தாம் விற்கும் பொருளுக்கு எவ்வளவு அதிகமான விலை கூற முடியுமோ அவ்வளவு அதிகமான விலையைச் சற்றும் சங்கோசமில்லாமல் கூறுபவரைத் திருடர் என்று கூறாமல் வேறு என்ன கூறுவது?
– அண்ணல் காந்தியடிகள்
தேனாட்சி நடத்தும் மீனாட்சி அம்மனின் ஆலயமும், குன்றெங்கும் குடியிருக்கும் குமரக்கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவதுமான திருப்பரங்குன்றமும், பழமுதிர்ச்சோலையும் அருகருகே கொண்டுள்ள அழகான மாவட்டம் தான் மதுரை.
சிறப்பிற்குரிய அம் மாவட்டத்தில் ஆலம்பட்டி என்ற கிராமம் இருந்தது. அதில் அழகர்சாமி என்பவன் வாழ்ந்து வந்தான். அடக்கமே உருவானவன். அளந்துதான் பேசுவான். மற்றவர் மனம் புண்படும் விதத்தில் எதையும் செய்ய மாட்டான்.
அவனுடைய மனைவியும் அவனுக்கு ஏற்பவே அமைந்திருந்தாள். அன்பிற்கு ஒன்று போதும் என்று உணர்ந்து பெற்ற தன் மகனை நல்ல நிலையில் படிக்கச் செய்தான்.
ஆடம்பரம் இல்லாத அளவில் மிகச் சிறிய மளிகைக் கடையை வைத்துக் கொண்டு அதன் மூலம் தன் குடும்பத்தினை நடத்தி வந்தான். அத்தியாவசியமான பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் டவுனில் இருந்து வாங்கி வந்து அவற்றை உரிய டப்பாக்களில் அடைத்து வியாபாரம் செய்தான்.
இலாபமும் வேண்டாம், அதே நேரத்தில் நமக்கு நட்டமும் வேண்டாம் என்ற நிலையில் அவன் செய்த வியாபாரம் அக்கிராமத்து மக்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தது.
ஏழைகளுக்குச் சில நேரத்தில் வாங்கிய விலைக்குக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அவர்களுக்குப் பொருள்களை விற்பனை செய்வான்.
மாத வருமானம் உள்ளவர்களுக்குக் கடன் கொடுத்து அவற்றை அவர்கள் திருப்பித் தரும்போது பெற்றுக் கொள்வான்.
நேர்மையாய் வியாபாரம் செய்யும் அவனுடைய கடைக்கு அக்கம்பக்கத்துச் சிற்றூர்களிலிருந்தும் பொருள்களை வாங்குவதற்காக வந்தார்கள். கூட்டம் நாளடைவில் அதிகமானது. வாடிக்கைக்காரர்களும் பெருகினர்.
முன்பெல்லாம் இரவு ஏழு மணிக்கே கடையினை மூடிவிடும் அழகர்சாமி இப்போதெல்லாம் ஒன்பது மணி ஆன பிறகும் மூடமுடியாத அளவிற்குக் கூட்டம்வர ஆரம்பித்தது.
வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு விடுவதற்குக் கூட முடியவில்லை. தான் ஒருவன் மட்டுமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வது ரொம்பவும் கஷ்டமாய் இருந்தது.
பள்ளிக்கூடம் விட்டதும் அழகர்சாமியின் மகன் குருராஜன் நேராகக் கடைக்கு வந்துவிடுவான். தந்தைக்கு உதவியாகக் கூடமாட உதவிபுரிவான்.
நாளடைவில் கடையைச் சற்றுப் பெரிய அளவில் கட்டினான் அழகர்சாமி.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்த ஒரு பையனைத் தன் கடையில் வேலைக்காக அமர்த்திக் கொண்டான். முதலாளியைப் போலவே பையனும் கடைக்கு வருவோரிடம் மரியாதையுடனும், மறந்தும் கடுமையான வார்த்தைகளைப் பேசாமலும் நடந்து கொண்டான்.
அழகர்சாமி கடையென்றால் சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை என்ற நிலைமை உருவானது. அப்படி இருந்தபோதும் அவனிடத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட அடக்கமும், இனிய பேச்சும் கொஞ்சமும் மாறாமல் இருந்தது.
அதே ஆலம்பட்டி கிராமத்தில் கோடீஸ்வரன் என்பவன் வாழ்ந்து வந்தான். பெயருக்கு ஏற்பப் பண வசதியோ கொஞ்சமும் இல்லை. ஆனால் கர்வமும் பொய்மையும் அவனிடம் அதிகமாகவே காணப்பட்டன.
தான் உண்மையிலேயே கோடீஸ்வரனாக வேண்டும். அத்துடன் அழகர்சாமியினைப் போல் செல்வாக்கினையும் பெற வேண்டும் என்ற எண்ணம் அவனுள் விழுதூன்றி வளர ஆரம்பித்தது.
பத்து பைசா வட்டிக்குக் கொஞ்ச ரூபாயினைக் கடனாக வாங்கினான். சீதனமாய்த் தந்த மாமியாரின் நிலத்தை ஒன்றும் பாதியுமாய் விற்றான். அதைக் கொண்டு அழகர்சாமியின் கடைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த முடிவெட்டும் சலூன் கடைக்காரரிடம் சென்றான். அந்தக் கடையைத் தனக்கு விட்டுவிட்டுத் தெரு முனையில் இருக்கும் காலி இடத்தில் முடிவெட்டும் கடையைக் கட்டிக் கொள்ளும்படி சொன்னான்.
சலூன் கடைக்காரர் அதற்கு முதலில் சம்மதம் தரவில்லை. பிறகு கோடீஸ்வரன் அவனுக்குச் சற்று அதிகமான பணத்தைத் தந்தான். ஒருவழியாக அவனும் சம்மதித்தான்.
தான் போட்ட முதல் திட்டம் வெற்றி அடைந்தது குறித்து சந்தோஷப்பட்டவன் அடுத்துச் செய்வதற்கான வேலையில் அக்கறையுடன் இறங்கினான்.
ஏனோ தானோ வென்று சுற்றிக்கொண்டிருந்த மருமகப் பிள்ளைக்குப் புத்தி வந்து விட்டதை எண்ணியபோது மாமியாரும் மாமனாரும் மகிழ்ந்து போனார்கள். தாம் சேமித்து வைத்திருந்த பணத்தோடு நிலத்தின் ஒரு பகுதியினை அடகு வைத்து, ஒரு கணிசமான தொகையை மாப்பிள்ளையிடம் கொடுத்து வியாபாரம் செய்து முன்னுக்கு வரும்படி வாழ்த்தியும் சென்றார்கள்.
தேடிவந்து உதவிபுரியும் அவர்களை நினைத்துப் பெருமைப் பட்டான். தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது, அதனால்தான் வலியவந்து உதவி செய்து விட்டுப் போகிறார்கள் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
கடையைப் பெரிய அளவில் கட்டினான். கவர்ச்சியான முறையில் கண்ணாடிப் பீரோக்களையும் மின்சார விளக்குகளையும் கடையின் முகப்பில் பொருத்தி ஜெகஜோதியாக இருக்கும்படி செய்தான்.
பணம் வாங்கிவைப்பதற்கு அழகான கல்லாப் பெட்டியொன்றையும், அதன் அருகில் தான் உட்காரும் இருக்கைக்கு மேலே மின்விசிறியையும் பொருத்தினான். வேலைக்கு ஆள்கள் தேவையென்று பெரிய அளவில் விளம்பரம் செய்து இரண்டு பையன்களை வேலையில் அமர்த்திக் கொண்டான்.
மாதச் சம்பளம், வேலை நேரம், வார விடுப்பு, தினப்படி, மாலை நேரத்தில் டீ, வருடத்தில் பொங்கல் திருநாளுக்குப் போனஸ் இன்னும் ஏராளமான சலுகைகளைத் தருவதாகச் சொன்னதும் நிறையப் பையன்கள் தாம் ஒழுங்காகச் செய்து கொண்டிருந்த வேலையைக் கூட விட்டுவிட்டுக் கோட்டீஸ்வரன் கடைக்கு வரத் துடித்தனர்.
கடையைத் திறப்பதற்காக ஒரு விழாவினையே ஏற்பாடு செய்திருந்தான். பெரிய பெரிய சுவரொட்டிகள் அந்த மதுரை மாவட்டத்தையே ஆக்கிரமித்துக் கொண்டன.
ஆளுங் கட்சி அரசியலைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரையும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும், சினிமா நடிகை ஒருத்தியையும், இரண்டு உள்ளூர்க்காரர்களையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தான்.
எல்லாரும் வந்திருந்தார்கள். கடைதிறப்பு விழாக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வந்திருந்தவர்கள் தங்களின் எண்ணங்களையெல்லாம் கொட்டிவிட்டுத் தத்தமக்கு அங்கொரு செல்வாக்கினை உருவாக்கிடும் வழியினையும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
எல்லாரும் போன பிறகு கடையில் கல்லாப் பெட்டியின் அருகில் மிடுக்காக அமர்ந்தான் கோட்டீஸ்வரன். அவனின் பார்வைகள் அனைத்தும் எதிர்புறத்திலுள்ள அழகர்சாமியின் கடைமீதே இருந்தன.
புதியதாகத் திறக்கப்பட்ட கடையென்பதால் சில சலுகைகளை அங்குப் பொருள்களை வாங்குவோருக்கு வழங்கினான். அப்பாவி மக்கள் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாமல் அந்தக் கடையினையே சூழ ஆரம்பித்தார்கள். வியாபாரம் களை கட்டியது.
சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அங்கு வேலை செய்த பையன்களிடம் சொல்லி வந்தான். அதன்படி அவர்களும் கொடுக்கின்ற காசுக்குச் சற்று அதிகமாகவே பொருள்களை வழங்கினார்கள்.
சிலநாளில் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
பணமும் அவனின் கல்லாப்பெட்டியில் சேரத் தொடங்கியது.
ஆசை அதிகம் ஆனது.
சுத்தமான சரக்கினை வாங்கி அதை அப்படியே விற்றால் அதிகமான லாபம் கிட்டாது என்பதை அவனுக்கு வாய்த்தவர்கள் சொன்னபோது விழித்துக் கொண்டான்.
சுத்தமான பொருள்களை வாங்கி வந்து அதில் கலப்படம் செய்ய ஆரம்பித்தான். அதைச் சற்று மலிவாகவும் விற்பனை செய்தான். மலிவாகக் கிடைக்கிறதே, அது சுத்தமானதா? என்று சற்றும் யோசிக்காமல் அவனிடமே அதிகமாக வாங்கினார்கள். அவனின் கல்லாப்பெட்டியைப் போலவே தொந்தியின் கனமும் கூடியது.
ஒரு நாள் எதிர்க் கடையில் சரக்கினை வாங்கிப் பார்த்தான் அழகர்சாமி. பொருள்கள் கலப்படமாய் இருக்கிறது என்பது அவனின் கண்களுக்குப் புலப்பட்டது. அதைச் சொன்னால் யார் எடுத்துக் கொள்வார்கள்? ‘பொறாமையால் பேசுகிறான் என்றுதானே இந்த முட்டாள் உலகம் தன்னை இழித்துரைக்கும்’ என்று நினைத்துப் பேசாமல் இருந்துவிட்டான்.
அவனின் கடையில் வியாபாரம் ஏதோ ஓரளவு நடந்து கொண்டிருந்தது. அதற்காக அவன் சோர்ந்து விடவில்லை. எதிர்க்கடையில் கலப்படப் பொருட்களைக் கண்மூடி வாங்கும் அப்பாவி மக்களுக்காகவும் அவனுக்காகவும் வருந்தவும் செய்தான்.
ஒருநாள் திடீரென்று ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து நான்கைந்து பேர் இறங்கினார்கள். கோட்டீஸ்வரன் கடைக்குள் நுழைந்தார்கள். அங்குள்ள பொருள்களை எடுத்தார்கள். தாம் கொண்டுவந்த பொருட்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்களுக்குள்ளாக ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் கடையை மூடச் சொன்னார்கள். கோட்டீஸ்வரன் ‘திறுதிறு’வென்று விழித்தான். தான் செய்துவந்த கலப்பட விஷயம் அரசாங்கத்திற்குத் தெரிந்துவிட்டதை உணர்ந்தபோது அவன் உடனே பணத்தை எடுத்து அவர்களிடம் நைசாக நீட்டினான்.
பற்களைக் காட்டிப் பசப்பினான். அதிகாரிக்குக் கோபம் அதிகமானது. செய்த அயோக்கியத்தனத்திற்குத் தன்னை அடி பணியச் செய்வதற்காக லஞ்சம் தருகின்ற கோட்டீஸ்வரனை வேனில் ஏற்ற உத்தரவிட்டார் அதிகாரி.
கடை சீல் வைக்கப்பட்டது.
ஜீப்பில் ஏறிய கோட்டீஸ்வரன் தலையைத் தொங்கவிட்டபடியே அமர்ந்திருந்தான். ஊரே அவனைத் திட்டித் தீர்த்தது.
அழகர்சாமியின் நெஞ்சம் அப்போதுகூட அவனுக்காக வருந்தியது.
“உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யும் எண்ணம் ஒருவன் மனதில் உருவாகிவிட்டால் அவனுக்கு அவனே எமனாகிவிடுகிறான். மேலும் அடுத்தவனை ஒடுக்க நினைத்தால் அவனே ஒடிந்து போவான்.”
(திரு. இராகவேந்திரர் அவர்கள் எழுதிய, “பொன்மொழிக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)