உண்மையான குருபக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தண்ணீரைப் பிளந்து கொண்டுவந்த தம்பியின் கதையை உதாரணமாகக் கூறலாம்.
பாரதநாட்டில் பழங்காலத்தில் எல்லாம் குருகுலக் கல்வி முறையே நடைபெற்றது.
ஒரு குருவின் கீழ்ப் பல மாணவர்கள் ஒன்றாகக் கல்வி பயின்றார்கள்.
கல்வி பயின்று முடிக்கும் வரை அவர்கள் குருவுடனேயே தங்குவார்கள்.
குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார்கள்.
குரு சொன்னபடி கேட்டு நடப்பார்கள்.
குருவும் அவர்களுக்குச் சற்றும் சந்தேகமில்லாதபடி சகல சாத்திரங்களையும் வித்தைகளையும் கற்றுக் கொடுப்பார்.
‘தௌமியர்’ என்ற குருவிடம் பல மாணவர்கள் ஒரு சமயம் கல்வி பயின்று வந்தார்கள்.
மாணவர்கள் எல்லாரும் அரசகுமாரர்கள்.
அரச குமாரர்களாக இருந்தபோதிலும் அவர்கள் ஆசிரியர் சொற்படி கேட்டு நடந்தார்கள்.
ஒருநாள் குருநாதர் அரசகுமாரனை நோக்கி, நமது வயலில் தண்ணீர் பெருகிப் பயிரை அழிக்கின்றது. ஆதலால், நீ வயலுக்குச் சென்று மடையை அடைத்து விட்டுவா என்று கட்டளையிட்டார்.
குருநாதர் கட்டளையிட்டவுடன் அந்த அரசகுமாரனும், மண்வெட்டியைத் தோளில் மாட்டிக் கொண்டு மடையை அடைக்கச் சென்றான்.
ஆனால் வயதில் சிறியவனான அந்த அரசகுமாரனால் மடையை அடைக்க முடியவில்லை.
மண்ணையும், கல்லையும் வாரிப் போட்டுப் பார்த்தான்.
ஆனால் மடையை மீறித் தண்ணீர் வந்து கொண்டே இருந்தது.
காலையில் மடையை அடைக்கச் சென்றவன் மாலைவரை வேலை செய்தான்.
ஆனால் அவனால் மடையை அடைக்கவே முடியவில்லை.
குருநாதர் சொன்ன வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே என்ன செய்வது? என்று அவன் கவலைப் பட்டான்.
மண்ணை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக மடையின் குறுக்கே தானே படுத்துக் கொண்டான்.
சிறந்த குருபக்தி கொண்ட அவனை மீறித் தண்ணீர் பாய்ந்துவரப் பயந்து அப்படியே அடங்கிவிட்டது.
காலையில் மடையை அடைக்கச் சென்ற மாணவன் மாலை ஆகி இரவு வரத் தொடங்கிய போதும் திரும்பி வரவில்லையே? என்று எண்ணினார் குருநாதர்.
மாணவர்கள் புடைசூழக் கையில் விளக்குடன் வயலுக்குச் சென்று பார்த்தார்.
அங்கே அவனுடைய குருபக்தியையும் அவனைத் தாண்டிவர அஞ்சி நிற்கும் தண்ணீரையும் கண்டு மகிழ்ந்தார்.
‘சீடனே! எழுந்து வா!’ என்று கூறினார்.
குருநாதர் கட்டளையைக் கேட்டவுடன் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அந்தத் தம்பி எழுந்து வந்தான்.
குருவுக்கு வணக்கம் செலுத்தி நடந்ததையெல்லாம் கூறினான்.
உண்மையான குருபக்தி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
(திரு. எஸ். நடராசன் அவர்கள் எழுதிய, “விளையாட்டுக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)