பூதக்குடி என்னும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் சுந்தரமும், கந்தனும் படித்து வந்தனர். அப் பள்ளியில் நிறைய மாணவர்கள் படித்தாலும் சுந்தரமும் கந்தனும் மட்டும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
சுந்தரம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். கல்விச் செலவுக்காகக் கூட அவன் தந்தை கடன் வாங்கித்தான் அவனைப் பள்ளியில் பயில வைத்தார். ஆனாலும் சுந்தரம் கல்வியில் மிகுந்த அக்கறையோடும் ஆர்வத்தோடும் இருந்து வகுப்பின் முதல் மாணவனாகவும் திகழ்ந்தான்.
கந்தன் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். ஆடம்பரமாக அவன் வாழ்ந்து வந்தான். கந்தனுக்குப் பொருட்செல்வம் அதிகம் இருந்தாலும் படிப்பில் அக்கறையில்லாமல் இருந்தான். வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்ய மாட்டான். காலையில் நேரத்தோடு பள்ளிக்கு வர மாட்டான். ஆனால் மாலையில் முதல் மாணவனாக வீட்டுக்குத் திரும்பி விடுவான்.
நாள்கள் பல சென்றன. கல்வியில் சிறிதும் ஆர்வமில்லாத கந்தன் பள்ளியை விட்டு விலகி விட்டான். அவன் பெற்றோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பள்ளிப் படிப்பைத் தொடர மறுத்து விட்டான்.
சுந்தரம் மிகவும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் தன் பாடங்களைப் படித்து வந்தான். வகுப்பில் படிப்பில் மட்டுமல்லாது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றிலும் அதிக ஆர்வம் காட்டிப் பல பரிசுகளும் பெற்றான்.
ஆண்டுகள் பல கடந்தன. சுந்தரம் தன் பள்ளிப் படிப்பை முடித்து வெற்றி கண்டான். மாநிலத்திலேயே குறிப்பிடத்தக்க அளவு மதிப்பெண்கள் பெற்றிருந்த சுந்தரத்திற்கு அரசாங்கமே உதவித்தொகை தந்து மேற்படிப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
கந்தன் தன் பெற்றோர் வைத்திருந்த செல்வத்தைச் சிறுக சிறுகச் செலவு செய்தான். சிறிது காலத்தில் அவன் பெற்றோரும் இறந்து விட்டார்கள். ஆகவே அவனது ஊதாரி நண்பர்கள் பலர் கந்தனுடன் கூடிப் பணத்தைச் செலவு செய்தனர்.
நாளடைவில் கந்தன் பெரிய குடிகாரனாக மாறிப் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டான். அவனைக் கண்டித்துத் திருத்தப் பெற்றோரும் இல்லை. எனவே கந்தனின் செல்வம் நாளடைவில் குறையத் தொடங்கியது.
மேல் படிப்புக்காக வெளியூர் சென்றிருந்த சுந்தரமோ மிகவும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்றான்.
சுந்தரத்தின் அறிவுக் கூர்மையைப் பாராட்டி அரசாங்கமே அவனுக்கு வேலை வாய்ப்பினைச் செய்து கொடுத்தது. சுறுசுறுப்பும், புத்திக் கூர்மையும் உள்ள இளைஞன் சுந்தரம் மேலும் மேலும் பதவி உயர்வு பெற்று வந்தான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு பூதக்குடி கிராமப் பள்ளி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு விருந்தினராய்ப் பங்கு கொண்டார். பெருந்திரளாக மக்கள் கூட்டம் கூடி இருந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் வருகையை ஒட்டி ஊர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி மூலம் அவரின் வருகையைப் பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தனர்.
சிறிது நேரத்தில் ஒரே பரபரப்பு. மாவட்ட ஆட்சித் தலைவர் வந்து கொண்டிருந்த காரின் இடையில் யாரோ ஒருவன் மது உண்ட மயக்கத்தால் விழுந்து லேசான விபத்து ஏற்பட்டுவிட்டது. அதைக் காண மக்கள் கூட்டம் கூடிவிட்டது.
அங்கே கந்தன் மது மயக்கத்தில் இருந்தான். ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஆர்வமுடன் பயின்ற சுந்தரம் மாவட்ட ஆட்சித் தலைவராய் நின்று கொண்டிருந்தான்.
உயர் பதவி வகித்த போதிலும் தன் பழைய நட்பை மறவாது, கந்தனுக்குத் தக்க உதவி செய்ய சுந்தரம் முன் வந்ததைக் கண்ட ஊர் மக்கள் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
நீதி: பொருட்செல்வம் எவ்வளவு இருப்பினும், அது அழிந்துவிடும். கல்விச் செல்வம் அழியாது. ஆர்வமுடன் நாமும் பயின்றால் உயர் பதவிகளை அடையலாம்.
(திரு. அன்பு ராமசாமி அவர்கள் எழுதிய, “அன்பு கதை மலர்”, என்ற நூலிலிருந்து எடுத்து இந்தக் கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)