தென்னிந்தியாவில் இருந்த சோழ நாட்டில், திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு நெடுங்காலம் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்து, பிறகு மகன் ஒருவன் பிறந்தான். அம் மகனின் பெயர் வீதிவிடங்கன்.
வீதிவிடங்கன், மிகுந்த அடக்கமும் நல்ல குணங்களும் உடையவன். அவன், ஒரு நாள், தேர்மீது ஏறிக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றான். அப்பொழுது அவனுடன் பலர், தெரு வழியே சென்றனர். மேளவாத்தியம் ஒலித்தது. பலவகை வெடிகள், விண் அதிர வெடித்தன. இடி ஓசை போன்ற வெடி ஓசை கேட்டுப் பசுக்கன்றுகள் நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடின. அவற்றில் ஒன்று, வழிதெரியாமல் கூட்டத்தில் புகுந்து கடைசியில் தேரின் சக்கரத்தில் அகப்பட்டு இறந்துவிட்டது. பாவம்! எவரும் அதனைக் கவனிக்கவில்லை.
கன்று இறந்ததை வீதிவிடங்கன் அறிந்து, தேரிலிருந்து இறங்கிவந்து கன்றைப் பார்த்து வருந்தினான். அப்பொழுது கன்றைத் தேடிவந்த தாய்ப்பசு, கன்று இறந்து கிடக்கக்கண்டு, அதனை மோந்து பார்த்துக் கதறியது. கதரியவண்ணம் அரண்மனையை நோக்கி விரைந்து ஓடியது.

அரண்மனை வாயிலின் முன் சென்ற தாய்ப்பசு, வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அசைத்தது. மணி ஓசை கேட்டு, மன்னன் மனுநீதி, அரண்மனையுள் இருந்து வெளியே வந்தான்; அமைச்சர் மூலம் நிகழ்ந்ததை அறிந்தான்; பசுவின் கண்ணீரைக் கண்டு தன் உள்ளம் வருந்தினான். “என் மகன் பசுவின் கன்றைக் கொன்றதால், தாய்ப்பசு தவிக்கின்றது. இதற்கு நியாயம் வழங்க வேண்டும்; கன்று இறந்த இடத்தில், கன்றைப் போலவே என் மகனையும் கொல்வதே முறை” என்று, நீதியை எடுத்துக் கூறினான்.
இவ்வாறு கூறிய மனுநீதி, தான் சொன்னபடியே தன் மகன் வீதிவிடங்கனைத் தேர்ச்சக்கரத்தின் கீழ் வைத்துக் கொன்றான்.
மன்னன் மனுநீதியின் நீதிமுறையை மக்கள் அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
(திரு. மயில்வாகனன் அவர்கள் எழுதிய, “உலக அதிசயக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)