அலசும் பொருட்டு நீரில் எறியும்
கூறைப் புடவையைப் போல வானில்
கிளையை வீசிய நித்திரை மரங்கள்
இருபுறம் அடைத்த சாலையில் நடக்கிறாள்.
அம்பாசிடரும் வெள்ளை மாருதியும்
ஏற்றிக் கொள்ள அஞ்ச –
செலவைப் பார்க்க ஆட்டோ அதிகமென்று
நகரப் பேருந்தில் ஏறி வருகிறாள்.
ஒற்றை அரச மரத்தின் இளைய
வேனில் பொலியும் கிளைகளில் காக்கைகள்
சிறகு கோதிக் கூவாதிருக்கும்.
சிலபேர் குளிக்க, சிலபேர் பிழிய
புரோகிதர் இங்கும் அங்கும் அலைய
அழுகை ஓய்ந்த ஆண்களும் பெண்களும்
முட்டு முட்டாய்க் குமைந்திருக்க –
தர்ப்பையும் சடங்குக் கூளமும்
வண்ணம் மாறிய அரிசிச்சாதமும்
ஒருபுறம் மூலையில் குவிந்த அறையில்
தாழ்ந்த தலையுடன் இருந்தவள் கழுத்துத்
தாலியை அகற்றி கொடுக்கும் அதற்கு
ஒதுங்கி ஓரமாய்க் கடக்கும் பாம்பெனத்
துக்கித்தவர்களில் ஒருவராய்ப் போகிறாள்.
களைகிறாள், அறுக்கிறாள், கொடுக்கிறாள் பின்பு
பெறுகிறாள் கூலி. அதிலொரு பங்கை,
வழிநடைக் கோயில் உண்டியில் உதிர்க்கிறாள்
இருகை கூப்பி நிற்கிறாள் திரும்புவாள்
அருகில் காக்கும் தன் மகன் அவனிடம்
காசைக் கொடுத்துச் சொல்கிறாள்
எண்ணெய் நூறு கிராம், ஐம்பது பருப்பு…..