போனில் எச்சரிக்கையோடு பேசினேன்.
– என் பேர் மணி! ஒரு கொலை இங்க நடந்திருக்கு! உடனே நீங்க வரணும்! என்றேன்.
போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அல்லது ரைட்டர் கர கரப்பில் பேசினார்.
– அப்படியா? தம்பி! என்றதும் எனக்கு ‘சப்’ அடித்தது.
என் பதினோரு வயதுக் குரலை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நான் சொன்ன விஷயத்தில் பரபரப்பு இல்லை. ‘தம்பி’ என்று என்னை அழைத்து விட்டார்கள். முகவரி எதுவும் கேட்கவில்லை.
பப்ளிக் பூத்தின் போனை மாட்டினேன்.
நன்றாகப் புரிந்துவிட்டது. ஒரு பதினோரு வயது பையனின் குரலை யாரும் மதிக்க மாட்டார்கள்.
மேல்நாடு என்றால் இதற்குள் ‘குய்யன் குய்யன்’ என்று கூச்சல் போட்டுக்கொண்டு போலீஸ் கார்கள் ரேஸ் ஓடும். திமு திமு என்று புஷ்டியான போலீஸ்காரர்கள் இறங்கி விடுவார்கள். டி.வி.யில் பார்த்திருக்கிறேன். நம்மூரில் எல்லோரும் சோம்பேறிகள்!
பாவம் பிரார்த்தனாவை நினைத்தேன். கன்னடப் பெண்மணி! தமிழைக் குழந்தையாகப் பேசுவாள். நல்ல சிவப்புக் கலர்! உதடு ரோஸாக இருக்கும்.
அடுத்த வீட்டில் இருந்தாள். புருஷன் பெயர் ரத்னசாமி. பெரிய மீசை, பெரிய தொப்பை பார்க்க பயங்கர முகம்!
பிரார்த்தனாவை விட நிறைய வயது. எப்படித்தான் திருமணம் செய்து கொண்டார்களோ?
ரத்னசாமி கடுங்கோபக்காரர். எங்களிடம் இரண்டு முறை சண்டைக்கு வந்து விட்டார்! எங்கள் குப்பை அவர் தோட்டத்தில் விழுகிறது என்று.
நல்ல வேளை!
அவருக்கு அந்தப் பக்க வீட்டில் ஜானி என்ற ஒருவர் வந்தாலும் வந்தார் சண்டை எல்லாம் அவர் பக்கம் திரும்பிவிட்டது.
ஜானி ஒரு மலையாளி! ஒரு போமரனியன் நாய் வைத்திருந்தார். வாலும் தெரியாது, முகமும் தெரியாது. அத்தனையும் ரோமம். இரவில் பார்த்தால் குட்டி ஆவி போல் தெரியும். ரெக்ஸ் என்று அதன் பெயர்.
ரெக்ஸ் ரொம்ப சமத்து. எஜமானன் ஜானி வீட்டில் நல்லாச் சாப்பிட்டு விட்டு ரத்னசாமி வீட்டுத் தோட்டத்தில் நல்லா ‘டாய்லெட்’ போய்விட்டு வீட்டுக்குப் பேசாமல் போய்விடும்.
ரத்னசாமியின் தோட்டம்தான் அதற்கு குஷி!
ரத்னசாமி கத்து கத்து என்று கத்துவார். ஜானியோடு சண்டைக்கு போவார். ஜானி மலையாளத்தில் குரைக்க, ரத்னசாமி கன்னடத்தில் குரைக்க ரொம்ப தமாஷாக இருக்கும்.
ஒன்று சொல்ல மறந்துவிட்டேனே?
என் பிரசினை புதன்கிழமை இரவு 8.30க்கு ஆரம்பித்தது.
தெரு ஓரம் இருக்கும் கணபதி ஸ்டோர்ஸில் மேரி பிஸ்கட் ரோல் வாங்கி வீடு திரும்பினேன்.
சுவாரஸ்யமாகத் தின்ன ஆரம்பிக்க, – மணி! என்று குழையும் குரலில் ஒரு அழைப்பு என் தோள் ஓரம் கேட்டது.
பார்த்த போது, பிரார்த்தனா! ‘கொலோன்’ வாசம் அவள் உடம்பு எங்கும். அவளைப் பார்த்ததும் எனக்கு உடம்பில் ஒரு திடீர் அடக்கம் தோன்றிவிடும்.
நீங்கள் அதை வெறும் பிரியம் என்று சொன்னாலும் சரி, அல்லது கன்றுக்குட்டிக் காதல் என்றாலும் சரி,
அவளைப் பார்ப்பதில் எனக்கு ஒரு உவகையான மகிழ்ச்சி இருந்தது.
நான் என்ன?
எங்கள் தெருவில் அவள் நடந்து போனால் நிறைய தலைகள் திரும்பிப் பார்க்கும்.
– ஏ, மணி, இங்கே எங்கே வந்தே? என்று அவள் கேட்க, இரண்டு பிஸ்கட்டை அவளிடம் கொடுத்தேன்.
– பரவாயில்லை! என்று என்னிடமே தந்தாள்.
களைப்பாக இருந்தாள். தலையெல்லாம் கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை. அப்படியும் அவள் லட்சணம் மாறவில்லை. பேசிக்கொண்டே வீடு வரை நடந்தோம்.
– வரேன்! என்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனாள்.
இனிமேல் பிஸ்கட்டைச் சாப்பிடலாம் என்று நினைத்த போது,
ஜானியின் போமரனியன் ரெக்ஸ் வந்து என் காலைத் தடவியது. நானும் அதுவும் சிநேகம்! பிஸ்கட் போட்டேன்! கிரவுச் கிரவுச் என்று சாப்பிட்டது.
பிஸ்கட்டை ‘முடித்து விட்டு’ நான் வீடு போகலாம். எனவே ரெக்ஸும் நானும் பங்கு போட்டுச் சாப்பிட,
‘ஓ’ என்று கீச்சுக் குரல். ஒரு கணத்தில் அது பிரார்த்தனாவின் குரல் என்று தெரிந்துவிட்டது. வீட்டுக்குள்ளிருந்து சத்தம்.
– எங்கே போயிருந்தே மூதேவி? இது ரத்னசாமியின் குரல்.
– எங்கே போனா என்ன?
தொம் தொம் என்று சத்தம்! பிரார்த்தனா அடி வாங்குகிறாள்.
– இனிமே போவியா?
– என்ன அடிக்கிறியா? நான் போகத்தான் செய்வேன். அடப்பாவி என்னை நெருங்காதே… ஐயோ என்னை விட்டுரு! கொல்லாதே… ஐயோ….
பிறகு திடீர் நிசப்தம்.
என் கையும் காலும் பரபரத்தது. அவர்கள் வீட்டுக்குள் நுழையலாமா என்று நினைத்தேன்.
எனக்குத் தைரியமில்லை.
இருக்கும் பிஸ்கட்களை ரெக்ஸுக்குப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.
தினமும் அடுத்த வீட்டில் சண்டை தான்! ரொம்ப நேரம் நீடிக்கும்.
ஆனால் அன்று சீக்கிரம் முடிந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
– வாங்க ராஜா எங்கே போயிட்டு வராப்லே? என்று அம்மா வரவேற்றாள். பதில் சொல்லாமல் அறைக்குள் போனேன்.
– ஊமை! என்று அப்பா திட்டுவது கேட்டது.
பிரார்த்தனா என்ன ஆனாள்?
என் பரபரப்பு மேலே ஏறியது. சீக்கிரம் சாப்பிட்டுவிட்டுப் படுத்தேன்.
அடுத்த வீட்டின் திடீர் நிசப்தத்தை உணர முடிந்தது.
தூக்கம் வர மறுத்தது. கடிகாரத்தில் ஓடும் மணிகளை காது எண்ணியது, ஒரு மணிக்குப் பின் எனக்கு வரும் குறட்டையை நானே உணர்ந்தேன். அதிகம் தூங்குவதற்குள் அந்த சரக் சரக் சத்தம் என்னை எழுப்பியது.
கண்ணை விழித்தேன். சன்னலின் மேல் கதவில் கண்ணாடியில் ஒரு வெளிச்சம் தெரிந்தது.
அடுத்த வீட்டு வெளிச்சத்தில் பிரதிபலிப்பு.
சன்னல் மீது ஏறினேன். மேல் வழியே பார்க்க, அந்த வீட்டுப் பூந்தோட்டத்தில் என் பார்வை அமர்ந்தது.
சுள் என்று அடி வயிற்றில் உணர்வு. தோட்டத்தில் ரோஸ் பாத்தியில் பெரிய மண் வெட்டியால் குழி தோண்டிக் கொண்டிருந்தார் ரத்னசாமி.
ஐந்தடி நீளக் குழி! அதில் பாதி வரை அவர் மறைந்திருந்தார். இடுப்பும், அவரது தலை வழுக்கையும் தெரிந்தன.
எனக்கு ‘சிவப்பு ரோஜா’ சினிமா நினைவு வந்தது!
இன்னும் சிறிது தோண்டி விட்டு மண் வெட்டியை எடுத்து வெளியே வீசினார் ரத்னசாமி.
‘தம்’ பிடித்து வெளியே எகிறினார்.
சுற்றிவரப் பார்வை செலுத்தினார். என் சன்னலைப் பார்க்கவில்லை. வீட்டுக்குள்ளே போனார்.
திகிலோடு நிமிடங்கள் ஓடின.
பின்னர் அவர் இழைத்துக் கொண்டு ஒரு கோணி மூட்டையைத் தூக்கி வந்தார். இருமுறை தடுமாறினார்.
மூட்டையை சரியாக இறக்க முடியவில்லை. தடும் என்று குழியில் போட்டார்! பர பரவென்று மண்ணைச் சரிக்க ஆரம்பித்தார்.
காமிக்ஸில் க்ரைம் கதைகளை படித்திருக்கிறேன். எனக்குப் புரிந்து விட்டது. பிரார்த்தனாவை அவர் கொன்றிருக்கிறார். கோணிக்குள் அவள் பிரேதம் இருக்க வேண்டும்.
மூடுகிற வரை என் பார்வை அகலவில்லை! எல்லாம் முடிந்து அவர் மண்ணைச் சரி சமமாக்கினார். அதன் மீது ரோஜா தொட்டிகளை முன்போல வைத்தார்.
சன்னலிலிருந்து குதித்தேன். ‘அம்மா அம்மா’ என்று அடுத்த அறைக்குள் ஓடினேன்.
அம்மா தூக்கக் கலக்கத்தோடு எழுந்திருந்தாள். விஷயங்களைச் சொன்னேன்.
– இந்தாங்க என்று அப்பாவை எழுப்பினாள்.
அப்பா விஷயத்தைக் கேட்டார். சன்னல் ஓரம் எம்பிப் பார்த்தார். நிலா வெளிச்சத்தில் அடுத்த வீட்டுத் தோட்டம் தெரிந்தது. குழி தோண்டிய இடம் புது மண்ணோடு மூடியிருந்தது.
– டேய்! அந்த ஜானியின் நாயைக் கொன்று குழியிலே போட்டிருப்பான்! என்றார், அப்பா.
– நாய் இல்லை அப்பா! பெரிய கோணிப்பை. ஒரு ஆள் உள்ளே இருந்த மாதிரி பருமன்.
– போடா! என்னவோ கனவு கண்டிருக்கே! போய்ப் படு…
காலையில் எழுந்ததும் தோட்டத்தின் பக்கம் பார்த்தேன்.
அந்த நீண்ட சதுரப் பாத்தி அப்படியே தெரிந்தது.
எனக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.
தினமும் பிரார்த்தனாவின் குரல் அடிக்கடி கேட்கும்.
இன்று கேட்கவே இல்லை.
அப்பாவும், அம்மாவும் ஆபீஸ்களுக்குப் போன பிறகு வெளியே புறப்பட்டேன்.
பிரார்த்தனா இருக்கிறாளா, இறந்துவிட்டாளா? அதை எப்படிக் கண்டுபிடிப்பது?
கணபதி ஸ்டோர்ஸ் பக்கத்தில் பப்ளிக் பூத் இருந்தது.
அதில் போய்க் கதவைச் சாத்தினேன். ரத்னசாமிக்கு போன் செய்தேன்.
அவரே எடுத்ததும் எனக்கு வெலவெலப்பு!
– யாரு? என்றார் அவர், மிரட்டலில்.
குரலை அவசரமாக மாற்றினேன்.
– கணபதி ஸ்டோர்ஸிலேர்ந்து பேசறோம் அண்ணாச்சி! அம்மா இருக்காங்களா?
– எதுக்கு அம்மா?
– லிஸ்ட்டுக் கொடுக்கறேன்னாங்க!
– அம்மா செங்கல்பட்டு போயிருக்காங்க. வர ஒரு வாரம் ஆகும். பட்டென்று போனை வைத்தார்.
ஆ! மை டியர் பிரைவேட் ஐ! என்று என்னையே நான் தட்டிக் கொண்டேன்.
வீட்டுக்குப் பரபரப்பாக வந்தேன்.
இந்தச் சமயத்தில் தான் தைரியமாக போலீசுக்குப் போன் செய்தேன்.
– என் பேர் மணி! ஒரு கொலை இங்கே நடந்திருக்கு…
போலீஸ் என் பேச்சை மதிக்கவே இல்லை. யாரும் வரவில்லை.
செங்கல்பட்டு! நிச்சயம் பிரார்த்தனா அங்கே போயிருக்க முடியாது! இரவில் வீட்டுக்குள் போனவள் மறுபடி வெளியே வரவே இல்லை. செங்கல்பட்டில் போய் விசாரிப்போமா? யாரைப் போய் விசாரிக்க?
எரிச்சலாக வந்தது.
சரி, தானாக விஷயம் வரட்டும். பிரார்த்தனா காணாமல் போனது தெரிய வரட்டும். போலீஸ் அப்புறம் திண்டாடட்டும்.
விரக்தியாக இருந்தேன். சாயங்காலம் அம்மா திரும்பியபோது என் பாட்டி (அம்மாவின் அம்மா) சீரியஸ் ஆகி இருக்கிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தாள். அவளும், அப்பாவும் ஐந்து மணிக்கு காரில் நெய்வேலி புறப்பட்டார்கள்.
– ஷெர்லக் ஹோம்ஸ்! வீட்டிலேயே இரு என்று அப்பா என் முதுகைத் தட்டிவிட்டுப் போனார்.
என்னையும், வேலைக்காரியையும் விட்டுவிட்டுச் சென்றார்கள்.
எனக்கு இப்போ மூளை சுறுசுறுப்பாக ஓடியது!
காலையிலிருந்து எனக்கு இன்னொரு அரிப்பு!
நாய் ரெக்ஸ் என் முன்னால் தென்படவே இல்லை.
இரண்டு முறை தெருவில் நடந்து பார்த்தேன். ஜானியின் வீடு அதிசயமாகப் பூட்டியிருந்தது.
மூன்றாம் முறையாக இப்போது போனேன். ஏமாற்றம். ஜானி வீடு பூட்டியிருந்தது. நேரே போய் கணபதி ஸ்டோர்ஸில் பிஸ்கட் வாங்கித் திரும்பினேன்.
ஒரு வேளை ரெக்ஸைத் தான் ரத்னசாமி கொன்று விட்டாரா?
ஜானி வீட்டு கேட் வந்ததும் ‘ரெக்ஸ்’ என்று மெள்ளமாக அழைத்தேன்.
அடுத்த கணம் கொஞ்சலாக குரல் எழும்பி, கேட்டின் தகரக் கதவின் பின்புறத்தில் ரெக்ஸ் பிராண்டுவது தெரிந்தது.
கேட்டின் இரட்டைக் கதவின் இடுக்கு வழியே அதன் முகம் தெரிந்தது.
யோசித்தேன். சங்கிலி போட்டு பூட்டப்பட்டிருந்த கதவுகள்.
அதை பின் பக்கம் தள்ளினேன். அதன் இடுக்கு பெரிதாக,
ரெக்ஸ் அதனிடையே பிதுங்கிக்கொண்டு வெளியே வந்து வாலை ஆட்டியது.
பிஸ்கட்டுகளைப் போட்டு அதை இழுத்துக் கொண்டு என் வீட்டுக்கு சென்றேன். உண்மையில் வீட்டில் தனியே இருக்க எனக்கு பயமாக இருந்தது. என் அறைக்குள் அதைக் கொண்டு சென்று கதவை மூடினேன்.
இருட்டும் வேளையில் சன்னல் பக்கம் போனேன். மேலே எம்பி ஏறி அடுத்த புறம் பார்த்தேன்.
ரத்னசாமி தோட்டத்திற்கு வந்திருந்தார். பாத்தி பக்கத்தில் நின்று, கால் கட்டை விரலால் தரையை அழுத்தி பார்த்தார்.
சற்று நின்றவர் திடீரென்று சுற்றிவரப் பார்க்க அவர் பார்வை என் சன்னல் மீது விழுந்து என்னைப் பார்த்து விட்டது.
நான் விறைக்க, அவர் முறைத்தார்.
அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
சட்டென்று கீழே குதித்தேன்.
உடம்பில் ஒரு பதட்டம் ஏவுகணையாக ஓடியது.
மறுகணம் வாசலுக்கு ஓடி கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டேன்.
சன்னல்களைச் சாத்தினேன். காமிக்ஸ் படத்தில் ஒரு சின்னப் பையன் எக்கச் சக்கமாக அகப்படுவது போல அகப்பட்டுக் கொண்டேன்.
உண்மையில் பற்கள் கிடுகிடுத்தன.
அரைமணி நிசப்தமாக இருந்தேன். இருட்டி விட்டது! விளக்குகளைப் போட்டேன்!
வெளியே வரவில்லை வாசல் கதவு தட்டப்பட்டது. என் ஏழு நாடிகளும் நடுங்கின. ஒவ்வொரு அடியாக வைத்து கதவுக்கு வந்தேன். பேசாமல் நின்றேன்.
அடுத்த சத்தம் என் வீட்டையே குலுக்கியது! அவ்வளவு பலமாக கதவு இரைந்தது.
எனக்குக் கோபம் பீச்ச, – யார் அது? என்று ஆத்திரமாக கேட்டேன்.
– திறக்கணும்! ஞான் தன்னே! ஜானி!
எச்சரிக்கையுடன் கதவை திறந்தேன். அதே நேரம் என் மூளை ஓவர் டைம் செய்தது.
ஜானி கவலையில் நின்றார்.
– மணி! ரெக்ஸைக் கண்டிட்டுண்டோ? என்றார்.
– ஓ! என்றேன்.
– உண்டுன்னு பறையாமோ, இல்லைனு பறையாமோ
அந்தக் கணங்களுக்குள் என் யோசனை முடிந்துவிட்டது.
– ஜானி அங்கிள்! ரெக்ஸை அடுத்த வீட்டு ரத்னசாமி கொன்னாச்சு.
– கொண்ணானா?
– ஆமாம் தோட்டத்து ரோஸ் பாத்தியிலே ரெக்ஸைப் புதைச்சாச்சு!
இரவு எட்டு மணிக்கு இரண்டு போலீஸ்காரர், நான், ஜானி, ரத்னசாமி ஐவரும் ரோஸ் பாத்தியின் ஓரத்தில் நின்றோம்.
– இங்கே தான் புதைச்சாரா? என்றார் போலீஸ்காரர்.
– ஆமாம் என்று தலை அசைத்தேன் நான்.
ரெக்ஸை எங்கள் வீட்டு அறையுள் மூடி, சிக்கென எல்லாக் கதவுகளையும் சாத்தியிருந்தேன். அப்படியும் ரெக்ஸ் குரைத்து விடுமோ என்று பயம்.
ரத்னசாமியும், ஜானியும் சிறிது நேரம் கோபமாக வாக்குவாதம்.
– ரெண்டு பேரும் நிறுத்துங்கள். இப்போ தோண்டிப் பார்த்துடலாம்! என்றார் போலீஸ்காரர்.
கூலி வைத்துத் தோண்டினார்கள். இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் அம்பலமாகி விட்டது.
ரத்னசாமி தன் மனைவி பிரார்த்தனாவைக் கொன்று அந்த இடத்தில் புதைத்து இருந்தார்.
காலையில் பேப்பர் மூலம் செய்தி நகரில் பரவிவிட்டது.
என் அம்மாவும், அப்பாவும் அன்று பகல் இரண்டு மணிக்குத் திரும்பியபோது,
ஐயா ஜம்மென்று டெலிவிஷன் காமிராக்கள், பத்திரிகை நிருபர்கள் புடை சூழ ஒரு பெரும் கூட்டத்தின் முன்னால் ராஜா போல உட்கார்ந்திருந்தேன்.
கேள்விகளுக்கு அனாயாசமாய் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.
கூட்டம் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்க.
என் தந்தை முந்தி அடித்து வந்து, – ஷெர்லக் ஹோம்ஸ் என்று சொல்லி முதுகைத் தட்டினார்.