அந்தியின் பூ மௌனத்தில்
மார்பகத்து பாலாய்ச்
சுரக்கிறது தாலாட்டு
கண்ணீரால் கழுவப்பட்ட
அதன் ஸ்வரங்கள் ஏறுகின்றன
பெண்மையின் ஆரோகணத்தில்
புதரை மொய்க்கும் மின்மினிகளாய்
தேவதைக் கதைகள் அதன் மேல்
‘காயங்களே! தூங்க வாருங்கள்’
என்று அது அழைக்கிறது
அழுகின்ற ஆலயங்களையும்
பார்வையற்ற ஆயுதங்களையும்
அழைக்கிறது
கருப்பையின் இதம் கொண்ட
அந்தப் பாடலுக்குள்
நான் நுழைகிறேன்
பத்திரமாய் இருப்பதற்காக.