சிறுகதை: வீடு நிறைந்த விளக்கு – எம்.பி.ஆர்

அத்தினப்புரத்தை ஆண்ட குருகுல அரசனான திருதராட்டிரன் மைந்தர் நூற்றுவரும், பாண்டு புத்திரர் தருமர் உள்ளிட்ட ஐவரும் துரோணாசாரியாரிடம் வில்வித்தை, வாள்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம் முதலிய அருங்கலைகளைக் கற்று வந்தனர்.

இவ்வாறு பயிலும் காலத்து, பாண்டு புத்திரனான அர்ச்சுனன் மற்றவர்களை விடப் பதின்மடங்கதிகமாக எல்லாக் கலைகளிலும் தேர்ச்சியுற்றிருந்தான். அதுகண்ட துரியோதனன் பாண்டு புத்திரர்களிடம் ஆசூயையும் பகைமையுங் கொண்டு, திருதராட்டிரனிடமும் பீஷ்மரிடமும் துரோணர் தங்களிடம் அசிரத்தையாயிருப்பதாகவும், வினோதக் கலைகளைப் பாண்டவருக்கே

கற்பிக்கிறார் என்றும் கூறி, அன்னவரை மனக்கிலேசமுறச் செய்தான். உடனே அவர்கள் துரோணரை அழைத்து வினவினார்கள். துரோணர், “மண்டலாதிபதிகளே! அனைவரையும் சமமாகப் பாவித்து, எல்லாக் கலைகளையும் அனைவர்க்கும் பாரபட்சமின்றிக் கற்பித்து வருகின்றேன். அவரவர்களுடைய அறிவுக்கேற்றாற்போலக் கலைகளும் வளர்ச்சி அடைகின்றன. இன்னும் ஏதேனும் கிஞ்சித்து ஐயமிருந்தாலும் நூற்றைவரையும் பரீட்சித்துப் பாருங்கள்” என்று கூறித் தம் குடில் ஏகினார். 

பின்பு திருதராட்டிரனும் பீஷ்மரும் அமைச்சருடன் ஆலோசித்துத் துரியோதனாதியரை அழைத்தனர். அவர்களிடம் சிறிது பொருள் தந்து, “இந்தப் பொருளைக் கொண்டு வீடு நிறைந்த பொருளை வாங்கி வையுங்கள்” என்று கூறி அனுப்பினர். அதுபோலவே பாண்டவரிடமும் பொருள் தந்து, “நீவிர் ஐவீரும் இப்பொருளின் உதவியினால் வீடு நிறைந்த பொருள்களை வாங்கி வையுங்கள்” என்று சொல்லி அனுப்பினர்.

பாண்டு மைந்தரில் மூத்தவரான தருமர் தம் சகோதரருடன் கலந்தாலோசித்தார். பின்பு தந்தை தந்த பொருளில் அருச்சுனனிடம் சிறிது தந்து, “அருச்சுனா, வீடு நிறைந்த பொருள்களை வாங்கி வைக்குமாறு நம் தந்தை கூறியிருக்கின்றார். அதனால் நீ பன்னீர், சந்தனம், பூ முதலிய வாசனைப் பொருள்களையும், தாம்பூலம், பால், பழம் முதலியவற்றையும் வாங்கிக் கொண்டு வா” என்று கட்டளையிட்டார்; வீமனிடமும் சிறிது பொருள் தந்து அவனை நோக்கி, “வீமா, நீ இப்பொருளைக் கொண்டு அறுசுவையுள்ள பதார்த்தங்களுடன் அன்னம் தயாரிக்க வேண்டும்” என்று பணித்தார்; சகாதேவனைப் பார்த்து, “நம் தந்தையாரும் பீஷ்மரும் இங்கே வந்து விருந்துண்டு சிறிது நேரம் சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார்கள். அவ்வமயம் அவர்களுக்குப் பஞ்சணை தேவைப்படும். எனவே, சிறந்த வகையுள்ள மெத்தை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வா” என்று கூறி அவனிடமும் சிறிது பொருள் தந்தார்; பின்பு எஞ்சிய பொருளைக் கடைசி சகோதரனாகிய நகுலனிடம் தந்து, “நம் தந்தையாரும், பெரியவர் பீஷ்மரும் நம் குடிலுக்கு வரும்போது வீடு பிரகாசமாயும் அலங்காரமாயும் இருக்க வேண்டும். எனவே, ஆங்காங்கு விளக்குகள் ஒளிர்விட்டுப் பிரகாசிப்பதற்கேதுவான நெய், திரி முதலிய இன்றியமையாப் பொருள்களை வாங்கிக் கொண்டு வா” என்று கூறி அனுப்பினார்.

தமையனார் கட்டளைப்படி நான்கு தம்பியரும் அவரவர்க்குப் பணிக்கப்பட்ட பொருள்களை வாங்கி வீட்டில் வைத்து அவரவர்  கருமத்திலேயே கண்ணாயிருந்தனர். பின்பு தருமர் உள்ளிட்ட ஐவரும் மங்கள நீராடி, புத்தாடை தரித்து, வீட்டை அலங்கரித்து, திருவிளக்குகள் ஏற்றி, பெரியோர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

திருதராட்டிரன் மதலையாகிய துரியோதனன், துச்சாதனன், தன் பின்னவருடன் அருமை நண்பன் கர்ணனுடனும், மாமன் சகுனியுடனும் இருந்து, தந்தை தந்த பொருளைக் கொண்டு எவ்விதமாக வீட்டை நிறைப்பது என்பது பற்றி ஆலோசனை செய்தான். சுவேத ராஜன் இளைய புத்திரனும், துரியோதனாதியரின் நல்லம்மானுமாகிய சகுனியும், கர்ணனும் கலந்தாலோசித்து, துரியோதனனைப் பார்த்து, “அன்புள்ள இளவரசே! வீடுநிறைந்த பொருள் வாங்குவதற்கு உன் தந்தை சிறிது திரவியத்தையே கொடுத்தார். அதைக் கொண்டு தந்தையின் அவாவைப் பூர்த்தி செய்வது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலாகும். எனவே, சிறிது திரவியத்தைக் கொண்டு வீடு நிறைந்த பொருள் வாங்க வேண்டுமென்றால், வைக்கோல் வாங்கினால் திரவியத்துக்குத் தகுந்த பொருளாகவும் இருக்கும்; வீடு நிறைந்த பொருளாகவும் இருக்கும்” என்று கூறி, இளவரசன் முகம் நோக்கி ஆவலுடன் இருந்தனர்.

அம்மான் மொழிகளைச் செவியேற்ற துரியோதனன் அகமகிழ்ந்தான். “மாமா, அவ்வப்போது சூழ்நிலைக்கும் சமயத்திற்கும் ஏற்றாற்போல அறிவுரை கூறுபவர் உம்மைத் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லை. உம்மைப் போன்றும் பாண்டவருக்கு அறிவுரை கூறுபவர் ஒருவரும் இல்லை. இது பற்றி நான் மிகவும் ஆனந்தம் கொள்ளுகின்றேன், உம் வார்த்தையின் படியே வைக்கோல் வாங்கி நிரப்புகின்றேன்” என்று மொழிந்து, வைக்கோல் வாங்கி வீடு நிறைய அடைத்தான்; தன்னுடைய செயல் பாண்டவருக்குத் தெரிந்தால் அவர்களும் தான் செய்ததையே செய்வார்கள் என்னும் கெட்ட எண்ணம் கொண்டவனாய், வீட்டின் கதவுகளைத் தாளிட்டான்; வாயிலின் வெளியிலேயே தன் தம்பியருடன் தந்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் வாக்களித்த வண்ணம், திருதராட்டிரன் பீஷ்மருடனும், அமைச்சருடனும் முதலில் துரியோதனனிடம் சென்றான். தந்தையின் வருகையைக் கண்ட தனயன் எதிர் கொண்டு அழைத்தான். திருதராஷ்டிரன் மைந்தனைப் பார்த்து, “நான் சொல்லியபடி வீடு நிறையப் பொருள்களை வாங்கி வைத்திருக்கிறாயா?” என்று ஆவலுடன் கேட்டான்.

துரியோதனன் மிக்க பணிவுடன், “நீர் கட்டளையிட்ட வண்ணம் வீடு நிறைந்த பொருளை வாங்கி வைத்திருக்கின்றேன், வைக்கோலைத் தவிர வீடு நிறைந்த பொருள் வேறொன்றும் இல்லை. ஆகையினால் வாயிற்கதவைத் திறப்பதற்குக் கூட இடமில்லாமல் வீடு நிறைய வைக்கோலை அடைத்து வைத்திருக்கின்றேன்” என்று மிகவும் அகம்பாவத்துடன் சொன்னான். அவன் மொழி கேட்ட பீஷ்மர் உள்ளிட்டோர் அனைவரும் மனம் மிக வெதும்பினர்; வீட்டின் உள்ளே செல்வதற்கு இயலாமல் அவ்விடத்தினின்றும் அகன்று, பாண்டவர் இல்லம் சென்றனர்.

பாண்டவர் ஐவரும் பெரியோரை ஆவலுடன் இன்முகங்கொண்டு வரவேற்று, தம் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றனர்; தக்க ஆசனங்களில் அவர்களை இருக்கச் செய்து அஞ்சலி செய்தனர். வீடு நன்றாக அலங்கரிக்கப்பட்டிருப்பதையும், சோதி மயமாக விளக்குகள் பிரகாசிப்பதையுங் கண்ட பீஷ்மர் அகம் மகிழ்ந்து, தருமரை நோக்கி, “மைந்தனே! வீடு நிறையும்படியாக என்ன பொருளை நீ வாங்கி நிறைத்துள்ளாய்?” என்று கேட்டார்.

தருமர், “உலகிற்கு இன்றியமையாதது ஒளி. பிரகாசமான ஒளி உலகத்தின் எல்லா இடங்களிலும் வியாபிக்கும் பொருள். எனவே, வீடு நிறைந்த பொருள் திருவிளக்குகளேயன்றி வேறொரு பொருளும் இல்லை என்பது எங்கள் அபிப்பிராயம். எமது குடிலுக்கு வருகிற உமக்கு விருந்தளிக்காமல் அனுப்புவது தகுதியல்லவென்று எண்ணி, எங்களால் முயன்ற வரையில் அறுசுவைப் பதார்த்தங்களுடன் நல்லன்னம் தயாரித்துள்ளோம். எனவே, அனைவரும் இங்கு விருந்துண்டு சிரம பரிகாரம் செய்து கொள்ள வேண்டுகின்றோம்” என்று பணிவுடன் கூறினார்.

தருமரின் வேண்டுதலை நிராகரிக்க மனமில்லாத திருதராட்டிரன், பீஷ்மர் முதலியோர் சந்தோஷம் அடைந்து, அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். அறுசுவைப் பதார்த்தங்களுடன் கூடிய அன்னம் பரிமாறப்பட்டது. பின்பு விருந்துண்ட பெரியோருக்கு இனிப்பு மிக்க, பழ வகைகளையும், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகிய  இன்னோரன்ன வாசனைப் பொருள்களையும் அர்ச்சுனன் கொண்டு வந்து வைத்தான்.

பீஷ்மரின், திருதராட்டிரன், அமைச்சர் முதலியோர் மாலை, சந்தனம் முதலியவற்றை அணிந்து, தாம்பூலம் தரித்தனர்; பிறகு சிறிது நேரம் பஞ்சணைகளில் சிரமபரிகாரம் செய்து கொண்டனர்; பாண்டு மைந்தரின் அறிவாற்றலையும் தெரிந்து தெளிவுறச் செயல்படுவதையும் கண்டு அவர்களைப் புகழ்ந்து நல்லாசி கூறி, பிரியா விடைபெற்று, அரண்மனைக்குச் சென்றனர்.

(திரு. எம்.பி.ஆர். அவர்கள் எழுதிய “வள்ளுவரின் குறள் நெறிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *