“அடியே கிழவி! இதெல்லாம் அபூர்வம்டி. பேப்பரிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கானே. உன் காடராக்ட் கண்ணுக்குத் தெரியலையா? இருபத்திரண்டு வருஷத்துக்கு அப்புறம் நம்ம இந்தியாவுக்கு வர்றார்டி அமெரிக்க ஜனாதிபதி!” அப்புசாமி மனைவியிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.
ஆந்திரா மஹிளா மண்டல் என்ற சமூக அமைப்புடன் சீதாப்பாட்டிக்கு நல்ல நெருக்கம்.
ஹைதராபாத்துக்கு விஜயம் செய்யும் கிளிண்டன், அங்குள்ள பிரபல மகளிர் சமுக நல மன்றம் ஒன்றுக்கு ஓரிரு நிமிடங்கள் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளதாக சீதாப்பாட்டிக்கு ‘ரிலயபிள் சோர்ஸ்’ மூலம் தெரிய வந்தது.
ஹைதராபாத் மஹிளா மண்டலின் தலைவி அல்லுபொட்டி ஆவக்காமுடுவுடன் ஈமெயிலில் தொடர்பு கொண்டு கிளிண்டன் விஜயத்தின் போது அவரைச் சந்திக்கும் குழாத்தில் தனக்கும் அனுமதி பெற்றுவிட்டாள்.
ஜனாதிபதியுடன் ஒரு ஸ்னாப், வினாடி நேர வீடியோ அது போதுமே இந்த வருஷ பா.மு.க. தேர்தலில் அவளுக்கு வெற்றி தேடித் தர.
“நான் ஹைதராபாத் போகிறாப்பலே இருக்கும். டேக் கேர் ஆஃப் த ஹவுஸ். மாவடு வாங்கி வெச்சிருக்கேன். எல்லாத்தையும் நீட்டாக் கழுவி உப்புப் போட்டு அந்தப் பெரிய பாரி ஜாடியிலே போட்டு வையுங்க. டி.டி., ஸன், ராஜ், ஜெயா எல்லாத்திலும் நியூஸ் பாருங்கோ…. ஹோட்டலிலே சாப்பிட்டுக்குங்க… ப்ளீஸ்… நல்ல ஓட்டலிலே. ஒரு வாரத்துக்கு உங்க அலவன்ஸ் ஃபைவ் ஹண்ட்ரட் இந்த பர்ஸிலே வெச்சிருக்கேன்…”
“அடியே அராஜகி! கும்பலோட கோவிந்தாவாக நானும் உங்க திருக்கூட்டத்திலே கலந்து கிளிண்டன் தரிசனம் பண்ணிட்டு வந்துடறேண்டி…”
“சைல்டிஷாப் பேசாதீங்க… உங்களை யாராவது ரெகமண்ட் பண்ணணும்… அதற்கெல்லாம் உங்களுக்கு யோக்யதை இல்லே. சில பேர் சிலதுக்கு ஆசைப்படக் கூடாது” சீதாப்பாட்டி சொல்லிவிட்டு, கழகத்துக்குப் புறப்பட்டு விட்டாள்.
அவமானங்கள் அப்புசாமிக்குப் புதிது அல்ல. ஒரொரு தடவை அவமானப் படும்போதும் எழுச்சிக் குரல் எழும்பும். கொடிகட்டி ஆள்கிறவளின் கொட்டம் அடக்கிக் காட்டிட முடியவில்லையே “அடியே சீதேய்! கூனனும் நிமிர்ந்து நடப்பான், குருடனும் விழி பெறுவான்… அடியே கிழவி! நிலைமையை மாற்றிக் காட்டுகிறேனடி…”
சவால் விட்டாயிற்று… ஜெயித்துக் காட்டணுமே என்று மண்டையைக் கிளறிக் கொண்டார்.
புழலேரி காய ஆரம்பித்தால் அரசியல்வாதிகளுக்கு கிருஷ்ணா நதி ஞாபகம் வருகிற மாதிரி, ஐடியா வற்றிப் போனால் நண்பன் ரசகுண்டுவை நாடுவதுதான் அப்புசாமிக்கு மாமூல்.
அவர் போன சாயந்தர நேரம், ரசகுண்டுவின் வீட்டில் ஜேஜேஜே என்று சாஸ்திரிமார் கும்பல். பளீர் பளீரென நெற்றியில் விபூதிப் பட்டைகள் மின்ன, ஒரு கையில் விசிறிச் சின்னத்துடனும் இன்னொரு கையில் ரெக்ஸின் போர்த்த ஏதோ புத்தகத்துடனும் ஏராளமான சைவப் பழங்கள் குழுமியிருந்தனர்.
என்னவாவது சினிமா ஷூட்டிங்குக்கு இடத்தை விட்டிருக்கிறானா?
அகில இந்திய புரோகித சம்மேளனமா?
சித்தநாதன் மணம் வாசல்வரை வந்து அப்புசாமியை வரவேற்றது.
குழுமியிருந்த எல்லா வைதிக சிரோமணிகளும் எதற்கோ காத்திருந்தனர்.
ரசகுண்டு ஏ.ஆர். ரகுமான் மாதிரி ஓர் ஓரத்தில் நின்று கொண்டு, “இஸ்டார்ட்! ஆரம்பிங்கோ,” என்று கத்தினான்.
உடனே அனைவரும் ஏதோ மந்திரங்களை ஏக காலத்தில் கோர(மா)ஸாகச் சொல்லத் தொடங்கினர்.
‘அடப்பாவி! ஏதோ ஓட்டல்லே சர்வரா இருக்கிற பயல்னு நினைத்துக் கொண்டிருந்தால் பயல் ஒரு வேத பாடசாலையே நடத்தறானே…’ “ரசம்! ரசம்! சாதா ரசமாயிருந்த நீ எப்போடா வேத ரசமாக ஆனே?” என்று அவனருகே தாவிப் போய் அவனைக் கட்டிக்கொண்டார்.
“தாத்தோவ்! கிளிண்டன் வரவேற்பு மந்திர ஃபைனல் ரிஹர்சல் நடந்துகிட்டிருக்கிறது. முடிச்சிகிட்டு உங்களோட பேசறேன்… உங்களுக்கும் பாட்டிக்கும் தினமும் சண்டை வரும்… ஆனால், அமெரிக்க பிரசிடெண்ட் கிளிண்டன் தினமும் வருவாரா?” ஐம்பது புரோகிதர்களை செலக்ட்பண்ணி தயார்பண்ணி ஹைதராபாத்துக்கு பேக்பண்ணி அனுப்பனும்” என்றவன், ‘ அப்படி ஓரமாப் போய் அந்த பெஞ்சு மேலே சமத்தா உட்கார்ந்துக்குங்க’ என்றான்.
“ஏண்டா நானென்ன சவரம் பண்ணிக்க சலூனுக்கா வந்தேன்! பெஞ்சுலே போய் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க… நெருப்புப் பத்திண்ட மாதிரி ஓடி வந்திருக்கேண்டா…” என்றார் படபடப்புடன்.
“எது தாத்தா பத்திக் கொண்டு எரியறது. ஒரு வாளித் தண்ணியை எடுத்து ஊத்த வேண்டியதுதானே? கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க… நான் பெரிய காண்ட்ராக்டுலே இருக்கேன்…” என்றான்.
அப்புசாமி, மனைவி சீதாப்பாட்டியிடம் தான் விட்ட சவாலை சுருக்கமாகத் தெரிவித்தார். “எங்கும் கிளிண்டன் என்பதே பேச்சு… அந்த ஆளைச் சந்திக்கிறதே என் மூச்சு… ஆடுவமே பல்லு பாடுவமே!…” என்று அப்புசாமி வாயை முழுசாகத் திறந்து பாடிக் காட்டினார்.
“உங்க பல்லு ரொம்பத்தான் ஆடுது…” என்ற ரசகுண்டு, “நீங்க எப்படித் தாத்தா கிளிண்டனை சந்திக்க முடியும் – அதுவும் ஹைதராபாத் போய்?”
“அடே படுபாவி!” என்ற அப்புசாமி அவன் முதுகில் பளாரென்று ஓர் அறை வைத்தார்.
இத்தனை புரோகிதர்களோட என்னையும் ஒரு ஆளாச் சேர்த்துவுட்டுடணும்னு உனக்குத் தோணலையே. ஒரு கும்பத்தையும் விசிறியையும் தூக்கிகிட்டு நானும் இவங்களோட புறப்பட்டுடறேன்… இது ஏன் உன் மர மண்டைக்குத் தோணலை?”
“மந்திரம்! மந்திரம் சொல்லணுமே தாத்தா! ஒங்களுக்கு மசால் தோசைதான் தெரியும்!”
“அடேய் ரசம்!… ஒரே ஒரு சான்ஸ்… சிங்கிள் டீ மாதிரி சிங்கிள் சான்ஸ் குடுத்துப் பாருடா! நம்ப ஊர் கிரிக்கெட் ஆட்டத்துலேகூட, உருப்படாத கேஸ்னு துரத்துன ஆளைத் திரும்பக் கூப்பிட்டுக்கிறது உண்டுடா… நீங்களெல்லாம் சொல்ற மந்திரத்தை நானும் மனப்பாடம் பண்ணிடறேன். விசிறி சொந்தச் செலவுலே வாங்கிக்கறேன். விபூதி நல்லாக் குழைச்சு பட்டை பட்டையாகத் தீட்டிக்கிறேன்… நீ சொல்றபடியெல்லாம் கேட்கிறேன்…”
“சரி. இந்தாங்கோ. இந்தக் காகிதத்தில் அச்சடிச்சிருக்கிற மந்திரங்களை நல்லாக் கடம் அடிச்சு மனப்பாடம் பண்ணுங்க.” என்று டர்ரென்று ஒரு தடிப் புஸ்தகத்திலிருந்த இரண்டு பக்கங்களைக் கிழித்துத் தந்தான் – அவர் உபத்திரவம் விட்டால் போதும் என்று.
அப்புசாமி அவன் தந்த காகிதத்தை வெகு பக்தி சிரத்தையுடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.
திடுக்கிட்டாள் சீதாப்பாட்டி. ஹைதராபாத்தில் அவள் தங்கியிருந்த ஓட்டல் அல்லோலகல்லோலப்பட்டது.
சீதாப்பாட்டியும் அவளது சினேகிதி ஒருத்தியும் பொறுமையாக லிஃப்டுக்காகக் காத்திருந்தனர். அப்போது,
‘தட்’ என்று சீதாப்பாட்டி மீது யாரோ அனாயாசமாக, எதிர்பாராதவிதமாக ஒரு மோது மோதினார்கள். மாம்பலம் காய் மார்க்கெட் மாடு மாதிரி தனக்கு எதிர்பாராத விதமாக முட்டு கொடுத்த முரட்டு மிருகம் எது என்று கடுங்கோபத்துடன் சீதாப்பாட்டி திரும்பி நோக்கினாள்.
கணவர் அப்புசாமி!
சீதாப்பாட்டிக்கு இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. உடம்பு எங்கும் பட்டை பட்டையாக விபூதி. இடுப்பில் பளபளப்பட்டு! கமகம விபூதி வாசனை.
“மை காட்! என்ன கூத்து இது? ஹௌகம் நீங்க இங்கே வந்து முளைச்சீங்க?” என்றாள்.
“ஆமாண்டி கியவி! தானே முளைச்ச லிங்கம்…! தனுஷ்கோடி ராமலிங்கம்… பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருட்டாப் போய்விடாது. கிளிண்ட்டனை நான் நேருக்கு நேராக நின்னு வரவேற்கப் போறேன். சரி சரி… உன்கிட்டே பேசிக்கிட்டிருந்தால் என் மந்திரம் மறந்து போயிடும்…” என்றார் கையிலிருந்த சீட்டைப் படபடப்புடன் பார்த்துக் கொண்டு.
அதற்குள் இன்னொரு சாஸ்திரி அப்புசாமியை நெருங்கி, “என்னய்யா கையிலே துண்டுச் சீட்டு! யாரு அந்தக் கிழவி? லவ் லெட்டரோ? யோவ்! கலிகாலம்ய்யா கலிகாலம்! நீரெல்லாம் ஒரு புரோகிதர். உமக்கு ஒரு மந்திரம்…” என்று கிண்டலடித்தார்.
அப்புசாமிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “டேய் கசுமாலம்! நீரெல்லாம் ஒரு புரோகிதர். உமக்கு ஒரு மந்திரம்… மனப்பாடம் பண்ணினதைச் சரி பார்த்துக்கறேன் புரியுதா? பாரு உன் பொட்டைக் கண்ணைத் திறந்து…”
அந்த சந்தேக சரபசாஸ்திரி, அப்புசாமி நீட்டிய துண்டுக் காகிதத்தை வாங்கிப் பார்த்தார். படித்தார்.
பிறகு வாய்விட்டு கடகடவெனச் சிரித்தார்… “இது… இதுவா உம்ம மந்திரம்! நாசமாய் போச்சு! இது வசிய மந்திரமய்யா…
நரம் வருஷீயாம்ஸம், நயனவிரஸம் நர்மஸூ ஜடம்…
இந்த மந்திரத்துக்கு ‘ஸ்திரீ வஸ்யதரம்’னு பேரு! அர்த்தம் என்னன்னா… ஒரு கிழட்டு மனுஷன், காமாலை முதலிய தோஷங்களோடும் விகாரமான கண்ணோடு கூடினவனை ஸ்திரீ சுகமே விரும்பாத பரம ப்ராருதனாக இருந்தாலும் பராசக்தியுடைய கடைக்கண் பார்வைக்குப் பாத்திரமாக ஆகிவிட்டால் அந்தக் குரூர வடிவமான புருஷனை பூலோக புவர்லோக ஸ்வர்கலோகத்திலுள்ள ஸ்திரீகள் மன்மதனாக எண்ணிப் பின் தொடர்ந்து போவார்கள்..னு அர்த்தம்… கண்ணராவியே. இதையா உங்களுக்கு ரசகுண்டோ அணுகுண்டோ கொடுத்தான்… தெரிஞ்சுதுன்னா முதுகுக்கு டின்னு கட்டிடுவாங்கய்யா…”
அப்புசாமிக்கு இடி விழுந்தாற் போலாச்சு… “ஐயோ… இதைதானே கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கேன்..”
“சரி… சரி… உரக்க சொல்லாமல் வெறுமே வாயசைச்சுண்டு கோஷ்டியோட நில்லும்…” என்று சொல்லிவிட்டு ஓட்டல் வாசலுக்கு விரைந்தார் வாகனத்தில் சவுகரியமான இடம் பிடிக்க…
பிர்லா மந்திர் மேளதாள வாத்திய கோஷங்களுடன்… வேத வித்துக்களுடன், பண்டிதர் படையோடு காத்திருந்தது.
கிளிண்டன், மகளோடும் மாமியார் கிழத்தோடும் காரிலிருந்து இறங்கினார். கிளிண்டன் இஸ்லாமாபாத் விஸிட் பற்றிய கவலையில் இருந்தாலும் மாமியார் பாரதி ரோதத்துக்கு வேத கோஷ்டியின் கோஷம் பிடித்திருந்தது.
“வொன்டர்புல்! சூப்பர் ரிதம்!” என்று பாராட்டிக் கொண்டிருந்தவள் தனது அந்தரங்கக் காரியதரிசியிடம், “ஐ லைக் திஸ் வேதா சான்டிங் வெரிமச்… இந்த குரூப்புடன் ஒரு ஸ்னாப் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்ற தன் விருப்பத்தைச் சொன்னாள்.
ஆனால், இதைக் கேட்டு எரிச்சல்பட்ட கிளிண்டன். “வேணுமானால் யாரானும் ஒருத்தருடன் படம் எடுத்துக்கொள்ளட்டும். க்ரூப்புடன் என்றால் டிலேயாகும். செக்யூரிடிகளுக்கு பாதுகாப்புப் பிரசினை ஏற்படும்,” என்று தனது அதிருப்தியை பிரத்தியேக காரியதரிசி மூலம் தெரிவித்துவிட்டார். ‘நோ ப்ராப்ளம்’ என்று மாப்பிள்ளையின் ஆட்சேபத்தை முக மலர்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பாரதி ரோதம், “அதோ! அந்த பண்டிட் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.” என்று அப்புசாமிக்குப் பின் வரிசையிலிருந்த ஒரு அழகிய தடபுடலான மேக்கப்புடனிருந்த கனபாடிகளை சுட்டிக் காட்டினாள்.
ஆனால், துரதிருஷ்டவசமாக காரியதரிசிக்கு, மாமியார் மேடம் வரிசையிலிருந்த அப்புசாமியைத்தான் சுட்டிக் காட்டுகிறாள் என்று தோன்றி அப்புசாமியை மேடைக்கு அழைத்துப் போய் விட்டார்.
அப்புசாமிக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘நம்ம வசிய மந்திர ஊழலை அமெரிக்கத் துப்பறியும் இலாகா எப்படியோ கண்டுபிடித்துவிட்டது… நம்ம கதி அதோ கதிதான்’ என்று நினைத்தவாறு, ‘நான்…. நான்… ரசம்… ரசம்… குண்டு! ரச குண்டு…’ என்று உளறினார்.
“குண்டு” என்ற வார்த்தையைக் கேட்டதும் காரியதரிசி “மை காட்!” என்று அலறியவள், செக்யூரிட்டிகளுக்கான ரகசிய சமிக்ஞை பட்டனை தன்னிடமிருந்த ஸெல்லில் அழுத்தினாள்.
அடுத்த கணம் கும்பலிலிருந்த கண்காணிப்புப் படையினரின் ஒரு பகுதி வந்ததே தெரியாமல் வந்து அப்புசாமியை அலேக் செய்து கொண்டு போய் விட்டது.
கிளிண்டனும் கோஷ்டியினரும் வெற்றிகரமாக ஹைதராபாத் பயணத்தை முடித்துக்கொண்டு பம்பாய் புறப்பட்டாயிற்று.
அப்புசாமி ஒரு பயங்கரவாதக் கும்பலின் தலைவரோடு சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று அமெரிக்க உளவு ஸ்தாபனம் சந்தேகப்படுவதாகத் தெரிந்ததால், அவரை வெகு ஸ்பெஷலாக, வெகு ரகசியமாக நம்ம ஊர் போலீஸ் விசாரித்தது.
‘குண்டுன்னு அவர் உளறினது விபரீதமாயிற்று. தீவிரவாதிகள் யார் யார் என்று அவரை விசாரித்து உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது போலீஸ். ரசகுண்டு என்பது ஒருத்தன் பெயர் என்பதை சீதாப்பாட்டி தக்க சமயத்தில் ரசகுண்டுவையும் அழைத்துவந்து அவனது விசிட்டிங் கார்டு முதலியவற்றைக் காட்டி நிரூபித்து அவரை விடுவித்துக் கொண்டு, சென்னை வந்து சேர்ந்தாள்.’
ஸ்பெஷல் போலீஸ் விசாரணையினால் ஸ்பெஷலாக ஏற்பட்டிருந்த ஸ்பெஷல் ரணங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
அப்புசாமியின் உடம்பு பூராக்கட்டு.
“இதுக்குத்தான் சில ஆசைகள் சில பேருக்கு வரவே கூடாதுன்னு நான் சொன்னது…” என்றாள் சீதாப்பாட்டி. அத்தனை கட்டுகளுக்கு நடுவிலும் அப்புசாமி ரோஷமாக, “அடியே கியவி! நானாவது கிளிண்ட்டனைப் பக்கத்துலே போய்ப் பார்த்தேன். நீ மண்டலி, சுண்டெலின்னு ஜம்பமாப் போனியே… பார்க்க முடிஞ்சுதா… அங்கே பிரசிடெண்டு தலையே காட்டலியே…”
அவர் ஒடிந்த கை மீது ஒரு கடிதத்தை போட்டாள்.
ஜனாதிபதி கிளிண்ட்டனின் அந்தரங்கச் செயலரிடமிருந்து சீதாப்பாட்டிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம்.
மதிப்பிற்குரிய சீதாஜி,
ஜனாதிபதி கிளிண்ட்டனின் ஹைதராபாத் வருகையின் போது கோவில் வரவேற்பில் சம்பந்தமில்லாத ஓர் ஆசாமி ஊடுருவியுள்ளது பற்றிய தகவலை தக்க சமயத்தில் கொடுத்து அவரை அகற்றுவதற்கு உதவிகரமாக எச்சரித்ததற்கு மிக்க நன்றி.
ஜனாதிபதி தமது பிரத்தியேக நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறார்.
பியர்சன், அந்தரங்க செயலர் அலுவலகம்.
“துரோகி! துரோகி! நீதான் காட்டிக் கொடுத்த துரோகியா…” அப்புசாமி கூவினார்.
“பை த வே, மை டியர் சார்… இன்னியோட ஸ்பெஷல் நர்ஸிங்ஹோம் ட்ரீட்மெண்ட் முடிகிறது. இனிமேல் ஜெனரல் ஆஸ்பத்திரியிலே தரை வார்டுதான் உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சீதாப்பாட்டி.
“சரிதான் போடி… அந்த வசிய மந்திரத்தை மட்டும் ஒழுங்காக நான் சொல்லியிருந்தேனானால் கிளிண்ட்டன் மாமியார் என்னை அமெரிக்காவுக்கே கூட கூட்டிப் போயிருப்பார்… பாவி கெடுத்தியேடி…” என்று முணுமுணுத்துக் கொண்டார் அப்புசாமி.