நாங்கள் மேல் மாடியில் குடியிருந்தோம். கீழே வடபகுதியில் ஒரு குடும்பமும், தென்பகுதியில் ஒரு குடும்பமும் இருந்தன. தென்பகுதியார் வறுமையால் வாடி இளைத்தவர்கள். கணவன், மனைவி, ஆறு குழந்தைகள், ஒரு பாட்டி, ஒரு நாய் என்று பெருகிய குடும்பம் அது. வட பகுதியார் செல்வம் செழித்துக் கொழுத்தவர்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏங்குகின்றவர்கள். அவர்களின் கூடத்திலும் அறைகளிலும் நிறையப் படங்கள் உண்டு. ஓர் அலமாரி நிறையக் குழந்தைப் பொம்மைகளும், நாய்ப் பொம்மைகளும் உண்டு. உயிருடன் இயங்கியவர்கள் எலி, எறும்பு முதலியவை தவிர, அந்தக் கணவன் மனைவி இருவர்தான். ஆனால், அவர்கள் இருந்த பகுதி தூய்மையாக, ஒழுங்காக இருந்தது. பொருள்கள் வைத்தவை வைத்தபடியே இருந்தன. அவர்களின் தும்மல், இருமல், ஏப்பம், கொட்டாவி தவிர, வேறு எந்த ஒலியும் கேட்பதில்லை. தென்பகுதிக் குடும்பமோ ஆரவாரம் மிகுந்தது. குழந்தைகள் எந்நேரமும் ஒன்றை ஒன்று அடித்துக்கொண்டு அமர்க்களம் செய்யும். தாய்க்கும் தந்தைக்கும் குழந்தைகளின் வழக்கைக் கேட்டு தண்டிக்கும்வேலை நிறைய இருந்தது. போலீசுநிலையம், நீதிமன்றம், சிறைக்கூடம் எல்லாம் அங்கு இருந்தன. அந்தக் கிழவி எந்நேரமும் சளைக்காமல் இருமிக் கொண்டிருந்தாள். இருமல் ஓய்ந்த நேரத்தில் பாக்கு உலக்கையால் வெற்றிலைப் பாக்கை நறுக்கி, ‘லொட்லொட்’ என்று குற்றிக் கொண்டிருந்தாள். அதுவும் ஓய்ந்த நேரத்தில் வருவார் போவார் இடத்தில் மருமகளைப் பற்றி வசைபாடிக்கொண்டிருந்தாள். இடையிடையே, கிழவியின் வாழ்க்கைக்கு அமைந்த தாளம்போல், அவர்கள் வளர்க்கும் நாய் தெரு வழியே போவோரைப் பார்த்து, உறுமிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் இருக்கும். சில வேளைகளில் மேலே இருந்து நான் எட்டிப் பார்ப்பது உண்டு. அவர்களின் கூடத்தில் கண்ட பொருள்கள் கண்டபடி சிதறிக் கிடக்கும். வட பகுதியாரின் கூடத்தை எட்டிப் பார்க்கலாம் என்றால், பார்ப்பதற்கு அங்கே ஒன்றும் இருக்காது.
இவர்களின் அமர்க்களமும் அலங்கோலமும் அவர்களுக்குப் பிடிப்பதில்லை. எந்தக் குடும்பமாவது வேறு வீட்டில் இடம் பார்த்துக்கொண்டு அகல்வார்களா என்றால், அதுவும் இல்லை. இரு சாராரும் மனப்பொருத்தம் இல்லாமல் தனித்தனியே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தனியே மேல் மாடியில் இருந்தபடியால், நாடகம் பார்ப்பதுபோல் கீழே நடந்தவற்றை வேடிக்கையாகக் கவனித்துக்கொண்டு வந்தோம்.
ஏழையின் மனைவி நிறைந்த கர்ப்பவதியாக இருந்தாள். அவர் வீட்டு நாயும் அப்படித்தான் இருந்தது. ஒருநாள் இரவு அவள் ஏழாவது குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையின் புத்தம் புதிய குரலை மேலே இருந்தபடியே கேட்டபோது எனக்கு ஒரு புத்துணர்ச்சி உண்டானது. இந்த உலகத்தில் புதியவர் ஒருவர் – அறிஞரோ, கலைஞரோ, அரசியல்வாதியோ, தொழிலாளியோ – புதிதாக வந்து சேர்ந்ததாக எண்ணினேன். அவருடைய முதல் குரலைக் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன். அடிக்கடி அந்தக் குரலைக் கேட்பதில் விருப்பம் இருந்தது. ஆனால், குழந்தையை ஏன் இப்படி அழவிடுகின்றார்களோ என்ற வருத்தமும் இருந்தது. செல்வரின் மனைவி அதன் குரலைப் பற்றி என்ன எண்ணினாளோ, தெரியவில்லை. நம்வீட்டில் அழத்தெரியாத குழந்தைப் பொம்மை இருக்கிறது. இப்படிப்பட்ட உயிருள்ள குழந்தை இல்லையே என்று ஏங்கிப் பொறாமைப்பட்டாளோ, அல்லது, உள்ள கூச்சல் போதாதென்று இதுவும் வந்து சேர்ந்ததே என்று வெறுப்பு அடைந்தாளோ, என்னவோ!
சில நாள்களில் அந்த நாய் ஐந்து குட்டிகளை ஈன்றது. மேலே இருந்து ஆவலோடு எட்டிப் பார்த்தேன். இரண்டு குட்டிகள் வெண்ணிறமாய்ச் சின்ன கரும்பட்டைகளோடு இருந்தன. மற்ற மூன்றும் தாய்போலவே செந்நிறமாய் இருந்தன. அந்த வெள்ளைக் குட்டிகளில் ஒன்றை எடுத்து வளர்க்கலாமா என்ற ஆசை தோன்றியது. இன்னும் கொஞ்சம் வளரட்டும், பிறகு எடுத்து வளர்க்கலாம் என்று அமைதியானேன்.
அடுத்த மூன்றாம் நாள் காலையில் வெளியே சென்ற அந்தத் தாய்நாய் நெடுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. அந்த ஐந்து குட்டிகளும் ‘கய்ங் கய்ங்’ என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தன.
“என்னடியம்மா இந்தக் குட்டியெல்லாம் இப்படிக் கத்துதே. கவனிக்கக் கூடாதா. பாவம்?” என்றாள் கிழவி.
“அந்த நாய் காலையிலே போனது இன்னும் வரவில்லை அத்தை. பால் இல்லாமல் குட்டி எல்லாம் கத்துது” என்றாள் மருமகள்.
“ஏதாவது பாலாவது கஞ்சியாவது வார்க்கக் கூடாதா?” என்றாள் கிழவி.
“பாலுக்கு நாம் எங்கே போவது? கஞ்சி வார்த்தால் செத்துப் போகுமே” என்றாள் மருமகள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த என் மனம், “இப்படியும் உலகம் இருக்க வேண்டுமா?” என்று வருந்தியது.
பிற்பகலில் குட்டிகளின் ‘கய்ங்’ ஒலி வர வரப் பெருகியது. பெரிய பிள்ளைகள் இருவருக்கும் சொல்லி நாயைத் தேடிக்கொண்டு வரும்படி அனுப்பினாள் மருமகள். அவர்கள் இங்கும் அங்கும் தேடிவிட்டு ‘இல்லை’ என்று திரும்பினார்கள். மாலையில் கணவர் வந்தவுடன், “பெரிய கண்(ண)றாவியாக இருக்கிறது. எங்கேயாவது பார்த்துப் பிடித்துக் கொண்டு வாங்க. இளங் குட்டிகள் இரவெல்லாம் கத்துமே” என்றாள் மனைவி. கணவர் தம் சட்டையைக் கழற்றாதபடியே குட்டிகளைப் பார்த்துக்கொண்டு வாசலில் நின்றார். “தாய்க்கு இல்லாத அன்பா? எங்கேயாவது இருந்தால் எப்போதோ வந்திருக்குமே. முனிசிபாலிட்டியார் பிடித்துக்கொண்டு போயிருப்பார்கள். பொழுதும் போச்சே” என்று சொல்லிக்கொண்டே வெளியே நடந்தார்.
விளக்கு வைக்கும் நேரத்தில் செல்வர் மனைவி மேலே வந்தாள். என் மனைவியோடு ஏதோ குறை சொல்லத் தொடங்கினாள். நான் பக்கத்து அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
“லைசென்ஸ் பணம் கட்ட முடியாதவர்கள் நாய் ஏன் வளர்க்க வேண்டும்? நாங்கள் அவர்களோடு பேசுவதே இல்லை. நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கள். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் போய் விடுமே. எடுத்துத் தொலைவில் கொண்டுபோய் விட்டுவிட்டால், வழியில் போகிறவர்களுக்கு ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். நீங்கள் வந்து சொல்லிப்பாருங்கள்” என்றாள்.
அவள் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் என் மனைவி தென் பகுதியாரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தாள். திரும்பி வந்ததும், “என்ன செய்தி?” என்று கேட்டேன்.
“மூன்று நாள் குட்டிகள்; வெளியே விட்டால் செத்துப்போகும். யாராவது எடுத்துக்கொண்டு போனாலும் வளர்க்க முடியாது. இராப்பொழுது எப்படியாவது கழிந்துவிட்டால், நாளை முனிசிபாலிட்டிக்குப் பணம் கட்டி, நாயை மீட்டுக் கொண்டுவந்து காப்பாற்றலாம்” என்றார்களாம்.
“இதை வட பகுதியாரிடம் சொன்னாயா?” என்றேன்.
“சொன்னேன். கதவு, சன்னல் எல்லாவற்றையும் சாத்திவிட்டுக் குட்டிகளின் ஒலி கேட்காதபடி செய்துவிட்டுத் தூங்குங்கள் என்று சொன்னேன்” என்றாள்.
இரவு ஒன்பது மணிக்குமேல் ஆயிற்று. வீட்டுச் சிறுவர்களின் ஒலியெல்லாம் அடங்கினபடியால் குட்டிகளின் ஒலி, தொடர்ந்த பாட்டுப்போல் கேட்டது.
வட பகுதியார் குங்குமப்பூவும் சர்க்கரையும் கலந்து சுண்டக் காய்ச்சின பாலை வயிறாரப் பருகிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டார்கள். தென்பகுதித் தலைவி, குட்டிகளின் அருகே உட்கார்ந்து இரக்கத்தோடு பார்த்து, அவற்றை மெல்லத் தடவிக்கொண்டிருந்தாள். அவளுடைய கணவர், இளங் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். இளங் குழந்தை அழத் தொடங்கியது. “குழந்தைக்குப் பால் கொடு” என்று மனைவியை வற்புறுத்தினார். அவள் அரை மனத்துடன் எழுந்து குழந்தையுடன் உள்ளே சென்றாள். பகல் முழுதும் உழைத்த ஏழைத் தொழிலாளி ஆகையால், அவருக்கு மேன்மேலும் கொட்டாவி வந்தது. சிறிது நேரம் நின்று குட்டிகளைப் பார்த்துவிட்டு அவரும் உள்ளே சென்றார்.
இனி எல்லோரும் உறங்கிவிடுவார்கள் என்று எண்ணி நானும் படுக்கச் சென்றேன். ஆனால் உறக்கம் வரவில்லை. உலகமெல்லாம் நாய்க்குட்டி மயமாக இருப்பதாகத் தோன்றியது. அந்தக் ‘கய்ங் கய்ங்’ ஒலி தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. ஒரே முறை மட்டும் வட பகுதியார் ஏப்பம் விட்ட ஒலி கேட்டது. காற்று வேண்டும் என்று ஓரிரு சன்னல் திறந்து வைத்திருப்பார்கள் என்று எண்ணினேன்.
குட்டிகளின் ஒலி பொறுக்க முடியாத எல்லைக்குச் சென்றது. திடீரென்று ஒவ்வொரு சுரமாகக் குறைந்து வருவதை உணர்ந்தேன். என்ன காரணமோ, குட்டிகளும் ஒவ்வொன்றாகத் தூங்கத் தொடங்குகின்றனவோ என்று எண்ணினேன். சிறிது நேரத்தில் அவற்றின் ஒலி பாதி அளவிற்குக் குறைந்துவிட்டது. ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி, பார்க்கலாம் என்று எழுந்தேன். மேற்கு நடையில் நின்று சாய்ந்து பார்த்தேன். கீழே கிழக்கு நடைப்புறத்தில் சின்ன மண்ணெண்ணெய் விளக்கின் ஒளி தெரிந்தது. அந்த ஏழையின் மனைவி குட்டிகளின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். என்ன செய்கிறாள், பார்க்கலாம் என்று அமைதியாக நின்றேன். நான் நிற்பது தெரியாதபடி ஒரு தூணின் பக்கமாக மறைந்து நின்றேன்.
அவள் இடக் கையில் ஒரு கொட்டாங்கச்சி இருந்தது. அதில் கொஞ்சம் பால்போல் இருந்தது. வலக் கையில் பஞ்சுபோல் ஏதோ வைத்திருந்தாள். அதைக் கொட்டாங்கச்சியில் தோய்த்துத் தோய்த்து ஒவ்வொரு குட்டியின் வாயிலும் வைத்தாள். குட்டிகள் அதைச் சுவைத்து அமைதியாவதைக் கண்டேன். சிறிது நேரத்தில் முக்கால் பகுதி ஒலி அடங்கிவிட்டது. ஒரு குட்டி மட்டும் கத்திக்கொண்டே இருந்தது. அவள் கொட்டாங்கச்சியைக் கீழே வைத்துவிட்டாள். வலக் கையில் இருந்த பஞ்சு போன்ற துணியைத் தன் மார்பு அருகே கொண்டுபோய், தன் பாலால் அதை நனைத்து, அந்த ஒரு குட்டியின் வாயில் வைத்தாள். மூன்று முறை அவ்வாறு செய்த பிறகு அதன் ஒலியும் அடங்கியது. குட்டிகள் மூலைக்கு ஒன்றாகப் படுத்துக்கிடந்தன. அந்த இளங் குழந்தையின் தாய், சிறு விளக்கை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்தாள். விளக்கொளியில் அவளுடைய முகம், மலர்ந்த செந்தாமரைபோல், மகிழ்ச்சியோடு விளங்கியதைக் கண்டேன்.
என் படுக்கைக்கு வந்து படித்தேன். ஏதோ சுமை இறங்கியதுபோன்ற உணர்ச்சி என் மனத்தில் இருந்தது. பெருமூச்சு விட்டுக் கை கால்களை நீட்டினேன். ஏப்ப ஒலி வந்த அதே திசையிலிருந்து குறட்டை ஒலி வந்து கொண்டிருந்தது.
Amma ennum uravu eppothume sirathathu
ஆம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி! எங்கள் இணையதளத்திலுள்ள மற்ற சிறுகதைகளையும் வாசித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
I already know this story.so I once again read this story to improve my reading skill.this had been very useful for me.
This story is one of my supplementary in 10th standard.. after a long time of 7 years I could still remember how my Tamil teacher explained this giving me a goosebumps.. It’s one of the best example to show that there are different kinds of people in this world.💜
Thank you very much!!