பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமாகவும் புகழ் பெற்ற வியாபார நகரமாகவும் விளங்கிய புகார் நகரில் தனதத்தன் என்னும் பெயருடைய வணிகர் வாழ்ந்து வந்தார். புகார் நகர வீதியில் பெரிய கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார். பலவிதமான பண்டங்களை அவர் பலவிதமான வழிகளில் விற்றுப் பெரும் பொருள் ஈட்டினார்.
வணிகர் தனதத்தனுக்கு ஒரே மகன். மகனுக்குப் பூபதி என்று பெயரிட்டுத் தனதத்தன் சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார். பூபதி இளமையிலேயே கல்வியில் ஆர்வங்கொண்டு நன்றாகப் படித்து எல்லாரும் போற்ற எழிலோடு வளர்ந்து தந்தை மனம் மகிழ நடந்து வந்தான்.
பூபதி வளர்ந்த பிறகு வியாபாரத்தில் நாட்டம் கொள்ளாமல் அரசுபணியில் சேர்ந்து உழைக்க விரும்பினார். புகார் நகர நியாய மன்றத் தலைவருக்கு உதவியாளராகப் பூபதி நியமிக்கப்பட்டார்.
புகார் நகரில் அமைதி காப்பதும், ஒழுங்கை நிலை நாட்டுவதும், வணிகம் சீராக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிப்பது நியாயமன்றத் தலைவருக்குரிய சில பொறுப்புகளாகும். நியாய மன்றத் தலைவர், நகரில் நடைபெறுகின்ற வணிகத்தைக் கண்காணிக்கும் பொறுப்பைப் பூபதியிடம் ஒப்படைத்தார்.
வியாபாரிகள், தாங்கள் விற்கின்ற பண்டங்களில் கலப்படம் செய்கிறார்களா, இல்லையா என்பதையும் பண்டங்கள் நியாயமான விலையிலும் தரங்குறையாமலும் விற்கப்படுகின்றனவா என்பதையும் அளத்தல், நிறுத்தல் முதலானவை தவறில்லாமல் நடைபெறுகின்றனவா என்பதையும் கண்டறியும் பொறுப்பான பணியில் பூபதி சிறப்பாகச் செயல்பட்டு எல்லாருடைய பாராட்டுதலையும் பெற்று வந்தார். பூபதியின் புகழ் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வந்தது.
ஒரு நாள் பூபதி ஒரு குதிரை மீது ஏறிக்கொண்டு காவலர்கள் உடன் வர, தன் தந்தை தனதத்தன் வியாபாரம் செய்து வந்த கடை வீதிக்கு வந்தார். பூபதி வருவதைக் கண்ட ஒரு சில வியாபாரிகள் தாங்கள் உபயோகித்து வந்த தவறான எடைக் கற்களையும் தராசுகளையும் உள்ளே மறைத்து விட்டுச் சரியான தராசுகளையும் எடைக்கற்களையும் கொண்டு வியாபாரம் செய்தனர். பூபதி ஒவ்வொரு கடையாகச் சென்று பொருட்களையும் எடைக் கற்களையும் சரிபார்த்துக் கொண்டே வந்தார்.
தனதத்தன் கடைக்கும் சிலர் ஓடி வந்து, “ஐயா, உங்கள் மகன் கடைகடையாகச் சோதனை செய்துகொண்டு வருகிறார். உங்கள் கடைக்கும் வருவார் போல் இருக்கிறது. நீங்கள் எதற்கும் தயாராக இருங்கள்” என்று தனதத்தனை எச்சரித்தனர்.
ஆனால் தனதத்தன், “நான் ஏன் பயப்பட வேண்டும்? பூபதி என் மகனல்லவா? எந்த மகனாவது எப்பொழுதாவது தன் தந்தையின் கடையைச் சோதனை செய்ய வந்ததாகக் கேள்விப்பட்டதுண்டா?” என்று அலட்சியமாகப் பதில் கூறினார். கடை ஆட்களும் உபயோகத்தில் இருந்த தவறான எடைக் கற்களையும் தராசையும் அப்புறப்படுத்தாமல் அவற்றையே பயன்படுத்திக் கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு கடையாகச் சோதனையிட்டுக் கொண்டு வந்த பூபதி தன் தந்தையின் கடை எதிரே வந்து குதிரையிலிருந்து கீழே இறங்கினார். “உங்கள் கடையைச் சோதனையிட அனுமதிக்க வேண்டும்” என்று பூபதி கூறினார்.
தனதத்தன் பதில் ஏதும் கூறாமல் புன்னகை புரிந்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார்.
பூபதி உடனே தன்னுடன் வந்த காவலர்களைப் பார்த்து “ஏன் நிற்கிறீர்கள்? கடைக்கு உள்ளே சென்று சோதனை இடுங்கள். எடைக் கற்களையும் தராசையும் வெளியே கொண்டு வாருங்கள்” என்று ஆணையிட்டார்.
தனதத்தனுடைய கடைத் தராசும் எடைக்கற்களும் வெளியே கொண்டு வரப்பட்டன. அவற்றை நல்ல நிலையில் உள்ள தராசோடும் எடைக்கற்களோடும் ஒப்பிட்டுப் பார்த்தனர். தனதத்தன் உபயோகித்து வந்த தராசும் எடைக்கற்களும் தவறாக இருப்பது தெரியவந்தது.
கூடியிருந்தவர்கள் வியப்பு மேலிட வேடிக்கை பார்த்தனர். பூபதி என்ன செய்வாரோ, என்ன தீர்ப்பு வழங்குவாரோ என்று கூட்டம் ஆவல் மேலிடக் காத்திருந்தது.
பூபதி தன் தந்தையைப் பார்த்து, “ஐயா, உங்கள் கடைத் தராசும் எடைக்கற்களும் தவறானவை. இதற்கு என்ன தண்டனை தெரியுமா? என்று கூறி நிறுத்தினார்.
எதிரே நிற்பது தன் மகன் என்பதை மறந்து ஓர் அதிகாரி என்பதை உணர்ந்து தனதத்தன் செய்வதறியாது கலங்கி நின்றார்.
“ஐயா, நீங்கள் செய்யும் வியாபாரம் நம் நகருக்கே இழுக்கை ஏற்படுத்துகிறது. பல நாட்டவர் வந்து செல்லும் நம் நகரில் இப்படி வியாபாரம் நடந்தால் நம் நாட்டைப் பற்றி உயர்வான எண்ணம் எப்படி வெளிநாடுகளில் ஏற்படும்? எனவெ நம் நகரின் பெருமையைக் காக்க உங்களுக்குத் தண்டனை விதிக்கிறேன். நீங்கள் அரசாங்கத்திற்கு ஐம்பது வராகன்கள் தண்டம் செலுத்த வேண்டும்! அது தவிர ஐந்து நாள் சிறைத் தண்டனையும் மேற்கொள்ள வேண்டும்” என்று பூபதி தெளிவான குரலில் உறுதியாகத் தண்டனையை அறிவித்தார்.
பூபதியின் அறிவிப்பைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் மிக்க வியப்பு எய்தினர்; ஒரு சிலர் கைதட்டிப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தனதத்தன் உடனடியாக ஐம்பது வராகன்களைத் தண்டமாகச் செலுத்தினார்; காவலர்கள் அவரைச் சிறைக்கூடம் அழைத்துச் செல்ல முன் வந்தனர்.
பூபதி, தன் தந்தையின் அருகில் சென்று, “தந்தையே, என்னை மன்னித்து விடுங்கள். நீதிக்கு உறவு கிடையாது. தாயென்றும் தந்தையென்றும் உடன்பிறப்பென்றும் சட்டம் பாகுபாடு செய்வது கிடையாது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே.
நாட்டிற்காகவும், தெய்வத்திற்காகவும், நீதிக்காகவும், சட்டத்திற்காகவும் ஆற்ற வேண்டிய கடமையைத்தான் நான் நிறைவேற்றினேன். இப்பொழுது தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காக உங்கள் முன்பு நிற்கிறேன்” என்று கண்ணீர் பெருகக் கூறி நின்றார்.
தனதத்தன் தன் மகனை இறுக அணைத்துக்கொண்டு கண்ணீர் வழிய நின்றார்.
பூபதி தந்தையைப் பார்த்து, “தந்தையே! ஏன் அழுகிறீர்கள்? எப்படி இருந்தாலும் உங்களுடைய தவறான செய்கைக்கு நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தண்டனைக் கொடுத்துத்தான் இருப்பார்கள். என்னைப் பழிப்பதற்குப் பதிலாக என்னைப் பார்த்துப் பரிதாபப்படுங்கள். வருங்காலத்தில் எந்த மகனுக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாது” என்று கூறித் தந்தையை தேற்றினார்.
தனதத்தன் தன் மகனைப் பார்த்து, “மகனே பூபதி, உன்னைப் போன்ற நியாயம் தவறாத ஒரு பிள்ளையைப் பெற நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? உன் செயலைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். என் தண்டனை எனக்கு மட்டும் அல்ல, இந்த உலகத்திற்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்” என்று கூறி விடை பெற்றுச் சிறைக்கூடம் நோக்கிச் சென்றார்.
கூடியிருந்தோர் அனைவரும் பூபதியை வாயாரப் புகழ்ந்தனர். பூபதியின் நியாயம் தவறாச் செயல் சோழ மன்னர் செவிக்கும் எட்டியது. மன்னர், பூபதியைப் பாராட்டி நியாய மன்றத் தலைவராகப் பூபதிக்குப் பதவி உயர்வு அளித்துச் சிறப்பித்தார்.
பொன் குடத்திற்குப் பூச்சூட்டியது போலப் புதிய பதவியில் முன்னைவிட விழிப்போடும் பொறுப்போடும் செயல்பட்டு, பூபதி பிறந்த நாட்டிற்கும் பெற்றெடுத்த அன்னை தந்தைக்கும் மேன்மேலும் புகழ் சேர்த்துச் சீரோடும் சிறப்போடும் எழிலோடும் ஏற்றத்தோடும் வாழ்ந்து வந்தார்.
(திரு. அருண. நடராசன் அவர்கள் எழுதிய ‘நல்ல தீர்ப்புக் கதைகள்’ என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)