முன்பு ஒருகாலத்தில் மல்லி என்ற ஊரில் சண்டபிரசண்ட சுந்தரமைய்யர் என்னும் அந்தணன் கிராம கர்ணம் வேலை பார்த்து வந்தார். அவருடைய மேல் உத்தியோகஸ்தரும், கிராம ஜனங்களும் அய்யரைக் கண்டால் ‘ஏ, கர்ணம்’ என்றழைப்பார்கள். அதனால் அய்யருக்கு மிக்க மதிப்பு குறைவாக இருக்கிறதென்று தனது வேலையை இராஜிநாமா கொடுத்து விடலாமென்று யோசனை செய்து, அடுத்த ஊருக்குச் சென்று பரிசாரகஞ்செய்து பிழைக்கலாமென்று எண்ணி சமுத்திரம் என்னும் ஊரில் சமையல் கிருஷ்ணய்யர் என்னும் பிரபல சமையற்காரனிடம் தன்னைச் சம்பளத்துக்கு வைத்துக்கொள்ளுமாறு கேட்க, கிருஷ்ணய்யரும் சரியென்று தன்னிடத்தில் அமர்த்திக் கொண்டார். அவ்வூரில் சில நாள் சென்றதும், பெருத்த கனவானாகிய இராவ் சாகிப் கே. எஸ். மீனாக்ஷிசுந்தரமய்யர் அவர்கள் (கே. வி. ஐ.) வீட்டில் விவாகம் நடைபெற்றது. மேற்படி விவாகத்திற்கு நமது அய்யரைச்சேர்ந்த வகுப்பார் சமையல் சாப்பாட்டுக்கு இலை போட்டு பரிமாறப்பட்டு போஜனஞ் செய்துகொண்டிருந்தார்கள். நமது அய்யர் மூக்கு வைத்த தூக்கு பாத்திரத்தில் சாம்பார் எடுத்து வந்தார். பந்தியில் உட்கார்ந்த ஒரு பையனுக்கு நமது அய்யர் எடுத்து வந்தது இன்னதென்று தெரியாததால் ‘ஓ, கர்ணம், இங்கு கொண்டு வா’வென அழைத்தான். பார்த்தார் அய்யர், வந்தது கோபம்; அடா பாபமே! போதும் போதும் இத்தொழிலே வேண்டாம். ‘கர்ணம் என்ற பேர்போய் கோகர்ணம் என்ற பேர் கிடைத்தது’ என நினைத்து உடனே தனது ஊர் போய்ச் சேர்ந்து, வேறு எந்தத் தொழிலைச் செய்யலாமென்று யோசனை செய்தார். மல்யுத்த பயிற்சி செய்தால் நல்ல வெகுமானம் கிடைக்குமென்று நினைத்து பழவூர் மல்யுத்தத்தில் பொன், வெள்ளி, தங்கம், பட்டயம் முதலியதுகள் பரிசுபெற்ற வீரஜெயபாலையாத் தேவர் அவர்களிடம் சென்று மல்யுத்த பயிற்சி செய்விக்க வேண்டுமென்று சொல்ல, அந்தத் தேவர் நமது அய்யரை உற்றுநோக்கி அங்கலக்ஷணங்களெல்லாம் பொருந்தி வாட்ட சாட்டமாக இருக்கிறது என்று பரீக்ஷை பார்த்த பிறகு அந்தத் தேதி முதல் சிக்ஷைகற்றுக் கொடுத்து வந்தார். ஒருநாள் நமது அய்யரைப் பார்த்து குட்டிகர்ணம் போடச் சொன்னார். பார்த்தார் அய்யர்; விட்டார் வேலையை; ‘அடவிதியே! வெறுங்கர்ணம் போய், கோகர்ணம் கிடைத்தது, இப்பொழுது அது குட்டிகர்ணமாகி விட்டது!’ என நினைத்து ஊர் வந்து என்ன செய்வதென்று தோன்றாமல் இருக்கும்போது, ஒரு வைதீகர் அவ்வழியாகச் சென்றார். அதைப் பார்த்து நமது அய்யர் இந்தத் தொழில் செய்யலாமென்று நினைத்து, தினந்தோறும் அதிகாலையில் எழுந்திருந்து தாம்பிரபர்ணி நதிக்குச் சென்று தீர்த்தமாடி, விபூதி, ருத்திராக்ஷ முதலியதும் அணிந்து சிவப்பழமானார். அவ்வூரில் பெயர் பெற்ற சுவாமிநாத கனபாடிகள் நமது அய்யரிடம் வந்து இன்றைய தினம் நமது வீட்டில் ஸபிஸ்டி கர்ணம் நடக்கிறது; தாங்கள் அதற்கு வரவேண்டுமெனச் சொன்னார். அய்யருக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. அடா கிரகசாரமே! சாதாரண கர்ணம் போய் குட்டிகர்ணம் லபித்தது, அதுபோய் ஸபிஸ்டி கர்ணம் வாய்த்தது. ஆஹா! ஆஹா! பலே பலே; தமாஷ்! இது நமக்குச் சரிபட்டு வராதென நினைத்து வைதீகத்தை விட்டுவிட்டுக் காவியம் படித்தால் நல்ல பண்டிதர் என்று பட்டம் பெறலாமென நினைத்தார். மாணிக்கம் என்ற ஊரில் தர்க்கம் முதலியதுகளில் தேர்ச்சி பெற்ற வித்வ சிரோமணி பிரம்மஸ்ரீ சங்கர சாஸ்திரிகள் என்றவரிடம் சென்று சகல சாஸ்திரத்தைக்கற்று, பண்டிதரென்றும், வித்வானென்றும் மஹாபதேசனென்றும், கவிரத்னமென்றும் பேரும் வகித்துத் தனது ஊர்வந்து சேர்ந்தார். இவரது அடுத்த ஊராகிய முத்துவிஜயபுரத்தில் சகல கலைக்கியானமும் கற்றுணர்ந்த பிரம்மஸ்ரீ சங்கரசிரௌதிகள் நமது அய்யரின் வித்வத்தன்மையை உத்தேசித்து அவரிடம் வந்து ஐயா! உமக்கு வியாகர்ணம் தெரியுமாவென்று கேட்டார்; இந்த சமயத்தில் நமது அய்யரைப் பார்த்தால் எப்படியிருப்பாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்! அடா விதிவசமே! பூர்வ ஜனன விசேஷமா? என்ன செய்வேன்! ஈசா அடடா அடா! கர்ணப்பேயே என்னை விட்டு அகலமாட்டாயாவென்று நொந்து மூர்ச்சையாகிவிட்டார். கொஞ்சம் நேரம் சென்று மூர்ச்சை தெளிந்து மூக்கில் விரலை வைத்து யோசனை செய்து கடைசியாகப் புரோகிதஞ்செய்வது நல்லதென்று நினைத்து அய்யரவர் புரோகித தொழிலைப் பார்த்து வந்தார். அவ்வூரில் பிரபல தனிகரான தேசாபிமானியாகிய சுகுண சுந்தரம்பிள்ளை (எம். ஏ. ஐ. சி. கி) என்பவரின் குழந்தைக்கு நாமகர்ணம் செய்யுமாறு நமது அய்யரை அழைக்க; அடடா! பிரார்த்த கர்மமே! எங்கே போனாலும் நம்மை விடாதுபோல் அல்லவா தோன்றுகிறது. இத்தொழிலை விட்டு நாடகத் தொழிலே சரியென்று நினைத்து, கரி சூழ்ந்த மங்கலத்தில் நடந்துவரும் ஸ்ரீ ஆனந்தகான சபாவில் சென்று தனக்கு ஒரு வேஷம் தரும்படி கேட்டுக்கொண்டார். நான்காவது வருஷக் கொண்டாட்டத்திற்காக ஏற்படுத்தியிருக்கும் மஹாபாரதத்தில் நமது அய்யருக்கு விகர்ணன் என்னும் ஆக்ட் கொடுக்கப்பட்டது. என்ன செய்வார்! பாபம்! பழைய கர்ணமே மேலென நினைத்து பழையபடி கிராம கர்ணம் வேலை பார்த்து ஈசன் கிருபையால் சகலபோக பாக்கியங்களையடைந்து சுகமாகத் தனது வாழ்நாளைக் கழிக்கலானார்.
(1928-ஆம் ஆண்டு ‘கருணீக மித்திரன்’ இதழில் வெளிவந்த இக்கட்டுரை 1995-ஆம் ஆண்டு இதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.)