ஒரு காட்டில் ஒரு விறகுவெட்டி ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அந்த மரம் ஓர் ஆற்றின் கரையில் இருந்தது. மரத்தை வெட்டும் போது கையில் இருந்த கோடாலி தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. ஆறு ரொம்ப ஆழமாய் இருந்தபடியால் தண்ணீருக்குள் இறங்கி அவனால் கோடாலியை எடுக்க முடியவில்லை. அதனால் கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவனைப் பார்த்து இறக்கங்கொண்ட வனதேவதை அவன் முன்பு தோன்றி, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டது.
கோடாலி தண்ணீருக்குள் விழுந்து விட்டதாகவும், அது கிடைக்காவிட்டால் தனக்குப் பிழைப்புக்கு வழி இல்லை என்றும் விறகுவெட்டி சொன்னான். வனதேவதை தண்ணீருக்குள் மூழ்கி ஒரு தங்கக் கோடாலியோடு வெளியே வந்தது; அதை விறகுவெட்டியிடம் கொடுத்தது. அவன் அதைப் பார்த்ததும் அது தன் கோடாலி அல்ல என்றும், அது தனக்கு வேண்டாம் என்றும் சொல்லி விட்டான். வனதேவதை மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி ஒரு வெள்ளிக் கோடாலியை எடுத்து வந்து கொடுத்தது. அதுவும் தன்னுடையது அல்ல என்று சொல்லி விறகுவெட்டி மறுத்து விட்டான். வனதேவதை மூன்றாவது தடவையாகத் தண்ணீருக்குள் மூழ்கி விறகுவெட்டியின் கோடாலியை எடுத்து வந்து கொடுத்தது. அதைப் பார்த்ததும் விறகுவெட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இரண்டு கைகளாலும் அதை வாங்கிக் கொண்டான்.
விறகுவெட்டியின் நாணயத்தைப் பார்த்து வனதேவதை சந்தோஷங் கொண்டது. “நீ உண்மையாக நடந்து கொண்டபடியால் உன்னுடைய கோடாலியோடு இந்தத் தங்கக் கோடாலியையும், வெள்ளிக் கோடாலியையும் உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். எடுத்துக் கொள்” என்று வனதேவதை சொல்லிற்று.
மூன்று கோடாலிகளோடு விறகுவெட்டி வீடு திரும்பினான்; காட்டில் நடந்த அதிசயத்தை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சொன்னான். இதைக் கேட்டவர்களில் ஒருவன் உடனே காட்டுக்குப் போனான்; விறகு வெட்டியின் கோடாலி தண்ணீருக்குள் விழுந்த இடத்தில் தனது கோடாலியைப் போட்டான்; கரையில் உட்கார்ந்து அழுதான்.
வனதேவதை வந்தது. காரணத்தைக் கேட்டது; தண்ணீரில் மூழ்கி ஒரு தங்கக் கோடாலியை எடுத்து வந்து காட்டியது. அதைப் பார்த்த பேராசைக்காரன் “ஆமாம் அதுதான்” என்று சொல்லிக் கொண்டே அதைக் கைப்பற்றப் போனான். உடனே தேவதை, “ஓ பேராசைக்காரனே, உன் உள்ளத்தை அறியக்கூடிய உன் தெய்வத்தையா ஏமாற்றப் பார்க்கிறாய்? உன்னுடைய கோடாலியைக் கூட உனக்குக் கொடுக்க முடியாது. ஓடிப்போ” என்று சொல்லியது.
பேராசைக்காரன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.
“அதிக ஆசை கொண்டால் உள்ளதும் பறிபோகும்.”
(திரு. வை. கோவிந்தன் அவர்களால் தொகுக்கப்பட்ட “ஈசாப் குட்டிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)