“திருச்சி!”
“கிடையாது.”
“சுவாமிமலை.”
“சீ.. சீ..”
“சீரங்கம்.”
“என்னடி இது?” அலுத்துக் கொண்டாள் மைதிலி. “எல்லாம் குட்டிக் குட்டிகளாகவே சொல்கிறீர்கள்! நமக்கு வேண்டியது பெரிய ஊர். ஏண்டி, மெட்ராஸ் போனால் எப்படி?”
“ஆகா!” பூரித்துப் போனாள் ரேவம்மா. “ஜோராயிருக்கும்! லைட் ஹவுஸில் ஏறி ஊரையே நல்லாப் பார்க்கலாம்.”
“அதெல்லாம் வேண்டாமடி.” மீரா சொன்னாள். “அவ்வளவு தூர உல்லாசப் பயணத்திற்கெல்லாம் நம் ஸ்கூல் பஸ் தாக்குப் பிடிக்காது. பேசாமல் தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையுள்ள கோவில்களுக்கெல்லாம் போய்ச் சுற்றிவிட்டு வருவோம். ஜாலிக்கு ஜாலியுமாயிற்று, புண்ணியத்திற்கு புண்ணியமுமாயிற்று. என்ன?”
“அதுதான் சரி.” என்று அனைவரும் ஆமோதிக்கவே, பிரயாணத்திற்கான திட்டம் தயாரிக்கலானார்கள்.
தலைக்கு இரண்டு ரூபாய்கள் தருவதென தீர்மானமாயிற்று.
ஹெட்மிஸ்ட்ரஸ் உத்தரவு வாங்கி வருகிறேனென்று கிளம்பிய அனிலாவைத் தடுத்தார்கள்.
“அதெல்லாம் நீ மட்டும் தனியே போனால் காரியம் நடக்காது. அன்று ஹோம்சயின்ஸுக்குப் போனது போலப் போனால்தான் சரிப்படும்,” என்று கூறிவிட்டு அனைவருமே கிளம்பி ஓடினார்கள்.
தாங்கொணாத ஆச்சரியத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தன வால்கள்!
“கேட்டவுடனே ஹெட்மிஸ்டிரஸ் அனுமதி தந்துவிட்டாரே!”
ஆனால் அதன் உண்மைக் காரணமோ வேறு. பிக்னிக்குக்காக அவர்கள் குறிப்பிட்ட பதினைந்தாம் தேதியன்றுதான் பள்ளியில் ஆடிட்டர்கள் வருவதாய் இருந்தது. அந்த ஸ்கூல் பஸ் இருந்த லட்சணத்தில் அது அவர்களது கண்ணில் படாமலிருப்பதே நல்லதென்று நினைத்துத்தான் சட்டென்று அனுமதி தந்துவிட்டார் அவர்.
“ஓ!” என்ற இரைச்சலுடன் அந்த ஹைதர் காலத்து, ஓட்டை ஸ்கூல் பஸ் கிளம்பியது.
அந்தக் கிராமத்தின் நொடியான ரஸ்தாக்களில், பெருச்சாளியைப் போல குடுகுடென்று ஏறியிறங்கி அது போகும்போது அவர்கள் உற்சாகம் கரைபுரண்டோடியது.
“பாப்பாக்களே!” சம்மர் கிராப்பு முண்டா பணியனுடன் அமர்ந்திருந்த காரோட்டி எதிர்ப்படும் சந்து பொந்துக்களையெல்லாம் சுட்டிக் காட்டி, “இந்த ரோடு நேரே எங்கே போகுது தெரியுமா?” என்று அது போய்ச் சேரும் ஊர்களைப் பற்றியும், அதன் புராதனப் பெருமைகளைப் பற்றியும் அளக்க ஆரம்பித்தான்.
முதலில் அவன் புலமையைக் கண்டு அளவு மீறி ஆச்சரியப்பட்டு ரசித்தார்கள்.
இரண்டாம் தடவை ஆச்சரியப்பட்டு ரசித்தார்கள்.
மூன்றாம் தடவை ஆச்சரியம் மட்டுமே பட்டார்கள்.
நான்காம் தடவை, “போரடிக்காமல் போகமாட்டாய் நீ!” என்று பாய்ந்து அடக்கினார்கள்.
ஆத்திரம் தாங்கமாட்டாத டிரைவர் ஆக்ஸிலேட்டரை ஓங்கி மிதிக்க அவமானம் தாங்கமாட்டாத அந்த ஸ்கூல் பஸ் வேலை நிறுத்தம் செய்துவிட்டது.
“வீல் த்ரெட்டில் ஒரு மைனர் ரிப்பேர்,” ஒரு பாகத்தைச் சுட்டிக் காட்டினான் காரோட்டி.
“வரும்போதே சரிபார்த்து வைப்பதில்லை?” அலுத்துக் கொண்டாள் மரகதமணி. “இப்படி நடுக்காட்டில் வந்து தொல்லை தருகிறாயே!”
“சீக்கிரம் ஆகட்டும்,” என்று கார் ஓட்டிக்கு உத்தரவிட்டுவிட்டு, பக்கத்து மைதானத்தில் இறங்கினார்கள். சிலர் ‘ஸ்கிப்பிங்’ விளையாடினார்கள். சிலர் பந்து பிடித்து ஆடினார்கள். இன்னமும் சிலர் ஓடிப்பிடிப்பதும், நொண்டியாடுவதுமாக இருந்தார்கள்.
“உஸ்!… சப்தம் போடக்கூடாது!” கிசுகிசுப்பு… முனகல்…
“மெள்ள.. மெதுவாக..” மரகதமணியின் கைக்கடியாரத்தில் குறும்பு பண்ணிக் கொண்டிருந்தன வால்கள்.
சதி நடப்பது தெரியாமல் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு, பஸ் ஸீட்டிலேயே குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள் மரகதமணி.
குளுகுளுக்கென்று சிரிப்பொலியுடன் சற்றுத் தள்ளி வந்தார்கள் அனிலாவும், மீராவும்.
“எவ்வளவு தள்ளி வைத்தீர்கள்?”
“சுத்தமாக இரண்டு மணி.” அனிலா தனது கைக்கடியாரத்தையும் மாற்றி வைத்துக்கொண்டாள். “மைதிலி! நீயும் மாற்றிக்கொள்.”
“ஐயையோ… நேரமாச்சே…” என்று உரத்த குரலில் எல்லோரும் சேர்ந்து கத்த…
அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தாள் மரகதமணி. “ஏண்டி பிசாசு மாதிரி கத்துகிறீர்கள்?”
“நேரமாயிட்டுது டீச்சர்! இன்னும் கூடப் பஸ் கிளம்பல்லியே!”
“ஒன்றடிக்கப் பத்து நிமிடமா?” தன் மணிக்கட்டு கடியாரத்தைப் பார்த்து வியந்தவள், வெளியே எட்டிப் பார்த்துக் கேட்டாள்: “ஏம்பா! மணி ஒன்றாகப் போகிறது? இன்னுமா ரிப்பேர் முடியவில்லை.”
“ஒண்ணா?” டிரைவர் தன் கடியாரத்தைப் பார்த்தான். “என்னம்மா இதுல பத்தே முக்கால்தானே ஆகிறது?”
“பத்தே முக்காலா?” என்றவள் திரும்பி “ஏண்டி அனிலா? உன் வாட்சில் டயம் என்ன?” என்றாள்.
“ஒன்றடிக்கப் பத்து நிமிஷம் டீச்சர்.” என்றாள் அனிலா பவ்யமாக!
“உன் வாட்ச்?” என்று மைதிலியைக் கேட்டு, அவளும் ‘அதே’ கூற, காரோட்டிமீது பாய்ந்தாள் மரகதமணி.
“உன் கடியாரத்தைக் கொண்டு போய் கொள்ளிடத்திலோ, குடமுருட்டியிலோ போடு! சீக்கிரம் ஆகட்டுமய்யா!”
வியப்பு மிகுதியின் காரணமாக, அவனால் மூச்சுக்கூட சரியாக விட முடியவில்லை. “இரண்டு மணி நேரமாகவா ரிப்பேர் பார்த்தோம்!” பேசாமல் தன் கடியாரத்தைச் சரிப்படுத்தி வைத்தான்.
ஆனால் மீரா அடிக்கடி ‘இது ஏப்ரல் மாதம் கூட இல்லையே!’ என்று கூறுவதன் அர்த்தம் அவனுக்காகட்டும், மரகதமணிக்காகட்டும் புரியவே இல்லை.
பஸ் ஓடிக்கொண்டிருந்தது.
“தஞ்சாவூர் இன்னும் எவ்வளவு மைல் தூரமிருக்கிறது?” என்று கார் ஓட்டியைக் கேட்டும், அவன் பதில் தராமலிருக்கவே, “நீ சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா.. இதென்ன சோலாங்கம்பட்டியா! இன்னம் சரியாக இருபத்தொன்பது மைல் இருக்கிறது,” என்று கூறி அவனை அயர வைத்தாள். அவள் தான் முதல் நாளே ரயில்வே டயம்டேபிளைக் கரைத்துக் குடித்துவிட்டிருந்தாளே!
தங்கவேலுவின் ஹாஸ்யமொன்றை மைதிலி விளக்க, ஓ… வென்று மற்றவர்கள் கூவிச் சிரித்தார்கள்.
“ஸ்ஸூ! சைலன்ஸ்!” என்று மரகதமணி காலால் ஓங்கி பஸ்ஸை மிதித்தாளோ, இல்லையோ மானாபிமானியான அந்த பஸ்ஸுக்கு அவமானம் தாங்கவில்லை. நின்று விட்டது.
“என்னைய்யா இது நியூஸன்ஸாப் போச்சு!”
“இப்ப என்ன வந்ததாம் டிரபிள்?”
“டிர்..ர்..டட்.. டிர்..ர்..டட்..” என்று பஸ் முனக, காரோட்டியும் முனகினான். “பாப்பாக்களே, கொஞ்சம் இறங்கித் தள்ளுங்களேன்!”
“அது சரி! இந்தத் தள்ளு மாடல் வண்டியை நம்பிப் புறப்பட்டதே தப்பு!” என்று அலுத்துக் கொண்டவாறு கீழே இறங்கி “தள்ளேய்.. தள்ளேய்,” என்று கூச்சலிட்டவாறு தள்ளலானார்கள்.
“உப்..ப்..ம்..” என்று முழு மூச்சுடன் பஸ்ஸைத் தள்ளிக் கொண்டிருந்த அனிலாவிடம் ஓடிவந்தாள் சீதா! “அக்கக்கா! அனிலக்கா! நான் அங்கே போய்ப் பார்க்கட்டுமா?” என்று ஒரு பக்கத்தைச் சுட்டிக் காட்டினாள்.
பஸ்ஸைத் தள்ளுவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அனிலா, “போயேண்டி சனியனே,” என்றாள் சரியாகக் கவனிக்காமல்.
“போயிடாதீங்க!” என்றவாறு அவள் ஓடிய சில வினாடிகளுக்கெல்லாம்..
‘புருபுரு’ வென்று கிளம்பிவிட்ட்து பஸ்.
“ஹோய்…” என்ற கூவலுடன் எல்லோரும் ஏறிக்கொண்டுவிட்டார்கள்.
“வேறு யாருமில்லையே?” என்று பஸ்ஸைச் சுற்றியும், சக்கரங்களுக்கு கீழேயும் நன்கு ஆராய்ந்துவிட்டு, “ரைட்…ஸ்” என்றவாறு பஸ்ஸில் தொத்திக்கொண்டுவிட்டாள் அனிலா. பஸ்ஸும் குடுகுடுவென்று கிளம்பியது.
“ரகசியம்! பரம ரகசியம்!”
கோரஸ் பாடியபோது ஏதோ குறைவதாக உணர்ந்தார்கள்.
கட்டைக் குரல்கள் கத்தின. மெல்லிய குரல்கள் கேட்டன. இனிமைக் குரல்கள் இருந்தன.
ஆனால் ‘கீச்சு’க்குரல்?
“சீதா!” கண்டுபிடித்த ராஜாதி சொன்னாள். “சீதா எங்கேடி!”
“சீதா!” பஸ் பூராவும் சல்லடை போட்டு அலசினார்கள்.
“சீதாவைக் காணோமே!” சில கண்கள் கலங்கின. சில கையைப் பிசைந்தன. இன்னும் சில, “சீதா! ஐயோவ் சீதா!” என்று அழவே ஆரம்பித்துவிட்டன.
மரகதமணி மயங்கியே விட்டாள்.
“ஆமாண்டி,” பட்டென்று கையை தட்டிக்கொண்டாள் அனிலா. “பஸ்ஸைத் தள்ளும்போது எங்கேயோ போயிட்டு வரென்னு சொன்னாளே. ஐயையோ விட்டுவிட்டு வந்துவிட்டோமே டிரைவர் திருப்பு, வண்டியைத் திருப்பு!”
எல்லோரும் ‘ஊம்.. ஊம்’ என்று கேவிக்கொண்டிருந்தார்கள்.
“அதோ சீதா!”
மைல்கல் ஒன்றின் மீது அமர்ந்து, திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த சீதா பஸ்ஸைக் கண்டதும் எழுந்து நின்றாள்.
பஸ் நின்றதும், நில்லாததுமாக “சீதா என் கண்ணே!” என்று கீழே குதித்தாள் அனிலா.
“அனிலாக்கா!” கதறியவாறு வந்து அவளை அணைத்துக்கொண்டாள். “என்னை விட்டுவிட்டுப் போயிட்டியே!”
“அம்மா அழாதேடி.. என் கண்ணு அழாதேடி!” என்று எல்லோரும் அவளைத் தேற்றியவாறு பஸ்ஸுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.
நாலு பிஸ்கட்டும், இரண்டு வாழைப்பழமும் கிடைத்த பிறகுதான் சீதாவின் அழுகை நின்றது.
“அப்படியானா இங்கேயே பஸ்ஸைத் திருப்பிக் கொள்ளலாமா!” என்று கேட்ட காரோட்டி மீது பாய்ந்தார்கள்.
“திரும்பறதாவது. நேரே போய்யா!”
“ஐயையோ!” டிரைவர் பதறினார்.
“இந்தப் பாதை நேரே எங்கே போகுது தெரியுமா?”
“ஆரம்பித்துவிட்டாயே உன் ‘ஜாகரபி’ புலமையை! அது ஹைதராபாத்துக்குப் போனாலும் அக்கறையில்லை. நீ ஓட்டு. ஓஹோன்னானாம். திரும்பறானாம். திரும்பறான்…” என்று மிரட்டவே… நமக்கென்ன என்று பஸ்ஸைக் கிளப்பினான் டிரைவர்.
“மணி ஆறடிக்கிறது! சூரியன் கொஞ்சம்கூட இறங்கவில்லையே!” என்று மரகதமணி ஆச்சரியத்துடன் கேட்டபோதுதான், எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தவாறு, கடியார முள்ளை மாற்றிவைத்த விஷயத்தை உடைத்தார்கள். அசடு வழிந்தது மரகதமணிக்கும், டிரைவருக்கும்.
“நான் அப்போதே சூசகமாகச் சொன்னேன். ஏப்ரல் மாதம்கூட இல்லையே என்று!” மீரா சிரித்தாள். “நீங்கள் தான் புரிந்துகொள்ளவில்லை.”
கொஞ்ச நேரம் பேச்சும் கூத்துமாக இருந்தவர்கள் மெல்லக் கிறங்கிப் போய்விட்டார்கள்.
“பாப்பாக்களே! ஊர் வந்தாச்சு எழுந்திருங்கள்,” என்ற டிரைவரின் குரல் கேட்டுக் கண்விழித்தார்கள். “தஞ்சாவூரா?” என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தவர்கள் அதிசயப் பட்டார்கள். “அதோ! எங்க பாட்டி!” ஒருத்தி சொன்னாள். “பாட்டி ஏன் தஞ்சாவூருக்கு வந்தாள்?”
“ஐயேவ்! எங்க அப்பாவோட ஓட்டல்!” இன்னொருத்தி திணறிப் போனாள். “இது எப்படித் தஞ்சாவூருக்கு வந்தது?”
“என்னடி இது?” என்று ஆச்சரியப் பட்டவர்களைப் பார்த்து காரோட்டி சிரித்தான். “பயப்படாதீங்க. இது நம்ம ஊர்தான். அசல் மாவடிபுரமேதான். அதோ உங்க ஸ்கூல்!”
“ஐயையோ!” என்று எல்லொரும் கையைப் பிசைய…
டிரைவர் கொக்கரித்தான். “சீதாவைக் கண்டுபிடிக்க திரும்பினோமே அப்போதே வண்டியைத் தஞ்சாவூர் பக்கமாகத் திருப்பலாமான்னு கேட்டேன். நீங்கள்தான் ஹைதராபாத் போனாலும் அக்கறையில்லை. இந்த பக்கமே ஓட்டுன்னு மிரட்டினிங்க. அதுதான் திரும்ப நம்ம ஊருக்கே வந்து சேர்ந்துட்டோம்.”
“ஐயேவ்..” என்று அத்தனை வால்களும் எழுந்து நின்று குதித்து, மிதிக்கவே, பஸ் நின்றது.
“புரப்பட்டுவிட்டீர்களா,” என்று இனிமையுடன் கூறி, வந்திருந்த ஆடிட்டர்களை வழியனுப்பப் பள்ளிக்கூட வாசல் வந்த தலைமை ஆசிரியை சொன்னாள்: “ஸ்கூல் பஸ் மட்டும் வெளியே போயிருக்காவிட்டால் அதிலே உங்களுக்கு மதராஸ்வரைகூட ‘லிப்ட்’ தந்திருப்பேன். அவ்வளவு ‘கண்டிஷ’னிலிருக்கிறது அது!”
அவர் சொல்லி வாயை மூடவில்லை. எல்லா வால்களும் முணுமுணுப்புடன் சேர்ந்து தள்ள, அந்த வர்ணம் உதிர்ந்த ஹைதர் காலத்துத் தகர டப்பா ஸ்கூல் பஸ், அழுது வடிந்து கொண்டு அந்த லே. சா. நி. பெ. உ. பள்ளியின் காம்பவுண்டுக்குள் நுழைந்தது.