கருணீகர் வரலாறு – தெ. இரா. விசுவநாதன்

என்னுரை:

1984-ஆம் வருடம் ‘கருணீக மித்திரன்‘ இதழில் திரு. தெ. இரா. விசுவநாதன் அவர்கள் ‘கருணீகர் வரலாறு’ என்ற தொடரை 6 பாகங்களாக எழுதினார். அதை அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன். – மு. பாலகுமார்

1

முன்னுரை:

            கருணீகர் குலத் தோன்றல் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். நம் குலப் பெருமை தாங்கி வரும் ‘கருணீக மித்திர’னில் தொடர்ந்து கருணீகர் குல வரலாற்றினை – வரலாற்றுக் கதையில் உரைநடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுத வேண்டும் எனும் நோக்கில் இத்தொடரினை எழுத முற்படுகிறேன்.

            ‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற ஔவைப்பிராட்டியின் முடிவான கருத்தினை நாம் ஏற்றுக் கொள்ளினும் தற்கால, சமுதாய கண்ணோட்டத்தில் நம் குலம் எனும் ‘கருணீகர் குலத்’தைப் பற்றி சற்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமே ஆகும்.

            ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறநெறி வகுத்த வள்ளுவர் ‘செய் தொழில் வேற்றுமையால் சிறப் பொவ்வாது’ என்று கூறியுள்ளார். அவ்வாறே செய் தொழிலான் சிறப்புற்றது நம் குலம். ஊருக்கு ஒரு குடியாய் நாம் வாழினும் செய்தொழிலான் சிறந்து வாழ்ந்தோம். கருணை உள்ளம் கொண்டு கணக்குத் தொழில் செய்தமையால் கருணீகர் என அழைக்கப்பட்டோம். மேலும் ‘சீர்’ எனும் சிறப்பு நம் குலத்திற்கு அமைத்து ‘சீர் கருணீகர்’ எனவும் நாம் அழைக்கப்பட்டோம். ஒவ்வொரு குலத்திற்கும் புராணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன. நம் குலத்திற்கும் புராணம் மற்றும் வரலாற்றுப் பின்னணி உண்டு. அவற்றின் அடிப்படையில் நம் குலத்தைப் பற்றி தொடர்ந்து எழுத முற்படுகிறேன். சில ஆண்டுகட்கு முன்புவரை நமது சங்கத்தில் ஈடுபாடு அற்றிருந்த என்னை தற்போது சங்கத்தில் ஈடுபட வைத்து நம் குலத்திற்கு என்னால் முடிந்த அளவு சிறு தொண்டினை செய்ய வழி வகுத்து வாய்ப்பளித்துள்ள நெய்வேலி கருணீகர் சங்கத்திற்கும், என்னை இத்தொடரினை எழுதப் பணித்த தலைமைச் சங்கமாய் விளங்குகின்ற சென்னை மாகாண கருணீகர் சங்கத்துக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

            நமது குலப் பெருமையை பேசி அமைவதோடு நின்று விடாமல் சமுதாயத்தில் நம்மை உயர்த்தி நம் குலத்தை உயர்த்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும் அல்லவா? ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ (குறள்-466) எனும் வள்ளுவர் வாக்கினை மனதில் கொண்டு நம் குலத்தின் வரலாற்றுக் கதையினைத் தொடர்ந்து எழுத முயல்கிறேன். என் எண்ணத்திற்கும் எழுத்திற்கும் வடிவம் கொடுக்க முன் வந்த சென்னை மாகாண கருணீகர் சங்கத்திற்கும் மீண்டும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். இனிவரும் தொடர் கட்டுரைகளில் தவறோ பிழையோ சாணின் அவற்றினை சுட்டிக் காட்டி சீர்மை செய்ய வேண்டுகிறேன்.

            கருணீகர் வரலாறு பலரால் பேசப்பட்டு வருகிறது எனினும் ஞாயிறு பாரீசநாதரால் இயற்றப்பட்டதும், நமது குல வள்ளல் மாடம்பாக்கம் வாசுதேவப் பிள்ளை அவர்களால் 1897ல் பதிப்பிக்கப் பட்டதுமான ‘சீர் கருணீகர் புராணம்’ எனும் நூலினை அடிப்படையாகக் கொண்டு இத்தொடரினை எழுத முற்படுகிறேன். முதற்கண் இப்புராணம் நமக்கு கிடைக்கப்பட்ட சூழ்நிலைக்குச் செல்வோம்.

  1. தோற்றுவாய்

தமிழ்நாடு மூவேந்தர்களால் சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வந்த காலம். நடுநிலை பிறழா பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரையில் சத்துவ சாதன பாண்டியரின் மகன் கூன் பாண்டியன் செங்கோலோச்சி வருகிறான். நம் குலத் தோன்றல் குலச்சிறை நாயனார் அவர்கள் அப்பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து மன்னனை அறவழி நடத்தி செல்கிறார்.

சைவ சமயம் சிறந்தோங்கிய நிலையிலும் சமண சமயம் தீவிரமாக பரவ முற்பட்ட காலம் அது. அதுவழி பாண்டிய மன்னன், கூன் பாண்டியன், சைவ சமய நெறி தவிர்த்து சமண சமய நெறியை மேற்கொள்கிறான். சைவ சமயத்தை தன் உயிரினுக்கும் மேலாக பேணுகின்ற பாண்டியன் மாதேவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் மன்னனின் மாற்றத்தை விரும்பாது – செய்வதறியாது நிற்கின்றனர். அதுகாலை சைவ சமய குரவர் நால்வருள் இறைவியிடம் ஞானப்பால் பருகி, இளம் வயதிலேயே இறைவனைப் பாடி போற்றிய திருஞான சம்பந்தர், வேதாரண்யம் எனும் திருமறைக் காட்டிற்கு வந்திருப்பதாக பாண்டியன் மாதேவியும் அமைச்சரும் அறிகின்றனர். ஞானசம்பந்தப் பெருமானை மதுரை நகருக்கு அழைத்துவர ஏவலாளரை பணித்து, பெருமானை அழைத்து வருகின்றனர். சமண நெறியில் திண்மை கொண்ட சமணர்கள் சம்பந்தப் பெருமான் தங்கியிருந்த குடிலுக்கு தீயிடுகின்றனர். ஞானப்பாலுண்ட ஞானசம்பந்தரை தீ தான் நெருங்குமோ? நெருங்கவில்லை ஆனால் அவ்வெம்மை அரசனுடம்பைப்பற்ற, அரசன் வெஞ்சுரத்தால் வருந்தினான் அதனை உணர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் “மந்திரமாவது நீறு” எனும் திருநீற்றுப் பதிகத்தைப்பாடி அரசனுக்குண்டான வெம்சுரத்தை தணித்தருளினார். உண்மை நெறி உணர்ந்த பாண்டிய மன்னன் சமணர்களை கழுவேற்றினான். சைவ சமயத்தை தீவிரமாக மேற்கொண்டான். இந்நிலைக்கு காரணமான அமைச்சர் குலச்சிறையாரைப் பாராட்டி தனதாட்சிக்கு முதன்மையாக்கி மகிழ்ந்தான் மன்னன்.

(கருணீக மித்திரன் 1-9-1984)

2

ஒழுக்க நெறியிலும் அறிவாற்றலிலும் சிறந்து விளங்கிய குலச்சிறையாரை மதுரையில் வாழ்ந்த ஆதிசைவ பிராமணர்கள் அணுகி அவரது குலம் பற்றிய விளக்கத்தினைக் கேட்டனர். அதற்கு யாம் ‘சீர் கருணீகர்’ வகுப்பைச் சார்ந்தவர் எனக் கூறி, தம்குல வரலாற்றினைக் கூறினார்.

      கங்கைச் சாரலில் உள்ள காம்பீலி நாட்டில் ஓதனபுரத்தில், நாசிவேதியர் மரபில் பிரம்ம தேவனின் வழித்தோன்றல்களாகத் தோன்றி – நைமி சாரண்யத்தில் வாழ்ந்து வந்த வேத விற்பன்னர்களால் கோத்திரம், சூத்திரம் முதலியன குறிக்கப்பட்டமையைக் கூறினார். பின் தொண்டைமண்டல மன்னன் சென்னிய சோழனால் பாராட்டுப் பெற்று, தானியம், கணக்கெழுதும் ஆதீனப்பட்டயம் முதலியவைகளைப் பெற்று சிறந்தோங்கும் குலம், தம் குலம் என்றார். மேலும், தம் குலம் பற்றிய புராணம், 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் உள்ளது என்றார்.

      இச்செய்தியினை அறிந்த பாண்டிய மன்னன் தனது அமைச்சர் குலச்சிறையாரின் குலப் பெருமையை நாடறியச் செய்வான்வேண்டி 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தைக் கண்டெடுக்க தம் அவைப் புலவர்களையும் ஏவலரையும் பணித்தான். அரசனின் ஆணையை ஏற்றப்புலவர்களும் ஏவலரும் புராணங்கள் அடங்கிய பழைய ஓலைச்சுவடிகளைத் தேடி ஆராய்ந்து பிரம்மாண்ட புராணத்தைக் கொண்டு வந்து அரசனிடம் தந்தனர். புராணம் கிடைக்கப் பெற்றமைக்கு மன்னனும் அரசியும் மிக மகிழ்ந்து புராணத்தைத் தேடிக் கொணர்ந்தோருக்கு பரிசுகள் வழங்கினான். அக்கால மரபின்படி, பெறற்கரிய நூலிற்கு சிறப்புகள் பல செய்து, பல்லக்கில் வைத்து புலவர் குழாம் சூழ குலச்சிறையார் உடன் வர நகர் வலம் வந்து நூலினை சொக்கநாதப் பெருமானின் ஆலயத்திலோர் மண்டபத்தில் சேர்த்தான். அரசன் மனமும் அவையோர் மனமும் மிக மகிழ புலவர் ஒருவர் பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியாகிய “சீர்கருணீகர் வம்ச பிரபாவம்” எனும் நூலினைப் படித்து விளக்கம் கூறினார். கருணீகர் குலச்சிறப்பினை உணர்ந்த மன்னன் அமைச்சர் குலச்சிறையாரைப் பாராட்டினான். குலச்சிறையாரும் தம் குலப்பெருமையை நாடறியச் செய்த மன்னனுக்கு நன்றி கூறி உளம் மகிழ்ந்தார். மன்னனின் வேண்டுகோளின்படி புலவர் தேப்பெருமாளையன் என்பவர் இப்புராணத்தை வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்தார். அவ்வாறு தமிழாக்கம் செய்யப்பட்ட புராணத்தை அரசவைப் புலவராக விளங்கிய ஞாயிறு பாரீசநாதர் அவர்கள் தமிழ்ச் செய்யுட்களாகப் பாடினார். இதையும் பாண்டிய மன்னன் அரங்கேற்றம் செய்து புராணத்திற்கு பெருமை சேர்த்தான். ஞாயிறு பாரீசநாதரால்…

(இதன் தொடர்ச்சி கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் பொழுது இங்கு இணைக்கப்படும்.)

(கருணீக மித்திரன்- அக்டோபர் 1984)

3

      தடாகத்தில், வெண்தாமரை மலரில் சிரித்து விளையாடி மகிழும் குழந்தையைக் கண்டான். மனம் மகிழ்ந்தவனாய் தன்னுடன் இருந்த மறையோதும் ‘கிருஷ்ணதேவன்’ என்பவரை தடாகத்தில் வெண்தாமரை மலரில் இருக்கும் குழந்தையை எடுத்து வருமாறு வேண்டினான். கிருஷ்ணதேவனும் அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி தடாகத்தில் இறங்கிச் சென்று பெண் குழந்தையை மகிழ்வுடன் எடுத்துவந்து அரசனிடம் காண்பித்தான். குழந்தையைக் கண்ட மன்னன், தனக்கு குழந்தை இல்லாக் குறையை நீக்கவும், தானும் தன் மனைவி ‘நிபுணமதி’யும் இயற்றிய தவத்திற்கு இக்குழந்தையே அருள்வழி காட்டும் முறைபோலும் என எண்ணி குழந்தைக்குச்சிறப்புகள் பலசெய்து, தன்மகள் போல் பாவித்து, தன் அரண்மனைக்கு எடுத்துவந்தான். பெண் குழந்தையைக் கண்ட அரசி ‘நிபுணமதி’யும் மனமிக்க மகிழ்ந்தவளாய் அரசன் மூலம் நிகழ்ந்தவை அறிந்து மகிழ்ந்தாள்.

      குழந்தையை கிருஷ்ணதேவனது மனைவி ருக்மணியித்தில் கொடுத்து குழந்தையை குறையேதுமின்றி வளர்த்து வருமாறு கேட்டுக் கொண்டாள். குழந்தையும் சீரோடு வளர்ந்து வந்தாள்.

      தீதிலா நன்னாளில் பெண்குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடத்தினான் மன்னன். குழந்தைக்கு ‘சுபகுணமாலை’ எனப்பெரியோர்கள் பெயரிட்டனர். சுபகுணமாலைக்கு ஏழாம் வயதில் கல்வி, கலை, வேதம், இசை ஆகியவற்றினை தக்காரைக் கொண்டு பயிற்றுவித்தனர். சுபகுணமாலையும் அவற்றினைக் கற்று தேர்ந்தாள். தக்க வயதில் சுபகுணமாலை மங்கைப் பருவம் எய்தினாள்.

      சுபகுணமாலைக்கு திருமணம் செய்விக்க எண்ணிய அரசன் அனைவரிடமும் கலந்து திருமண ஏற்பாட்டினை செய்தான். ஐம்பத்தாறு தேசத்திலும் இருக்கும் பிராமணர்கள் அனைவருக்கும் சுபகுணமாலையின் சுயவரம் குறித்து தகவல் தெரிவிக்கக் கட்டளையிட்டான். மன்னரின் திருமுகம் ஐம்பத்தாறு தேசத்து பிராமணர்களுக்கும் தூதுவர்கள் மூலம் அனுப்பப்பட்டது.

      திருமணத் திருமுகம் கண்ட ஐம்பத்தாறு தேசத்து பிராமணர்களும் சுயவரம் நோக்கி விசயமாபுரம் அடைந்தனர். காம்பீலி நாட்டின் ஓதனபுரத்தில் வளர்ந்துவரும் அத்திரிவேதியரும் விசயமாபுரம் வந்து சேர்ந்தார். வந்தவர்களை மன்னன் வரவேற்று தக்கபடி உபசரித்தான்.

      குறிப்பிட்டபடி, திருமண மண்டபத்தில் சுயவரம் நாடி வந்திருந்த அனைவரும் கூடினர். மன்னனும் தன் அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். பொற்சிவிகையொன்றில் மங்கல மடந்தையர் சூழ சுபகுணமாலை திருமண மண்டபத்திற்கு வந்தாள். அன்ன நடையிட்டு வந்த சுபகுணமாலை அவையோர் மனம் மருள, அருள்மிகு இருக்கையில் பொற்சிலையாய் வீற்றிருந்தாள்.

      மன்னன் விசயபாலன் அவையோரை நோக்கி “அம்மகள் சுபகுணமாலையின் சுத்தநெறி வித்தை அறிவிற்கு இணையாக சொல்ல வல்லார் தமக்கே மாலையிடுவாள்” என அறிவித்தான். சுபகுணமாலை தன்மென்கரங்களால் வீணையை எடுத்து மீட்டி கான இசை பொழிந்தாள். அதைக் கேட்ட அனைவரும் மெய்மறந்து இவளுக்கீடாக பாட இயலாது என்பதை உணர்ந்து மண்டபத்தை விட்டு நீங்கினர். அவ்வமயம் வித்தைகளில் வல்ல அத்திரி வேதியர் மோகத்துடன் எழுந்து சுபகுணமாலையின் எதிரில் சென்று அமர்ந்து வீணையை மாட்டி, தமக்குள்ள சங்கீத ஞானத்தால், அவளுக்கு மேலாகவே கான இசை பொழிந்தான். இதனைக் கேட்ட சுபகுணமாலை கைலயங்கிரியில் துருவாசன் சொன்ன சாபத்தினை உணர்ந்தவளாய் மனம் மிக மகிழ்ந்து தன் கரத்தே இருந்த மணமாலையை அத்திரி வேதியனுக்கு அணிவித்து தலைவணங்கி நின்றாள்.

      இதனைக் கண்ட பிற வேதியர்கள் அனைவரும் தத்தம் நகர் திரும்பினர்.

      அரசன் அத்திரி வேதியரை அன்றிரவு அவர் தங்கியிருந்த இல்லத்தில் தங்கச்செய்து அடுத்த நாள் சிறப்புடன் சுபகுணமாலையை திருமணம் செய்விக்க எண்ணினான். அதன்படி சுபகுணமாலையை தன் தோழியருடன் அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். அத்திரி வேதியரும் தமதில்லம் திரும்பினார். இளம் உள்ளங்களை இந்த இடைவழி ஓரிரவு மிகவும் வருத்திற்று.

      அடுத்த நாள் காலையில் அத்திரி வேதியர் கடன் முடித்து, தக்க உடையணிந்து, அரசவை சென்றார். மன்னன் மனம் மகிழ்ந்தவனாய் அவையிலிருந்தோரிடம் “இன்று சுபகுணமாலையை அத்திரி வேதியருக்கு திருமணம் செய்விக்க வேண்டும். எனவே சுபகுணமாலையை திருமணக் கோலத்தில் அழைத்து வருக” எனக் கூறினான். அவையோர் சுபகுண மாலையை தம் தோழிகள் சூழ, திருமணக் கோலத்தில் அழைத்து வந்தனர். குற்றமற்ற வேதவித்தகக் குழாம் வேதம் ஓத திருமணம் முறையாக நடைபெற்றது. (அரசாணி, கூறைச் சேலை, பாலிகை நவதானியம், விளக்கு தாங்குதல். மாங்கல்யம் கட்டல், ஓமம் அற்றல், பொரியிடல், அம்மி மிதித்து அருந்தி காட்டல், பால் பழம் ஈதல் ஆகியவை திருமணச் சடங்காக கூறப்பட்டுள்ளது) திருமணத்திற்கு வந்தோரை சிறப்பித்து விடை கொடுத்த மன்னன், மனமக்களுக்கு விருந்து முதலியன செய்வித்து பொன், அணி, ஆடை ஆபரணங்கள் மற்றும் அன்னமென் நடையினார் சிலரையும் உடன் அனுப்பி, பொன்னமர் சிவிகை, முதலியன கொடுத்து மணமக்கள் ஓதனபுரத்திற்கு விடைகொடுத்து அனுப்பினான்.

      அத்திரி வேதியரும் சுபகுணமாலையும் ஓதனபுரம் அடைந்து தமதில்லம் சேர்ந்து அறவழி – இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். பல ஆண்டுகள் கழிந்தன. மகப்பேறு இல்லாததால் மனம் வருந்தி மகா விஷ்ணுவை நோக்கி விரதங்கள் பல அனுசரித்து மகப்பேறு வேண்டினர்.

4

      சில காலம் கழிந்த பின் எல்லாம் வல்ல இறைவனருளால் சுபகுணமாலை கருத்தரித்தாள்; மனமகிழ் கொண்ட அத்திரி வேதியார் எட்டாவது மாதத்தில் வேத விதியின்படி வேள்வி நடத்தி சுபகுணமாலைக்கு சீமந்தம் செய்து மகிழ்ந்தான். கருவளர் காலம் நிறைவுற்றதும் நல்ல நேரத்தில் 64 புத்திரர்களை சுபகுணமாலை ஈன்றெடுத்தாள். அத்திரி முனிவர் இந்த 64 மக்களையும் வளர்த்து; ஆகமம் வேதம் மற்றும் கலைகளைக் கற்றுவித்தார்.

      பின்னர் சுபகுணமாலை 32 புத்திரர்களை ஈன்றெடுத்தாள். மூன்றாவதாக 16 புத்திரர்களையும் நான்காவதாக 8 புத்திரர்களையும் ஈன்றெடுத்தாள். 32 புத்திரர்களை துருவாச முனிவரும் 24 புத்திரர்களை கௌதமரும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

      வளர்ந்து வரும் மக்களைக் கண்டு மகிழ்ந்த அத்திரி வேதியர் தம் முதல் மக்கள் 64 பேருக்கும் கல்வி பயிற்றுவித்து, சாத்திரங்கள் உரைத்து, ஆகமவிதங்களெல்லாம் கூறி நிறையறிவு உடையவர்களாகச் செய்தான். பின்னர் 64 பேரையும் நைமிசாரண்ய முனிவர்களிடம் அழைத்துச் சென்று 64 பேருக்கும் தனித்தனியே கோத்திரம், சூத்திரம் முதலியவைகளை அமைத்துத் தரவேண்டினான். முனிவர்களும் அப்படியே அமைத்துத் தந்தனர். பின்னர் முனிவர்களை வணங்கி மக்களை அழைத்துக் கொண்டு தனதிருப்பிடம் திரும்பினான்.

      64 பேர்களுக்கும் 16 வயது நிரம்பியதும் அத்திரி வேதியரும் சுபகுணமாலையும் தம் புதல்வர்கட்கு திருமணம் செய்விக்க விரும்பினார். மறையவர் சிலரை அணுகி தம் மக்கட்கு தக்க பெண்களை கண்டு தகவல் தெரிவிக்க வேண்டினர். அவர்களும் காம்பிரி நாட்டின் ஒரு பகுதியாகிய கேதார நகரில் புலத்யர் கோத்திரம் – போதாயன சூத்திரத்தைச் சேர்ந்த சங்கரசோமாசி என்பாரை அணுகி அவரது குடும்பத்திலிருந்து 64 பெண்களை அத்திரி வேதியரின் 64 பிள்ளைகட்கு மணம் முடித்துத்தர வேண்டினர். சங்கர சோமாசியும் மனமகிழ்ந்து தன் குடும்பத்தைச் சார்ந்த 64 பெண்களைக் கொடுக்க சம்மதித்தான். இதை மறையவர்கள் அத்திரிவேதியருக்கு தெரிவித்தனர். அவரும் மனமகிழ்ந்தார். மறையோர் குறிப்பிட்ட திருமண நாளில் சங்கர சோமாசியார் மணப்பெண்களை அழைத்து வந்தார். சங்கரன் திருமால் ஆகியவர்களுக்கு அத்திரி வேதியர் பூசைகள் செய்து வழிபட்டபின் சுற்றம் சூழ சோபன மாதர் பாட, குற்றமற்ற வேதக் குழாங்கள் ஓமஞ்செய்ய; வெற்றி சேர் வாத்தியங்கள் தொனி முழங்க, நாவலர் உவந்து பாட, ஒரு முகூர்த்தத்துக்கு 5 பேர்கள் வீதம் 12 முகூர்த்தங்களில் 60 பேர்களுக்கும் 13-வது முகூர்த்தத்தில் மற்ற நால்வருக்கும் திருமணங்களை சிறப்பாக நடத்தி வைத்தான். பின் அத்திரி வேதியர் சன்யாசம் மேற்கொண்டார்.

5

      அத்திரியின் அடுத்த 32 பிள்ளைகளை முறையாக வளர்த்த துருவாசன் காம்பீலி நாட்டில் வாழும் தம் மாணாக்கர்களின் புதல்விகள் 32 பேர்களை அத்திரியின் பிள்ளைகட்கு மணம் முடிக்க விரும்பினான். தேவநாயகப்பேரூர் எனும் இடத்தில் 32 பேர்களுக்கும் மறைக்கன்மம் செய்வித்து தாம் எண்ணியவாறே திருமணத்தை நடத்தி வைத்தான். பின் கங்கை நதிக்கரையில் உள்ள பிரவாகை எனும் ஊரில் இம்முப்பத்திரண்டு பேர்களுக்கும் 12 சூத்திரங்கள் 32 கோத்திரங்களையும் அமைத்துத் தந்தார். பின்னர் அவர்களை ஓதனபுரத்திற்கு அழைத்து வந்து அத்திரி வேதியரிடம் விட்டு சுற்றத்தாருடன் வாழ வழியமைத்தார். மேலும் துருவாசன் இம்முப்பத்திரண்டு பேர்களுக்கும் வேதாந்தம், ஞானம், பிரவணம், பிரகதாரண்யம், சந்தோக்யம், கடவலி, முண்டகம், மண்டல்யம், தைத்திரியம், வேதம், பிறகற்சாபாலம், காபாலம், அதர்வசிரசு, கைவலியம், பிரமநாராயணம், சுவதாசுவைத்தியம். காலாக்கினி ருத்ரம், சத்ருசங்கற்பம் மற்றும் பிரமச்சுருதி வாக்கியம் முதலான பல உபநிடதங்களையும் அவர்களுக்குக் கற்பித்தான். அத்திரி வேதியர் சுபகுணமாலை ஆகியோரிடம் இவர்களை ஒப்படைத்து துருவாசர் தமதிருப்பிடம் திரும்பினார்.

      மூன்று மற்றும் நான்கு முறையாக சுபகுணமாலை ஈன்றெடுத்த (16+8) 24 புத்திரர்களையும் வளர்த்து வந்த கௌதம முனிவன் தக்க வயது வந்தவுடன் அவர்களுக்கு மிதிலை மாநகரில் தக்க பெண்களை திருமணம் செய்து வைத்தான். அவர்களை ஓதனாபுரிக்கு அழைத்து வந்து அத்திரி வேதியரிடம் ஒப்படைத்தான். இவ்வாறு அத்திரி வேதியரின் 120 புத்திரர்களும் தத்தம் மனைவியருடன் இல்லறம் நடத்தி வந்தனர்.

      தம் பிள்ளைகள் அனைவரும் இனிதே இல்லற நெறியில் வாழ்வதைக் கண்டபின், அத்திரி வேதியர் ‘வானபிரஸ்தம்’ மேற்கொண்டு கைலயங்கிரியில் உத்திரக்னான மூர்த்தி இருக்கும் இடத்திற்குச் சென்று தவநெறி மேற்கொண்டார் அதன் பின் சுபகுணமாலை தம்மக்களுக்கு உறுதுணையாக சிலகாலம் அவர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தாள். தம் புத்திரர்கட்கு அறநெறி உணர்த்தி, இல்வாழ்க்கைதனை நெறிபடுத்தியபின், பிள்ளைகளிடம் விடை பெற்று, தம் கணவர் அத்திரி வேதியர் தவமியற்றும் இடம் சென்று அவருக்கு பணிவிடை செய்து வந்தாள்.

      சிலகாலம் தவராத தவநிலை முடிந்தபின் துருவாசன் இட்ட சாபம் தீர்ந்தது. அதன்பின் பிரம்மதேவனுக்கும் சரஸ்வதிதேவிக்கும் உரிய சத்தியலோகம் சேர்ந்தனர். பிரம்மன் தன் படைப்புத் தொழிலை மேற்கொண்டு தன் கடனாற்றினான்.

      ஓதனபுரத்தில்-

  • 64 பேர்களும் தத்தம் மனைவியருடன் இல்லறம் நடத்தி மனு குலத்தோர் போற்ற வாழ்ந்திருந்தனர்.
  • 32 பேர்களும் வேத விற்பன்னர்களாக, கணித நூலில் தேர்ச்சி பெற்றவர்களாய் புண்ணியம் பல செய்து சிறப்புற வாழ்ந்திருந்தனர்.
  • 24 பேர்களும் ஆகம, வேள்வி, மனுநூல் கற்று அமைந்தவர்களாய் நர்குணம் கொண்டு உலகோர் போற்றும் வண்ணம் இனிதே வாழ்ந்திருந்தனர்.

6

            அடுத்து 32 பேருக்கும் தென் பெண்ணையாற்றின் இருமருங்கிலும் உள்ள 32 கிராமங்களை ஆதீனமாக்கித் தந்தான். அடுத்துள்ள 16 பேருக்கும் பொன்னி (காவிரி)யாற்றின் கரையினை ஒட்டியுள்ள சோழ நாட்டினைச் சேர்ந்த குடந்தை முதலான இடங்களை ஆதீனமாக்கி வைத்தான். மீதமுள்ள எண்மரையும் தன் அமைச்சர்களாக ஆக்கி தன்னிடத்திலேயே நிலை நிறுத்திக் கொண்டான்.

            இவர்களுக்கு அளித்த ஊர்களில் துர்க்கை கோயில்களை நிர்மானித்தான். அனைவருக்கும் செப்பேடு சாசனம் தந்து வழிவழி வாழ வழி வகுத்தான். மானியம் அளித்து இவர்கள் நீடூழி காலம் வையம் புகழ வாழ வழி செய்தான்.

            மனம் நிறைய கொண்ட விஜய பால மன்னனும் சிவஞான யோகியரும் மன்னன் சென்னியனிடம் விடைபெற்று தனது நாடாகிய காம்பீலி நாடு திரும்பினர். சீர்கருணீகர் புராணத்தில் இதனை அடுத்து 64 குடிகள் ஆதீன விளக்கமும் அடுத்து 32 குடிகளாதீன விளக்கமும் கோத்திர விளக்கமும் கூறப்பட்டுள்ளன.

சீர் கருணீகர் பெருமை:

நாடு: காம்பீலி நாடு

நகரம்: ஓதனபுரம்

முரசு: வேதமுரசு

கொடி: அன்னக்கொடி

விலங்கு: வெள்ளையானை

            ஆகியவை நமக்குரியதாகக் கூறப்பட்டுள்ளது. நம் குலத்தவர்களாக பல முன்னோர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒரு சிலர்:

  1. கூற்றுவனுக்கு அமைச்சராகி காலம் கணிக்கும் கணக்காளர் நம்குலத் தோன்றல் சித்திரகுப்தர்.
  2. சைவக்குரவர் நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி அவர்களது திருமணத்தை தடுத்து ‘தமதடிமை’ எனக்கூறி திருவெண்ணெய் நல்லூர் அழைத்துச் சென்று அதற்குரிய சாசனத்தை அவையின் முன்னர் படிக்க இறைவனால் குறிக்கப்பட்டவர் நம்குல கருணீகர் ஒருவரே!
  3. நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே எனக்கூறிய சங்ககாலப் புலவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் நம் குலத்தவரே.

இதனை அடுத்து ‘சீர்கருணீகர் புகழ்’ எனும் தலைப்பில் கருணீகர் குலத்தாரின் திருமண முறை விளக்கப்பட்டுள்ளது. ‘சீர்கருணீகர் பெருமை’ 14 விருத்தங்களிலும், ‘சீர்கருணீகர் புகழ்’ 74 விருத்தங்களிலும் கூறப்பட்டுள்ளது. ‘சீர்கருணீகர் ஊசல்’ 12 பாக்களால் பாடப்பட்டுள்ளது. கருணீகர் பெருமையுரைத்த சருக்கமும், ‘சீர்கருணீகர் புகழ்’, ‘சீர்கருணீகர் ஊசல்’ எனும் பகுதிகள் பிற்சேர்க்கை என்பது எனது கருத்து. 64 கோத்திரங்களும் 32 கோத்திரங்களும் முன்னர் ‘கருணீக மித்திர’னில் வெளியிடப்பட்டுள்ளமையால் மீண்டும் இங்கு குறிக்கப்படவில்லை.

            சீர்கருணீகர் புராணம், புராணத்தின் அடிப்படையில் சுருக்கமாக உரைநடையில் எழுதுவதற்கு வாய்ப்பளித்த ‘கருணீக மித்திரன்’ ஆசிரியருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சூரியகுலத் தோன்றலான – பிரம்மனின் புத்திரன் – சித்திரா குப்தரை தலைமகனாகக் கொண்டு கருணீகர் புராணம் ஒன்றுள்ளது. அதிலும் காஞ்சிபுரமும், சோழமன்னனும், கானிதேவியும் குறிக்கப்பட்டுள்ளனர். அப்புராணத்தின் ஆதாரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்றமையான் நான் அதன் அடிப்படையில் புராணம் (மூலம்) உள்ளோர் அப்புராணத்தை தெள்ளிய உரைநடையில் ‘கருணீக மித்திர’னில் எழுத வேண்டுகிறேன். இப்புராண வரலாற்றினை ‘கருணீகர் மித்திரன்’ மூலம் படித்து வந்த அனைவருக்கும் நன்றி!

(நிறைவுற்றது)

Share this post:

5 thoughts on “கருணீகர் வரலாறு – தெ. இரா. விசுவநாதன்

  1. V.D.Swaminathan,

    I feel extremely happy to read the article written in Tamil on Seer Karuneegar. I hereby place on record my gratitude as well. I am quite eager to know more and more about Karuneegars in general and Seer Karuneegars in particular. In addition I wish to know about Seer Karuneegar’s Upanayanam [wearing Sacred Thread], chanting of Vedas, Samitha Dhanam by bachelors [Brahmacharis] after Upanayanam, Oupasanam by married people, marriage rituals and other traditional practices for auspicious as well as inauspicious events [funeral, mourning period, Devasam or Shrardham etc]. I will be all the more happy and grateful if I get to know whether Seer Karuneegars belong to 1st Varunam that is Priestly group of people. Going by the details given in the article, it is quite obvisous, Seer Karuneegars were regarded as Brahmins once upon a time. But later on their status is lowered especially due to misinterpretation of the caste title “Pillai”. I personally feel that the title “Pillai” is a honorary one. If at all, caste related title has to be given to all subsects of Karuneegars, it could be “Karnik”.

    Reply
    1. MBK Post author

      Thank you for your appreciation!! I will publish more articles in the near future related to this topic. To my knowledge, the ancient name for Karuneegar is ‘Saura Brahman’ which means ‘Brahmans who worship the God Surya’. The title ‘Pillai’ is certainly an honorary one!!

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *