சிறுகதை: திடுக்! – பி. டி. சாமி

அரசு விரைவுப் பேருந்து பலவிதமான சோதனைகளைச் சந்தித்து விட்டு சேலத்தில் பத்திரமாக வந்து நின்றபோது இரவு பதினோருமணி.

பேருந்து சென்னையிலிருந்துப் புறப்பட்டு ஆத்தூர் பக்கம் வந்தபோது வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான திகிலான தகவல் கிடைத்தது.

வதந்தி என்று கண்டுபிடிக்கப்பட்ட போது இரண்டு மணி நேர தாமதம்!

பயணிகளில் ஓர் ஆண் பெண் ஜோடி மட்டும் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் தெரிந்தார்கள்.

அவர்கள் சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த இளம் காதலர்கள்.

அந்த டீன்ஏஜ் அழகியின் பெயர் அகிலா. மையிலாப்பூரிலுள்ள எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை!

பெண்களின் உள்ளாடைகள் தயாரிப்பதில் புதுப்புது வடிவங்கள் தந்து அசத்துகிறவள். அவளது கை வண்ண சரக்குகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி!

அகிலாவும் அழகானவளே! தினம் தினம் சுடிதார், மிடி, மாக்ஸி, மினி ஸ்கர்ட், ஜீன்ஸ், ரப்பர் ரவுண்ட் பிகினி, ரங்கீலா, டைட்ஸ், ஷர்ட்ஸ் ஆகிய உடைகளில் வந்து பார்ப்பவர்களை வதைப்பாள்.

அவள் டிசைன் செய்யும் உடைகளுக்கு அவளேதான் மாடல்!

இப்போது அவளுடனேயே வந்திருக்கும் ஆனந்த் என்ற இளைஞன் தான் அவளுடைய அழகில் சிக்கி கிறுகிறுத்துப் போனவன். காதலன்.

அவன் பிரபல மருந்து கம்பெனி ஒன்றின் பிரதிநிதி. அப்படியும் இப்படியுமாக அவனுக்கு ஏகப்பட்ட வருமானம்.

அவனுடைய வாட்டசாட்டமான தோற்றமும், பணத்தை அள்ளி வீசும் லாவகமும்தான் யாரிடமும் பிடிபடாத அகிலாவைச் சிக்க வைத்துவிட்டது.

அபாரமான இயற்கையான உடலழகு அவளுக்குக் கிடைத்திருக்கிறது! அவற்றைப் பார்த்து ஆண்கள் தடுமாறுவதும், ரசிப்பதும் அவளுக்குப் பேரானந்தம்.

இப்போது அகிலா பிங்க் நிற சுடிதார் அணிந்து துப்பட்டாவை விரித்து திரண்ட மார்புக்கு கலசம்போல் போர்த்தியிருந்தாள்.

அவள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் கடலூரில் சித்தி வீட்டுக்குப் போவதாகப் பொய் சொல்லி காதலனுடன் வந்திருந்தாள்.

மறுநாள் சேலத்திலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்வது காதலர்களின் திட்டம்.

அகிலா காதலனுடன் ஓடி வருவதற்குக் காரணம் பெற்றோர்கள் ஆனந்தைப் புறக்கணித்துவிட்டு  அவசரமாக மாப்பிள்ளை பார்த்ததே!

தங்கள் மகள் அவளை அனுசரித்துப் போய் குடும்பம் நடத்துவதற்கு ஏற்ற வரனைத் தேடினார்கள்.

ஆனால் மகள் அகிலாவோ உடல் சுகத்துக்கு ஏற்ற ஒரு வாலிபனைத் தேர்வு செய்துவிட்டாள்.

அனாமிகா லாட்ஜ் பேருந்து நிலையத்துக்கு பின்னாலுள்ள வீதியில் இருந்தது.

சில விளக்குகள் சிக்கனமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.

ஆனந்த் அங்கே அகிலாவுடன்  வந்ததும் லாட்ஜ் மானேஜர் பழக்கமான முகத்துடன் பார்த்தார்.

சங்கேத பாஷையில் பரிமாறிக் கொண்டார்கள்.

அந்த லாட்ஜ் ‘பலான’ லாட்ஜ்தான். பல மாநில தப்பான அழகிகளை அங்கே சந்தித்து மகிழ முடியும்.

ஆனந்தும் வாடிக்கையாளர்களில் முக்கியமானவன் என்பதால் ‘பலான’ பெண்ணைத் தான் அழைத்து வந்திருக்கிறானோ என்று நினைத்துக் கொண்டார் மானேஜர்.

ஆனால் ஆனந்த் உடனடியாக அவருடைய நினைப்பைப் பொய்யாக்கினான்.

“இது நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்! சென்னையில் பிரச்னை வந்துவிடும் என்பதால் இங்கே அழைத்து வந்திருக்கிறேன், வசதியான ரூம் வேண்டும்” ஆனந்த் சொல்ல.

மானேஜர் யோசித்தார். பிறகு கூறினார்.

“ஆனந்த் சார், வழக்கமாக நீங்கள் தங்கும் மாடியிலுள்ள ஸ்பெஷல் ரூம் மட்டும்தான் காலியாக இருக்கு! நீங்க அவசரம்னு சொல்வதால் அங்கே போய்த் தங்குங்க.”

இப்போது மானேஜரால் ஓசைப்படாமல் அவளைப் பார்த்து  ஏங்கத்தான் முடிந்தது.

ரூம் பாய் கதவைத் திறந்துவிட்டு இரண்டு பேர்களையும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

பிறகு சாவியை ஆனந்திடம் கொடுத்துவிட்டு மர்மமான புன்னகை ஒன்றைத் தந்துவிட்டுப் போய்விட்டான்.

அவன் கதவைத் தாளிட்டுவிட்டு  இரு கைகளாலும் அவளை வாரித் தூக்கி எடை பார்த்தான்.

இது அவளுக்கு முதல் அனுபவம்! இதற்கு முன்புகூட சிரிப்பைத் தாராளமாக வழங்குவாளே தவிர யாரையுமே தொட்டுத் தூக்க அனுமதித்ததில்லை.

பதறிப்போன அகிலா உடனே துள்ளி விடுவித்து இறங்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் கூடாது! எல்லாமே நீங்க கழுத்தில் தாலி கட்டியபிறகு தான்!”

“ஓகே அகிலா! இனி உன் பர்மிஷன் கிடைத்த பிறகே திறப்பு விழா நடத்துவேன். இப்போது நாம் சாப்பிடுவதற்கு வெளியே போய் எதையாவது வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன். இங்கே எதுவும் கிடையாது”

“ஆனந்த் சீக்கிரம் வந்துவிடு. தனியா இருக்க எனக்குப் பயம்!”

குரல் தத்தளித்தது.

“நீ பயப்படத் தேவையே இல்லை! நான் வெளியே கதவைப் பூட்டி வைத்து விட்டுத்தான் போவேன். அதுதான் உனக்குப் பாதுகாப்பானது!”

“சரி” என்றாள் அகிலா, வரக்காத்துக் கொண்டிருக்கும் மரண பயங்கரத்தை உணராமலேயே!

ஆனந்த் கதவை வெளியே பூட்டிவிட்டு உற்சாகமாக வெளியேறினான்.

அகிலா அன்றிரவு புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான உணர்வுகளையடைந்தாள்.

இரவில் காதலனுடன்  துணிச்சலாகத் தங்கியிருப்பது இதுவே முதல் தடவை.

வீட்டுக்கு  வராததால் இந்நேரம் அப்பா பரபரப்புக்குள்ளாகி எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கலாம்.

ஆனால் அவளுக்கு இப்போது அதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கவலைப்பட நேரம் இல்லை.

பயணித்துக் களைத்து வந்ததால் முதல் வேலையாக உடை மாற்றி அவளுக்குப் பிடித்தமான ஊதா நிற நைட்டிக்கு மாற எண்ணினாள்.

அறையின் ஓர்  ஓரமாக ஆள் உயர நிலைக் கண்ணாடி தெரிந்தது.

அகிலா அங்கே போய் எதிரில் நின்று கொண்டு தன்னைப் பார்த்தாள்.

சுடிதாரை அப்புறப்படுத்தி நைட்டியினுள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தபோது இன்னும் பெருமிதம்.

அவளே அவளைப் பார்த்து அசந்து போனாள். உடம்பு பளிங்குப் பதுமையா?

இப்படி அவள் பிரமித்து கண்ணாடியைப் பார்த்தபோது வெண் புகை ஒன்று உருளுவது போல் கண்ணாடியில் தெரியவே திகைத்தாள்.

திடீரென்று முகம் மறைய ஆரம்பித்தது. தோற்றமே உருக்குலைந்துச் சிதிலமாகி..

ஓ! பயங்கரம்! அழகான சதைப்பிடிப்புடன் கூடிய தன் முகம் எங்கே?

அந்த இடத்தில் ஊதா நைட்டி உடம்பில் கழுத்துக்கு மேல் ஒரு மண்டை ஓடு  உட்கார்ந்திருந்தது.

ஆளைக்கொல்லும் கத்தி வீச்சுக் கண்கள் இருக்க வேண்டிய இடம் குழிந்து அங்கே எலும்புத் தெரிந்தது.

மூக்கு… உதடுகள் எங்கே?

சத்துப்பிடிப்பான அந்த ரோஜா இதழ் உதடுகள் காணப்படவில்லை.

தூக்கலான எள்ளுப்பூ நாசியும் இப்பொழுது மைனஸ்! கன்னத்துச் சரிவுகளும் எலும்பு.

பயங்கரக் கனவா!

குபீரென்று முகம் வியர்த்து – அதிர்ந்து போனாள் அகிலா.

பார்வையில் கோளாறா?

எதுவும்   புரியாமல் மறுபடியும் கண்ணாடியைப் பார்க்க –

அதே எலும்பு முகமேதான்.

நினைக்கவே அகிலா கிடுகிடுத்துப் போய் கட்டிலில் போய் விழுந்தாள்.

கட்டிலுக்குக் கீழே ஒரு குழந்தை ‘கீர்கீர்’  என்று அழும் சப்தம் கேட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை வீரிட்டு அழுவது போல் அது இருந்தது.

குழந்தை கீழே கிடக்கிறதா என்று கட்டில் கிறீச்சிட குனிந்து பார்த்தாள். குழந்தை இல்லை.

அடியில் நான்கு தலையணைகளில் ஒன்று மட்டுமே கிடந்தது.

எப்படி குழந்தை அழும் சப்தம்?

அகிலா துணுக்குற்றபோது,

“கொல்லாதே பாவி! என்னை உயிரோடு விட்டிரு” என்ற ஒரு பெண்ணின் கூக்குரல்.

இதே அறையினுள் வேறு ஏதாவது ஒரு பெண் ஆபத்தான நிலையில்.. கொலை நடக்கப் போகிறதா?

இப்படி அவள் நினைத்தபோது திடீரென்று மின்சாரம் நின்று அறையை இருள் மூடிக் கொண்டது.

என்ன செய்வது என்று புரியாத நிலை அகிலாவுக்கு! “கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிடு. இல்லாவிட்டால் உன் உயிருக்கே ஆபத்து” என்று எச்சரித்தது உள் மனம்.

பதறி வெப்பமான வியர்வையில்  வழிந்து கொண்டிருந்த அகிலா ‘த்டுக்க் த்டுக்க்’ என்று ஈரல் குலையில் அதிர்ந்து.. “யா.. யாரது” என்று கத்தினாள்.

அலறல் குரல் சட்டென்று நின்று ஒரு மயான அமைதி நிலவியது.

தனியாக நின்று  கொண்டிருக்க பயமாக இருக்கவே அவள் இருட்டில் தடுமாறியபடியே நடந்து சென்று கதவை பலமாகத் தட்டினாள்.

மொட்டை மாடியில் அந்த அறை மட்டுமே தனியாக இருந்ததால் அபயக்குரல் கேட்டு யாரும் வந்து உதவும் நிலையில் இல்லை.

“கடவுளே.. நான் என்ன செய்வேன்! ஆனந்த் முட்டாள்தனமாக வெளியே பூட்டிவிட்டுப் போய்விட்டானே!”

நெஞ்சு ‘படக் படக்’ என்று அடித்து உலைத்துருத்தி போல் ‘புஸ் புஸ்’ என்று மூச்சுவிட்ட அதே நிலையில் இன்னொரு வீறிடல் அதி பயங்கரமாக எழுந்தது.

அகிலா திடுக்கிட்டபோது எதிரே பஞ்சாய் ஏதோ ஒன்று நிற்பது போலவும், திடீரென்று பனிக்கட்டி ஒன்று தோள் சருமத்தில் தொட்டது போலவும் அதிர்ந்து குலுங்கிப் போனாள்.

அதே சமயம்! காதோரம் அதே பெண்ணின் பயங்கரமான வீரிடல் உடம்பு பூராவும் உலுக்க,

அகிலாவும், அசைந்துவரும் ஆவியை நேருக்கு நேர் பார்த்துவிட்டதுபோல் அதி பயங்கரமாக அலறி அப்படியே சரிந்து விழுந்தாள்.

ஆனந்த் ஆசையாக வாங்கி வந்திருந்த சிக்கன் பிரியாணியுடன் கதவைத் திறந்து பார்த்து

“அகிலா!” என்று ஓலமிட்டு  அலறினான்.

அலறல் சப்தம் கேட்டு ரூம்பாய் பதட்டமாகி ஓடி வந்துப் பார்த்தான்.

அவன் சொன்ன தகவல் ஆனந்த்தின் ரத்தத்தையே உறையச் செய்வதாக இருந்தது.

சென்ற மாதம்! கைக் குழந்தையுடன் ஓர்  இளம் பெண்ணும், ஒரு வாலிபனும் இதே அறையில் தங்கியிருந்தார்களாம். அந்த வாலிபன், நடு ராத்திரியில் குழந்தையையும், அந்தப் பெண்ணையும் கதறக் கதற அடித்துக் கொன்று போட்டுவிட்டு இரவோடு இரவாக எங்கேயோ ஓடி தலைமறைவாகிவிட்டானாம்.

அகால மரணமடைந்த அவர்களது ஆவிகள் இதே அறையினுள்தான் இன்னும் இருக்கின்றனவாம்!

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *