இளமைத் திமிரும் வயதின் முறுக்கும் கொண்ட ஆயிரம் ஆயிரம் பெண்களுக்குத் திடீரென்று ஒரே சமயத்தில் பேய் பிடித்துக் கொண்டு தலைசுற்றி ஆடத் தொடங்கினால் எப்படி இருக்கும்? பயங்கரமான ஒரு மந்திரவாதியின் இரக்கமற்ற சவுக்கடி தாங்காது அவர்கள் ரத்தம் கக்கி அலறினால் எப்படி இருக்கும்? – உண்மையிலேயே இயற்கைப் பெண்ணுக்குப் பேய்பிடித்து விட்டதா? கடவுள் என்னும் மந்திரவாதி அவளுடைய வெறி கண்டு சீற்றம்கொண்டு அவளை இப்படி அலறித்துடிக்க வைக்கிறானோ?
கடலோரமாக இருந்த அந்தக் கிராமம் புயலால் மதயானையின் கையிலகப்பட்ட மலர் மாலையாகிக் கொண்டிருந்தது. பெரிய பெரிய மரங்களெல்லாம் பம்பரம்போல் சுழன்று பூமியின் நெஞ்சுக்குள் ஓடியிருந்த ஆணிவேர்களைப் பிய்த்துக்கொண்டு விழுந்தன. கடல் அலைகள் திமிங்கலங்களாக வாயைப் பிளந்து கரையோரத்தில் நின்ற குடிசைகளை விழுங்கின. பேய்க் காற்றில் அகப்பட்டு வீட்டுக் கூரைகளான, தென்னங் கீற்றுகளும், தகரத்தகடுகளும், சீமை ஓடுகளும் பட்டபாடு…!
ஊருக்கு மத்தியில் ஒய்யாரமாக நின்ற ஒரு மாடி வீட்டுக்குள்ளிருந்து சன்னல்வழியாக மூன்று பேர் இந்தக் காட்சியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெரிய மனிதர் ஒருவர், அவர் மனைவி, பையன். அந்தப் பெரிய மனிதர் சென்னையில் குதிரைப் பந்தயம் பார்ப்பதற்காக வாங்கிய தூரதிருஷ்டிக் கண்ணாடியால் கடலின் கொந்தளிப்பைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி தான் உடுத்தியிருந்த கொள்ளேகாலம் பட்டுப் புடவையால் உடம்பை இழுத்துப் போர்த்துக் கொண்டு பயத்தால் சுருண்டு கொள்ளும் முள்ளம்பன்றிபோல் நாற்காலியில் முடங்கிக் கிடந்தாள். பையன் திறந்த கண்ணை இமைக்காமல் சன்னலுக்கு வெளியே நிலைகுத்திய பார்வையில் இருந்தான்.
பையனின் மனம் அவனிடமில்லை. எதிரே குமுறிக் கொண்டிருந்த கிராமப் பகுதியையும், கடலையும், கார்மேகத்தையும், அடிவானத்தையும் அளந்துவிட்டு அதற்கப்பாலும் தாண்டிச் சென்றது. அடிக்கடி தன் கண்களில் தேங்கும் கண்ணீரை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டான். அவனுக்கு எதிரிலேயே நூற்றுக் கணக்கான குடிசைகள் இருந்த இடம் தெரியாமல் கடல் அலைகளால் பிய்த்துப் பிய்த்துச் சின்னாபின்னப் படுத்தப்பட்டன.
“பெரிய பட்டாளமே திரண்டு வராப்போல தெரியுது. எல்லாக் கூட்டமும் ஊருக்குள்ளேதான் ஓடிவருது” என்றார் பெரியவர்.
கண்ணாடி வழியே கவனித்துக் கொண்டிருந்த அவரைத் திரும்பிப் பார்த்தாள் மனைவி. அவள் ஒன்றும் பேசவில்லை.
“ஊருக்குள்ளே ஓடி வராமல் கடலுக்குள்ளேயா போய் விழுவாங்க?” என்றான் பையன்.
“ஒண்ணா ரெண்டா, ஆயிரம்பேர் வந்தா அத்தனை பேருக்கும் இடத்துக்கு எங்கே போறது?”
“மனமிருந்தால் இடமிருக்கும்.”
தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இந்தமாதிரிப் பேச்சு ஆரம்பமாவதைப் பிடிக்காதவள்போல் தாயார் குறுக்கிட்டாள். “ஊர்வம்பு நமக்கெதுக்கு? அடுப்பிலே சூடா உருளைக் கிழங்கு வருவல் போடச் சொல்லியிருக்கேன்; ஒரு நிமிஷத்தில் வந்திடும், பேசாமல் சாப்பிட்டுச் சும்மா இருந்தால் போதும்.”
‘ஊர்வம்பு’க்கு இவர்கள் போகாவிட்டாலும் ஊர்வம்பு இவர்களைத் தேடிக்கொண்டு வந்தது. கரையோரமாகக் குடியிருந்தவர்கள் அடித்துப் புடைத்துக்கொண்டு குழந்தை குட்டிகளுடன் ஊருக்குள் நுழையத் தலைப்பட்டார்கள். மாடி வீடுகள் அதிகமாயிருந்த இவர்களுடைய தெருவில் அந்தக் கூட்டம் புகுந்து நாலுபுறமும் சிதறிப்போய் ஒண்டிக் கொண்டது. இவர்களுடைய வீட்டு முகப்பிலும் சிலர் கூடினார்கள்.
பையன் அவசர அவசரமாகக் கீழே இறங்கிப்போனான். “எங்கேடா போகிறாய்-?” என்ற அவன் தாயாரின் கேள்வியை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கீழே இறங்கிச் சென்று வெளிவராந்தாவில் கூடியிருந்தவர்களை ஹாலுக்குள் நின்றபடியே சன்னல் வழியாகப் பார்த்தான். நேற்றுப் பிறந்த பச்சைக் குழந்தைகள் முதல், நாளைக்குச் சாகப்போகிற தொண்டு கிழங்கள்வரை அங்கே வந்திருந்தனர். ஒரு உடம்பாவது நனையாமல் இல்லை; ஒரு உடம்பாவது நடுங்காமல் இல்லை; குளிர் தாங்க முடியாமல் வெறும் கைகளை மடக்கித் தங்கள் நெஞ்சுகளை மறைத்துக் கொண்டிருந்தார்கள் ஆண்கள். பெண்களின் தேகத்தை துணி என்ற பெயருள்ள கந்தல்கள் மூடி மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தன. வெளிவராந்தாவில் இடம் நிறைந்ததால் வெளியே தரையில் பலர் தூண்களைப் பற்றிக் கொண்டு நின்றனர்.
பையன் கீழே இறங்கிய அதே வேகத்தில் திரும்பவும் மேலே வந்தான்.
“அப்பா!”
அப்பா அப்போதுதான் வெளியே அதிக அக்கறையுடன் பார்க்கலானார். பையன் அழைப்பதன் காரணத்தை அவர் ஊகித்துக் கொண்டதால் அவருக்கு அவன் பேச்சைக் கேட்பதில் இஷ்டம் இல்லை.
“அப்பா!”
அப்பா திரும்பி மூக்குக் கண்ணாடி வழியே நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பிள்ளையைப் பார்த்தார்.
“வராந்தாவில் நிற்க இடமில்லை. பாதிப்பேர் நடுத்தெருவில் மழையில் நனைகிறார்களப்பா! காற்று அவர்களை அடித்துக்கொண்டு போய்விடும் போலிருக்கிறது!”
“அதற்காக?”
“கொஞ்ச நேரத்துக்கு வெளிக்கதவைத் திறந்து உள்ளே விட்டால் அவர்களுக்குச் சௌகரியமாக இருக்கும். ஹாலில்தான் நிறைய இடம் இருக்கிறதே!”
தகப்பனார் கேலியாகச் சிரித்தார். தம்முடைய மனைவியைப் பார்த்து, “பிள்ளையாண்டானுடைய யோசனையைக் கேட்டியா? ஹால் மாத்திரம் வேண்டாம்; வீட்டையே அவுங்களுக்கு ஒழிச்சுக் கொடுத்திட்டு நம்ம நடுத்தெருவுக்குப் போகலாமே.”
“ஹால் சும்மாதானே அப்பா இருக்கிறது? நமக்கு இப்போது உபயோகமில்லாத இடத்தை நாலு நாழி அவர்களிடம் விட்டால் என்ன?”
“நீ சும்மா இருடா குழந்தை! உனக்கு ஒன்னுந் தெரியாது; நீ சிறுபிள்ளை” என்று தாயார் குறுக்கிட்டாள். பின்பு பையனின் முகம் வருத்தத்தால் சுருங்குவதைக் கண்டவுடன் அவளுக்கு அவனிடம் ஏதாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.
“உனக்கு அவர்களோட குணந்தெரியாது. அத்தனையும் திருட்டுக் கழுதைகள்! ஹாலுக்குள்ளே அவர்களை விட்டு யாராலே காவல் காக்க முடியும்?”
பையனுக்குத் தாயாரின் சமாதானம் உண்மை என்று தோன்றவில்லை. “திருட்டுப் போறதுக்கு அந்த இடத்தில் சாமானே கிடையாதே! நான் வேணுமானால் அங்கேயே இருந்து அவர்கள் எதையும் தொடாமல் பார்த்துக் கொள்கிறேன்.”
தாயாருக்குத் தர்மசங்கடம். தகப்பனாருக்கு உள்ளுக்குள் கோபம், பையனோ விடுவதாக இல்லை.
“கண்டவனுவ எல்லாரையும் வீட்டுக்குள்ளே விடச் சொல்றியா? இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்கற பசங்க அத்தனை பேரும். நீ சும்மா இருக்கமாட்டே?” என்று தம் கோபத்தை வெளியிட்டார் அவர்.
“கோயிலுக்குள்ளே எல்லோரையும் விடுகிறபோது…” என இழுத்தான் பையன். கடவுளின் வீடான கோயிலைவிட மனிதனின் வீடான இந்த மாளிகை உயர்ந்ததா என்பது அவனுடைய எண்ணம்.
“கோயில் சர்க்கார் சொத்து; இது என்னோட பாட்டன் சம்பாதித்த சொத்து!”
பையன் கொஞ்ச நேரத்துக்கு வாயை மூடிக்கொண்டிருந்தான். தகப்பனார் வாயில் வந்தபடி சர்க்காரையும் சட்டத்தையும் திட்டத் தொடங்கினார். கோயிலுக்குள்ளே எல்லோரையும் விட்டதிலிருந்து கடவுள்களெல்லாம் புறப்பட்டுப்போய்க் கங்கையில் விழுந்து விட்டார்களாம். உழைப்பவர்களுக்குச் சாதகமாகச் சட்டம் வந்ததிலிருந்து ஏழை எளியவர்களுக்கெல்லாம் திமிர் பிடித்துவிட்டதாம். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று இல்லாமல் ஊர் முழுவதும் கெட்டுப் போய்விட்டதாம். ‘சர்க்கார் வந்து இப்போது இவர்களுக்கு இடம் கொடுக்கட்டுமே’ என்று சவால் விட்டார் பெரியவர்.
முகத்தைத் தொங்க விட்டுக்கொண்டு சும்மா இருப்பதைத் தவிர பையனுக்கு வேறு வழியில்லை. தகப்பனாரிடம் அகப்பட்டுக்கொண்டு அரசாங்கமே அந்தப் பாடுபடும்போது அவன் எம்மாத்திரம்? உலகத்து அரசியலைக் கரைத்துக் குடித்தவர்போலவும், பொருளாதாரத்தைப் பத்து வருஷம் ஊன்றிப் பயின்றவர் போலவும் சமூகப் பிரச்சினைகளையெல்லாம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தார்.
உருளைக்கிழங்கு வருவல் வந்தது. பையன் முதலில் அதைத் தொடவில்லை. மற்ற இருவரும் சாப்பிட்டார்கள். கடைசியில் தாயாரின் தொந்தரவுக்காகப் பையன் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
புயலின் வேகம் வரவர அதிகமாயிற்று. பெரியவர் தம்முடைய சொத்து சுதந்திரங்களைப் பற்றி நினைத்தார். நெல் வயல்கள் அவருக்கு நிறைய இருந்தன. அவைகளுக்கு அதிகமான நஷ்டம் இருக்காது. அடுத்தாற்போல் அவருடைய வாழைத் தோட்டம் ஞாபகத்திற்கு வந்தது.
“ஒரு வாழைகூட நிலைச்சு நிற்காது; ஆறு ஏக்கர் தோட்டமும் அப்படியே பாழாய்ப் போகும்?”
“நல்ல வேளை!”
தாயாரின் பேச்சு அந்த இடத்தில் அசம்பாவிதமாக இருந்ததால் பையன் தகப்பனாரைக் கவனித்தான்.
“காலணாகாசு பாக்கி இல்லாமல் குத்தகையை முன் பணமா வாங்கியாச்சு. கொஞ்சமும் அசந்து போயிருந்தால் இத்தனை நஷ்டத்தையும் நம் தலையிலே போட்டிருப்பான்.”
பையன் வெறுப்படைந்தான். மற்றவர்களுடைய துன்பத்தை மனிதர்கள் பகிர்ந்து கொள்ளுகிற விதமா இது?
அன்றைக்கு இரவு பத்து மணிக்குத்தான் புயல் ஓய்ந்தது. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் படுக்கை அறைக்கு வந்தார்கள். மின்சார விளக்குகள் எரியாததால் மண்எண்ணெய் விளக்குகளைக்கொண்டு காரியங்கள் நடந்தேறின. படுக்கையில் படுத்த பையனுக்குத் தூக்கம் வரவே இல்லை. கண்களை மூடிக்கொண்டு மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான்.
“ராஜா!” என்று அவன் தாயார் செல்லமாய்க் கூப்பிட்டாள்.
பையன் பதில் பேசவில்லை.
“தூங்கிவிட்டான்போல் இருக்கு. அவனைப் போய்த் தொந்தரவு பண்ணாதே. இப்படி வா” என்றார் பெரியவர்.
பிறகு இருவரும் இருளில் தங்கள் பையனைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். பையன் விழித்திருப்பது தெரியாததால், தாராளமாக அவர்களுடைய எண்ணங்கள் வெளிப்பட்டன.
“பையன் போற போக்கைப் பார்த்தியா? எல்லாம் உன்னாலே வந்தது. நாயைக் குளிப்பாட்டி நடுவிலே வைத்தாலும் வாலைக் குழைத்துக்கொண்டு குப்பை மேட்டுக்குத்தான் ஓடும்.”
சுரீர் என்று ஒரு கத்தி மார்புக்குள் நுழைந்து முதுகுப்புறமாய் வெளிவந்த மாதிரி இருந்தது பையனுக்கு.
“இந்த வயசில் இப்படித்தான் கிறுக்குத்தனமாய்ப் பேசுவான். நாலு வருஷம் போனா உங்களைவிடச் சமர்த்தா இருக்கப்போறான் பாருங்க! காலுக்கு ஒரு கட்டுப்போட்டு அவனுக்கின்னு ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரியாப் போகும்.”
“நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா இப்படியெல்லாம் பேசுமா?”
“நடக்காததை ஏன் இப்போ பேசுறீங்க? நம்ம ராஜா நல்ல புத்திசாலியா வருவான் பாருங்க. எல்லாம் வளர்க்கிற முறையிலே இருக்கு!”
“ராத்திரி சாப்பிடறப்போ அவன் என்ன சொன்னான் கேட்டியா? இலையிலே சாப்பாட்டை வைத்துக்கொண்டு இப்படிப் பேசினா எப்படி அந்தச் சோறு உடலில் ஒட்டும்?”
ராத்திரி இலைக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டு அவன் செய்த குற்றத்தை ராஜூ இப்போது எண்ணிப் பார்த்தான். இதே குற்றத்தை மத்தியானமே செய்யும்படி அவனுக்குத் தூண்டுதல் இருந்தது. ஆனால் தனக்குள்ளாகவே வெகுநேரம் போரிட்டுவிட்டு இரவில் சாப்பிடப் போகும்போது அதை ஆரம்பித்தான். சாப்பாட்டு விஷயத்தை சாப்பாட்டு வேளையில் ஆரம்பிக்காமல் வேறு எப்போது ஆரம்பிப்பது?
காலையில் பத்து மணிக்குமேல் வீட்டிற்குமுன் கூடியவர்கள் பொழுது போகும் வரையில் அங்கே நெருக்கிக்கொண்டு கிடந்தார்கள். அதற்குப் பிறகும், இரவு பத்து மணிக்குப் புயல் ஓய்ந்த பின்பும்கூட அவர்கள் எங்கும் போகவில்லை. எங்கே போவார்கள்? எங்கே போய் என்ன செய்ய முடியும்?
சாயங்காலமா வீட்டுக்கு வெளியே ஒரே அழுகை மயமாக இருந்தது; சகிக்க முடியாத அழுகை. சின்னஞ்சிறு குழந்தைகள் பாலுக்கழுதன; வயதுவந்த பிள்ளைகள் சோற்றுக்கழுதன; பெண்கள் காலையிலே கடலுக்குள்போன ஆண்களை நினைத்துக்கொண்டு அழுதார்கள். எல்லோருடைய எல்லாவிதமான அழுகைகளுக்கும் அடியில், அடி வயிற்றில், பசிப்புயல் பதுங்கிச் சீறியதால் அவர்களுடைய அழுகையின் வேகம் ஐம்பது மடங்காகப் பெருகியது.
ராஜுவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஹாலுக்குள் நின்றுமௌனமாக அழுதான். தான் இப்படி அழுவது அவனுக்குக் கோழைத்தனமாகத் தெரிந்தது. ‘திடீரென்று வாசற் கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களை உள்ளே அழைத்தால் என்ன? அரிசி மூட்டை இருக்குமிடத்தைக் காண்பித்து அதை அடுப்பில் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொன்னால் என்ன? ஒரு நாள் – ஒரு வேளைச் சோறு போட்டால், தங்க இடம் கொடுத்தால், இந்தப் பெரியகுடி முழுகியா போய்விடும்?’
ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. சாப்பாட்டிற்குத் தகப்பனாரோடு இலைக்கு முன் உட்கார்ந்தபோது, இலையிலிருந்த நாலுவகைக் கறியும் குழம்பும் அவன் கண்களை உறுத்தின. ஒவ்வொரு அரிசிச் சோறும் ஒரு ஏழைக் குழந்தையாக மாறி, ‘ஐயா, பசிக்குதே!’ என்று அவன் முன்பு அலறியது. அவன் அதைத் தொடவில்லை.
“ஐந்துபடி அரிசியைக் கஞ்சியாய்க் காய்ச்சி ஊற்றினால் நூறு பேருக்குப் பசி அடங்குமே!” என்று ஆரம்பித்தான்.
“என்ன சொல்றே?” என்றார் தகப்பனார்.
சற்று முன்பு சொன்னதையே அவன் திருப்பிச் சொன்னான்; “ஐந்துபடி அரிசிதான் செலவு; நூறு பேருடைய வயிறு குளிரும்.”
“அரிசிக்கு எங்கே போறது?”
அவனுக்கு இந்தக் கேள்வியின் பொருள் விளங்கவில்லை. அரிசிக்கு எங்கும் போகவேண்டாமே! மூட்டை மூட்டையாய் அங்கே அரிசி இருந்தது; களஞ்சியம் களஞ்சியமாய் அங்கே நெல் இருந்தது; எலியும் பெருச்சாளியுமே ஒரு நாளைக்கு ஒன்பதுபடி அரிசியைத் தின்பதாகச் சமையற்காரன் புகார் செய்து கொண்டிருந்தான்.
தகப்பனும் பிள்ளையும் அதற்கப்புறம் பேசிக்கொள்ளவில்லை. இலையில் போட்ட சோற்றை அப்படியே வைத்து விட்டுக் கையலம்பிக் கொண்டான் பையன். தாயார் அவனிடம் வந்து விடாப்பிடியாய்ச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சினாள். எவ்வளவோ சமாதானம் செய்தாள். ஆனால் ஐந்துபடி அரிசியை அதற்காக அவள் இழப்பதற்கு மாத்திரம் தயாரில்லை.
ராஜு அவர்களுடைய சொந்தப் பிள்ளைதான். சொந்தம் என்பதற்கு என்ன அர்த்தம்? வீடு வாசல், காணி கரை, ஆடு மாடு எல்லாம் எப்படி ஒருவருக்குச் சொந்தமாகின்றன? அந்த மாதிரி சொந்தம் இது. பத்தாயிரம் ரூபாய்ப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய அவர்களுடைய சொந்தப் பிள்ளை அவன். ஐந்தாறு குழந்தைகளைப் பெற்றுவிட்டுப் பிறகு வளர்க்க முடியாமல் திண்டாடிய பெற்றோரிடமிருந்து அவனை ஸ்வீகாரம் செய்து கொண்டார்கள்.
படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ராஜுவுக்குத் தூக்கம் வரவில்லை. பெற்ற இடத்தின் பிடுங்கல்களும் வளர்க்கும் இடத்தின் வளர்ப்பமும் மாறி மாறி நினைவில் வந்தன. சோற்றுக்கும் துணிக்கும் அவன் அங்கே பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதற்கு முற்றிலும் மாறாக இங்கே எல்லாம் ராஜபோகமாக இருந்தது. திருச்சினாப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி அவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டியதையும் வேண்டாத்தையும் ஸ்வீகாரப் பெற்றோர்கள் வாங்கி வாங்கிக் கொடுத்தார்கள். ஒன்றே ஒன்றைத் தவிர அவனுக்கு எல்லாம் கிடைத்தன; – உண்மையான அன்பு; ரத்தத்திலே ஊறிய அன்பு.
‘நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்தா இப்படியெல்லாம் பேசுமா?’ என்று அவன் தகப்பனார் தம் மனைவியைக் கேட்டபோது ‘நம்முடைய தகப்பனாராக இருந்தால் இப்படிக் கல்லாலடித்த சிலைபோல் மனம் இரங்காமல் இருப்பாரா?’ என்று எண்ணினான். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததாக அவர் சொன்ன உபமானத்தையும் அவன் மறக்கவில்லை. எங்கேயாவது ஆயிரத்தில் ஒரு நாய்க்குட்டிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது. பாலும், பழமும், பட்டுமெத்தையும், கார் சவாரியும் அதற்கு அளித்துப் பணமுள்ளவர்கள் மகிழ்கிறார்கள். அதனால் எல்லா நாய்களிடமும் அவர்களுக்குப் பிரியம் என்று அர்த்தமா? தினந்தோறும் தோட்டிகளால் அடித்துக் கொல்லப்படும் குப்பைமேட்டு நாய்களின் கூட்டத்தை அவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
பாதி ராத்திரிக்குமேல் புயல் நன்றாக ஓய்ந்துவிட்டது. வானத்தில் மேகங்களைக் காணோம். ராஜு தான் திருச்சியிலிருந்து லீவில் திரும்பும்போது கொண்டுவந்த பதினைந்து ரூபாயை நினைத்துக் கொண்டான். அவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த பணம் அது. பத்திரிகைக்குப் பல கதைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தான். பெரும்பாலும் எல்லாக் கதைகளும் திரும்பிவிட்டன. சமீபத்தில்தான் ஒரு கதையை மட்டும் பிரசுரித்து அதற்காக இந்தப் பணத்தை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார் ஆசிரியர். இந்தச் சமயத்தில் கிடைத்த பதினைந்து ரூபாய் அவனுக்குப் பதினையாயிரம்போல் தோன்றியது.
பொழுது விடிந்தவுடன் ராஜு ஊருக்குள்ளே கிளம்பினான். நல்ல மனிதர்கள் நாலு பேராவது இன்னும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள் என்ற உண்மை அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. ஈவு இரக்கம் உள்ளவர்கள் ஒன்றாய்க் கூடிக் கஞ்சி காய்ச்சி ஏழை எளியவர்களுக்கு ஊற்றிக் கொண்டிருந்தார்கள். உடலில் வலுவிருந்தவர்கள் மரம்மட்டைகளை வீடுகளின் முன்பிருந்து அகற்றிக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த அரசாங்க அதிகாரியும் மற்றவர்களைத் துணையாகக்கொண்டு தம்மாலான உதவிகளைச் செய்தார்.
கரையோரமாக ஒதுங்கியிருந்த ஒரு கட்டை மரத்தைச் சுற்றிலும் சிறிய கூட்டம் இருந்தது. ராஜு கூட்டத்தோடு கூட்டமாய் போய் நின்றான். அங்கே கண்ட காட்சி இருதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. மூன்று பெண்பிள்ளைகள் கட்டை மரத்தின் ஒரு மூலையைக் கட்டிக் கொண்டு ஓவென்று கதறி அழுதார்கள். வாயிலும், வயிற்றிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு புலம்பினார்கள். ராஜு நடந்ததைப் புரிந்து கொண்டான். நேற்றுக் காலையில் கட்டை மரத்திலேறிக் கடலுக்குள் போனவர்கள் திரும்பவில்லை. ஆனால் கட்டை மரம் மாத்திரம் திரும்பிவிட்டது. மூன்று பேர் போனார்களாம். அந்த மூன்று பேர்களுடைய உடல்களும் இப்போது எங்கே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றனவோ? எந்த நிலையில் கிடக்கின்றனவோ?
ஊர்ப்புறத்தில் புயல் விளைவித்திருந்த நாசத்தைப் பார்க்க பார்க்க ராஜுவுக்குத் தன் பையிலிருந்த பணம் பெரும் சுமையாகத் தெரிந்தது. அதைக் கொண்டு எப்படி உதவலாம் என்று எண்ணற்ற யோசனைகள் செய்தான். இந்தப் பணத்தால் எள்ளத்தனை உபகாரம்கூடச் செய்ய முடியாதே என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அநேகம் பேர் தங்களுடைய எல்லாவற்றையும் இழந்து விட்டு நிர்க்கதியாய் நிற்கும்போது தான் மட்டிலும் இந்தப் பதினைந்து ரூபாய்க்குச் சொந்தக்காரராக இருக்க விரும்பவில்லை.
ஊரை நன்றாகச் சுற்றிப் பார்ப்பதற்குள் மத்தியானமாகிவிட்டது. கடைத் தெருப்பக்கம் வந்தான். ஒரு துணிக்கடையில் நுழைந்து மூன்று கெட்டியான போர்வைகளைப் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான். வானத்துக்குக் கீழ் கூரையில்லாமல் உறங்குபவர்களுக்குப் போர்வைதான் சரியான கூரை; இடுப்பில் துணியில்லாதவர்களுக்குச் சுலபமாய்க் கிழியாத துணி; படுக்கப் பாயற்றவர்களுக்குச் சுருட்டி மடக்கக் கூடிய பாய்.
திரும்பவும் கட்டை மரத்துப் பக்கம் ராஜு வரும்போது அங்கே கூட்டம் எதுவும் இல்லை. கந்தல் கட்டிய குழந்தைகள் இரண்டு பரட்டைத் தலையோடு மணலில் சோர்ந்து படுத்திருந்தன. மூன்று பெண்களும் அப்படியே அந்தக் கட்டை மரத்தைத் தழுவிக் கொண்டு கட்டையைப்போல் நினைவிழந்து கிடந்தார்கள். கண்ணீர் மாத்திரம் பெருகிக் கொண்டே இருந்தது.
ராஜு அவர்களுக்கு அருகில் போனவுடன் அவர்கள் புரியாமல் விழித்தார்கள். போர்வையை ராஜு ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தான். இயந்திரம்போல் அவர்களது கரங்கள் நீண்டு அவற்றைப் பெற்றுக் கொண்டன.
ஒரே ஒருத்தி துயரம் தாங்காது ராஜுவைப் பார்த்துக் கத்தினாள்; “எங்களுக்குக் கோடித் துணியா ஐயா போடுறீங்க? நாங்க என்னய்யா செய்வோம்? எங்க பிள்ளை குட்டி எப்படி ஐயா பொளைக்கும்?”
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ராஜு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவனைச் சுற்றியிருப்பவர்களின் துன்பம் அவனைத் தொடர்ந்துகொண்டே வந்து பரிகசித்தது. ஊருக்கே பொதுவாகப் புயல், சேதம் விளைவித்தது உண்மைதான்; ஆனால் அடித்துக் கொண்டுபோன நூற்றுக் கணக்கான குடிசைகள் யாருடையவை? கடலுக்குள்ளேயும் சுவர்களின் அடியிலும் செத்து விழுந்த உடல்கள் யாருடையவை? இப்போது தங்களுடைய எல்லாவற்றையுமே இழந்து தவிப்பவர்கள் யார்?
மூன்று நான்கு நாள்கள் கழிந்தன. விடுமுறை தீர்ந்து விட்டதால் ராஜு திரும்பவும் திருச்சிக்குப் புறப்பட்டான். அவனுடைய சாமான்களை எடுத்துப் பெட்டிக்குள் வைப்பதில் அவனுக்கு உதவி செய்ய வந்தாள் அவன் தாயார். உடைகள், புத்தகங்கள் யாவும் எடுத்து அடுக்கி ஆயிற்று. படுக்கையைச் சுற்றிக் கட்டும்போது ஏதோ நினைவு வந்தவள்போல் பரக்கப் பரக்க உள்ளே போய் ஒரு புதுப் போர்வையை எடுத்துக் கொண்டு அவனிடம் வந்தாள்.
பையன் அதை உற்றுப் பார்த்தான். நெற்றியில் கேள்விக் குறி எழுந்தது.
“எப்போ வாங்கின போர்வை அம்மா இது?”
“முந்தா நாள் வாங்கினேன். கொள்ளை மலிவு, சொன்னால் நீ நம்பமாட்டே; மூன்று போர்வை அஞ்சு ரூபாய்!”
பையனுக்குப் பகீரென்றது.
“கடற்கரைப்பக்கம் போறப்போ மடிப்புக் கலையாமல் புத்தம் புதுசாக வச்சிருந்தாளுக. ‘உங்களுக்கு எதுக்கடி இதெல்லாம்? பணம் குடுக்கிறேன் தாரிங்களா?’ன்னு கேட்டேன். பத்து ரூபாய் கேட்டா. அரை மணி நேரம் பேரம் பண்ணி அஞ்சு ரூபாய்க்கு வாங்கினேன். பதினைந்து ரூபாய்க்குக்கூட இந்த மூணு போர்வையையும் கடையிலே தரமாட்டான்.”
ஈரம் நிறைந்த இளம் நெஞ்சில் அப்போதுதான் பயங்கரமான கோரப் புயல் ஆரம்பமாகியது. அந்தப் புயலுக்கு முன்னே சில தினங்களுக்கு முன்பு வீசிய புயல் அற்பச் சூறாவளியைப் போன்றது.
Very touching story, I remember the schooldays I read this story. Thank you so much for uploading