அந்நாளில்…
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என, முறையான மூன்று சங்கங்களை நிறுவி, இயற்றமிழை இசைத் தமிழை – நாடகத் தமிழைக் காத்த பாண்டியர்களுக்குப் பதியாய் விளங்கிய மதுரைக்கு அருகில் மோசி என்ற ஊர் இருந்தது.
பைந்தமிழ்ப் பாக்களெல்லாம் வியந்து பாராட்டும் வையை நதிக்குப் பக்கமாய் இருந்த அவ்வூர், இயற்கை அழகுக்குப் பேர் பெற்றது. எங்கு நின்று பார்த்தாலும் அங்கெல்லாம் பசுமை பாய்விரித்துக் கிடப்பதைக் காணலாம்.
அத்தகைய எழில் கொஞ்சும் ஊரில் பிறந்த புலவர்களில் கீரனார் என்பவரும் ஒருவர். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் குறைவின்றிக் கற்றறிந்த இவர் பிற்காலத்தில், சிவகங்கை மாவட்டத்தில் இருந்த படுமாற்றூர் என்ற ஊரில் தங்கியிருந்ததால் படுமாற்றூர் மோசிகீரனார் என்றும், உறையூரில் இருக்கும் ஏணிச்சேரி என்னும் இடத்தில் சிலகாலம் தங்கியிருந்ததால் உறையூர் ஏணிச்சேரி முடமோசி கீரனார் என்றும் பழங்கால நூல்கள் இவரைக் குறித்துள்ளன.
சங்கப் பலகையில் அமர்ந்து, சந்தப் பாக்களை இயற்றி, அப் பாக்களின் மூலமாகப் பலர் போற்றும் சிறப்பைப் பெற்றிருந்த கீரனார், ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் கொள்கை உடையவர். அவர் வீட்டில் தங்கியிருப்பது என்பது அத்திப்பூ மாதிரி. எப்போதும் எந்த ஊருக்காவது போக வேண்டும் என்பதிலேயே அவர் மனம் ஆர்வம் செலுத்திக் கொண்டிருக்கும்.
அவர் வீட்டில் இருக்கும் வரையிலும்தான் பெற்றவர், உற்றவர், மனைவி – மக்கள் நினைப்பு. வெளியில் வந்து விட்டால் குடும்ப நினைப்பிலிருந்து அடியோடு மாறி விடுவார். அடிவானத்தின் அழகில், நிலவின் ஒளியில், பறவைகளின் நிறத்தில், ஒளியில் – நடையில், அருவியின் சலசலப்பில் மிதக்க ஆரம்பித்து விடுவார். மனிதர் வாழ்வுக்காக இறைவன் உண்டாக்கி இருக்கும் இயற்கை வளங்களோடு ஒன்றாக இணைந்து புதியதொரு பாடலைப் புனைந்து விடுவார். அப்பாடலில் தாம் சொல்லி இருக்கும் கருத்துக்களை நாடு நகரங்களில் பரப்புவதற்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்வார். சில சமயங்களில் அரசரை – குறுநில மன்னரை – வள்ளலைக் காணச் செல்வதும் உண்டு. அவ்விதம் அவர் பார்க்கச் சென்ற அரசர்களில் ‘பெருஞ்சேரலிரும்பொறை’ என்பவனும் ஒருவன்.
இவன் சேர நாட்டை ஆண்டவன் மக்கள் சுகத்தையே தன் சுகமாக எண்ணி இரவைப் பகலாகக் கழித்தவன். நால்வகைச் சேனைகளைக் குறைவின்றிப் பெற்றிருந்தவன். புலவர் பெருமக்களைத் தன் உயிரினும் மேலாகப் போற்றியவன்.
இவன் போர் செய்வதில் வல்லவன்; ஒருமுறை திருக்கோவனூர் காரி வள்ளளுக்காக அதியமானோடு போர் புரிந்து அவனைக் கொன்று தன் நண்பனுக்கு வெற்றி தேடித் தந்தவன்.
அப்படிப்பட்ட ஆற்றல் நிறைந்த சேர அரசனைக் காண்பதற்காக நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து வஞ்சிக்கு வந்து சேர்ந்தார்.
சேர நாட்டின் தலைநகர் வஞ்சி, காவல் நிறைந்தது. யாரும் எளிதில் நுழைய முடியாத கோட்டை வாயில் கொண்டது. வாளும் வேலும் தாங்கிய வீரர்கள் சூழ்ந்த வஞ்சித் தலைநகருக்குள் கீரனார் வந்ததும் களைப்பு மிகுதியால் ஒரு வேங்கை மரத்தின் கீழே அமர்ந்தனர். கொஞ்சம் களைப்பாறியதும் கோட்டையை நோக்கி வந்தார். வழியில் யாரும் அவரைத் தடுக்கவில்லை. அவரது தோற்றத்தைக் கண்டதுமே எல்லாக் காவல் வீரர்களும் வணங்கி வழிவிட்டனர்.
பாண்டிய மண்டலத்திலிருந்து புலவர் ஒருவர் வருவதைப் பற்றிக் கேள்விப்பட்ட மாத்திரத்தில் மகிழ்ச்சி அடைந்த சேர மன்னன், தன் ஆசனத்திலிருந்து விருட்டென்று எழுந்தான்; புலவர் கீரனாரை எதிர்கொண்டு வரவேற்றான்; புலவர் மனம் மகிழும் வண்ணம் உபசரித்தான்.
புலவர் களிப்படைந்தார்; தாம் சேரனைப் பற்றி கேள்விப்பட்டிருந்தது போலவே அவன் நேரில் விளங்குவதைப் பார்த்த புலவர் பெரிதும் பரவசமடைந்தார். பின்னர் விருந்துண்ட மயக்கத்தாலும், நடந்து வந்த களைப்பாலும் எங்கேனும் ஓர் இடத்தில் படுத்துறங்க நினைத்தார். இதனால் எதிரில் தெரிந்த கட்டிலைப் பார்த்தார்.
அதிக வேலைப்பாடுடன் அமைந்த அக்கட்டில் ‘முரசு’ கட்டிலாகும். தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்படும் அக் கட்டிலில் படுப்பது மிகப்பெரிய தவறாகும்.
இவ்வுண்மையை ஊரார் அறிவர்; அங்கு உள்ளவர் அறிவர்; ஆனால் வேற்று நாட்டிலிருந்து வந்த ஒரு புலவருக்கு அது முரசு கட்டில் என்பது அவ்வளவு சீக்கிரத்தில் எப்படித் தெரிய முடியும்? ஆகவே அக் கட்டிலைப் படுப்பதற்கு ஏற்றதாய் எண்ணி அதில் படுத்துக்கொண்டு குறட்டை விடலானார்.
அதே சமயத்தில் அரச காரியங்களைக் கவனித்து விட்டு முரசு கட்டில் இருக்கும் வழியாகச் சேரமன்னன் வரலானான்.
தூரத்தில் வரும்போதே முரசுகட்டிலைப் பார்த்துவிட்டான். அதில் யாரோ படுத்திருப்பதாகக் கண்ட அரசனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. உடனே, உருவிய வாளோடு சரேலெனக் கட்டிலுக்குப் பக்கமாய் வந்தவன் பதறிப்போனான். அவனை அறியாமலேயே அவன் கையும் காலும் நடுங்க ஆரம்பித்தன.
‘ஐயோ! எவ்வளவு சீக்கிரத்தில் மிகப் பெரிய தவறு செய்ய இருந்தோம்? முரசு கட்டிலென்று அறியாத மோசிகீரனாரை அல்லவா துண்டிக்க இருந்தோம்’ என்று மனத்துக்குள் பேசியவண்ணம் ஓங்கிய கையை ஒடுக்கினான். மோசி கீரனார் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்தான். வாள் தூக்கிய கையில் கவரியைப் பிடித்து விசிறினான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கவிஞர் திடுக்கிட்டு விழித்தார். சேரனின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், “சேரர் பெரும! இதென்ன கொடுமை?” என்றபடி எழுந்தார்.
“என் மனமே எனக்குக் கொடுத்த தண்டனை” என்றபடி விசிறிக் கொண்டே இருந்தான்.
சேரனின் சொல்லையும் செயலையும் உணரும் சக்தியை அப்போது இழந்திருந்த கவிஞர் “விளங்கவில்லையே!” என்றார். அதற்கு அரசன், “ஐயனே! முரசுகட்டிலில் படுத்திருந்த முத்தமிழைச் சாய்க்கப் போனது குற்றமில்லையா? அதற்கு இது சரியான தண்டனை இல்லை என்பதை அறிவேன். என்ன செய்வேன்?” என்றான்.
தாம் படுத்திருந்தது முரசுகட்டில் என்பது தெரிந்ததும் பதட்டமடைந்த புலவர், “ஆ! முரசு கட்டிலிலா படுத்திருந்தேன்? இந்தத் தவறை எந்த மன்னனும் மன்னித்ததாக வரலாறு கிடையாதே. தெய்வமே! நீ மன்னித்து விட்டாய். குற்றம் புரிந்த என்னை மன்னித்ததோடு நில்லாமல் விசிறி எடுத்து விசிறி என் நெஞ்சைக் குளிர் நிலவாக்கி விட்டாய். நீ நீண்ட காலம் வாழ்க!” என்று வாயார வாழ்த்தினார்.
புலவரின் வாழ்த்துரை கேட்டுக் களிப்படைந்த காவலன், அவர் விரும்பிய பரிசிலைக் கொடுத்துப் பிரியா விடையளித்தான்.
நீங்களும் அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளத்தைப் பெற்று, பிறர் புகழும்படியாக நடந்து கொள்ள வேண்டும்.
(திரு. வே. கபிலன் அவர்கள் எழுதிய “விடுமுறைக் கதைகள்” என்ற நூலிலிருந்து எடுத்து இக்கதை இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.)