதன; பெண்கள் காலையிலே கடலுக்குள்போன ஆண்களை நினைத்துக்கொண்டு அழுதார்கள். எல்லோருடைய எல்லாவிதமான அழுகைகளுக்கும் அடியில், அடி வயிற்றில், பசிப்புயல் பதுங்கிச் சீறியதால் அவர்களுடைய அழுகையின் வேகம் ஐம்பது மடங்காகப் பெருகியது.

ராஜுவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஹாலுக்குள் நின்றுமௌனமாக அழுதான். தான் இப்படி அழுவது அவனுக்குக் கோழைத்தனமாகத் தெரிந்தது. ‘திடீரென்று வாசற் கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களை உள்ளே அழைத்தால் என்ன? அரிசி மூட்டை இருக்குமிடத்தைக் காண்பித்து அதை அடுப்பில் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொன்னால் என்ன? ஒரு நாள் – ஒரு வேளைச் சோறு போட்டால், தங்க இடம் கொடுத்தால், இந்தப் பெரியகுடி முழுகியா போய்விடும்?’

ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. சாப்பாட்டிற்குத் தகப்பனாரோடு இலைக்கு முன் உட்கார்ந்தபோது, இலையிலிருந்த நாலுவகைக் கறியும் குழம்பும் அவன் கண்களை உறுத்தின. ஒவ்வொரு அரிசிச் சோறும் ஒரு ஏழைக் குழந்தையாக மாறி, ‘ஐயா, பசிக்குதே!’ என்று அவன் முன்பு அலறியது. அவன் அதைத் தொடவில்லை.

“ஐந்துபடி அரிசியைக் கஞ்சியாய்க் காய்ச்சி ஊற்றினால் நூறு பேருக்குப் பசி அடங்குமே!” என்று ஆரம்பித்தான்.

“என்ன சொல்றே?” என்றார் தகப்பனார்.

சற்று முன்பு சொன்னதையே அவன் திருப்பிச் சொன்னான்; “ஐந்துபடி அரிசிதான் செலவு; நூறு பேருடைய வயிறு குளிரும்.”

“அரிசிக்கு எங்கே போறது?”

அவனுக்கு இந்தக் கேள்வியின் பொருள் விளங்கவில்லை. அரிசிக்கு எங்கும் போகவேண்டாமே! மூட்டை மூட்டையாய் அங்கே அரிசி இருந்தது; களஞ்சியம் களஞ்சியமாய் அங்கே நெல் இருந்தது; எலியும் பெருச்சாளியுமே ஒரு நாளைக்கு ஒன்பதுபடி அரிசியைத் தின்பதாகச் சமையற்காரன் புகார் செய்து கொண்டிருந்தான்.

தகப்பனும் பிள்ளையும் அதற்கப்புறம் பேசிக்கொள்ளவில்லை. இலையில் போட்ட சோற்றை அப்படியே வைத்து விட்டுக் கையலம்பிக் கொண்டான் பையன். தாயார் அவனிடம் வந்து விடாப்பிடியாய்ச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சினாள். எவ்வளவோ சமாதானம் செய்தாள். ஆனால் ஐந்துபடி அரிசியை அதற்காக அவள் இழப்பதற்கு மாத்திரம் தயாரில்லை.

ராஜு அவர்களுடைய சொந்தப் பிள்ளைதான். சொந்தம் என்பதற்கு என்ன அர்த்தம்? வீடு வாசல், காணி கரை, ஆடு மாடு எல்லாம் எப்படி ஒருவருக்குச் சொந்தமாகின்றன? அந்த மாதிரி சொந்தம் இது. பத்தாயிரம் ரூபாய்ப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய அவர்களுடைய சொந்தப் பிள்ளை அவன். ஐந்தாறு குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பிறகு வளர்க்க முடியாமல் திண்டாடிய பெற்றோரிடமிருந்து அவனை ஸ்வீகாரம் செய்து கொண்டார்கள்.

படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ராஜுவுக்குத் தூக்கம் வரவில்லை. பெற்ற இடத்தின் பிடுங்கல்களும் வளர்க்கும் இடத்தின் வளர்ப்பமும் மாறி மாறி நினைவில் வந்தன. சோற்றுக்கும் துணிக்கும் அவன் அங்கே பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கு முற்றிலும் மாறாக இங்கே எல்லாம் ராஜபோகமாக இருந்தது. திருச்சினாப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டியதையும் வேண்டாத்தையும் ஸ்வீகாரப் பெற்றோர்கள் வாங்கி வாங்கிக் கொடுத்தார்கள். ஒன்றே ஒன்றைத் தவிர அவனுக்கு எல்லாம் கிடைத்தன; – உண்மையான அன்பு; ரத்தத்திலே ஊறிய அன்பு.

‘நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா இப்படியெல்லாம் பேசுமா?’ என்று அவன் தகப்பனார் தம் மனைவியைக் கேட்டபோது ‘நம்முடைய தகப்பனாராக இருந்தால் இப்படிக் கல்லாலடித்த சிலைபோல் மனம் இரங்காமல் இருப்பாரா?’ என்று எண்ணினான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததாக அவர் சொன்ன உபமானத்தையும் அவன் மறக்கவில்லை. எங்கேயாவது ஆயிரத்தில் ஒரு நாய்க்குட்டிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது. பாலும், பழமும், பட்டுமெத்தையும், கார் சவாரியும் அதற்கு அளித்துப் பணமுள்ளவர்கள் மகிழ்கிறார்கள். அதனால் எல்லா நாய்களிடமும் அவர்களுக்குப் பிரியம் என்று அர்த்தமா? தினந்தோறும் தோட்டிகளால் அடித்துக் கொல்லப்படும் குப்பைமேட்டு நாய்களின் கூட்டத்தை அவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

பாதி ராத்திரிக்குமேல் புயல் நன்றாக ஓய்ந்துவிட்டது. வானத்தில் மேகங்களைக் காணோம். ராஜு தான் திருச்சியிலிருந்து லீவில் திரும்பும்போது கொண்டுவந்த பதினைந்து ரூபாயை நினைத்துக் கொண்டான். அவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த பணம் அது. பத்திரிகைக்குப் பல கதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தான். பெரும்பாலும் எல்லாக் கதைகளும் திரும்பிவிட்டன. சமீபத்தில்தான் ஒரு கதையை மட்டும் பிரசுரித்து அதற்காக இந்தப் பணத்தை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். இந்தச் சமயத்தில் கிடைத்த பதினைந்து ரூபாய் அவனுக்குப் பதினையாயிரம்போல் தோன்றியது.

பொழுது விடிந்தவுடன் ராஜு ஊருக்குள்ளே கிளம்பினான். நல்ல மனிதர்கள் நாலு பேராவது இன்னும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள் என்ற உண்மை அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. ஈவு இரக்கம் உள்ளவர்கள் ஒன்றாய்க் கூடிக் கஞ்சி காய்ச்சி ஏழை எளியவர்களுக்கு ஊற்றிக் கொண்டிருந்தார்கள். உடலில் வலுவிருந்தவர்கள் மரம்மட்டைகளை வீடுகளின் முன்பிருந்து அகற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த அரசாங்க அதிகாரியும் மற்றவர்களைத் துணையாகக்கொண்டு தம்மாலான உதவிகளைச் செய்தார்.

கரையோரமாக ஒதுங்கியிருந்த ஒரு கட்டை மரத்தைச் சுற்றிலும் சிறிய கூட்டம் இருந்தது. ராஜு கூட்டத்தோடு கூட்டமாய் போய் நின்றான். அங்கே கண்ட காட்சி இருதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. மூன்று பெண்பிள்ளைகள் கட்டை மரத்தின் ஒரு மூலையைக் கட்டிக் கொண்டு ஓவென்று கதறி அழுதார்கள். வாயிலும், வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு புலம்பினார்கள். ராஜு நடந்ததைப் புரிந்து கொண்டான். நேற்றுக் காலையில் கட்டை மரத்திலேறிக் கடலுக்குள் போனவர்கள் திரும்பவில்லை. ஆனால் கட்டை மரம் மாத்திரம் திரும்பிவிட்டது. மூன்று பேர் போனார்களாம். அந்த மூன்று பேர்களுடைய உடல்களும் இப்போது எங்கே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றனவோ? எந்த நிலையில் கிடக்கின்றனவோ?

ஊர்ப்புறத்தில் புயல் விளைவித்திருந்த நாசத்தைப் பார்க்க பார்க்க ராஜுவுக்குத் தன் பையிலிருந்த பணம் பெரும் சுமையாகத் தெரிந்தது. அதைக் கொண்டு எப்படி உதவலாம் என்று எண்ணற்ற யோசனைகள் செய்தான். இந்தப் பணத்தால் எள்ளத்தனை உபகாரம்கூடச் செய்ய முடியாதே என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அநேகம் பேர் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்து விட்டு நிர்க்கதியாய் நிற்கும்போது தான் மட்டிலும் இந்தப் பதினைந்து ரூபாய்க்குச் சொந்தக்காரராக இருக்க விரும்பவில்லை.

ஊரை நன்றாகச் சுற்றிப் பார்ப்பதற்குள் மத்தியானமாகிவிட்டது. கடைத் தெருப்பக்கம் வந்தான். ஒரு துணிக்கடையில் நுழைந்து மூன்று கெட்டியான போர்வைகளைப் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான். வானத்துக்குக் கீழ் கூரையில்லாமல் உறங்குபவர்களுக்குப் போர்வைதான் சரியான கூரை; இடுப்பில் துணியில்லாதவர்களுக்குச் சுலபமாய்க் கிழியாத துணி; படுக்கப் பாயற்றவர்களுக்குச் சுருட்டி மடக்கக் கூடிய பாய்.

திரும்பவும் கட்டை மரத்துப் பக்கம் ராஜு வரும்போது அங்கே கூட்டம் எதுவும் இல்லை. கந்தல் கட்டிய குழந்தைகள் இரண்டு பரட்டைத் தலையோடு மணலில் சோர்ந்து படுத்திருந்தன. மூன்று பெண்களும் அப்படியே அந்தக் கட்டை மரத்தைத் தழுவிக் கொண்டு கட்டையைப்போல் நினைவிழந்து கிடந்தார்கள். கண்ணீர் மாத்திரம் பெருகிக் கொண்டே இருந்தது.

ராஜு அவர்களுக்கு அருகில் போனவுடன் அவர்கள் புரியாமல் விழித்தார்கள். போர்வையை ராஜு ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தான். இயந்திரம்போல் அவர்களது கரங்கள் நீண்டு அவற்றைப் பெற்றுக் கொண்டன.

ஒரே ஒருத்தி துயரம் தாங்காது ராஜுவைப் பார்த்துக் கத்தினாள்; “எங்களுக்குக் கோடித் துணியா ஐயா போடுறீங்க? நாங்க என்னய்யா செய்வோம்? எங்க பிள்ளை குட்டி எப்படி ஐயா பொளைக்கும்?”

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ராஜு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவனைச் சுற்றியிருப்பவர்களின் துன்பம் அவனைத் தொடர்ந்துகொண்டே வந்து பரிகசித்தது. ஊருக்கே பொதுவாகப் புயல், சேதம் விளைவித்தது உண்மைதான்; ஆனால் அடித்துக் கொண்டுபோன நூற்றுக் கணக்கான குடிசைகள் யாருடையவை? கடலுக்குள்ளேயும் சுவர்களின் அடியிலும் செத்து விழுந்த உடல்கள் யாருடையவை? இப்போது தங்களுடைய எல்லாவற்றையுமே இழந்து தவிப்பவர்கள் யார்?


மூன்று நான்கு நாள்கள் கழிந்தன. விடுமுறை தீர்ந்து விட்டதால் ராஜு திரும்பவும் திருச்சிக்குப் புறப்பட்டான். அவனுடைய சாமான்களை எடுத்துப் பெட்டிக்குள் வைப்பதில் அவனுக்கு உதவி செய்ய வந்தாள் அவன் தாயார். உடைகள், புத்தகங்கள் யாவும் எடுத்து அடுக்கி ஆயிற்று. படுக்கையைச் சுற்றிக் கட்டும்போது ஏதோ நினைவு வந்தவள்போல் பரக்கப் பரக்க உள்ளே போய் ஒரு புதுப் போர்வையை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தாள்.

பையன் அதை உற்றுப் பார்த்தான். நெற்றியில் கேள்விக் குறி எழுந்தது.

“எப்போ வாங்கின போர்வை அம்மா இது?”

“முந்தா நாள் வாங்கினேன். கொள்ளை மலிவு, சொன்னால் நீ நம்பமாட்டே; மூன்று போர்வை அஞ்சு ரூபாய்!”

பையனுக்குப் பகீரென்றது.

“கடற்கரைப்பக்கம் போறப்போ மடிப்புக் கலையாமல் புத்தம் புதுசாக வச்சிருந்தாளுக. ‘உங்களுக்கு எதுக்கடி இதெல்லாம்? பணம் குடுக்கிறேன் தாரிங்களா?’ன்னு கேட்டேன். பத்து ரூபாய் கேட்டா. அரை மணி நேரம் பேரம் பண்ணி அஞ்சு ரூபாய்க்கு வாங்கினேன். பதினைந்து ரூபாய்க்குக்கூட இந்த மூணு போர்வையையும் கடையிலே தரமாட்டான்.”

ஈரம் நிறைந்த இளம் நெஞ்சில் அப்போதுதான் பயங்கரமான கோரப் புயல் ஆரம்பமாகியது. அந்தப் புயலுக்கு முன்னே சில தினங்களுக்கு முன்பு வீசிய புயல் அற்பச் சூறாவளியைப் போன்றது.

Share this post:

சிறுகதை: தலைக்குனிவு – நாரண. துரைக்கண்ணன்

“சார், யாரோ ஒரு கிழவர் வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கணுமாம்” என்று தெரிவித்தான் விடுதி வேலையாள்.

உடன்மாணவர்கள் சிலருடன் ‘செஸ்’ (சதுரங்கம்) ஆடிக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு வேலையாள் வந்து கூறியது காதில் விழவில்லை. அவ்வளவுக்கு ஆட்டத்தில் அவன் கவனம் ஈடுபட்டிருந்தது.

வேலையாள் இரண்டாம் தடவை உரத்துக் கூறிய பிறகுதான், சிதம்பரம் தலைநிமிர்ந்து  நோக்கினான்.

“யார், என்னையா?”

“ஆமாம், சார்…”

“யார் தேடி வந்திருக்காங்கன்னு  சொன்னாய்?”

“யாரோ ஒரு கிழவர்..”

“கிழவரா?”

“ஏன்? எவளேனும் குமரி யொருத்தி, தேடி வந்திருப்பாளென்று நினைத்தாயா?” என்று நண்பனொருவன் கிண்டல் பண்ணினான்.

இந்தக் கேலிப் பேச்சு அவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கியதாயினும், வெளிக்குக் கோபங் கொண்டவன்போல் பாவனை செய்து “சட்! உளறாதே!” என்று கடிந்து கொண்டான். பின் அவன் வேலையாளைப் பார்த்து, “அந்தக் கிழவன் யார்? எங்கிருந்து வந்தான்? எதற்காக என்னைப் பார்க்க வேண்டுமாம்? இதையெல்லாம் விசாரிக்காமல், யாரோ பார்க்க வந்திருக்கிறார் என்று சொல்ல வந்து விட்டாயே? முட்டாள்! வழியே போகிறவன் வருகிறவன் எல்லாம் பார்க்க வேண்டுமென்றால், உடனே நாங்கள் பேட்டியளிக்க வேண்டும். இதைவிட எங்களுக்கு வேறு வேலையில்லை என்பது உன் எண்ணமா?…” என்று அதிகார தோரணையில் கேட்டுத் தடபுடல் பண்ணினான்.

வேலையாள் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் சிதம்பரம், “சரி, சரி; போய் அந்த ஆளை அழைத்து வா, நீ ஒன்றும் சமாதானம் சொல்ல வேண்டாம்” என்று சொன்னான்.

விடுதி வேலையாள், சிதம்பரத்தைப்போல் எத்தனையோ பேரைப் பார்த்து அனுபவப்பட்டவன். ஆதலால், அவன் சிதம்பரத்தின் தடபுடலுக்குச் சிறிதும் அஞ்சாமல், சாவதானமாகவே பதில் கூறத் தொடங்கினான். “இல்லை, சார்; நான் அதெல்லாம் கேட்காமையா, உங்களிடம் வந்து சொல்லுவேன்னு நினைச்சீங்க? கந்தசாமி உடையாருன்னா நீங்க தெரிஞ்சிக்குவீங்கன்னு சொன்னார். உங்க ஊரிலேயிருந்துதான் வாறாராம். முகஜாடையை பார்த்தா உங்க அப்பாவா யிருக்குமோன்னு…!”

சிதம்பரம் பதட்டத்துடன், “நிறுத்துடா, உன் அதிகப் பிரசங்கத்தை! போ; அந்தக் கிழவனை நானே போய்ப் பார்த்துக் கொள்கிறேன். இங்கே கூப்பிட்டு வரவேண்டாம்!” என்று உரைத்தவாறே, கையிலிருந்த கழற்காயைப் போட்டுவிட்டு எழுந்தான்.

“என்ன சிதம்பரம், ‘கேமை’ நடுவே விட்டுவிட்டுப் போகிறாய்?…”

“எவனோ ஊரிலிருந்து வந்திருக்கான்னு சொன்னதுமே ஓடுகிறாயே!”

“பியூன் சொன்னானே, இவன் அப்பாபோல இருக்கிறது என்று. அதாண்டா அலறியடித்துக்கொண்டு ஓடறான். ‘பாதர்’னா பாசம் இருக்காதாடா!”

இவ்விதமாக, சகாக்கள் சிதம்பரத்தைக் ‘கோட்டா’ பண்ணினர்.

சிதம்பரம் எரிச்சலோடு “எந்தப் ‘புரூட்’டோ, பார்த்து விட்டு வருகிறேன். பிரதர்! ஒரே நொடியில் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு விரைந்து வெளியேற முயன்றான்.

இதற்குள் வேலையாள் குறிப்பிட்ட கிழவர், “சிதம்பரம் சிதம்பரம்..! எங்கே இல்லையா, பிள்ளையாண்டான்?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே அடியெடுத்து வைத்தார். அவர் கையில் பிடித்து, ஊன்றி வந்த தடி, ‘தட், தட்’ எனச் சப்தம் செய்தது.

கிழவரைக் கண்டதுமே, சிதம்பரம் திகைத்து நின்றுவிட்டான். அவன் முகத்தில் குபீரென ரத்தம் ஏறியது. வந்த கிழவர் அவனுடைய தந்தைதான். வேலையாள் பெயரைச் சொன்னபோதே, சிதம்பரம் தன் தகப்பனார்தான் வந்திருக்கிறார் எனத் தெரிந்து கொண்டானாயினும், நேரில் பார்த்ததுமே எதிர்பாராததொன்றைக் கண்டதுபோல் அதிர்ச்சி கொண்டான். ஏனென்றால், அவன் இருக்கும் டாம்பீக நிலைக்குப் பட்டிக்காட்டு ஆளாகப் பஞ்சைக் கோலத்தில் தந்தை வந்திருப்பதை அவமானமாகக் கருதினான். அவன் அஞ்சியதுபோலவே, அவனுடைய சினேகிதர்கள், கிழவர் முழங்காலுக்கு மேல் வேட்டியும், உடம்பில் குருத்தாவும், தலையில் ஐதர் காலத்துப் பாகையும் உடுத்தியிருந்ததையும், காதுகளில் சிவப்புக்கல் கடுக்கனும், இடக்கை விரல் ஒன்றில் பஞ்ச லோகத்தாலாகிய மோதிரம் அணிந்திருந்ததையும் கண்டு நையாண்டி செய்து கொண்டிருந்தனர்.

இந்த அவமான உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஆத்திரத்தை எழுப்பியது. “யாரது?” என்று அதட்டலுடன், கிழவர் உள்ளே வருவதைத் தடுத்து நிறுத்துவதுபோல், எதிரே  போனான்.

“நான்தான் அப்பா!” என்று குழைவுடன் கூறிய கிழவர், “சிதம்பரமா, அது?” என்று கேட்டவாறு தடியை இடக்கையில் மாற்றிக்கொண்டு வலக்கையை நெற்றிமேல் வைத்து நிமிர்ந்து சிதம்பரத்தைப் பார்க்கலானார்.

“ஆமாம், இவர்தான். இவரைத்தானே நீங்க கேட்டீங்க, பெரியவரே?” என்று கதவண்டை நின்றிருந்த வேலையாள் கேட்டு, ஆளை இனங்காட்டினான்.

“நீ போய் உன் வேலையைப் பாருடா!” என்று சிதம்பரம் அவன் மீது சீறி விழுந்தான். ‘அறிமுகப்படுத்த வந்து விட்டான்’ என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டு, தகப்பனாரைப் பார்த்து, “சரி, சரி; இப்படி வா” என்று தன் அறைக்குள் கூப்பிட்டுக்கொண்டு போனான். மகனின் வெடுவெடுப்பைக் கவனியாத கந்தசாமி உடையார் அவன் பின்னே தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார்.

தன் அறையை அடைந்ததுமே சிதம்பரம் கதவைத் ‘தடா’லெனச் சாத்தினான். அவன் கோபம் உச்ச நிலையை அடைந்திருந்தது. கண்ணாலேயே எரித்து விடுபவன்போல் தகப்பனாரைப் பார்த்து, “என்ன சமாச்சாரம்? ஏன் இங்கே வந்தாய்?” என்று கேட்டான்.

இக்கேள்வி கந்தசாமி உடையாரை ஒருகணம் திகைக்க வைத்தது. பின் தன்னைச் சமாளித்துக்கொண்டு “கண்ணிலேயே இருந்தது; பார்க்கலாமென்று வந்தேன்” என்று தயக்கத்துடன் சொன்னார்.

“இப்போது பார்த்தாயிற்றோ, இல்லையோ?”

“ஏனப்பா, இப்படிப் பேசுகிறாய்?”

“பின்னே என்ன? இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று என்று எண்ணி ஊரிலிருந்து ஓடி வந்தாய்?”

“உன்னைப் பார்க்க வரக்கூடாதா?”

“என்னை என்ன பாக்கிறது என்கிறேன்? நான் கரைந்து போய் விட்டேனா, அப்படியே இருக்கிறேனா என்றா பார்க்க வந்தாய்?”

“என்ன சிதம்பரம், என்னென்னவோ பேசுகிறாயே?”

“நான் எத்தனை தரம் உனக்குச் சொல்லியிருக்கிறேன். என்னைப் பார்க்க இங்கே வராதே என்று. அதைக் கேட்காமல் வந்து என் மானத்தை வாங்குகிறாயே!”

“நான் உன்னைப் பார்க்க வருவது உனக்கு அவமானமாகவா இருக்கிறது? அப்படியானால் இனிமேல் நான் வரவில்லை அப்பா!”

“நீ அடிக்கடி வந்து பார்த்தால்தான், பிள்ளைமேலே உருகிப் போகிறாய் என்று மற்றவர்களுக்குத் தெரியும் போலே இருக்கு…”

“மனசு கேட்காமல் பிள்ளையைப் பார்க்கிறது கூடவா குற்றம்? அட கடவுளே!” என்று கிழவர் தலையில் அடித்துக்கொண்டார். கைத்தடி நழுவி விழுந்தது. அவர் சிரமத்துடன் அதைக் குனிந்து எடுக்கலானார். இந்நிலை சிதம்பரத்தின் கோபத்தை ஓரளவு தணிக்கத்தான் செய்தது. “நான்தான் அடிக்கடி கடிதமெழுதுகிறேனே! லீவு விடுகிற போதெல்லாம் ஊருக்கு வருகிறேன். அப்படியிருக்க…” என்று மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

“எல்லா லீவுக்கும் எங்கே அப்பா வந்தாய்?.. ஊம்… அதெல்லாம் சொன்னால் கூட உனக்குக் கோபம் வரும். தசரா, பொங்கல் பண்டிகைக்குக்கூட நீ ஊருக்கு வராமற் போகவேதான், என்னமோ ஏதோ என்று எங்கள் மனது அடித்துக் கொண்டது… அவள் வேறே நச்சரித்துக் கொண்டிருந்தாள், ‘போய்ப் பார்த்து விட்டுவா! போய்ப் பார்த்து விட்டுவா!’ என்று. அத்துடன் உனக்குப் பெண் கொடுக்க நம் உறவின் முறையார் தூது விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் சொல்லி விட்டுப் போகலாம் என்று எண்ணி வந்தேன்…”

சிதம்பரத்துக்கு மீண்டும் கோபமுண்டாயிற்று. “எனக்குத் தெரியுமே! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இப்போது யாரையோ தூது விட்டுப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கு போலிருக்கு. அதற்கு என்னைச் சரிக்கட்டத்தானே வந்தாய்? இதை முதலில் சொல்லாமல், ‘கண்ணிலேயே இருந்தது; மனசு அடித்துக் கொண்டது; அம்மா பார்த்து விட்டு வரச்சொன்னாள்’ என்றெல்லாம் ஏன் கதை அளந்தாய் என்று கேட்கிறேன். என் கலியாணத்தைப் பற்றிப் பேச்சு எடுக்காதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்? கலியாணம் செய்து கொள்ளப் போகிறவன் நானா, நீங்களா? எப்போது பண்ணிக் கொள்கிறது என்று எனக்குத் தெரியும். பெண் பார்க்கிற துன்பம் கூட உங்களுக்கு வேண்டாம்… நான் சொல்லுகிறது தெரிகிறதா…? ஆமாம்…” என்று படபடவென்று பொரிந்து தள்ளினான்.

கிழவர் அப்படியே அசந்து நின்று விட்டார்.

“சரி, இவ்வளவுதானே சேதி? இனி நீ போய் விட்டு வரலாம். எனக்கு ரொம்ப வேலை இருக்கிறது…” என்று அவரை வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் நோக்கத்தோடு அவசரத்தைக் காட்டிப் பேசினான்.

“சரி, அப்பா; நான் போய் வருகிறேன். எனக்காக நீ ஒன்றும் கஷ்டப்படாதே, அப்பா! உன் ஜோலியைப் போய்ப் பாரு” என்று தழுதழுத்த குரலில் சொல்லிக்கொண்டே கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடக்கலானார்.

தகப்பனார் வருத்தத்துடன் போவதைப் பற்றி, சிதம்பரம் லட்சியம் செய்யவில்லை. அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, சினேகிதர்கள் இருக்கும் அறைக்கு விரைந்து சென்றான்.

கந்தசாமி உடையார் தம்மைக் கடந்து முன்னே போகும் மகனை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே நடக்கலானார்.

சிதம்பரம் கதவைத் திறந்து கொண்டு வந்த ஓசையைக் கேட்டு, ‘செஸ்’ ஆடிக் கொண்டிருந்த சினேகிதர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.

“சிதம்பரம் வந்து விட்டான், ஜார்ஜ்! ஆட்டத்தைப் புதுசாகத் தொடங்குவோம், என்ன?” என்றான் ஒருவன்.

“ஆமாம்; வந்தது யாருடா? உங்க அப்பாவா? ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தியே! என்னவாம் சமாச்சாரம்?” என்று கேட்டான் சுதர்சனம்.

“ஒன்றுமில்லை, எங்க அப்பா கழனிக்கு ஒரு ‘பம்பிங் மெஷீன்’ வாங்கியனுப்பச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டிருக்கிறார்” என்று சிறிதும் தயங்காமல், சமயோசிதமாகப் பதிலளித்தான்.

“அப்படியானால், வந்த ஆள் உங்க அப்பா இல்லையா?”

“என்னடா, மடையன் மாதிரி உளறுகிறாய்? எங்கள் பண்ணையாளைப் போய் அப்பா என்கிறாயே!”

அப்போதுதான் அந்த அறையைக் கடந்து போய்க் கொண்டிருந்த கந்தசாமி உடையாரின் காதில் சிதம்பரம் சொல்லிய இச்சொல் விழுந்தது. அவர் அப்படியே அயர்ந்துபோய் நின்றுவிட்டார். தம்மைச் சமாளித்துக் கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. “நான் பண்ணையாளாமே? – ஆமாம்; அவன் இருக்கிற ‘டீக்’குக்கு என்னை அவன் அப்பா என்று சொல்லிக்கொள்ள வெட்கமாகத்தான் இருக்கும்?” என்று அவர் தாமாகவே சொல்லிக்கொண்டு நடக்கலானார்.

கந்தசாமி உடையாருக்குக் கொஞ்சத்தில் மனம் ஆறுதலடையவில்லை. மகனைப் பார்க்கப்போன இடத்தில் ஏற்பட்ட அனுபவத்தையும் அவமானத்தையும் அவர் வழிநெடுக எண்ணிக்கொண்டே போனார். ‘அந்தக் கல்லூரியில் படிக்கிறவர்கள் எல்லாம் சீமான் வீட்டுப் பிள்ளைகள்தானா? என்னைப்போல ஏழைகளின் பிள்ளைகள் ஒருவர்கூடப் படிக்கவில்லையா? அவர்களைப் பார்க்க பெற்றோர் வருவதில்லையா? அப்படி வருபவர்கள் எல்லாம் பகட்டும் படாடோபமுமாகவா இருப்பார்கள்?’ இக்கேள்விகள் அவருடைய நொந்த உள்ளத்திலிருந்து எழலாயின.

‘என்ன காலம் இது? மேனாட்டுப் படிப்பும் நாகரிகமும், பெற்ற தகப்பனைப் பண்ணையாள் என்று சொல்லச் செய்கின்றன. இப்படி என்னைச் சொல்வதற்குத்தானா இவனை இவ்வளவு தொல்லைப்பட்டுப் படிக்க வைத்து வருகிறேன்? எப்படி இருந்தவன் எப்படி ஆய்விட்டான்! காலேஜ் படிப்பும் பட்டண வாசமும் ஆளை அடியோடு மாற்றி விட்டனவே! பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்று எவ்வளவு ஆவலாக வந்தேன்? பரிவோடு பார்க்க வந்த தகப்பனை, ‘வா, அப்பா!’ என்று அன்புடன் வரவேற்று உபசரித்தானா? ‘ஊரில் அம்மா எல்லாம் சௌக்கியமா?’ என்று ஆதுரத்துடன் விசாரித்தானா? ஊகும்; – இதெல்லாம் கேட்காமல் போனாலும் பரவாயில்லை. ‘ஏன் இங்கே வந்தாய்?’ என்றல்லவா கேட்டான்? இப்படிக் கேட்க அவனுக்கு மனம் எப்படி வந்தது? பெற்று வளர்த்த தகப்பன் வந்து பார்க்கிறதை அவமானம் எனக் கருதுகிறவன் – தந்தையைச் சிநேகிதர்களுக்கு ‘எங்கள் பண்ணையாள்’ எனச் சொன்னவன் – ‘ஏன் வந்தாய்?’ என்று மட்டுந்தானா கேட்பான்? அதற்கு மேலும் கேட்பான். ஊம்; இவனை ஆளாக்க – படிக்க வைத்துப் பெரியவனாக்க – என்ன பாடுபட்டேன்? – எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன்…?

இவ்விதம் எண்ணியபோதே அவர் கண்களில் நீர் நிரம்பி வழிந்தோடியது.

கந்தசாமி உடையார் சிதம்பரத்தை வளர்க்கச் சிரமப்பட்டதைப் போல, பாடுபட்டவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். அவருக்குச் சிதம்பரம் மட்டும் பிள்ளையாய் இருந்திருந்தால், ‘ஒரே பிள்ளை; அதனால்தான் அருமையாக வளர்க்கிறார்’ என்று சொல்லலாம். அவருக்கு அவன் மட்டுமல்ல; மற்றும் இரு ஆண்களும், நான்கு பெண்களும் இருக்கின்றனர். அப்படியிருந்தும், அவர் அவன் விஷயத்தில் மட்டும் எல்லா வகையிலும் விசேட சிரத்தை காட்டி வரலானார்!

கந்தசாமி உடையார் ஏழையானாலும் கல்விச் செல்வம் வாய்ந்தவர். நல்ல தமிழ் இலக்கியப் புலமை அவருக்கு இருந்தது. அதனால் அவர் பண்ணுருட்டி மக்களால் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். ஊர் நாட்டாண்மைக்காரர் உட்பட எல்லோரும் உடையாரிடம் மரியாதை காட்டி வந்தனர். அவருடைய நற்பண்பும் நல்லொழுக்கமும் பிறரை வெகுவாகக் கவர்ந்தன.

கந்தசாமி உடையார் மண்பாண்டங்கள், பொம்மைகள் செய்து விற்று, அதன் வருவாயைக்கொண்டு குடும்பத்தையும் கௌரவமாக நடத்தித் தம் பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து வந்தார். அவர் சம்பாதனையில் பெரும்பகுதி சிதம்பரத்தின் படிப்புக்குத்தான் செலவாயிற்று. அவனை ஆங்கிலக் கல்வியில் உயர்தரப் பட்டம் பெறச்செய்து, சர்க்கார் உத்தியோகத்தில் தகுந்தபடி அமர்த்தவேண்டுமென்பது அவருக்கு ஆசை. அதனாலேயே, தள்ளாமையினால், முன்போல அதிகமாகச் சம்பாதிக்க முடியாமலிருந்தும், நகை நட்டுகளை விற்றும், நில புலங்களை அடமானம் வைத்தும், சிதம்பரத்தைச் சென்னைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

இவ்வளவு ஆசாபாசத்துடன் சிரமப்பட்டுப் படிக்கவைத்த பிள்ளை தம்மைத் தகப்பனென்று சொல்ல வெட்கப்படுகிறானென்றால் – ‘ஏன் வந்து மானத்தை வாங்குகிறாய்?’ என்று கேட்கிறானென்றால், – அதை அவரால் எப்படிப் பொறுக்க முடியும்? இந்தப் பட்டிக்காட்டுத் தந்தையில்லாமல், இவன் எப்படிப் பட்டணத்திலே பட்டப் படிப்புப் படிக்க வந்து விட்டான்? இவன் சொன்னபடி பண்ணையாள் போன்றிருக்கும் என்னுடைய பணத்தைக் கொண்டுதானே சீமான்களின் பிள்ளைகளோடு சீமானாய்  உலவி வருகிறான். நான் ஒருமாதம் பணம் அனுப்பா விட்டால் இவன் ஜம்பமும் டாம்பீகமும் என்னாகும்? ஊம்; இருக்கட்டுமே…” என்று அவர் தமக்குள் கறுவிக் கொண்டார்.


வேங்கடாசல உடையார் பங்களாவில் நடந்த திருமண வைபவம் புதுச்சேரி முழுவதுமே கலகலப்பை உண்டு பண்ணியது. பொதுவாக, கலியாணச் சிறப்பைப் பற்றியும், அதன் ஒவ்வொரு அம்சத்தைக் குறித்தும் அதில் கலந்து கொண்டவர்களும், அதற்குப் போகாமலே கேள்விப்பட்டவர்களும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

வேங்கடாசல உடையார் தமது ஒரே மகளுக்கு அவ்வளவு சிறப்பாக விவாகஞ் செய்வித்துப் பெருமகிழ்ச்சி கொண்டார். அவர்கள் சாதியிலேயே முதன் முதலாகப் பாடசாலைகளின் மேற்பார்வையாளராக அரசாங்கப் பணியில் அமர்ந்திருக்கும் சிதம்பரம் அல்லவா இவர் மகளுக்குக் கணவனாக வாய்த்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட உயர்ந்த சம்பந்தம் எளிதில் கிடைக்கக் கூடியதா? அந்தச் சிறப்பைக் கொண்டாட எவ்வளவு செலவு செய்தால் என்ன? இந்தப் பெருமித எண்ணத்தோடுதான் வேங்கடாசல உடையார் தம் பெண் திருமணத்திற்குத் தாராளமாகச் செலவு செய்து பலரையும் வியப்படைய வைத்தார். அந்த ஊரில் செல்வமும் செல்வாக்கும் உடைய ஒரு சிலரில் வேங்கடாசல உடையார் குறிப்பிடத்தக்கவர்; ஆதலால், இவர் வீட்டுக் கலியாணத்துக்குப் புதுச்சேரி கவர்னர் உட்பட அரசாங்க அதிகாரிகளும் பிரமுகர்களும் வந்திருந்ததில் ஆச்சரியமில்லை. கந்தசாமி உடையார், சிதம்பரம் இருவரின் சார்பிலும் முறையே அநேக பெரிய மனிதர்களும், சிநேகிதர்களும் வந்திருந்தனர்.

வரவேற்பு இசையரங்க நிகழ்ச்சிக்கென்றே மிகப் பெரியதாகப் போடப்பட்ட தனிப் பந்தலில் அன்று மாலை இசைவாணி சண்முகவடிவினுடைய இனிய இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. மணமகனும், மணமகளும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மலர் விமான மொன்றில் உட்காரவைக்கப் பட்டிருந்தனர். அவர்களை முன்னிலையாகக் கொண்டுதான் பாடகி கச்சேரி செய்து கொண்டிருந்தாள்.

சிதம்பரம் மகிழ்ச்சியே உருவாக மணமகள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். வாழ்க்கையில் அடைய வேண்டிய சகல சம்பத்தையும் தான் அடைந்து விட்டதாக அவன் உள்ளம் கொண்டிருந்த பூரிப்பு அவனுடைய முகத்தில் நன்கு காணப்பட்டது. அவனுக்கு உயிர் நண்பர்களும், உத்தியோகத்தில் நெருங்கிய தொடர்புடையவர்களும், வரவேற்புக்கு வரும் போதும் போகும்போதும் அவனை அணுகித் தங்களின் மகிழ்ச்சியையும் மரியாதையையும் தெரிவித்துக் கைகுலுக்கி விட்டுப் போய்க் கொண்டிருந்தனர்.

கச்சேரி அருமையாக நடந்து கொண்டிருந்தது. விருந்தினர்கள் பாடகி பாடும் இன்னிசையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். விருந்தினர்களுக்கு மின்சார விசிறிகள் வாயிலாக வரும் காற்றுப் போதாதென்று, பணியாட்கள் வேறு பெரிய பெரிய கைவிசிறிகளைக்கொண்டு விசிறி, காற்று வரச் செய்து கொண்டிருந்தனர்.

இச்சமயத்தில் விருந்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்த வேங்கடாசல உடையார், தற்செயலாக எதையோ கவனித்து விட்டுத் தாம் நின்றிருந்த இடத்தை விட்டுப் பதறியோடி வந்தவராய், “அண்ணா, என்ன இது? என்ன வேலை செய்கிறீர்கள்…?” என்று கேட்டவாறு மணமக்கள் இருக்கும் பக்கமாக நின்று பெரிய விசிறியொன்றைப் பிடித்து விசிறிக் கொண்டிருந்த கிழவர் ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டார். அப்போதுதான் எல்லோரும் அந்த மனிதரைப் பார்த்தனர். சிதம்பரமும் அச்சமயத்தில்தான் நோக்கினான். உடனே அவன் முகம் கறுத்து விட்டது. அவ்விடத்தில் விசிறியெடுத்து விசிறிக் கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை. அவனுடைய தந்தையேதான்! அவர் முழங்காலுக்கு மேல் வேட்டியும் தலையில் முண்டாசும் கட்டிக்கொண்டிருந்தார். உடம்பில் சட்டை எதுவுமில்லை. மற்ற வேலையாட்களாயினும் இடத்துக்குத் தகுந்தபடி நல்ல உடை யுடுத்திக்கொண்டிருந்தனர். அதுகூட இல்லாமல் குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை உழவனைப்போன்ற தோற்றத்தில் அவர் காணப்பட்டார். இக்கோலத்தைக் கண்டு எல்லோருமே திகைப்புற்றனர்.

வேங்கடாசல உடையாரைப்போலவே, மற்றும் பலர் அவரை அணுகி, அவர் கையிலுள்ள விசிறியைப் பிடுங்கி, அவரை விசிறவொட்டாமல் தடுக்க முயன்றனர். இதற்குள் அவருடைய சின்னப் பிள்ளைகள் இருவரும் தகவலறிந்து ஓடிவந்தனர்.

மூத்தவன், “அப்பா, என்ன இது! சட்டையையெல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு வந்து, இப்படி நிற்கிறீர்களே! உங்களை யார் விசிறச் சொன்னது?” என்று கேட்டான்.

“இதுவரை எங்கே இருந்தீர்கள்? சாயங்காலத்திலிருந்து உங்களை எங்கெங்கெல்லாம் தேடுகிறோம்?” என்று இளையவன் வினவினான்.

கந்தசாமி உடையார் கச்சேரி தொடங்குமுன்பே, பணியாட்களோடு பணியாளாய்க் கலந்துகொண்டார் என்பது மற்றவர்களுக்குத் தெரியாது.

இளையவன் அவருடைய சட்டை, மேலாடை முதலியவற்றை எடுத்துவர ஓடினான்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தும் கந்தசாமி உடையார் சிறிதும் சலனமுறவில்லை. அவர் மிக அமைதியாக, “ஏன்? நான் என்ன செய்கிறேன்? நான் செய்ய வேண்டிய பணியையன்றோ செய்கிறேன்! இதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்?” என்று வினவினார்!

வேங்கடாசல உடையார், “நீங்கள் செய்யக் கூடிய பணியா இது, அண்ணா! சம்பந்தியாக உள்ள நீங்கள்…” என்று ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டே போனார்.

அவரைத் தொடர்ந்தே மற்றுஞ் சிலர் “ஆமாம் அண்ணா! நீங்கள் இப்படிச் செய்யலாமா?….” என்று கூறி அங்கலாய்த்தனர்.

“நான் சம்பந்தியா? யார் சொன்னது…? நான் மாப்பிள்ளை வீட்டுப் பண்ணையாள் ஐயா! இது உங்களுக்குத் தெரியாதா? இதுவரை இதை யாரும் உங்களுக்குச் சொல்லவில்லையா?….” என்று கூறிவிட்டு, கந்தசாமி உடையார் சிதம்பரத்தைக் குறும்பாக நோக்கி, “என்ன மாப்பிள்ளை, நீங்கள்தான் இவர்களுக்குச் சொல்லுங்கள், நான்…” என்று கூறி, மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

இதைக் கேட்டவுடனே பக்கத்திலிருந்த இரண்டாவது மகனுக்கு உண்மை புரிந்து விட்டது. கந்தசாமி உடையார் முன்பு சிதம்பரம், சக மாணவர்களிடம் தம்மைப் ‘பண்ணையா’ளென்று சொன்ன சேதியைச் சொல்லி வருத்தப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. அண்ணன் செய்த தவற்றைத் தக்க சமயத்தில் சுட்டி இடித்துக்காட்டுகிறார் என்று உணர்ந்த அவன், நிலைமை இன்னும் மோசமாய் விடக்கூடாதென்று எண்ணி, “என்ன அப்பாவுக்கு இருந்தாற்போலிருந்து புத்தி பேதலித்து விட்டது!” என்று சமயோசிதமாகக் கூறிக்கொண்டே, “வா அப்பா!” என்று கூப்பிட்டவாறு அவரைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போய் விட்டான்.

சிதம்பரத்தின் நிலைமையோ  பரிதபிக்கத் தக்கதாயிருந்தது. தந்தை கூறிய ஒவ்வொரு சொல்லும் கூரிய வேல்போல் அவனுள்ளத்தை ஊடுருவிச் சென்றது. அவர், ‘நான் மாப்பிள்ளை வீட்டின் பண்ணையாள்’ என்று சொன்னபோது, ‘பண்ணையாள்’ என்பதை அழுத்திச் சொன்னதுமே, நாலு வருடங்களுக்கு முன், தான் தன் உடன்மாணவர்களிடம், ‘எங்கள் பண்ணையாள்’ என்று தன்னைப் பார்க்க வந்த தகப்பனை அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வந்தது. “பெற்ற தகப்பனுக்கு எவ்வளவு பெரிய அபசாரம் செய்து விட்டோம். அவர் உள்ளத்தை எவ்வளவு புண்படுத்தி விட்டோம்” என்பதை அவன் அந்தச் சமயத்தில்தான் உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவனையறியாமல் அவன் கண்களில் நீர் ததும்பியது. காரணம் புரியாத மணமகள், கணவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். அவளுடைய பார்வையிலிருந்து தப்ப, அவன் தலையைக் குனிந்துகொண்டான். குனிந்த தலை நிமிரவேயில்லை!

Share this post:

சிறுகதை: செவ்வாய் தோஷம் – புதுமைப்பித்தன்

முருக்கம்பட்டிக்கு லோகல்பண்டு ஆஸ்பத்திரிதான் உண்டு. அதாவது சின்னக் காய்ச்சல், தலைவலி, கைகால் உளைச்சல், வெட்டுக் காயம் அல்லது வேனல் கட்டி – இவைகளை மட்டிலுமே குணப்படுத்துவதற்கான வசதி அமைந்தது. கிராமவாசிகள் திடமான தேகமுள்ளவர்களானதால்  பட்டணத்துக் காரர்களைப்போல் நாகரிகமான வியாதிகளைப் பெறுவதில்லை. கொய்னா மாத்திரம் மத்திய சர்க்காரின் மலேரியா எதிர்ப்பு முயற்சியால், கிராமவாசிகளிடையே இலவச விநியோகத்திற்காக வேண்டிய மட்டிலும் உண்டு.

டாக்டர் வீரபத்திர பிள்ளை எல்.எம்.பி. அந்தப் பிரதேசத்தின் தேக சௌகர்யத்திற்குப் பொறுப்பாளி யல்லரானாலும், கிராமவாசிகள் வருவித்துக் கொள்ளக் கூடிய வியாதிகளைத் தடுக்க முயற்சி செய்யும் பாத்தியதை அவருக்கு உண்டு. ‘கைராசிக்காரர்’ என்று அக்கிராமவாசிகளின் பட்டம் அவருடைய வைத்திய கௌரவத்திற்குப் பின்னொளியாக இருந்து வந்தது.

அவருடைய வைத்தியம், தெரிந்த வியாதிகளுக்கு ராஜ பாதை; அவருக்குச் சிறிது சந்தேகம் தோன்றி  விட்டால் போதும், சாதாரணமானதானாலும், வியாதியஸ்தனை, நூறு சதவிகிதம் பயமூட்டையுடன், வண்டி கட்டி, ஜில்லா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவார்.

கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு அப்படியில்லை. அவருடைய ஞானம் இரண்டு களஞ்சியங்களில் இருந்தது. ஒன்று யூனியன் ஜாக் கொடி போட்ட – டாக்டர் பிள்ளையவர்களின் கைக்குள் அடங்கிய சீமை சிகிச்சை; இன்னொன்று, எண்ணற்ற ஓலைச்  சுவடிகளிலிருந்து திரட்டப்பட்ட மூலிகை சாஸ்திரம். வியாதியஸ்தனைக் குணப்படுத்துவதைவிடக் குறிப்பிட்ட முறையின் தன்மையைப் பரிசீலனை செய்வதில் நெஞ்சழுத்தமுடையவர். ஆயுள் வேத சாஸ்திரத்தில் ஏற்பட்ட அபாரப் பிரேமையின் விளைவே, இவருடைய இந்த நெஞ்சழுத்தத்திற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

முருக்கம்பட்டி ஆஸ்பத்திரியில், பெரும்பான்மையான நாள்களில் குழந்தைகளுக்குப் பேதி மருந்து, அல்லது மலச்சிக்கலால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு மருந்து, இவை தயாரிப்பதிலேயே காலம் கழிந்துவிடும்.

அதனால், பிணமறுக்கும் கிடங்கின் பூட்டு, துருப்பிடித்துச் சிக்கிக் கிடப்பதில் ஆச்சரியமில்லை.

கிடங்கு ஆஸ்பத்திரிக் காம்பவுண்டின் கீழ்க்கோடி மூலையில் இருக்கிறது. அன்று ராத்திரிப் பத்து மணி சுமாருக்கு ஆஸ்பத்திரித் தோட்டியான ராக்கன் வந்து  எசமானிடம், கோயிலூரிலிருந்து பிணம் ஒன்று வந்திருப்பதாகச் செய்தி அறிவித்து, சாவியை வாங்கிக்கொண்டு போய்த் திறக்கக் கஷ்டப்பட்டான். முடியாமற் போகவே, பூட்டைச் சிக்கெடுக்க டாக்டர் அம்மாளிடம் எண்ணெய் வேறு வாங்கிச் செல்ல வேண்டியதாக இருந்தது.

கோயிலூர் கி.மு., அந்த வட்டாரத்தில் ‘ரவுண்டு வரும்’ ஏட்டு கந்தசாமி பிள்ளை எல்லோரும் அந்தக் கேஸை எடுத்து வந்திருந்தார்கள். கேஸ் கோயிலூர்ப் பள்ளனுடைய பிரேதம். அவர்கள் சொன்ன விபரந்தான் விசித்திரமாக இருந்தது; அது வைத்திய சாஸ்திரத்திற்கு அதீதமானது.

ரத்தக் காட்டேரி அடித்துவிட்டதால் அந்தப் பள்ளன் மாண்டு போனதாகக் கூறப்படுகிறது.

இ.பி.கோவில் பேயடிப்பதற்குத் தனிப் பிரிவு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டிருந்தும், ஏட்டு  பிள்ளைகூட வெட்டியான் கூற்றை நம்பி ஆமோதிக்கிறார்.

டாக்டர் வீரபத்திர பிள்ளைக்குப் பிரேத பரிசோதனையெல்லாம், வைத்தியக் கலாசாலையில் முதல் இரண்டு வருஷங்களில் கற்றுக் கொள்வதற்காக அநாதைப் பிரேதங்களை அறுத்துப் பார்த்ததோடு முடிவடைந்துவிட்டது. பட்டிக்குள் சரணாகதி யடைந்த பிறகு அவருக்கு இதுவரை பிரேத பரிசோதனை உத்தியோகம் ஏற்பட்டது கிடையாது. அப்படிப்பட்டவருக்கு இம்மாதிரி விதிவிலக்கான ஒரு கேஸ் சம்பவித்தது ஊர்க்காரர்கள் பொதுப் பகையில் செய்த குற்றத்தை மறைப்பதற்குச் செய்யப்படும் ஒரு முட்டாள்தனமான முயற்சியோ, என்று நினைத்தார்.

கம்பௌண்டர் நாயுடுவுக்கு ஆள் அனுப்பிவிட்டு “யாருடா அது?” என்ற அதட்டலுடன், பாதக்குறடு சரல்கற்களில் கிரீச்சிட, அவர் பிரேதக் கிடங்குக்குச் சென்றார்.

இவரைக் கண்டதும் ஏட்டு கந்தசாமிபிள்ளை போலீஸ் ஸலாம் செய்து தமது கேஸ் புஸ்தகத்தை நீட்டிக் கையெழுத்து வாங்கிக்கொண்டு, விலகி நின்றார். “என்ன கந்தசாமிபிள்ளை, பய கதை விடரானே!” என்று சிரித்தார் டாக்டர்.

“பேய் பிசாசு இல்லை என்று சொல்ல முடியுமா?” என்றார் கந்தசாமி பிள்ளை.

“பயந்தான் பேய். ரிப்போர்ட்லெ பேயடிச்சதுன்னு எழுதி வையாதியும், சிரிச்சுத் துப்பப்போரான்!” என்றார் டாக்டர்.

“நீங்கள்தான் முகத்தைப் பாருங்களேன்! அப்பத் தெரியும் – ஏலெ வெட்டியான், அந்தச் சாக்கெ விலக்குடா!” என்று உத்தரவு போட்டார் கந்தசாமிபிள்ளை.

டாக்டர், கையில் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, குனிந்து பிரேதத்தைப் பார்த்தார்.

கண் பிதுங்கி வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. சொல்ல முடியாத பயத்தில் முகத்தை வார்ப்பு எடுத்த மாதிரி, அவ்வளவு கோரம்! கிட்டிப்போன பற்களுக்கிடையில் நாக்கு வெளியே தள்ளிக் கிடந்தது. பல்நாக்கில் பதிந்து விறைத்துக் கொண்டதால், வாயை அகற்றிக்கூட நாக்கை உள்ளே தள்ள முடியாது.

“சாக்கை அப்புறம் எடுத்தெறி!” என்றார் டாக்டர்.

பிரேதம் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்தது. முதுகில் பலத்த அறை விழுந்ததால் அதைத் தேக்குவதற்காக உடம்பை வளைத்த பாவனையில் வளைந்து விறைப்பேறிக் கிடந்தது. கை விரல்களும் வக்ரமாக முறுக்கி கிடந்தன.

“சரி உள்ளே எடுத்துக் கொண்டு போய் மேஜையிலே கெடத்துங்கடா!” என்று சொல்லி நிமிர்ந்தார் வைத்தியர்.

“உடம்பில் கோறை ஒன்றையும் காணவில்லை; ஆனால் அடிக்குக் குனிந்த மாதிரிக் கிடக்கிறது” என்று ஏட்டைப் பார்த்தபடியே கூறினார்.

அச்சமயம் இருட்டில் ஓர் உருவம் தெரிந்தது. “அதாரது?” என்ற குரலுக்கு, “நான்தான் நாயுடு!” என்று சொல்லிக் கொண்டே கம்பௌண்டர் அருகில் வந்தார்.

“பேயடிச்ச கேஸ்கூட நம்ம ஆஸ்பத்திரிக்கு வருதுவே!” என்று சிரித்தார் டாக்டர் வீரபத்திரபிள்ளை.

“பேயா, அடிச்சா சாகத்தான்! இரண்டு மூன்று நாளாக இந்தப் பக்கம் ஒரு ரத்தக் காட்டேரி தறிகெட்டுப்போய் அலையிது, அதாத்தானிருக்கும்!” என்றார் நாயுடு.

“நீரும் பேயை நம்புறீரா. – உருப்பட்டாப்லேதான்!” என்று சொல்லி டாக்டர், “ஏலே இன்னுமா – எத்தினி நேரம்; சவத்தெ இளுத்துக் கெடத்தெ?” என்று அதட்டினார்.

“வே. கந்தசாமிபிள்ளை, நம்ம தோட்டி பார்த்துக்கிடுவான் – நீங்க வேணும்னா ஆஸ்பத்திரி வெராண்டாவுலே படுத்துக்கிடுங்க – காலைலே வேலையைச் சுருக்கா முடிச்சுடுவோம்!” என்று சொல்லிக்கொண்டே ஆஸ்பத்திரிக் காம்பவுண்டுக்கு எதிரில் உள்ள தமது வீட்டிற்குப் புறப்பட்டார்.

“ஸார், ஒரு நிமிஷம், நான் ஒரு பார்வை பார்த்துப்புட்டு வந்திருதேன்!” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கம்பௌண்டர் நாயுடு.

டாக்டர் சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றார்.

உள்ளே சென்ற கம்பௌண்டர் நாயுடு சிறிது நேரத்தில் விறைக்க விறைக்க ஓடி வந்தார்.

“வெட்டியான் சொல்லுறதில் அணுவளவு சந்தேகமில்லே, ரத்தக் காட்டேரிதான்!” என்றார் நாயுடு.

“உமக்கும் என்ன பைத்தியமா? வேறெ வேலெ இருந்தாப் போய்ப் பாரும்!” என்று அதட்டினார் டாக்டர்.

“இப்பவே வேணும்னா அறுத்துப் பாருங்க! நான் சொல்லுறது சரியா தப்பா என்று தெரியும்,” என்றார் நாயுடு.

“பார்க்க வேண்டியது உமது மூளைக்குத்தான் வைத்தியம்!” என்று சொல்லிக்கொண்டே மேல் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, கைகளைத் தோளுக்குமேல் உயர்த்தி சுடக்கு முறித்துக் கொட்டாவி விட்டார் டாக்டர்.

“நீங்க எங்கூட ஷெட்டுக்குள் வாருங்க, காண்பிக்கிறேன்!” என்று தமது கட்சியை நிரூபிக்க அவசரப்பட்டார் கம்பௌண்டர்.

“என்னதான் சொல்லுமே!”

“நீங்க வாருங்க ஸார்!” என்று ஷெட்டுக்குள் நுழைந்து, பிணத்தின்மீது கிடந்த சாக்கை அகற்றினார் கம்பௌண்டர்.

“டேய் தோட்டி! விளக்கைக் கொண்டு ஒசத்திப் பிடி!” என்று சொல்லி, மடியிலிருந்து சூரிக் கத்தி ஒன்றை எடுத்தார்.

அவர் என்னதான் காட்டப் போகிறார் என்பதைப் பார்க்க ஷெட் வாசலில் நின்று கொண்டிருந்த டாக்டர், “என்னவே வேலை!” என்று சொல்லுமுன், பிணத்தின் கையில் கத்தியைக் குத்திக் கிழித்து, மாங்காயைப் பிளந்து காட்டுவதைப்போல, காயத்தை விரித்துப் பிடித்துக் காண்பித்து, “இதில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கிறதா பாருங்கள்!” என்றார்.

“ரத்தம் இருந்தாலும், பிணமானபின் வடிவதை எங்கே கண்டீர்?” என்று கேட்டுக் கொண்டே நெருங்கினார் டாக்டர்.

“ரத்தம் வடியாது, உறைந்தாவது இருக்க வேண்டுமே! எங்கே பாருங்கள்” என்றார் நாயுடு.

டாக்டர் குனிந்து பரிசோதித்துப் பார்த்தார். ரத்தத்தை வடிகட்டிப் பிழிந்தெடுத்த சதைபோலக் கிடந்தது பிணம்.

டாக்டர் வேறு ஓர் இடத்தில் பரிசோதிக்கும்படி கூறினார். அங்கும் அப்படியே இருந்தது. டாக்டருக்குப் புல்லரித்தது.

“அப்புறம்!” என்றார். அவருடைய நாக்கு மேல் வாயில் ஒட்டிக் கொண்டது.

“வாருங்க போவோம்!” என்று வெளியே வந்த கம்பௌண்டர், “இவன் ரத்தம் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டுமா?” என்றார். “கோயிலூர்க் கணியான் செத்துப் போனானே அவனைப் பொதைக்கத்தானே செய்தார்கள்?” என்று கேட்டார் தோட்டியிடம்.

“ஆமாஞ் சாமி! அங்கனெதான் இவனும் மாட்டிக்கிட்டான்!” என்றான் தோட்டி ராக்கன்.

“எப்படா நடந்தது?”

“சாயங்காலம் சாமி…”

“வருகிறீர்களா, போவோம்?” என்றார் கம்பௌண்டர்.

“அவ்வளவு நிச்சயமா உமக்கு? அப்படியானால் போவோம்!” என்றார் டாக்டர்.

“ஏட்டுப் பிள்ளையையும் கூட்டிக் கொள்வோம்; ஏலே ராக்கா, மம்பட்டியை எடுத்துக்கிட்டுக் கூட வா!” என்றார் நாயுடு.

“நான் வரமாட்டேன் சாமி; எனக்குப் புள்ளை குட்டியில்லே…” என்றான் ராக்கன்.

“நாங்க இருக்கரப்ப என்னடா பயம்? சும்மா வா, ஒண்ணும் நடக்காது!” என்று தேற்றினார் கம்பௌண்டர்.


இந்தப் பரிசோதனைக் கோஷ்டி கோயிலூர் சுடுகாட்டை அடையும்போது மணி பன்னிரண்டு.

வானத்திலே துளி மேகங்கூடக் கிடையாது. நிலவொளியும் இல்லை. வெறும் நட்சத்திரப் பிரகாசம்தான்.

சுடுகாடு ஆற்றங்கரையிலிருந்தது. அது ஒரு வெட்டவெளி; நாலைந்து பர்லாங்குக்கப்பறந்தான் அந்தப் பகுதியில் மரம் என்ற பேருக்கு ஒன்றிரண்டு பனை முளைத்துக் கிடந்தது.

“எங்கடா அவனைப் பொதெச்சாங்க?” என்று அதட்டினார் டாக்டர்.  தம்மை இழுத்தடிக்கிறானே அந்தக் கம்பௌண்டர் என்று அவருக்கு நினைப்பு.

“அதோ, அந்தக் குத்துக்கல் தெரியுதே அதுதான் சாமி!” என்றான் ராக்கன். அவன் சொல்லி வாய் மூடவில்லை.

நாயின் ஊளைபோல ஆரம்பித்த ஒரு சப்தம், கணநேரத்துக்கு நேரம் சுருதிகூடி ஆந்தையின் அலறலாக மாறி, வெறும் பேய்ச் சிரிப்பாக வான முகட்டைக் கிழித்தது.

கட கடவென்று விக்கி விக்கிச் சிரிப்பதுபோன்ற அலறல் ஒரு கணம் வானத்தையே நிறைத்தது.

அடுத்த கணம் அமைதி.

அதே  பேய் – அமைதி.

நடந்து கொண்டிருந்தவர்கள்  யாவரும் தரையுடன் தரையிட்டது மாதிரி கல்லாய் உறைந்து நின்றனர்.

“சாமி, நான் வரமாட்டேன், பேய்!” என்று ஓட்டம் பிடித்தான் ராக்கன்.

மண் வெட்டி ஓடிய வேகத்தில், அவன் கைவிட்டு நழுவியது. அதை எடுத்துக்கொள்ள அவன் தாமதிக்கவில்லை.

“நாய் ஊளையிட்ட மாதிரி இருந்துதல்ல!” என்றார் ஏட்டுப் பிள்ளை.

“சுடுகாட்டில் நாய்க்கா பஞ்சம்; அது நாயில்லை!” என்றார் கம்பௌண்டர்.

மூவரும் அந்தக் கணியானைப் புதைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

கம்பௌண்டர் நாயுடு விளக்கை உயர்த்திப் பிடித்துக்கொள்ள, ஏட்டுப்பிள்ளை தைரியமாக வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு, மண்வெட்டியால் தோண்ட ஆரம்பித்தார்.

ஆற்றருகில் உள்ள இடந்தானே! வேலை சுளுவாக நடந்தது.

“அதோ வெள்ளையா என்னமோ  தெரிகிறது!” என்றார் கம்பௌண்டருடன் ஒண்டிக் கொண்டிருந்த டாக்டர்.

ஏட்டுப் பிள்ளை மண்வெட்டியைக் குழிக்கு வெளியில் எறிந்துவிட்டு, கைகளால் மண்ணைப் பரசி எடுக்க ஆரம்பித்தார். கம்பௌண்டரும் கையிலிருந்த விளக்கை டாக்டரிடம் கொடுத்துவிட்டு உள்ளே இறங்கி, துணியின் முனையைப் பிடித்து இழுத்துத் தூக்கவே, பிரேதம் தென்பட்டது.

டாக்டர் குழிக்குள் விளக்கைப் பிடித்துக்கொண்டு குனிந்து பார்த்தார்.

பிரேதம், கைகட்டு, கால் விரல்கட்டு, வாய்க்கட்டுகளுடன் மலத்திக் கிடத்தப்பட்டிருந்தது.

புதைத்து நான்கு நாட்களாகியும் நெற்றியிலிருந்த சந்தனமும் குங்குமமும் அழியவில்லை. கழுத்தில் கிடந்த மாலை வாடவில்லை. பிரேதம்போல் கட்டப்பட்டு ஒருவன் படுத்துத் தூங்குவது போலவே தென்பட்டது.

“அவன் எமை ஆடுது” என்று அலறிக்கொண்டே விளக்கை நழுவவிட்டார் டாக்டர்.

நல்ல காலம். கம்பௌண்டர் அதை ஏந்திக் கொண்டார்.

பிரேதத்தின் வலது இமை ஆடியது. யாவரும் அதையே பார்த்து நின்றார்கள்.

பிணம் எழுந்து உட்கார்ந்து பேசும் என்று எதிர்பார்ப்பது போலிருந்தது அவர்கள் பார்வை.

வலது கண் இமைகள் மெதுவாக அசைந்தன. உள்ளிருந்து சிரமப்பட்டு ஒரு கரு வண்டு வெளியே வந்தது. வெளிச்சத்தைக் கண்டு திகைத்ததுபோலத் தள்ளாடியது; பிறகு சிறகை விரித்து உயரப் பறந்து சென்றது.

“வண்டுகளைப்போல அது ரீங்கார மிடவில்லை, பார்த்தீரா!” என்றார் நாயுடு.

வண்டு போனதையே பின்பற்றிய கண்கள் அதை இருளில் இழந்தன.

“இதோ பாருங்கள்” என்று பிரேதத்தின் வலது கரத்தைக் கத்தியால் கிழித்துக் காயத்தை விரித்துப் பிடித்தார் நாயுடு.

புது ரத்தம் குபு குபு என்று பொங்கி அவர் விரல்களை நனைத்தது!

மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

“ரிப்போர்ட் எப்படி  எழுத?” என்று கைகளை மணலால் தேய்த்துக் கொண்டே கேட்டார் ஏட்டுப் பிள்ளை. தன் கையில் ரத்தம் பட்டது போல அவ்வளவு பிரமை.

“பயத்தால் மரணம் என்று எழுதிப்புடும்!” என்றார் கம்பௌண்டர்.

“நாயுடு, இது எப்படித் தெரிந்தது?” என்றார் டாக்டர்.

“அவன் ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன்! அவனுக்குச் செவ்வா தோஷம்; அந்த ஜாதகமெல்லாம் ரத்தக் காட்டேரிதான்!” என்றார் கம்பௌண்டர்.

Share this post:

சிறுகதை: குறட்டை ஒலி – டாக்டர் மு.வரதராசன்

நாங்கள் மேல் மாடியில் குடியிருந்தோம். கீழே வடபகுதியில் ஒரு குடும்பமும், தென்பகுதியில் ஒரு குடும்பமும் இருந்தன. தென்பகுதியார் வறுமையால் வாடி இளைத்தவர்கள். கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், ஒரு பாட்டி, ஒரு நாய் என்று பெருகிய குடும்பம் அது. வட பகுதியார் செல்வம் செழித்துக் கொழுத்தவர்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல்  ஏங்குகின்றவர்கள். அவர்களின் கூடத்திலும் அறைகளிலும் நிறையப் படங்கள் உண்டு. ஓர் அலமாரி நிறையக் குழந்தைப் பொம்மைகளும், நாய்ப் பொம்மைகளும் உண்டு. உயிருடன் இயங்கியவர்கள் எலி, எறும்பு முதலியவை தவிர, அந்தக் கணவன் மனைவி இருவர்தான். ஆனால், அவர்கள் இருந்த பகுதி தூய்மையாக, ஒழுங்காக இருந்தது. பொருள்கள் வைத்தவை வைத்தபடியே இருந்தன. அவர்களின்  தும்மல், இருமல், ஏப்பம், கொட்டாவி தவிர, வேறு எந்த ஒலியும் கேட்பதில்லை. தென்பகுதிக் குடும்பமோ ஆரவாரம் மிகுந்தது. குழந்தைகள் எந்நேரமும் ஒன்றை ஒன்று  அடித்துக்கொண்டு அமர்க்களம் செய்யும். தாய்க்கும் தந்தைக்கும் குழந்தைகளின் வழக்கைக் கேட்டு தண்டிக்கும்வேலை நிறைய இருந்தது. போலீசுநிலையம், நீதிமன்றம், சிறைக்கூடம் எல்லாம் அங்கு இருந்தன. அந்தக் கிழவி எந்நேரமும் சளைக்காமல் இருமிக் கொண்டிருந்தாள். இருமல் ஓய்ந்த நேரத்தில் பாக்கு உலக்கையால் வெற்றிலைப் பாக்கை நறுக்கி, ‘லொட்லொட்’ என்று குற்றிக் கொண்டிருந்தாள். அதுவும் ஓய்ந்த நேரத்தில் வருவார் போவார் இடத்தில் மருமகளைப் பற்றி வசைபாடிக்கொண்டிருந்தாள். இடையிடையே, கிழவியின் வாழ்க்கைக்கு அமைந்த தாளம்போல், அவர்கள் வளர்க்கும் நாய் தெரு வழியே போவோரைப் பார்த்து, உறுமிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் இருக்கும். சில வேளைகளில் மேலே இருந்து நான் எட்டிப் பார்ப்பது உண்டு. அவர்களின் கூடத்தில் கண்ட பொருள்கள் கண்டபடி சிதறிக் கிடக்கும். வட பகுதியாரின் கூடத்தை எட்டிப் பார்க்கலாம் என்றால், பார்ப்பதற்கு அங்கே ஒன்றும் இருக்காது.

இவர்களின் அமர்க்களமும் அலங்கோலமும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எந்தக் குடும்பமாவது வேறு வீட்டில் இடம் பார்த்துக்கொண்டு அகல்வார்களா என்றால், அதுவும் இல்லை. இரு சாராரும் மனப்பொருத்தம் இல்லாமல் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தனியே மேல் மாடியில் இருந்தபடியால், நாடகம் பார்ப்பதுபோல் கீழே நடந்தவற்றை வேடிக்கையாகக் கவனித்துக்கொண்டு வந்தோம்.

ஏழையின் மனைவி நிறைந்த கர்ப்பவதியாக இருந்தாள். அவர் வீட்டு நாயும் அப்படித்தான் இருந்தது. ஒருநாள் இரவு அவள் ஏழாவது குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையின் புத்தம் புதிய குரலை மேலே இருந்தபடியே கேட்டபோது எனக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டானது. இந்த உலகத்தில் புதியவர் ஒருவர் – அறிஞரோ, கலைஞரோ, அரசியல்வாதியோ, தொழிலாளியோ – புதிதாக வந்து சேர்ந்ததாக எண்ணினேன். அவருடைய முதல் குரலைக் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன். அடிக்கடி அந்தக் குரலைக் கேட்பதில் விருப்பம் இருந்தது. ஆனால், குழந்தையை ஏன் இப்படி அழவிடுகின்றார்களோ என்ற வருத்தமும் இருந்தது. செல்வரின் மனைவி அதன் குரலைப் பற்றி என்ன எண்ணினாளோ, தெரியவில்லை. நம்வீட்டில் அழத்தெரியாத குழந்தைப் பொம்மை இருக்கிறது. இப்படிப்பட்ட உயிருள்ள குழந்தை இல்லையே என்று ஏங்கிப் பொறாமைப்பட்டாளோ, அல்லது, உள்ள கூச்சல் போதாதென்று இதுவும் வந்து சேர்ந்ததே என்று வெறுப்பு அடைந்தாளோ, என்னவோ!

சில நாள்களில் அந்த நாய் ஐந்து குட்டிகளை ஈன்றது. மேலே இருந்து ஆவலோடு எட்டிப்  பார்த்தேன். இரண்டு குட்டிகள் வெண்ணிறமாய்ச் சின்ன கரும்பட்டைகளோடு இருந்தன. மற்ற மூன்றும் தாய்போலவே செந்நிறமாய் இருந்தன. அந்த வெள்ளைக் குட்டிகளில் ஒன்றை எடுத்து வளர்க்கலாமா என்ற ஆசை தோன்றியது. இன்னும் கொஞ்சம் வளரட்டும், பிறகு எடுத்து வளர்க்கலாம் என்று அமைதியானேன்.

அடுத்த மூன்றாம் நாள் காலையில் வெளியே சென்ற அந்தத் தாய்நாய் நெடுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அந்த ஐந்து குட்டிகளும் ‘கய்ங் கய்ங்’ என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தன.

“என்னடியம்மா இந்தக் குட்டியெல்லாம் இப்படிக் கத்துதே. கவனிக்கக் கூடாதா. பாவம்?” என்றாள் கிழவி.

“அந்த நாய் காலையிலே போனது இன்னும் வரவில்லை அத்தை. பால் இல்லாமல் குட்டி எல்லாம் கத்துது” என்றாள் மருமகள்.

“ஏதாவது பாலாவது கஞ்சியாவது வார்க்கக் கூடாதா?” என்றாள் கிழவி.

“பாலுக்கு நாம் எங்கே போவது? கஞ்சி வார்த்தால் செத்துப் போகுமே” என்றாள் மருமகள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனம், “இப்படியும் உலகம் இருக்க வேண்டுமா?” என்று வருந்தியது.

பிற்பகலில் குட்டிகளின் ‘கய்ங்’ ஒலி வர வரப் பெருகியது. பெரிய பிள்ளைகள் இருவருக்கும் சொல்லி நாயைத் தேடிக்கொண்டு வரும்படி அனுப்பினாள் மருமகள். அவர்கள் இங்கும் அங்கும் தேடிவிட்டு ‘இல்லை’ என்று திரும்பினார்கள். மாலையில் கணவர் வந்தவுடன், “பெரிய கண்(ண)றாவியாக இருக்கிறது. எங்கேயாவது பார்த்துப் பிடித்துக் கொண்டு வாங்க. இளங் குட்டிகள் இரவெல்லாம் கத்துமே” என்றாள் மனைவி. கணவர் தம் சட்டையைக் கழற்றாதபடியே குட்டிகளைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றார். “தாய்க்கு இல்லாத அன்பா? எங்கேயாவது இருந்தால் எப்போதோ வந்திருக்குமே. முனிசிபாலிட்டியார் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். பொழுதும் போச்சே” என்று சொல்லிக்கொண்டே வெளியே நடந்தார்.

விளக்கு வைக்கும் நேரத்தில் செல்வர் மனைவி மேலே வந்தாள். என் மனைவியோடு ஏதோ குறை சொல்லத்  தொடங்கினாள். நான் பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். 

“லைசென்ஸ் பணம் கட்ட முடியாதவர்கள் நாய் ஏன் வளர்க்க வேண்டும்? நாங்கள் அவர்களோடு பேசுவதே இல்லை. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கள். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் போய் விடுமே. எடுத்துத் தொலைவில் கொண்டுபோய் விட்டுவிட்டால், வழியில் போகிறவர்களுக்கு ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். நீங்கள் வந்து சொல்லிப்பாருங்கள்” என்றாள்.

அவள் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் என் மனைவி தென் பகுதியாரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தாள். திரும்பி வந்ததும், “என்ன செய்தி?” என்று கேட்டேன்.

“மூன்று நாள் குட்டிகள்; வெளியே விட்டால் செத்துப்போகும். யாராவது எடுத்துக்கொண்டு போனாலும் வளர்க்க முடியாது. இராப்பொழுது எப்படியாவது கழிந்துவிட்டால், நாளை முனிசிபாலிட்டிக்குப் பணம் கட்டி, நாயை மீட்டுக் கொண்டுவந்து காப்பாற்றலாம்” என்றார்களாம்.

“இதை வட பகுதியாரிடம் சொன்னாயா?” என்றேன்.

“சொன்னேன். கதவு, சன்னல் எல்லாவற்றையும் சாத்திவிட்டுக் குட்டிகளின் ஒலி கேட்காதபடி செய்துவிட்டுத் தூங்குங்கள் என்று சொன்னேன்” என்றாள்.

இரவு ஒன்பது மணிக்குமேல் ஆயிற்று. வீட்டுச் சிறுவர்களின் ஒலியெல்லாம் அடங்கினபடியால் குட்டிகளின் ஒலி, தொடர்ந்த பாட்டுப்போல் கேட்டது.

வட பகுதியார் குங்குமப்பூவும் சர்க்கரையும் கலந்து சுண்டக் காய்ச்சின பாலை வயிறாரப் பருகிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டார்கள். தென்பகுதித் தலைவி, குட்டிகளின் அருகே உட்கார்ந்து இரக்கத்தோடு பார்த்து, அவற்றை மெல்லத் தடவிக்கொண்டிருந்தாள். அவளுடைய கணவர், இளங் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். இளங் குழந்தை அழத் தொடங்கியது. “குழந்தைக்குப் பால் கொடு” என்று மனைவியை வற்புறுத்தினார். அவள் அரை மனத்துடன் எழுந்து குழந்தையுடன் உள்ளே சென்றாள். பகல் முழுதும் உழைத்த ஏழைத் தொழிலாளி ஆகையால், அவருக்கு  மேன்மேலும் கொட்டாவி வந்தது. சிறிது நேரம் நின்று குட்டிகளைப் பார்த்துவிட்டு அவரும் உள்ளே சென்றார்.

இனி எல்லோரும் உறங்கிவிடுவார்கள் என்று எண்ணி நானும் படுக்கச் சென்றேன். ஆனால் உறக்கம் வரவில்லை. உலகமெல்லாம் நாய்க்குட்டி மயமாக இருப்பதாகத் தோன்றியது. அந்தக் ‘கய்ங் கய்ங்’ ஒலி தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. ஒரே முறை மட்டும் வட பகுதியார் ஏப்பம் விட்ட ஒலி கேட்டது. காற்று வேண்டும் என்று ஓரிரு சன்னல் திறந்து வைத்திருப்பார்கள் என்று எண்ணினேன்.

குட்டிகளின் ஒலி பொறுக்க முடியாத எல்லைக்குச் சென்றது. திடீரென்று ஒவ்வொரு சுரமாகக் குறைந்து வருவதை உணர்ந்தேன். என்ன காரணமோ, குட்டிகளும் ஒவ்வொன்றாகத் தூங்கத் தொடங்குகின்றனவோ என்று எண்ணினேன். சிறிது நேரத்தில் அவற்றின் ஒலி பாதி அளவிற்குக் குறைந்துவிட்டது. ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி, பார்க்கலாம் என்று எழுந்தேன். மேற்கு நடையில் நின்று சாய்ந்து பார்த்தேன். கீழே கிழக்கு நடைப்புறத்தில் சின்ன மண்ணெண்ணெய் விளக்கின் ஒளி தெரிந்தது. அந்த ஏழையின் மனைவி குட்டிகளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். என்ன செய்கிறாள், பார்க்கலாம் என்று அமைதியாக நின்றேன். நான் நிற்பது தெரியாதபடி ஒரு தூணின் பக்கமாக மறைந்து நின்றேன்.

அவள் இடக் கையில் ஒரு கொட்டாங்கச்சி இருந்தது. அதில் கொஞ்சம் பால்போல் இருந்தது. வலக் கையில் பஞ்சுபோல் ஏதோ வைத்திருந்தாள். அதைக் கொட்டாங்கச்சியில் தோய்த்துத் தோய்த்து ஒவ்வொரு குட்டியின் வாயிலும் வைத்தாள். குட்டிகள் அதைச் சுவைத்து அமைதியாவதைக் கண்டேன். சிறிது நேரத்தில் முக்கால் பகுதி ஒலி அடங்கிவிட்டது. ஒரு குட்டி மட்டும் கத்திக்கொண்டே இருந்தது. அவள் கொட்டாங்கச்சியைக் கீழே வைத்துவிட்டாள். வலக் கையில் இருந்த பஞ்சு போன்ற துணியைத் தன் மார்பு அருகே கொண்டுபோய், தன் பாலால் அதை நனைத்து, அந்த ஒரு குட்டியின் வாயில் வைத்தாள். மூன்று முறை அவ்வாறு செய்த பிறகு அதன் ஒலியும் அடங்கியது. குட்டிகள் மூலைக்கு ஒன்றாகப் படுத்துக்கிடந்தன. அந்த இளங் குழந்தையின் தாய், சிறு விளக்கை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்தாள். விளக்கொளியில் அவளுடைய முகம், மலர்ந்த செந்தாமரைபோல், மகிழ்ச்சியோடு விளங்கியதைக் கண்டேன்.

என் படுக்கைக்கு வந்து படித்தேன். ஏதோ சுமை இறங்கியதுபோன்ற உணர்ச்சி என் மனத்தில் இருந்தது. பெருமூச்சு விட்டுக் கை  கால்களை நீட்டினேன். ஏப்ப ஒலி வந்த அதே திசையிலிருந்து குறட்டை ஒலி வந்து  கொண்டிருந்தது.

Share this post:

சிறுகதை: தவம் – அய்க்கண்

திருப்பத்தூரிலிருந்து பஸ்ஸில் காரைக்குடிக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

வழியில் கோவிலூரிலிருந்தே இருபக்கங்களிலும் கட்சிக் கொடிகளும், தோரணங்களும் வரவேற்பு வளைவுகளும் கோலாகலமாகக் காட்சியளித்தன.

பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரரிடம் விசாரித்தேன்.

அவர் எங்கள் ஊர்க்காரர். வியாபாரக் கொள்முதல் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் போய் வருகிறவர். அதே மாதிரி அடிக்கடி கட்சிக் கூட்டங்களுக்கும் போய் வருகிறவர்.

“ஸார்! உங்களுக்குத் தெரியாதா…? நம்ம இண்டஸ்ட்ரிஸ் மினிஸ்டர் ராமசாமி தான் இன்னிக்கு காரைக்குடிக்கு விஜயம் செய்கிறார். கோட்டையூரிலே ஒரு தொழிற்சாலைக்கு அஸ்திவாரக் கல் நாட்டுகிறார். அப்புறம் பள்ளத்தூரிலே” என்று மாண்புமிகு அமைச்சரின் மின்னல்வேகச் சுற்றுப்பயணத் திட்டத்தை விவரிக்க ஆரம்பித்து விட்டார் அவர்!

“அப்படியா…?” என்று ஆமோதித்து விட்டு, அமைதியானேன். ஆனால், அவர் என்னை விடவில்லை!

“ராமசாமி நம்ம பக்கத்து ஊர்க்காரர்தான் ஸார்!” என்றவர், சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய், “ஏன் ஸார், அவர் உங்க காலேஜிலே தான் படிச்சாராம்… உங்களுக்கு ஞாபகம் இல்லியா…?” என்று ஓர் எக்கச்சக்கமான கேள்வியைக் கேட்டு விட்டார்.

எங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால், எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்தான்… ஆனால், ஒரு கல்லூரியிலே எத்தனையோ ராமசாமிகள், சுப்பிரமணியன்கள், சீனிவாசன்கள் இருப்பார்களே? அவர்களில் எந்த ராமசாமி இந்த அமைச்சர்?

கடகட என்று பேசிக் கொண்டே இருந்தார் அவர்.

காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கல்லுக்கட்டிப் பக்கமாக நடக்கத் தொடங்கினேன்.

கடைத்தெரு எல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாறு காணாத மக்கள் வெள்ளம், ஆங்காங்கே நின்று, மாண்புமிகு அமைச்சரின் முகவிலாசத்தை தரிசிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. நானும் ஓர் ஓரமாக நின்று அமைச்சருக்காக, வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தேன்.

தேர்தல் சமயத்தில், சந்து சந்தாக நடந்து வந்து, வீடு வீடாக நுழைந்து கை கூப்பியபடியே ஓட்டுக் கேட்ட அரசியல்வாதியை, இப்போது சுற்றுப்பயணம் போகும் வழியில் ஊர்வலமாக வரும்போது, காத்திருந்து ஓரமாக நின்று கைகூப்பி வணங்கித் தரிசிக்கும் நிலை…!

‘இதோ… இதோ’ என்று கடைசியாக வந்தே விட்டார் அமைச்சர்!

தூரத்தில் வரும்போதே அமைச்சரை உன்னிப்பாகக் கவனித்தேன்.

அமைச்சரைப் பார்த்து, அவர் எந்த மாணவன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், என்னையும் அறியாது சிறிது பாதைக்குள்ளே வந்து விட்டேன் போலிருக்கிறது…

“ஏய்… போ.. போ…” என்று லத்திக் கம்பை உயர்த்தியபடி ஒரு போலீஸ்காரர் என்னைத் தடுத்து நிறுத்திப் பின்னே தள்ள, அப்போது, “ஸார், ஸார்…!” என்று அமைச்சர் காரிலிருந்தே என்னை நோக்கிக் கை காட்ட, சட்டென்று கார் நின்று விட்டது.

காரிலிருந்து வேகமாக இறங்கிய அமைச்சர், என் கைகளைப் பற்றிக் கொண்டு, “ஸார், சௌக்கியமாயிருக்கீங்களா…?” என்று கேட்டதும் நான் திகைத்து நின்றேன். இன்னும் எனக்கு அவரைச் சரியாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

நான் பேந்தப் பேந்த விழிப்பதைப் புரிந்து கொண்டு, “ஸார்! என்னை ஞாபகம் இல்லையா? நான் உங்க காலேஜில அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே பி.காம். படிச்சேன் ஸார்! என்.எஸ்.எஸ்.ஸிலே கூட லீடராயிருந்திருக்கேன்…” என்று அமைச்சர் சொன்னதும், எனக்குச் சட்டென்று ஞாபகம் வந்து விட்டது!

நான் டைரக்டராயிருக்கும் நாட்டுப் பணிக்குழுவிலே ராமசாமி தலைவராக இருந்தது, இப்போது எனக்கு நன்றாக நினைவு வந்தது.

“ஓ… எஸ்… இப்போ நல்லா ஞாபகம் வந்திட்டுது ராமசாமி…! நீ இவ்வளவு புகழோட மினிஸ்டராயிருக்கிறதைப் பார்த்து எனக்கு ரொம்பச் சந்தோஷம்பா…!  ஒரு தடவை நம்ம காலேஜுக்கு வாயேன்…!”

ராமசாமி ஒரு ‘மாண்புமிகு’ என்பதையே மறந்து, பழைய வழக்கப்படி ஒருமையில் அமைச்சரோடு பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து, நானே சட்டென்று திடுக்கிட்டு நிறுத்தினேன்.

“ஓ…! ஐயாம் ஸாரி… எக்ஸ்கியூஸ்மி, உங்களை மரியாதையில்லாம…” என்று என் நாக்குப் பணிவாகக் குளற ஆரம்பித்தது.

“பரவாயில்லை ஸார்! டெல்லிக்கு ராஜா ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதானேனு சொல்லுவாங்களே, அது மாதிரி, நான் எங்கேயிருந்தாலும், உங்களுக்கு ஸ்டூடன்ட்தானே ஸார்?” என்று பவ்யமாகச் சிரித்தான் – சிரித்தார் அமைச்சர்.

“உனக்குதான் தெரியுமே… எனக்கு அரசியல் என்றாலே வேப்பங்காய்! அதனாலேதான் அரசியலிலே நீ இவ்வளவு வளர்ந்திருக்கிறதெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சு… நீ இன்னும் உயர்ந்து நல்ல புகழோட வாழணும்பா..” என்று மனதார வாழ்த்தினேன்.

தாங்க்ஸ், ஸார்! நான் வர்றேன்” என்று விடைபெற்றுக் கொண்டு, காரில் ஏறினார் அமைச்சர்.

ஊர்வலம் மறுபடியும் நகரத் தொடங்கியது.

என் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய கான்ஸ்டபிள் மட்டுமல்ல சுற்றிலும் இருந்த எல்லாருமே இப்போது என்னை கௌரவமாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

கூட்டம் சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பித்தது.

ஏதேதோ பழைய நினைவுகள் வந்தன.

அந்தக் காலத்து மாணவன் ராமசாமிக்கும், இந்தக் காலத்து அமைச்சர் ராமசாமிக்கும் எவ்வளவு வித்தியாசம்!

கல்லூரியில் படித்த நான்கு ஆண்டுகளிலும் இந்த ராமசாமி, அரசியல், கட்சி என்று வாய் திறக்கவில்லை!

மேடைகளில் அடிக்கடி பேசுவான். ஆனால், அரசியலைப் பற்றியே மூச்சுவிட மாட்டான். இலக்கியம், பொது விஷயங்கள் பற்றியே எப்போதும் அவன் பேச்சு இருக்கும்.

படித்துப் பட்டம் வாங்கி, ஓர் அலுவலகத்தில் அல்லது வங்கியில் நல்ல திறமையான நிர்வாகியாகப் பரிமளிப்பான் என்று எதிர்பார்க்கப்பட்ட அவன், இப்படி அரசியலில் இறங்கி, அமைச்சராகப் புகழ் பெறுவான் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை.

என் சிந்தனையோட்டத்தைக் கலைப்பது போல், “ஸார்! வணக்கம்…” என்று கையில் கொடியோடு என் முன்னே வந்து நின்றான் ஒரு இளைஞன்.

“சீனிவாசனா? வாப்பா – சௌக்கியமா இருக்கியா?” என்று அவனை விசாரித்தேன்.

ராமசாமிக்கு முன்பே படித்து முடித்துச் சென்றவன்தான் என்றாலும், சீனிவாசனை நாங்கள் மறக்க முடியாது!

அந்தக் காலத்தில் அவனும்… அவனுடைய ‘தலைவர்’ சுப்பிரமணியனும் சேர்ந்து, கல்லூரியில் நடத்திய போராட்டங்கள் இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

கல்லூரி சம்பந்தப்பட்ட போராட்டங்கள் மட்டுமல்ல; வெளியே அரசியல் கட்சிப் போராட்டங்களிலும் தவறாமல் கலந்து கொள்வான் இந்த சீனிவாசன்.

தேர்தல் சமயங்களில், காரிலே கொடிகளைக் கட்டிக் கொண்டு மைக்கிலே  தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்யவே கிளம்பி விடுவான். கிராமப்புறங்களில் மேடைகளிலும் ஏறிப் பேசி முழங்குவான்!

“சீனு! உன் போராட்டத்தையெல்லாம் காலேஜோட நிறுத்திக்கோ… படிக்கிற மாணவன், இப்படி அரசியல் கட்சி நடவடிக்கைகளிலே நேரடியாகக் கலந்துக்கக் கூடாது…” என்று அடிக்கடி அவனைக் கண்டிப்பேன் நான்.

என் அறிவுரையை மைக்கில் வாங்கி, ஆம்ப்ளிபையரில் விட்டு விடுவான், அவன்!

“நம்ம நாட்டிலே எழுதப் படிக்கத் தெரியாதவங்ககிட்டே அரசியலை விட்டுட்டதாலேதான், நாடு இப்படி பாழாய்ப் போயிடுச்சு ஸார்! நாங்க தானே எதிர்காலத் தலைவர்கள், நாங்க இப்போதே அந்த அனுபவத்தைத் தெரிஞ்சுக்கிறது, நல்லதுதானே?” என்பான்.

ஆறு ஏழு  வருட வளர்ச்சி, அவனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

படித்துப் பட்டம் வாங்கி, அரசியலில் ஒரு தலைவனாய் விளங்குவான் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனிவாசன், இன்னும் கொடி தூக்கும் தொண்டனாகவே தொடர்ந்து வாழ்வதைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன் நான்.

கல்லூரியிலே அரசியலே பேசாத ராமசாமி, இன்று ஓர் அரசியல் கட்சியில் தலைவனாகி, அமைச்சராகி விட்டான்.

அதே கட்சியில் அன்று தொண்டனாகச் சேர்ந்த சீனிவாசன், இன்றும் தொண்டனாகவே கோஷமிட்டு நடக்கிறான்.

எனக்கு வியப்பாகவே இருந்தது!

அவன் வந்த லாரி புறப்பட்டு விட்டது. என்னிடம் விடை பெற்றுக் கொண்டு வேகமாக ஓடினான் சீனிவாசன்.

காரைக்குடிக்கு வந்த வேலையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினேன்.

பஸ்ஸில் நிறையக் கூட்டம். நான் டிக்கெட் வாங்கிக்கொண்டு காலியாகக் கிடந்த கண்டக்டர் ஸீட்டில் உட்கார்ந்தேன்.

பஸ் புறப்படும் நேரத்தில் கண்டக்டர் வந்து “எந்திரிய்யா… போலீஸ் ஆபீஸர் வர்றார்…” என்று என்னை எழுப்பி விட்டார்.

நல்ல உயரமும், கட்டுமஸ்தான உடம்பும் இளம் மீசையுமாக, தூய வெள்ளையுடையில் மஃப்டியில் வந்திருந்த அந்த இளைஞனைப் பார்த்ததும், அந்த முகம் எங்கோ பார்த்த முகமாகத் தோன்றியது…

பஸ்ஸில் ஏறி, கண்டக்டர் காட்டிய ஸீட்டில் உட்காரப்போன அந்த இளைஞன், சட்டென்று என்னைப் பார்த்ததும், ‘ஸார், நீங்களா? சௌக்கியமாயிருக்கீங்க்களா? உட்காருங்க ஸார்!’ என்று என்னைப் பணிவோடு விசாரித்து உட்காரச் செய்தான்.

அவன் யார் என்று அடையாளம் தெரியாமல் வழக்கம்போல், பேந்தப் பேந்த விழித்தேன்.

“ஸார்! என்னை ஞாபகம் இல்லையா? நான்தான் ராஜேந்திரன். மூணு வருஷத்துக்கு முன்னாலே உங்க காலேஜிலே, பி.ஏ. படிச்சேன். ஐ.பி.எஸ். எக்ஸாமினேஷனிலே பாஸ் பண்ணி, டிரெயினிங் முடிஞ்சு மதுரையிலே, அடுத்த வாரம் டி.ஒய்.எஸ்.பி.யாக வேலையில் ஜாயின் பண்ணப் போறேன்…” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொன்டான், அவன்.

இப்போது நான் அவனை நன்றாக அடையாளம் புரிந்து கொண்டேன்.

அந்த ராஜேந்திரன், கல்லூரியில் படிக்கும்போது, இவ்வளவு திடகாத்திரமாக இருக்கவில்லை. சுமாரான உடற்கட்டோடு இருப்பான். ஆனால் விளையாட்டுக்களிலும், என்.சி.சி.யிலும் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வான்.

தானுண்டு, தன் படிப்பு உண்டு என்று எப்போதும் லைப்ரரியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். வகுப்பிலும் அடக்க ஒடுக்கமாக முன் பெஞ்சில் அமர்ந்து பாடங்களைக் கவனிப்பான். யாரொடும் அனாவசியமாக அரட்டையடிக்க மாட்டான்.

கல்லூரியில் ஏதாவது ஸ்டிரைக், தகராறு, போராட்டம் என்றால், சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குக் கிளம்பிப் போய்விடுவான் – அவ்வளவு பயந்தாங்கொள்ளி அவன்!

ஒருநாள் ராத்திரி பதினொரு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டினான் அவன்.

எழுந்து வந்து, என்ன விஷயம் என்று கேட்டேன்.

“ஸார், ஸார்…! ஹாஸ்டலில் பெரிய தகராறு நடக்கும் போலிருக்கு ஸார்… யூனியன் எலக்ஷனிலே ரெண்டு கோஷ்டியும் ராத்திரிக்குள்ளே அடிச்சுக்கிடுவாங்க போலிருக்கு! நான் பயந்து ஓடிவந்திட்டேன்… இங்கே ராத்திரி படுத்திருந்திட்டு, நாளை விடிகாலையிலே ஊருக்குப் போயிடறேன், ஸார்!” என்று நடுங்கும் உடலோடும் குரலோடும் கெஞ்சினான் ராஜேந்திரன்.

அவனுக்குத் தைரியம் சொல்லிச் சமாதானப்படுத்தி, ஹாஸ்டலுக்கு அனுப்புவதற்குள் விடிந்து விட்டது.

அப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளி, இப்போது ஐ.பி.எஸ்.ஸில் போலீஸ் ஆபீஸர்!

“வெரிகுட் ராஜேந்திரன்! ரொம்ப சந்தோஷம்” என்று மகிழ்ச்சியோடு அவனை வாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தேன்.

திருப்பத்தூரில் இறங்கி நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, அங்கே உட்கார்ந்திருந்தவனைப் பார்த்துத் திகைத்துப் போனேன்.

முன்னாள் ‘தலைவர்’ சுப்பிரமணியன்தான் உட்கார்ந்திருந்தான்.

“ஸார், வணக்கம்!” என்று எழுந்து நின்றான் அவன்.

“வா சுப்பு! உனக்கு ஆயுசு நூறு… உன்னைத் தான் நினைச்சுக்கிட்டே வந்தேன்…”

“என்னைக் கூட நினைப்பீங்களா ஸார்?” என்று நம்பிக்கையில்லாமல் கேட்டான் அவன்.

“ஏன் எல்லா ஸ்டூடண்ட்ஸையும்தான் நினைச்சுக்குவோம்” என்று சொல்லி விட்டு, “அதுசரி, உட்கார்… சௌக்கியமாயிருக்கியா? இப்போ எங்கே வேலை பார்க்கிறே?” என்று விசாரித்தேன்.

“வேலை தேடற வேலைதான் பார்த்துக்கிட்டிருக்கேன் ஸார்! ஒரு வேலையும் கிடைக்களே. நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் இங்கே மில் வைச்சிருக்கார். அதிலே வேலை கிடைக்குமானு கேட்கத்தான் வந்தேன். அப்படியே உங்களைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன். நீங்க சௌக்கியமாயிருக்கீங்களா ஸார்?” என்று பரிவோடு கேட்டான் சுப்பிரமணியன்.

“நீ பி.எஸ்.ஸி. முடிச்சிட்டே இல்லியா? டிகிரி வாங்கிட்டியா!”

“இல்லே ஸார்! தேர்ட் பார்ட் எல்லாம் அப்படியே அர்ரியர்ஸாய் நின்னு போயிடுச்சு… காலேஜ் ஹாஸ்டல் மாதிரி, ஊரிலே, வீட்டிலே வசதிகள் இருக்குமா? ஊரிலே படிக்கவே முடியலே. படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, வேலை தேட ஆரம்பிச்சுட்டேன்” என்று அவன் குரலில் ஆழமான சோகம் சுருதியாக  இழைந்தது.

அன்று இரவு என் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஊருக்குப் புறப்பட்டான் அவன்.

அந்த ஒரு நாள் அனுபவம், என் உள்ளத்தில் தீவிரமான சிந்தனையலைகளை எழுப்பி விட்டது.

கல்லூரி என்பது வருங்காலத்தை உருவாக்கும் இடம் என்று சொல்லுகிறோமே, அது எந்த அளவுக்கு உண்மை…?

கல்லூரியிலே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தலைவரா’கத் திகழ்ந்த ஒருவன், வேலை தேடித் திரியும் ஒரு சாதாரண ஆளாக அலைந்து திரிகிறான்…!

கல்லூரியில் அரசியல் பக்கமே தலை வைத்துப் படுக்காத ஒருவன் அரசியலில் ஈடுபட்டு, அமைச்சராகவே உயர்ந்து விட்டான்!

அரசியல் நடவடிக்கைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருத்தன், சிறிதும் வளர்ச்சியோ, முன்னேற்றமோ அடையாமல் கீழ்மட்டத்திலேயே உழன்று கொண்டிருக்கிறான்.

சண்டை, தகராறு என்றாலே பதுங்கி ஒளியும் பயந்தாங்கொள்ளி ஒருவன், போலீஸ் ஆபீஸராகப் பரிணமித்திருக்கிறான்.

இவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கும் – கல்லூரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையோ…?

மறுநாள் கல்லூரி முதல்வரிடம் அன்று சந்தித்த மாணவர்களைப் பற்றிச் சொன்னேன்.

“ஸார்! எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கு ஸார்!” என்றதும் பிரின்ஸ்பால் மெதுவாகஸ் சிரித்தார்.

“மிஸ்டர் ரகு! இதிலே ஆச்சரியப்பட என்ன இருக்கு? கல்லூரி என்பது, படிப்பும் பயிற்சியும் பெறுகிற ஸ்தலம். பிற்கால வாழ்க்கைக்கு தேவைப்படும் அறிவையும் கருவிகளையும் சேகரித்துக் கொள்ளும் இடம் இது. இதிலே கருவிகளைப் பயன்படுத்தி வீணாக்கிவிடக் கூடாது. பழங்காலத்திலே முனிவர்கள் காட்டுக்குப்போய் மூச்சடக்கி, பசி, தாகம், இன்பம் எல்லாம் துறந்து, ஆசைகளை அடக்கித் தவம் செய்து சக்தி பெற்றதாகச் சொல்வார்களே, அது மாதிரி மாணவர்கள் படிப்பதும் ஒரு ‘தவம்’ தான்! படிக்கிறபோது, தன் விருப்பு வெறுப்புகளைத் துறந்து, சுதந்திர உரிமை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், ஆத்திரம், கோபத்தையெல்லாம் அடக்கி, படிப்பே லட்சியமாயிருக்கணும். அப்படி இருந்த பிறகு, கிடைக்கிற சக்தியும் அறிவும் பிற்காலத்து வாழ்க்கைக்கு உதவி செய்யும். உயர்வை ஏற்படுத்தும். தவம் செய்ய வேண்டிய காலத்தை வீணாக்கிட்டா, பின்னாலே அவனுக்கு சக்தி எப்படி உண்டாகும்?” என்று கேட்டார் அவர்.

முதல்வரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க ஏதும் தோன்றாமல் நின்றேன் நான்.

என் மனத்திரையில் நிழலுருவங்களாய்ப் பழைய மாணவர்கள் தோன்றி மறைந்தார்கள்.

Share this post:

சிறுகதை: கதவு – கி.ராஜநாராயணன்

கதவு ஆட்டம் ஆரம்பமாகியது.

பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள்.

“எல்லாரும் டிக்கெட்டு  வாங்கிக்கிடுங்க” என்றான் சீனிவாசன். உடனே  “எனக்கொரு டிக்கட், உனக்கொரு டிக்கட்” என்று சத்தம் போட்டார்கள்.

“எந்த ஊருக்கு வேணும்? ஏய்… இந்த மாதிரி இடிச்சித் தள்ளினா என்ன அர்த்தம்… அப்புறம் நான் விளையாட்டுக்கு வரமாட்டேன்.”

“இல்லை, இல்லை,  இடிச்சித் தள்ளலெ.”

“சரி எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?”

குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன் “திருநெல்வேலிக்கு” என்று சொன்னான். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு” என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும்.

லட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள் .சீனிவாசன் வெறுங்கையால் டிக்கட் கிழித்துக் கொடுத்து முடித்ததும், கதவில் பிடித்துத் தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது ஏறி நிற்கும் அக்குழந்தைகளை, அந்த பாரமான பெரிய கதவு பொங்கி பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை, வேகமாக ஆடி மகிழ்வித்தது. “திருநெல்வேலி வந்தாச்சி” என்றான் சீனிவாசன். எல்லோரும் இறங்கினார்கள். கதவைத் தள்ளியவர்கள் டிக்கட் வாங்கிக் கொண்டார்கள். ஏறினவர்கள் தள்ளினார்கள். மீண்டும் கதவாட்டம் தொடங்கியது.


அது  பழைய காலத்து காரை வீடு. பெரிய ஒரே கதவாகப் போட்டிருந்தது. அதில் வசித்து வந்தவர்கள் முன்பு வசதி உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது ரொம்பவும் நொடித்துப் போய் விட்டார்கள். அந்த வீட்டிலுள்ள குழந்தைகளில் மூத்ததற்கு எட்டு வயது இருக்கும்; இன்னொரு கைக்குழந்தை.

அம்மா காட்டுக்கு வேலை செய்யப் போய்விடுவாள். அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்யப் போய்விட்டார். லட்சுமியும் சீனிவாசனும் கைக்குழந்தையை அம்மா  காட்டிலிருந்து வரும்வரை வைத்துக் கொண்டு கதவோடு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.


ஒரு நாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில் ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன் பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும் பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டது என்று.

படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்து, தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். சிரித்துக் கொண்டாள். காண்பிக்க பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டி அடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.

லட்சுமி வீட்டுக்கு வந்தபோது சீனிவாசன் நாடியைக்  கையில் தாங்கிக் கொண்டு வாசல்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் லட்சுமி படத்தை பின்புறமாக மறைத்துக்கொண்டு “டேய் நா என்ன  கொண்டு வந்திருக்கேன் சொல்லு பார்ப்போம்” என்றாள்.

“என்ன கொண்டு வந்திருக்கியோ? எனக்கு தெரியாது”

“சொல்லேன் பார்ப்போம்”.

“எனக்கு தெரியாது.”

லட்சுமி தூரத்தில் இருந்தவாறே படத்தை காண்பித்தாள்.

“அக்கா அக்கா, எனக்கு தரமாட்டியா” என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான் சீனிவாசன். ‘முடியாது’ என்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலேதூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் அவளைச் சுற்றி சுற்றி வந்தான். “ம்ஹூம், முடியாது. மாட்டேன்… நான் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா?” என்றாள்.

“ஒரே தடவை பாத்துட்டுக் கொடுத்துர்றேன். அக்கா, அக்கா” என்று கெஞ்சினான்.

“பாத்துட்டுக் கொடுத்துறணும்”

“சரி”

“கிழிக்கப்படாது”

“சரி சரி”

சீனிவாசன் படத்தை வாங்கிப் பார்த்தான். சந்தோஷத்தினால் அவன் முகம் மலர்ந்தது .

“டேய் உள்ளே போய்க் கொஞ்சம் கம்மஞ்சோறு கொண்டா, இந்த படத்தை நம்ம கதவிலெ ஒட்டணும்” என்றாள்.

“ரொம்ப சரி” என்று உள்ளே ஓடினான் சீனிவாசன்.

இரண்டு பேருமாகச் சேர்த்து கதவில் ஒட்டினார்கள் . படத்தைப் பார்த்து சந்தோஷத்தினால் கைதட்டிக்கொண்டு குதித்தார்கள் . இதைக் கேட்டுப் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஓடிவந்தன . மீண்டும் கதவு ஆட்டம் தொடங்கியது!


அந்தக் கதவைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்கிறவர்களுக்கு, இந்தக் குழந்தைகள் ஒட்டிய படத்துக்குச் சற்று மேலே இதே மாதிரி வேறு படம் ஒன்றை ஒட்டி இருப்பது தெரியவரும் . அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டதால், அழுக்கம் புகையும் பட்டுமங்கிப் போய் இருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம்.

குழந்தைகள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போது கிராமத்துத் தலையாரி அங்கே வந்தான்.

“லட்சுமி உங்க ஐயா எங்கே?”

“ஊருக்கு போயிருக்காக”

“உங்க அம்மா?”

“காட்டுக்குப் போயிருக்காக”

“வந்தா, தீர்வையைக் கொண்டு வந்து போடச் சொல்லு . தலையாரித் தேவரு வந்து  தேடீட்டுப் போனாருன்னு சொல்லு”

“சரி” என்ற பாவனையில் லட்சுமி தலையை ஆட்டினாள் .


மறுநாள் தலையாரி லட்சுமியின் அம்மா இருக்கும்போதே வந்து தீர்வைப் பாக்கியைக் கேட்டான்.

“ஐயா, அவரு ஊரிலே இல்லை.  மணிமுத்தாறு போயி அஞ்சி மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே. நாங்க என்னத்தை வச்சு உங்களுக்கு தீர்வைப் பாக்கியைக் கொடுப்போம்? ஏதோ காட்டிலே போய்க் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைகளைக் காப்பாத்ரதே பெரிய காரியம்! உங்களுக்கு தெரியாததா?” என்றாள்.

இந்த வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை; இந்த மாதிரியான வசனங்களை பலர் சொல்லிக் கேட்டவன் அவன்.

“நாங்கள் என்ன செய்ய முடியும்மா இதுக்கு; இந்த வருசம் எப்படியாவது கண்டிப்பா தீர்வை போட்றணும். அப்புறம் எங்கமெலே சடைச்சிப் புண்ணியம் இல்லை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.


ஒரு நாள் காலை, வீட்டின் முன்னுள்ள மைதானத்தில் குழந்தைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தலையாரி, நான்கு பேர் சகிதம் வீட்டை நோக்கி வந்தான். வந்தவர்கள் அந்தக் கதவைத் தூக்கிக் கழற்ற முயன்றார்கள்; முடியவில்லை. குழந்தைகள் வீட்டுப் பக்கம் ஓடிவந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இது ஒரு  வேடிக்கையாக இருந்தது. தலையாரியும் சேர்ந்து பிடித்து ஒரு மாதிரி சுழற்றி, நான்கு பேரும் கதவை தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அதை ஒரு ஊர்வலம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. ஒருவன் நாதஸ்வரம் வாசிப்பவனைப்போல் கைகளை வைத்துக்கொண்டு “பீப்பீ… பீ… பீ…” என்று சத்தம் கொடுத்தான். இன்னொருவன் இரண்டு கைகளாலும், ஆள்காட்டி விரல்களை நீட்டிக்கொண்டு, உடலைப் பின் வளைத்துத் துடைகளின்மேல் ஓங்கி அடிப்பதாக பாவனை செய்து “திடும்… திடும்…ததிக்குண…. த்திக்குண” என்று தவுல் வாசிப்பவனைப்போல் ழுழங்கினான். சீனிவாசனும் இதில் பங்கெடுத்துக் கொண்டான். இப்படி உற்சாகமாக குழந்தைகள் கதவைத் தூக்கிக் கொண்டு செல்கிறவர்களின் பின்னே ஊர்வலம் புறப்பட்டார்கள்.

தலையாரியால் இதைச் சகிக்க முடியவில்லை. “இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளே” என்று கத்தினான். குழந்தைகள் ஓட்டம் பிடித்தன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வரும்போது லட்சுமி வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அரவம் செய்யாமல் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. சீனிவாசனும் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டான். இப்படி வெகுநேரம் அவர்களால் இருக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு பெண், “நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று எழுந்தாள். உடனே எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். லட்சுமியும் சீனிவாசனும் மாத்திரம் அங்கிருந்தார்கள். வெகுநேரம் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசவில்லை.

கைக்குழந்தை அழும் குரல் கேட்கவே லட்சுமி உள்ளே திரும்பினாள். இதற்குள் சீனிவாசன் அக்குழந்தையை எடுத்துக்கொள்ளப் போனான். குழந்தையைத் தொட்டதும் கையைப் பின்னுக்கு இழுத்தான். அக்காவைப் பார்த்தான். லட்சுமியும் பார்த்தாள்.

“பாப்பாவைத் தொட்டுப்பாரு அக்கா; உடம்பு சுடுது” என்றான். லட்சுமி தொட்டுப் பார்த்தாள்; அனலாகத் தகித்தது.

சாயந்திரம் வெகுநேரம் கழித்து அம்மா தலையில் விறகுச்சுள்ளிகளுடன் வந்தாள். சுள்ளிகள் சேகரிக்கும்போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்ற அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து கைக்குழைந்தையை வாங்கிக்கொண்டாள். ‘உடம்பு சுடுகிறதே?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இதற்குள் குழந்தைகள் காலையில் நடந்த சேதியை அம்மாவிடம் சொன்னார்கள்.

செய்தியைக் கேட்டதும் ரங்கம்மாவுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது; உடம்பெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு நடுக்கம் பரவியது. அவள் விடும் சுவாசத்தின் வெப்பம் அதிகமாகியது. வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி தோன்றியதுபோல், குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் அழக்கூடாது என்று எவ்வளவுதான் அடக்கினாலும் முடியவில்லை. “என்னைப் பெத்த தாயே” என்று அலறிவிட்டாள். பயத்தினால் குழந்தைகள் அவள் பக்கத்திலிருந்து விலகிக் கொண்டார்கள். இனம் தெரியாத காரணத்தினால் அழ ஆரம்பித்தனர்.


மணிமுத்தாறிலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. நாட்கள் சென்றுகொண்டே இருந்தன. இரவு வந்துவிட்டால் குளிர் தாங்க முடியாமல் குழந்தைகள் நடுங்குவார்கள்; கதவு இல்லாததால், வீடு இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கார்த்திகை மாசத்து வாடை, விஷக்காற்றைப்போல் வீட்டினுள் வந்து வந்து அலைமோதிக் கொண்டே இருந்தது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வந்தது. ஒரு நாள் இரவு வாடை தாங்காமல் அது அந்த வீட்டை விட்டு அவர்களையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டது. ரங்கம்மாளின் துயரத்தை அளவிட்டுச் சொல்லமுடியாது. லட்சுமிக்காகவும், சீனிவாசனுக்காகவுமே அவள் உயிர் தரித்திருந்தாள்.


சீனிவாசன் இப்பொழுது பள்ளிக்கூடம் போகிறான். ஒரு நாள் அவன் மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும்போது ஒரு தீப்பெட்டிப் படம் கிடைத்தது. கொண்டுவந்து தன் அக்காவிடம் காண்பித்தான். லட்சுமி அதில் ஆர்வம் கொள்ளவில்லை.

“அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து. பசிக்கி; சாப்பிட்டு இந்தப் படத்தை ஒட்டணும்”

“தம்பீ, கஞ்சி இல்லை” இதை அவள் மிகவும் பதட்டத்தோடு சொன்னாள்.

“ஏன்! நீ காலையில் காய்ச்சும்போது நான் பாத்தேனே?”

‘ஆம்’ என்ற முறையில் தலையசைத்துவிட்டு, “நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்துவிட்டுப் போய்விட்டது தம்பி. கதவு இல்லையே” என்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க. தன்னுடைய தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாளே என்று நினைத்து உருகினாள் லட்சுமி.

சீனிவாசன் அங்கே சிதறிக் கிடந்த கம்மம் பருக்கைகளை எடுத்து படத்தின் பின்புறம் தேய்த்து ஓட்டுவதற்கு வந்தான். கதவு இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுவரில் ஒட்டினான். படம் கீழே விழுந்துவிட்டது.

அடுத்த இடத்தில், அடுத்த சுவரில், எல்லாம் ஒட்டிப் பார்த்தான்; ஒன்றும் பிரயோசனம் இல்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் அவன் அழ ஆரம்பித்தான்.


சாயந்திரம் லட்சுமி சட்டிபானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தான்.

“அக்கா அக்கா நம்ம பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே சாவடி இருக்கு பாரு, அதுக்குப் பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா! கண்ணாணை, நான் பார்த்தேன்” என்றான்.

“அப்படியா! நிஜமாகவா? எங்கே வா பார்ப்போம்” என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள். இருவரும் கிராமச் சாவடி நோக்கி ஓடினார்கள்.


உண்மைதான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள். பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா எனச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை.

அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது. அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள், தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள்.

கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக்கொண்டாள். அழவேண்டும்போல் இருந்தது அவளுக்கு! சீனிவாசனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்துச் சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன.

Share this post: