ஒரு பெரியவர் வெளியில் புறப்படும்போது செருப்பு அணிந்து கொண்டு குடையுடன் செல்வார். அந்தச் செருப்பு, குடையுடன் பேசுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்தது. அந்த வாய்ப்பு ஒருநாள் கிடைத்தது.
“ஏ! குடையே, இந்த மனிதன் நன்றி கெட்டவன்” என்று பேசத் தொடங்கியது அது.
“ஏன் இப்படி சொல்கிறாய்?” என்று கேட்டது குடை.
“நான் இவனுக்காக எப்படியெல்லாம் உழைக்கிறேன். ஆனாலும் இவனுக்குக் கொஞ்சம் கூட நன்றி உணர்வே இல்லை”
“எனக்கு அப்படித் தெரியவில்லையே!”.
“நான் உழைத்து உழைத்துத் தேய்ந்து போகிறேன். நீ அப்படி தேய்வதில்லையே!”
“நீ சொல்வது உண்மைதான். ஆனாலும்…”
“நான் இவனை முள், கல் வழியில் கிடக்கும் பூச்சிகள் முதலியவற்றிலிருந்து காப்பாற்றுகிறேன்”
“நான் மனிதனை மழை, வெயில் படாமல் கவனித்துக் கொள்கிறேன்”
“நான் இல்லை என்றால் இவனால் கடும் வெயிலில் தார் ரோட்டில் நடக்க முடியுமா?”
“அது சரி, நாம் இரண்டு பேரும் இவனுக்கு உதவி செய்கிறோம்”
“ஆனால் உன்னைவிட நான்தான் இவனுக்கு அதிகமாக உதவி செய்கிறேன். அப்படி இருந்தும்…”
“நான் மழை, வெயில் காலத்தில்தான் இவனுடன் இருக்கிறேன். நீ எப்போதும் இவனுடன் இருக்கிறாய் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இவன் நன்றி கெட்டவன் என்று நான் எப்படிச் சொல்ல முடியும்?”
“நான் இவனுக்காக இப்படிக் கடுமையாக உழைத்தாலும் கூட இவன் என்னை வீட்டில் அனுமதிக்காமல் வெளியிலேயே நிறுத்தி விடுகிறான். ஆனால், உன்னை மட்டும் வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போகிறான். இது நன்றி கெட்ட குணம் இல்லையா?” குடை ஒரு நிமிடம் சிந்தனை செய்தது.
“உன்னை வெளியே நிறுத்துவதற்குக் காரணம் தெரியுமா? நீ என்னைவிடக் கடுமையாகத் தொண்டு செய்தாலும் கூட, வழியில் தீயவை, அசுத்தங்கள் ஆகியவற்றுடன் நட்புக் கொள்கிறாய். அது இவனுக்குப் பிடிக்கவில்லை. நான் அப்படிப்பட்டவருடன் சேர்வதில்லை. அதனால்தான் இவன் உன்னை மட்டும் உள்ளே அனுமதிப்பதில்லை” என்று குடை சொன்னதும் செருப்புக்கு அதை எப்படி மறுப்பது என்பது தெரியவில்லை. அது மறுமொழி கூறவில்லை.
(திரு. மலையமான் அவர்கள் எழுதிய “பனித்துளிகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.)